Election bannerElection banner
Published:Updated:

ஆங்கிலேயருக்கு அச்சத்தை தந்த ஆகஸ்ட் புரட்சி..! - நினைவில் கொள்ள வேண்டிய ப்ளாஷ்பேக் #MyVikatan

நேரு, காந்தி
நேரு, காந்தி

பெர்லினில் இருந்து சுபாஷ் சந்திர போஸ் வானொலி மூலம் பிரிட்டனுக்கெதிராக இந்தியர்கள் கிளர்ச்சி செய்யுமாறு உரையாற்றியதோடு ஜப்பானோடு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நான் உங்களுக்கு ஒரு மந்திரத்தை சொல்கிறேன். அதை உங்கள் இதயத்தில் இறுத்தி மூச்சோடு வெளியிடுங்கள்.. அந்த மந்திரம் "செய் அல்லது செத்துமடி"
மகாத்மா காந்தி

காந்தியின் வாக்கு எட்டுத்திக்கும் எதிரொலித்தது இந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தான்.

இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை கலந்தாலோசிக்காமலேயே போரில் ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1939 டிசம்பர் 12ல் மாகாண பதவியிலிருந்து விலகியது காங்கிரஸ். போருக்குப்பின் இந்திய பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு ஏற்படுத்தப்படும் எனும் அறிவிப்பை ஏற்க மறுத்து காந்தி வன்முறையற்ற தனிநபர் சத்யாகிரகத்தை தேர்ந்தெடுத்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு முன்னோட்டமாய் இது அமைந்தது.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

1942 ஜூலை14ம் தேதி கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் வார்தாவில் நடைபெற்றது. அதில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைய வேண்டும். இந்தியாவின் அதிகாரத்தை உடனடியாக இந்தியருக்கு ஒப்படைக்க வேண்டும். இதனை நிராகரித்தால் வன்முறையற்ற போராட்டம் காந்தியின் தலைமையில் நடைபெறும் என தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் வந்தவுடன் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் உலக நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க ரூஸ்வெல்ட் உட்பட தீர்வு காணுமாறு வலியுறுத்தினார்கள். 'பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைக் கலைக்கும் பணியில் ஒரு போதும் ஈடுபட மாட்டேன்" எனப் பிடிவாதமாய்க் கூறினார்.

இந்தச் சூழலில் பம்பாயில் 1942 ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இது வார்தா செயற்குழு தீர்மானத்தை நிறைவேற்றியது. வன்முறையற்ற போராட்டம் உடனடியாகத் துவங்கிடவும், அகிம்சை முறையில் நடைபெறவும் தீர்மானித்தது. கூட்டத்தில் பேசிய காந்தி,

"இந்த நிமிடம் முதல் மக்கள் சுதந்திர குடிமகனாகக் கருதிக்கொண்டு சுதந்திரமான செயல்களில் ஈடுபடவும், இந்திய நாட்டை விடுவிப்போம் அல்லது அம்முயற்சியில் வீரமரணம் அடைவோம்’’ என முழங்கினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்

வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிப்பதற்கான காரணங்கள்..

#ஜப்பானின் வெற்றியும் கிரிப்ஸ் தூதுக்குழுவும்

தென் கிழக்கு ஆசியாவில் ஜப்பான் அடைந்த வெற்றிகள் ஆங்கிலேயர்களை அச்சமூட்டின. மலேசியா, பர்மா, சிங்கப்பூரை கைப்பற்றிய ஜப்பான் அடுத்து இந்தியாவை கைப்பற்ற எண்ணியது.

இந்தியாவுக்கு வருவதை தடை செய்ய வங்காளத்தின் சிறிய பாலங்கள் அழிக்கப்பட்டதால் வங்காளத்தில் பொருளாதாரம் பாதித்தது. பெர்லினில் இருந்து சுபாஷ் சந்திர போஸ் வானொலி மூலம் பிரிட்டனுக்கெதிராக இந்தியர்கள் கிளர்ச்சி செய்யுமாறு உரையாற்றியதோடு ஜப்பானோடு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். மெளலானா அபுல்கலாம் ஆசாத், வல்லபந்த், சயது முகமது உட்பட பல காங்கிரஸ் தலைவர்களுக்கும் இந்த எண்ணம் ஏற்பட்டது. ஆனால் காந்தி தெளிவாக மீண்டும் பிறருக்கு அடிமையாக கூடாது என இவ்வியக்கத்தை ஆரம்பித்தார்.

இதனை அறிந்த ஆங்கிலேயர்கள் பிரிட்டனின் பொதுமக்கள் சபையின் தலைவராய் இருந்த ஸ்டாபோர்ட் கிரிப்ஸ் தனது குழுவினருடன் 1942 மார்ச் 22 டெல்லி வந்தார். அனைவரிடமுன் கலந்தாலோசித்து மார்ச் 30ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தார். டொமினியன் அந்தஸ்து, அரசியல் நிர்ணய சபை போன்ற பத்து அம்சங்களை அனைத்து கட்சிகளும் நிராகரித்தன.பிரிவினை பற்றிக் கூறாததால் முஸ்லிம் லீக் புறக்கணித்தது. மக்களிடம் ஆங்கிலேய அரசின் மீது இருந்த கசப்புணர்ச்சி அதிகரித்தது.

நேரு
நேரு

#ஆங்கில அரசின் அடக்குமுறை

இப்போராட்டத்தை ஆரம்பத்திலேயே நசுக்க எண்ணி.. ஆகஸ்ட் 8ம் தேதி கூட்டம் முடிந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காந்தி ஆகாகான் மாளிகையிலும் மற்றவர்கள் அகமத் நகர் கோட்டையிலும் சிறை வைக்கப்பட்டனர். நேரு இரண்டாம் உலகப்போர் முடியும்வரையில் சுமார் 1030 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார்.

செய்தியறிந்து மறுநாள் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் 11 மற்றும் 12ம் தேதி டெல்லியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 76 பேர் உயிரிழந்தனர்.1943 இறுதிவாக்கில் இரு மாரடைப்பு ஏற்பட்டதால் உடல்நலம் குன்றிய கஸ்தூர்பா காந்தி பிப்ரவரி 22ல் ஆகாகான் மாளிகையில் உயிரிழந்தார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, அருணா ஆசிப் அலி ஆகியோர் தலைமறைவாகி ரகசிய போராட்டம் நடத்தினர். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. ராஜபாளையம்,காரைக்குடி, தேவகோட்டை, திருவாடனை ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

மாணவர்கள் கல்விக்கூடங்களை புறக்கணித்தனர். விவசாயிகள் வரிகொடா கிளர்ச்சியைத் துவக்கினர். வன்முறை நடைபெற்றாலும் அரசு திட்டமிட்டு ஒடுக்கியது. பல கிராமங்கள் மீது கூட்டு அபராதம் விதிக்கப்பட்டது. 538 முறை துப்பாக்கிச் சூடு நடத்தி 7000 பேர் இறந்ததாக கூறப்பட்டது. 60,229 பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.

1942 நவம்பர் மாதம் முடிவதற்குள் ஆகஸ்ட் புரட்சியை வெற்றிகரமாக அடக்கியது.

காங்கிரஸ் மகாசபை
காங்கிரஸ் மகாசபை

#போராட்டம் தோல்வி

இரண்டு மாதங்கள் மட்டுமே நடைபெற்ற இப்போராட்டம் தோல்வியடைந்ததற்கான காரணங்கள்..

*இப்போராட்டம் துவங்கிய மறுநாளே முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர் தலைமறைவாகினர். தனால் வழிகாட்டத் தலைவர்களின்றி மக்கள் குழம்பினர்

*போராட்டம் குறித்த தெளிவான திட்டமில்லை. நேருவின் திட்டம் ஐக்கிய மாகாணத்துக்கு மட்டும் பொருந்துவதாய் இருந்தது. இந்தியா முழுமைக்குமாய் இல்லை.

*வலுவான தலைமையில்லாததால் ஒருங்கிணைப்பு இல்லை. எனவே ஒவ்வொரு மாநிலமும் தன் போக்கில் போராட்டத்தை நடத்தியது.

*போராட்டக்காரர்களிடையே செய்தித் தொடர்பு இல்லை. பல்வேறு இடங்களுக்கு செய்திகளை ரகசியமாய் அனுப்பமுடியவில்லை.

கீழ்நிலையிலுள்ளோர் மட்டும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

*பிரிட்டிஷாரிடமிருந்து இந்து ராஜ்ஜியத்துக்கு அதிகாரம் மாற்றப்பட வேண்டுமென காங்கிரஸ் நினைக்கிறது. இந்துக்களின் ஆட்சியை பெற போராடுவதாக கூறி முஸ்லீம் லீக் போராட்டத்தில் பங்கெடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணமாயிற்று.

*அரசாங்க ஊழியர்களும் இராணுவத்தினரும் அரசாங்கத்துக்கு விசுவாசமாக இருந்ததால் போராட்டம் பிசுபிசுத்தது.

*நேதாஜி ஆதரவாளர்கள், இந்து மகாசபை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், சிறுபான்மையினர் ஆகியோர் ஆதரவின்மையால் நீண்டநாள் போராட்டம் நடைபெற முடியாமல் போனது.

*இப்போராட்டத்தின் மூலம் பிரிட்டன் சமரசத்துக்கு வரும் என எதிர்பார்த்த காந்தியின் நோக்கம் நிறைவேறவில்லை. மற்ற நாட்டினர் இந்தியாவுக்கு துணைவருவாரென்ற நிலையும் பொய்த்துப் போனது.

*பொதுமக்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பங்கேற்றாலும் தயார் நிலையில் இருந்த ஆங்கில அரசு போராட்டத்தை முளையிலேயே கிள்ளியது.

காந்தி
காந்தி

#ஆகஸ்ட் புரட்சியின் முக்கியத்துவம்

"செய் அல்லது செத்துமடி" (Do or Die)

எனும் வாசகம் தந்த உத்வேகம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் உச்சகட்டமாக இருந்தது. ஒவ்வொரு இந்தியருக்கும் சுதந்திரத்தின் மீதிருந்த வேட்கையைக் காட்டியது. மற்ற போராட்டங்கள் போல் அல்லாது

எந்தத் தலைவரும் இன்றி தன்னெழுச்சியான மக்கள் போராட்டமாக உருவெடுத்தது ஆங்கிலேயருக்கு அச்சத்தை தந்தது.

போராட்டம் தோல்வியடைந்தாலும் ஆங்கிலேயர் இனி நாம் நீண்ட காலம் இங்கு ஆட்சி நடத்த முடியாது எனும் எண்ணத்தை இப்போராட்டம் விதைத்தது. நாட்டின் சில பகுதிகள் 'இணை அரசாங்கங்கள்' அமைக்கப்பட்டது. சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தாக்குதல் தொடங்கத் தூண்டுகோலாக இருந்தது.

1857க்குப் பின்னர் தன்னெழுச்சியாக நடந்த மக்கள் போராட்டம் என வரலாற்றாய்வாளர்கள் கருதினர்.

இந்திய வரலாற்றில் இன்றும் ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படுகிறது.

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு