Published:Updated:

விசேஷ வீட்டு சாப்பாட்டு ருசி இருக்கே...! - உணவுக் காதலரின் லாக் டெளன் துயரம் #MyVikatan

விருந்து
விருந்து ( Dixith )

"குடிக்கிற கஞ்சிக்கே வழியில்லாத போது பைவ் ஸ்டார் ஹோட்டல் ரெசிபி முக்கியமா?" என்று நீங்க நினைத்தாலும் என் நினைவில் ரீங்காரமிடுவதைக் கூறத் துடிக்கிறதே இந்த ருசிகண்ட நா...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா காலத்தில் நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகளை தவறவிட்டு கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அப்படி நாம் தவறவிட்டுக் கொண்டிருக்கின்ற விசயங்களில் ஒன்றே.... விசேஷ வீட்டு சாப்பாட்டு ருசி...

"குடிக்கிற கஞ்சிக்கே வழியில்லாத போது பைவ் ஸ்டார் ஹோட்டல் ரெசிபி முக்கியமா?" என்று நீங்க நினைத்தாலும் என் நினைவில் ரீங்காரமிடுவதைக் கூறத் துடிக்கிறதே இந்த ருசிகண்ட நா...

எதனை நாம் இழந்து கொண்டு இருக்கிறமோ அது தானே நம் நினைவில் சுற்றிச் சுற்றி பவனி வரும். அதுதானே மனித இயல்பும் கூட. அது காதல் தோல்வியோ, மரணமோ எதுவாக இருந்தாலும் மறக்க நினைப்பது தானே நம்கண்முன் முந்திக் கொண்டு வரும்...

விருந்து
விருந்து
Dixith

காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, கல்யாணம், மறுவீடு, வளைகாப்பு, கிடாவெட்டு, வசந்த விழா என எல்லா விழாக்களிலும் விருந்துக்கென்று ஒரு தனிச்சிறப்பு இருக்கத்தானே செய்கிறது.

விசேஷத்திற்கு வந்திட்டு கை நனைக்காமல் போவது பஞ்சமகா பாவத்தைவிட கொடியதாக கருதும் சமூகமல்லவா நமது சமூகம்.

என்ன தான் ஆடம்பரமாக பெரிய மண்டபம் பிடித்து, பிரபலமான மைக் செட் கட்டி, அலங்கார மேடை அமைத்து, வண்ண சீரியல் பல்புகளால் ஜொலிக்கவிட்டு, இன்னிசை கச்சேரி நடத்தி பிரமாண்டமாக நடத்தினாலும் சாப்பாடு விளங்காவிட்டால் அவையாவுமே " உப்பில்லாத பண்டமாகவே" கருதப்படுவது தானே இயல்பு.

விசேஷ வீட்டு சாப்பாட்டிற்கென்றே ஒருவித தனி ருசி வந்துவிடுகிறது.

முதல்நாள் இரவு ஆயத்தமாக காய்கறிகள் நறுக்கும் வாசம் முதலே கமழத் தொடங்கும் நறுமணம் இறுதி வரை புதிய பரிபாலத்தில் பயணித்து நம்மை அதன்வசம் இழுத்துச் சென்று கொண்டே தானே இருக்கிறது.

சைவமே சொர்க்கமாக...

கரண்டியில் ஒட்டக் கூடாதென்று பிளாஸ்டிக் கவர் சுற்றி வைக்கப்படும் கேசரியில் தொடங்கும் தித்திப்பு, பாயசம் வரை நீடித்துக் கொண்டே இருந்து நம்மை ஆனந்த பரவசத்தில் திளைக்க வைக்கத் தானே செய்கிறது.

விருந்து
விருந்து

எத்தனை எத்தனை விதமான பொரியல்கள், கூட்டுகள் , அவியல்கள் மற்றும் பச்சடி என ஒவ்வொரு விசேஷ வீட்டிலும் ஒவ்வொரு ரகம் என அமர்க்களப்படுத்துவது அட்டகாச உபசரிப்பாக மிளிரும்.

சாம்பார், புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, மிளகு குழம்பு என வகைவகையான குழம்பு வகைகளும் ஒருபுறம் மிரட்ட ரசம், மோர் அல்லது தயிர் என உடன்பிறப்புகளும் உடன்வந்து உறவாட, வயிறு குதூகலத்துடன் கும்மாளமிடச் செய்யும்.

இதில் இடைச்சொருகலாக ஊறுகாயும் , வடையும், அப்பளமும் வற்றலும் வந்துவிட்டால் விருந்தோ பிரமாதம் தான் போங்க...

அதிலும் பாயசத்தில் முதன்முதலில் இலையில் வைத்திருந்தாலும் சாப்பிடாமல் கண்கொத்தி பாம்பாக பாதுகாத்த அப்பளத்தை நொறுக்கிப் போட்டு பிசைத்து கை ஒழுக ஒழுக அள்ளி பருகுவது தனி சொர்க்கம்!

ஒரே வீட்டு விசேஷத்தில் இவ்வளவும் இருக்கும் ராஜபோக விருந்து இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வீட்டு விசேஷத்திலும் இவைகளில் ஏதேனும் சிலவற்றை உண்ணும் பாக்கியம் கிடைப்பதே ஆனந்தம்..

*டிபன் ரெடி:

காலை, இரவு வேளைகளில் நடைபெறும் டிபன் விருந்து வேறொரு ரகத்தில் நம்மை நமது நாவை சுண்டி இழுக்கும் சூத்திரதாரிகளாகவே இருக்கின்றன எனலாம். ஸ்வீட், இட்லி, ஊத்தப்பம், பொடி தோசை, பூரி, சப்பாத்தி, வெஜ்/ காளான் பிரியாணி, பனியாரம், ஆப்பம், கொத்து புரோட்டா, கிச்சடி, தயிர் சாதம், கம்பு சாதம், தயிர் சேமியா என வியாபித்து அவை ஒவ்வொன்றுக்கும் ஏற்ற சட்னி வகைகள், சாம்பார், குருமா, மசியல், பச்சடி என நீளும்போது நம்மை அறியாமல் நமது நாவும் நீண்டுவிடும்.

விருந்து
விருந்து

இதன்பின்னர் பருகத் தரும் "டீ, காபி, பால், பாதாம் பால் சூடாக நாவை வருட, அடுத்து வரும் ஐஸ்க்ரீமோ பற்களை கூசச் செய்ய , இறுதியில் போடும் பீடா வாயில் ஒத்தடம் வைக்க" என நிறைவுறும்போது ஆனந்த பூரிப்பு வயிற்றிலும் வாயிலும் பூக்கத் செய்துவிடும்.

*வளைகாப்பு சாத வகைகள்:

சீமந்தம் என்ற வளைக்காப்பில் பரிமாறப்படும் சாத வகைகளோ ஒவ்வொரு நிறத்திலும் ஒவ்வொரு வகையென வானவில்லாய் நம்மைக் கட்டுண்டு களிப்புற உண்ண வைப்பதாக இருக்கும்...

அறுசுவையும் நாவிற்கு ஊட்ட பரிமாறப்படும் உணவு பதார்த்தங்கள் சரிவிகிதத்தில் அமைந்த சத்துணவு. பிள்ளத்தாச்சி பேரச் சொல்லி சாப்பாட்டு பிரியர்கள் எல்லா உணவையும் ஒரு கட்டு கட்டுவார்கள். வாழைப்பழமும் மிளகாய் வற்றலும் கலர் குழாய் அப்பளமும் தனி வெரைட்டி.

*அசைவ உணவுகள்:

சைவமே இத்தனை ரணகளமென்றால் அசைவ விருந்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன???

மட்டன் சுக்காவை மிஞ்ச ஏதேனும் உண்டா இந்த அவனியிலே... பிரியாணி எனத் தொடங்கி, மட்டன் குழம்பு ஒருபுறம், எலும்பு ரசம் மறுபுறமென சுண்டி இழுக்க, ரத்தக்குடல் பிரட்டல் மிரட்டி அழைக்க, தலைக்கறி கூட்டு தித்திக்க முன்னதாக ஆட்டுக்கால் சூப்பும் கிடைக்கப் பெற்றால் நாம் அதிர்ஷ்டசாலி. கோலா உருண்டையும், சிக்கன் 65 ஐயும் இணைந்தால் கறிசோறும் கவிபாடத் தூண்டும்.

அசைவ உணவு
அசைவ உணவு
Kalimuthu.P

எளிய விருந்தும் ஏகாந்தமே..

இப்படியெல்லாம் பிரமாண்ட விசேஷ விருந்து மட்டுமே சிறப்பென்று அர்த்தம் கொள்ளலாகாது அறுசுவை பிரியர்களே...

விசேஷ வீட்டுச் சோற்றை வடித்து ஓலப்பாயில் கொட்டி வாயல்வேட்டியால் (கதர்) போர்த்தி, நார்க்கூடையில் அகப்பையால் அள்ளி போடும்போது வரும் நறுமணமே சுத்த சுகந்தம்! அதில் சுட சுட ஊற்றி சாப்பிடும் எதுவுமே தேவாமிர்தமாக தித்திக்கும்.

துவரம் பருப்பு விலை அதிகமென்று நினைத்து தட்டப்பயறில் சாம்பார் வைத்த காலம் தொடங்கி என்றென்றும் விசேஷ விருந்து என்றாலே அலாதி ப்ரியம்.

இன்றும் "செய்முறை வெள்ளாமை"யாக கருதப்படும் சூழலிலுள்ள வசந்த விழாவில் பரிமாறப்படும் சுடச்சுட சோற்றில் காரமான கோழி குழம்புடன் ஒரு பேப்பர் கப்பில் (டீ கப்) வைக்கப்படும் சிக்கனின் ருசியும் ஆஹா..ஓஹோ... தான்!

வளைக்காப்பு விருந்து
வளைக்காப்பு விருந்து

விருந்துகளும் விருந்தோம்பலும் தமிழர் பண்பாடாக இருந்தாலும் அதில் ருசிக்கு அடிமையானவர்கள் நாகரிக கோமாளிகளாக தெரிந்தாலும் நாவின் ருசி நவசரமானதே...

ஆக மொத்தத்தில் விசேஷங்கள் வைக்காத மாதங்கள் தவிர்த்த பிற மாதங்களில் குறைந்தபட்சம் நான்கு விருந்துகளிலாவது கை நனைக்கும் வழக்கமுள்ள சாப்பாட்டு ராமனை இந்த கொரோனா காலம் இப்படி ஏங்க வைத்துவிட்டது...‌

கொரோனா அழியும்; காலம் கனியும் எனக் காத்திருப்போம்... விசேஷ உணவுகளை வெளுத்துக் கட்ட ஆரோக்கிய உடலுடன் தயாராகுவோம் இந்த ஊரடங்கு காலத்தில்!

-பா.அசோக்குமார்

சத்தியமங்கலம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு