`சார்.. Zoom பண்ணாதீங்க ப்ளீஸ்..!' - பிரான்ஸின் சலூன் கடை சங்கடங்களைப் பகிரும் தமிழர் #MyVikatan

சலூன் கடைகளைத் திறக்க முதல்கட்ட ஊரடங்கு தளர்த்தல் அறிவிப்பின்போதே முழு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது பிரான்ஸில்..
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
பிரான்ஸ் நாட்டைச் சிகப்பு, மஞ்சள், பச்சை என மூன்று மண்டலங்களாகப் பிரித்து, கொரோனா பாதிப்பு அதிகமற்ற பச்சை மண்டலத்தில் தொடங்கிப் படிப்படியாக நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அமலுக்கு வர இருக்கும் இரண்டாம் கட்ட தளர்த்தலில் பெரிய ஷாப்பிங் மால்கள்கூடத் திறக்கப்படாத நிலையில், பொருளாதாரத்துக்கு அத்தியாவசியமான பார்களுக்கும் உணவகங்களுக்கும் கூட முழு அனுமதி இல்லை.
இத்தகைய சூழலில், சலூன் கடைகளைத் திறக்க முதல் கட்ட ஊரடங்கு தளர்த்தல் அறிவிப்பின்போதே முழு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. சலூன்களைத் திறப்பதில் இனியும் தாமதம் ஏற்படுத்தினால், கொரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டு, இன்னும் சில வாரங்களில் நடத்தப்பட இருக்கும் இரண்டாம்கட்ட நகராட்சி தேர்தலின்போது அடையாள பிரச்னை ஏற்படலாம் எனப் பிரெஞ்சு அரசாங்கம் பயந்ததே இந்த உடனடி அனுமதிக்குக் காரணம் என்பதைப் பலமாக நம்புபவர்களில் நானும் ஒருவன்.

லாக்டெளன் நாள்களில் மேக்கப் இல்லாமல் யூ டியூப் சேனல்களில் சமைக்கும் நம்மூர் நட்சத்திரங்களைக் கூடச் சுலபமாக அடையாளம் கண்டுவிடலாம். ஆனால் சிகை அலங்காரம் தொடங்கி செயற்கை முடி, செயற்கை நகம், டாட்டூ, பியர்சிங் இத்யாதி இத்யாதிகளுக்காக மாதத்துக்குப் பல முறை சலூன்களையும் ஒப்பனை மையங்களையும் முற்றுகையிடும் பாரீஸ் நகரத்துப் பெண்களை அடையாளம் காண்பது அத்தனை சுலபமல்ல.
வீட்டில் தங்க ஆரம்பித்த சில நாள்களிலேயே பிரான்ஸ் நாட்டில் பல கணவன்மார்களும் காதலர்களும் தங்கள் மனைவிகளையும் காதலிகளையும் பார்க்கும்போதெல்லாம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விஜய் சேதுபதியைப் போல ``ப்ப்பா" எனக் கத்த தொடங்கிவிட்டதாக நம்பகமான தகவல் எனக்குக் கிடைத்தது. கொரோனா பயங்கரத்துக்கு முன்னால் இது ஒன்றுமில்லை எனப் பிரெஞ்சு ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை போலும்.

பிரச்னைகளை வியாபார சாதகமாகப் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்பவர்கள் அனைத்து நாடுகளிலும் உண்டு. கொரோனா பரவல் தீவிரமாகத் தொடங்கிய முதல் வாரத்திலேயே பிரான்ஸ் தொலைக்காட்சிகளில் உணவுப் பொருள்கள், கார்களுக்கான விளம்பரங்களெல்லாம் காணாமல் போய், சானிடைஸர், சோப்பு விளம்பரங்களும் கொரோனா தற்காப்பு ஆலோசனை விளம்பரங்களும் பெருகிவிட்டன. இவற்றுக்கு மத்தியிலும் சக்கை போடு போடுகின்றன டயட் உணவு விளம்பரங்கள்.
ஜிம்களும் பிட்னெஸ் நிலையங்களும் மூடப்படப்போவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்துக்கொண்டு, எங்களின் தயாரிப்பை சாப்பிட்டால் ஒரே வாரத்தில் ஒன்பது கிலோ குறைந்துவிடலாம் என்பது போன்ற அறிவிப்புகளுடன் காலை மாலை இரவுக்கான மூன்று வேலை காம்போ பேக்குகளை ஐம்பது சதவிகித தள்ளுபடி தொடங்கி, ஒரு மாதத்துக்கு இலவசம் என்பது வரை கூவி கூவி விளம்பரப்படுத்தும் இந்த நிறுவனங்களின் லேட்டஸ்ட் மார்க்கெட்டிங் யுக்தி, `கொரோனா ப்ரீ' வாசகம்.

ஒவ்வொரு பிஸ்கெட் பாக்கெட்டிலும் ஒரு லிட்டர் பால் எனக்கூவும் மில்க் பிஸ்கெட் விளம்பரங்களைச் சாத்தியமா என்றெல்லாம் யோசிக்காமல் நம்பும் நம்மவர்களைப் போலவே, கொரோனா தொற்றுக்குப் பல மாதங்களுக்கு முன்னரே பைக்குள் அடைபட்ட பதப்படுத்தப்பட்ட டயட் உணவுகளுக்கு `கொரோனா ப்ரீ' கூவல் பொருந்துமா எனப் பிரெஞ்சுக்காரர்களும் கவலைப்படவில்லை.
உடல் எடையைப் பற்றிக் கவலைப்பட்டு நாளுக்கு மூன்று முறை எடையைச் சோதிப்பவர்கள், எடை பரிசோதனைக்கு முன்னர் செயற்கை முடி, செயற்கை நகம், பியர்சிங் ஆபரணங்கள் போன்றவற்றைக் கழற்றிவிட்டு எடை பார்க்கவும் என்பதான பொதுநல அறிவுரை வாசகத்தை டயட் உணவு விளம்பரங்களுடன் சேர்த்தால் சில மனநல பிரச்னைகளுக்கும் எளிய தீர்வு கிடைக்கும்.
பெண்களைப் பற்றி மட்டும் இப்படியெல்லாம் பகடி செய்ய என்ன துணிச்சல் எனப் பல்லைக்கடிக்கும் பெண்மணிகளே, ஆண்மக்களின் பாடும் மேம்பட்டதாக இல்லை..
படை வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்குத் தழைகளை இழந்த மரத்தைப் போல மருந்துக்குக் கூட முடியில்லாத சொட்டையை மறைக்க முற்றிலும் மழித்த கட்டப்பா ஸ்டைல் பளபளத் தலையும் கான்டாக்ட் லென்ஸ் கண்களுமாய் இமேஜ் காக்கும் நண்பர் ஒருவருடன் லாக்டெளன் நாள்களில் வாட்ஸ்அப் வீடியோ காலில் அளவளாவ நேர்ந்தது...

மேல் மண்டை வழக்கம் போலவே பளபளத்தாலும் கீழ் மண்டையைச் சுற்றி முளைத்த ரோம வட்டத்துடன், சோடாபுட்டி கண்ணாடி அணிந்து, கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணன் வரைந்த திருவாளர் பொதுஜனம் போல மாறியிருந்தார் !
``புதுக்கண்ணாடியா? எந்தக் கடை திறந்திருக்கு ? "
எனப் பேச்சு வாக்கில் கேட்டுவிட்டேன் !
``பழைய கண்ணாடி.. யூஸ் அண்ட் த்ரோ கான்ட்டாக்ட் லென்ஸ் சரியா போயிடிச்சி ! "
எனப் பதில் வந்தது !
இதோடு விட்டிருக்கலாம் !...
`` ரொம்பக் கேமராவை ஷூம் பண்ணாதீங்க ..."
என்று வேறு திருவாய் மலர்ந்தேன்.
`` ஷூம் பண்றாராமில்ல ஸூமு.. உங்க பிரெண்டு இந்த ஒரு மாசத்துல சூமோவாகிட்டாரு "
என மனைவியின் குரல். அதற்குப் பிறகு அவர் ஆடியோ காலுக்குக்கூட வருவதில்லை.
காடாய் வளர்ந்த தாடி மீசைக்கு ஈடாக மேடாய் வளர்ந்த வயிற்றுடன் இரவில் தண்ணீர் குடிக்க எழுந்திருக்கும் தங்களை, தூக்க கலக்கத்தில் காணும் மனைவியும் குழந்தைகளும் காளகேயர்களைக் கண்டது போலப் பயந்து பதறுவதால் நொந்துபோய்ச் செல்ப் கட்டிங் முறையில், செய்கூலி இல்லாமல் சேதாரப்படுத்திக்கொள்ளும் ஆண்களின் நிலை இன்னும் மோசம்.

முடி பரவாயில்லை, சேதாரம் அதிகம் என்றால் மொத்தமாய் மொட்டையாக்கி சரி செய்துவிடலாம். கொரோனா கட்டுக்குள் வந்துவிட்ட பிறகும் பல ஆண் மக்களுக்கு லாக் டெளன் காலத்தில் ரிலீஸ் ஆகிவிட்ட வயிற்றை மீண்டும் லாக் செய்வது இயலாத காரியமாகப் போய்விடும் என்றுதான் தோன்றுகிறது.
பல்லாயிரம் மணிநேர முடி திருத்தல் அனுபவம் கொண்ட நிபுணர்களால்கூட என் தலை முடியை கட்டுக்குள் கொண்டு வருவது சிரமம். அதேபோல ரத்தம் பார்க்காமல் நான் முகச்சவரம் செய்துகொண்ட நாள்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படியொரு விசேஷமான முடி எனக்கு.
தண்ணீர் தெளித்து வாரத்தொடங்கியதும் நாணலாய் வளைந்து கொடுக்கும் முடி, ஈரம் காய்ந்ததும் கோரையாய் நெட்டிக்கொள்ளும். அதைவிடச் சிக்கலானது என் தாடி, மீசை. எந்தத் திசையையும் விட்டு வைக்காமல் மேல், கீழ், பக்கவாட்டு பகுதி எனச் சுழித்துச் சுழித்து வளரும்.

`` இப்படி வெட்டினா நல்லாயிருக்குமே... "
எனக்குப் புதிதாய் முடி திருத்துபவர், என் முடியின் ரகசியம் தெரியாமல் தானே வந்து வசமாய் மாட்டும்போதெல்லாம் மனதுக்குள் விசமமாய்ச் சிரித்துக்கொண்டு தலையாட்டுவதில் எனக்கு ஒரு குரூர சந்தோசம் !
`` சொன்னேன்ல... பாருங்க.. சூப்பரா இருக்குல்ல..."
ஈரத்தலையின் முடிகளை லாவகமாய் வெட்டியபடி சிலாகிப்பவரை,
``ஹேர் டிரையர் போடும் வரை பொறுடீ செல்லம் "
எனச் சந்தானம் ஸ்லாங்கில், மைண்ட் வாய்ஸில் பேசிக்கொள்வேன்.
தண்ணீர் தெளித்து வெட்ட வெட்ட, சொன்னதையெல்லாம் கேட்கும் முடி, எல்லாம் முடிந்து ஹேர் டிரையர் போட்டதும் பழையபடி,
`` உள்ளேன் அய்யா"
என எழுந்துவிடும்.
அடர்ந்த முடி, ஒரு மாத தாடியில் என்னைக் கண்ணாடியில் பார்த்தபோது எனக்கு என்னவோ விஜய் சேதுபதியின் சாயலில் இருப்பதாகத்தான் தோன்றியது. ஆனாலும் குடும்பத்தினர் பூச்சாண்டியைப் போல இருப்பதாகத் தொடர்ந்து நச்சரித்ததால் சலூனுக்குச் சென்றேன்.

நான் வழக்கமாய்ச் செல்லும் சலூன் கடை ஒரு ஈழத்தமிழருக்கு சொந்தமானது. அவர் செய்திருந்த கொரோனா தடுப்பு ஏற்பாடுகளைப் பார்த்தவுடன் கொஞ்சம் மிச்சமிருந்த கொரோனா பயமும் பறந்துவிட்டது.
அரசாங்க அறிவுரைகளுக்கும் மேலாக ஒவ்வொரு சேருக்கும் நடுவே பிளாஸ்டிக் தடுப்பு, முகக் கவசத்துக்கும் மேலே பிளாஸ்டிக் முகமூடி என அத்தனை பாதுகாப்பு.
`` நம்பி வார நம்ம மக்களைப் பாதுகாக்க வேண்டும்தானே"
நான் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியபோது, இழப்பின் வலியையும் இருத்தலின் அவசியத்தையும் உணர்ந்த ஓர் இனத்தின் மனிதநேய அக்கறை கலந்த பதில்.
தனது கட்டுரை ஒன்றில் அமெரிக்காவின் சலூன் கடை பற்றி வியந்திருப்பார் சுஜாதா...
கிருமி நாசினி, கையுறை என அந்தக் கடையின் சுத்தத்தைக் கண்டு,
`` ஒரு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளாய் இருக்கிறதே?"
என வியந்தவருக்கு,
`` ஒரு அறுவை சிகிச்சையைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள்"
என பதிலளித்தாராம் அந்தக் கடையின் பணியாளர்!
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வர முயன்றுகொண்டிருக்கும் மொத்த உலகமும் மற்றொரு பரவலைத் தடுக்கும் பொருட்டு ஒரு மாபெரும் அறுவை சிகிச்சை கூடமாகத்தான் மாறிக்கொண்டிருக்கிறது.
-காரை அக்பர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.