Published:Updated:

போட்டோமேனியா டு எமோஷனல் ஏகாம்பரங்கள்! - நெட்கார்டும் நல்லா இருந்த ஊரும் #MyVikatan

முகம்தெரியாத மனிதர்களுடன் இயல்பாய்ப் பேசவைத்து, அருகிலிருப்போரை அவாய்ட் செய்ய வைத்துவிடுகிறது இணையம்...

றிவுக்கு வேலை கொடுத்த சமூகத்தின் அப்டேட் வெர்ஷன், கைவிரலுக்குக் கடும்வேலை கொடுக்கும் தலைமுறை. தலைக்கு எண்ணெய் வைக்கிறோமோ இல்லையோ தலையணை பக்கத்தில போனை வைத்திருப்போம். பணம் இல்லாமல்கூட இருப்போம். ஆனால் பவர் பேங்க் இல்லாமல் இருக்கமாட்டோம். பவர் பேங்க் மட்டும் பயணத்தில் பாக்கெட்டில் இல்லை என்றால் பைத்தியம் பிடித்துவிடும்.

விளையாட்டாய் இருக்கும் இம்சை இணையவாதிகள் ட்ரெண்டை இந்தியாவே இன்று வேடிக்கை பார்க்கிறது. இப்படி இறங்கி அடிக்கும் இணையவாதிகளை கொஞ்சம் ஜாலியாக வகைப்படுத்திப் பிரித்துப் பார்ப்போம்.

#சாந்த சொரூபிகள்

இந்தப் பூனையும் மில்க் ஷேக் குடிக்குமா என்று பவ்யமாக இருப்பார்கள். ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி என்று இன்பாக்ஸில் வந்து இன்ட்ரோ கொடுப்பார்கள். வீட்டில் விவேகானந்தர், அப்துல்கலாம் புத்தகத்தைக் கரைத்துக் குடித்து போதனைகளாக தருவார்கள். நாம் அச்சென்று தும்பினால்கூட லைக் போடும் அப்பாவி நெட் யூசர்கள். தினசரி குட்மார்னிங், குட்நைட் இமெஜ் எல்லாம் பொறுக்கிப்போட்டு பொங்கல் வைப்பார்கள்.

ஒரு கருத்துப் போட்டால் எதிர்க்கருத்து என்கிற பேரில் கமென்டிடுவார்கள். அது அப்போது புரியாது அப்புறம்தான் புரியும். `டிபன் சாப்டீங்களா, டீ சாப்டீங்களா' என்று கேட்கும் மரியாதை ராமன்கள் இவர்கள்.

Representational Image
Representational Image
Pixabay

#விளம்பர விக்கி மாமா

பண்டிகைக்குப் போடும் புதுப்பட விளம்பரத்துக்கு இடையில் வரும் விளம்பரத்தைவிட இவர்களின் விளம்பரம் வருஷம் முழுதும் வற்றாமல் வந்துகொண்டே இருக்கும். நிமிஷத்துக்கு நிமிஷம் ஏறி இறங்கும் பங்குச்சந்தை மாதிரி, ஃப்ரோபைல் பிக்சரை மாத்திக் கொண்டே இருப்பார்கள். புதுத் துணியில் மஞ்சளை தேய்த்தைக்கூட போட்டோ எடுத்து அப்லோடுவார்கள்.

காலையில அம்மாவுக்குச் சோறு ஊட்டுவது (ஒருவாய் ஊட்டும்போது போட்டோ எடுத்துவிட்டு) ஓடிப்போவது, அவசர அவசரமாக அப்பாவுக்கு சேவிங் பண்ணச் செய்து, கட்டிப்பிடித்து கன்னத்தோட கன்னம் உரசுவது,

ஒவ்வொரு இடத்துக்குப் போகும் போது செல்ஃபி எடுப்பது, பைக் சாவி போடும்போது, பிரபலத்தைப் பார்த்துவிட்டால் பத்துப்பதினைந்து செல்ஃபி எடுத்து செதைப்பது.

தப்பித்தவறி ஊட்டி ,கொடைக்கானல் போனால் அவர்களின் அக்கவுன்ட்டை அஞ்சுநாள் ப்ளாக் செய்துவைத்தல் நலம். குரூப் போட்டோவில் விரல் முத்திரை கண்டிப்பாக வைத்துக் காட்டுவார்கள். ஒரு கூலிங்கிளாஸை குரூப்பிலிருக்கிற எல்லாரும் மாத்தி மாத்திப்போட்டு பார்க்கிற நமக்கு மாறுகண்ணே வந்துவிடும்.

#சீரியஸ் சிகாமணிகள்

எப்பவுமே டைம்லைனை சீரியஸாகவே வைத்திருப்பார்கள்.

``என்ன விளையாட்டிது. ஈரான்ல குண்டுவெடிக்குது, அமெரிக்காவுல புயல் அடிக்குது’’ என்று அட்வைஸ் செய்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு போராட்டத்திலேயும் கலந்துகொள்ளமாட்டார்கள்.

டைம்லைனில் எப்போதும் ரத்தம் சிந்தும் புகைப்படங்களும் வீடியோக்களுமே இருக்கும். பக்கத்தில் இருப்பவரிடம் பாசமாகூட பேசாமல், ஃபாரினில் நடக்கும் பொருளாதார மாற்றத்தையே பொறி வைத்துப் பேசி பதிவு போட்டு பார்த்துக்கொண்டு இருப்பார்கள். ட்விட்டரில் பிரபலங்கள் பத்து இங்கிலீஸ் ட்வீட்டாவது பார்வார்டு செய்தால்தான் ரெபிடெக்ஸில் இங்கிலீஸ் படித்ததற்கு மரியாதை என்று நினைப்பார்கள்.

Representational Image
Representational Image
Pixabay

#ஆறுன கஞ்சி ஆனந்தன்கள்

பழைய வீடியா, எப்போதோ வந்த ஆடியோ, பள்ளி ஆக்ஸிடென்ட், தேசிய கீதம் யுனெஸ்கோவில் செலக்ட் ஆனது, புகழ்பெற்ற கல்லறை வாசகம், புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்தது, இந்த லிங்கை ஓபன் செஞ்சா அம்பது ஜிபி இலவசம் என்று சேமியா ஐஸ் வித்த காலத்துக்கே நம்மைக் கூட்டிப் போவார்கள்.

போனவாரம் வந்த ஒரு செய்திக்கு பிரேக்கிங் நியூஸ் மட்டும் சேர்த்து, பட்டி டிங்கரிங் செய்து அனுப்பி பாலிடாயிலே குடிச்சு சாகலாம் என்ற எண்ணத்தை வரவைப்பார்கள். எதா இருந்தாலும் உடனே ஷேர் செய்துவிடும் பங்காளிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#மீம்ஸ் மன்னன்கள்

நாடோடிகள் படத்தில், `இப்பதாண்டா ஆசீர்வாதம் செய்தாரு அதுக்குள்ளயா'னு கேட்டதுமாதிரி, அட்வான்ஸ் பிரைனுடன் இருப்பவர்கள். ஒருத்தர் கருத்தைச் சொல்ல வோகல் கார்டு ஓபன் ஆகும்போதே இவர்களின் மைண்டில் மைண்ட் மேப் போட ஆரம்பித்துவிடுவார்கள்.

எங்கிருந்து எடுக்கிறார்கள் என்று எவனுக்கும் தெரியாது. ஆனால் மீம்ஸ் கருத்துகள் மத்திய அரசும் மாநில அரசும் போல ஈஸியாக செட் ஆகிடும்.

தேர்தல் நேரம், டீஸர், பிரபலங்களின் பேட்டி, சர்ச்சைக்குரிய கருத்தெல்லாம் வரும்போது ரொம்ப உக்கிரமாக மாறிடுவார்கள்.

Representational Image
Representational Image
camilo jimenez / Unsplash

#எமோசனல் ஏகாம்பரங்கள்

நாட்டில ஒரு பிரச்னை நடந்தா போதும், பொங்க ஆரம்பிச்சிருவாங்க. எல்.ஆர்.ஈஸ்வரி மைக் செட்டில் மாரியாத்தா பாட்டுகூட மத்தியானம் ஆஃப் பண்ணிடுவாங்க, ஆனா இவங்க மண்டைக்குள் ஓடுற எமோஷன் மட்டும் எங்கேயும் நிற்காது.

யாராக இருந்தாலும் சகட்டுமேனிக்கு சாணி அடிப்பது. `களப்போராட்டம் நடக்கிறது வாங்க' என்று அழைத்தால் மட்டும் சொன்னால், `அது ஆங் அன்னிக்கு டெல்லியில இருப்பேனு' பதில் சொல்லுவார்கள். `அட போராட்ட நிதியாவது தாங்க' என்று சொன்னால், `வர்றேன் போங்க' என்று வாயால் வடை சுடுவார். ஆனால் அந்த உக்கிரம் குறையாமல் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டு போராட்டம் நடத்துவார்கள்.

#ஆன் லைன் வெறியன்கள்

என்னென்ன ஆப் காசில்லாமல் டவுன்லோடு பண்ணலாம், எந்த லிங்கில் போனால் HD பிரின்ட்டில் படம் பார்க்கலாம், எப்பப்ப ஆன் லைன் ஆஃபர் வரும் என்று கட்டைவிரலில் கபாலத்தை வைத்து செயல்படும் ஆன்லைன் வெறியன்கள் இருக்கிறார்கள்.

போனுக்கு உள்ளே இருக்கிற எழுநூறு ஸ்பேர் பார்ட்சும் இவர்களுக்கு தெரியும். சிக்கலான விஷயத்தைக்கூட சிங்கிளாக எடுத்து சிக்ஸர் அடிப்பார்கள்.

சின்ன வயசுல டிபன் பாக்ஸ் மூடியை செவித்துல அடிச்சு திறந்து கொடுத்தவங்களின் அப்டேட் வெர்சன்தான் இவர்கள். போன் லாக் ஆனால், ஹேங் ஆனால், வைரஸ் வந்தால் கைகொடுக்கும் ஆபத்பாந்தனாக ஊருக்குள் உலாவி உதவுவார்கள்.

Representational Image
Representational Image
camilo jimenez / Unsplash

#போட்டோமேனியா

எங்கே போனாலும் போட்டோதான். தன் டைம்லைன் முழுக்கப் பதிவே இருக்காது. போட்டோ மட்டும்தான். ப்ளாக் & வொயிட் ஸ்டில், முறைத்துப் பார்ப்பது, விட்டத்தைப் பார்ப்பது, கடவாயில கைவைத்திருப்பது (இயல்பா இருக்கிறாராம்) சிரிக்கிற மாதிரி அஞ்சு, சீரியசா இருக்கிற மாதிரி அஞ்சு என்று எடுத்து போஸ்ட் செய்வதற்கு முன்னமே ஐம்பது பேருக்கு அதை tag செய்வது, போட்டோ போட்ட பத்தாவது நிமிசம் நைஸ், குட், சூப்பர் என கமென்ட் வர நூறு லைக் தாண்டினால்தான் கபினியைத் தாண்டின காவேரி போன்று ரிப்ளை செய்வதை நிறுத்துவார்கள்.

போட்டோ எடுத்துப் புளித்துப்போனால், திடீர் என்று பீரோவைத் திறந்து பழைய போட்டோவை எடுத்துப் பதியம் போடுவார்கள். கைக்குழந்தையாக இருக்கும்போது காதுகுத்தினது, மொட்டை அடித்தது என லாலலாலலா லாலா லாலலாலாதான்.

#நெட்கார்டும் நல்லா இருந்த ஊரும்

இன்றைய நாள் இனிமையான நாளாய் அமைய நாம் உயிரோடு இருக்கிறோமோ இல்லையோ ஸ்மார்ட் போனில் சார்ஜ் இருப்பது மிகவும் முக்கியமாகிவிட்டது. பொழுதுபோக்காய் இருந்தது, மெயின் புரொபஷன் ஆகி, மெயின் புரொபஷன் பொழுதுபோக்காகிவிட்டது இணையத்தினால்.

நல்ல விஷயங்கள் நிறைய இருந்தும் தவறான விஷயங்களையும் கற்றுத்தருவது இணையம். இரவினில் நெட்டு, பகலில் குட்நைட்டு என்று பயோலாஜிகல் க்ளாக்கையே சைக்கலாஜிக்கலாக மாற்றிவிட்டது.

முகம்தெரியாத மனிதர்களுடன் இயல்பாய் பேசவைத்து, அருகிலிருப்போரை அவாய்டு செய்ய வைத்துவிடுகிறது இணையம்.

வந்தாரை வா என்று அழைத்த தமிழ்நாட்டில், வாட்ஸ் அப்பில் வரலாமா என்று கேட்டுவிட்டு வரவேண்டியும் பேச வேண்டியும் இருக்கிறது. மற்றவர்களின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது என்று ஸ்டேட்டஸ் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சமூகம் என்பது நான்கு பேர் இணையம் என்பது நாலாயிரம் பேர்!

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு