Published:Updated:

கண்ணாலேயே `ரேபிட் டெஸ்ட்' எடுக்கும் வாட்ச்மேன்! - லாக்டெளன் 4.0 பரிதாபங்கள்! #MyVikatan

Representational Image
News
Representational Image ( bantersnaps / Unsplash )

லாக்டெளன் 4.0-வில் நாம் வெளியே செல்லும்போது நமக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்த ஒரு வேடிக்கையான பதிவு!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வீட்டில்;

கவசக் குண்டலங்களைப் போல மாஸ்க்கும், கிளவுஸும் அணிந்தால் மட்டுமே வேலைக்கு வெளியே செல்ல வீட்டில் அனுமதி கிடைக்கும். கண்டதைச் சாப்பிடாத என் அம்மாவும், கண்ட இடத்தில் சாப்பிடாத என அப்பாவும் அட்வைஸ் மழை பொழிவார்கள்.

போருக்குப் புறப்படும் புறமுதுகு காட்டாத புறநானூற்றுப் போர்வீரனைப் பார்ப்பதுபோல குழந்தைகள் நம்மை ஆச்சர்யத்துடன் பார்ப்பர். மனைவி நம் கையில் லன்ச் பாக்ஸைக் கொடுத்துவிட்டு பரிசோதனைக்கூட எலியைப் பார்ப்பது போன்றே திகிலுடன் நோக்குவார்.

``கொரோனாவை விருந்துக்குக் கூட்டிட்டு வந்து தொலைச்சுடாதீங்க" என்ற குடும்பத்தின் கட்டளையை சாசனமாக ஏற்று பயபக்தியுடனே பணிக்குச் செல்ல வேண்டும்.

Representational Image
Representational Image
Aditya Saxena / Unsplash

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கணநேரமும் பிசகாமல் கத்திமேல் நடப்பதுபோல ஒருவழியாக வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினால், வீட்டினுள் நுழையும் முன்பு நெருப்பில் வாட்டாத குறையாக நம்மைத் தொடாமலே சுத்தம் செய்வார்கள். ஏர்போர்ட்டில் போதைப்பொருள் கடத்திய கொள்ளைக்காரனைச் சோதிப்பது போன்று அணுஅணுவாக நம் பொருள்களைச் சோதனை செய்த பிறகே வீட்டுக்குள் அனுமதி கிடைக்கும்.

பெட்டிகேஸ் திருடனைக் காவலரின் சந்தேகக் கண்கள் தொடர்வது போன்றே, குடும்பத்தில் அனைவரது சந்தேகக் கண்களும் நம்மைத் தொடர்ந்தபடியே இருக்கும். துளி இருமலோ, தும்மலோ வந்தாலும் கூட வீட்டைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட அனைத்து வித சாத்தியக் கூறுகளும் இருப்பதால் சூதனமாக நடந்துகொள்ளவது நம் உடல்நலனுக்கு உகந்தது!

பேருந்தில்;

ஒரு பஸ்ஸுக்கு 20 பேர் மட்டுமே என்பதால் பேருந்தினுள் தாராளமாக உட்கார இடம் கிடைக்கும், ஆனால் பேருந்துதான் கிடைக்காது. பக்கத்து ஸ்டாப்புக்கே சென்று, குட்டிக்கரணம் போட்டு பிரம்மப் பிரயர்த்தனம் எல்லாம் செய்து பேருந்தில் ஏறினால், பக்கத்து சீட்டில் உள்ளவர் பாகிஸ்தான் தீவிரவாதியைப் பார்ப்பதுபோல நம்மை சந்தேகத்துடனே நோக்குவார். டிக்கெட் வாங்கும் போது ஒருவேளை கண்டக்டரின் கைகளைத் தொட்டுவிட்டால் வயசுப் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்ததுபோல் நம்முடன் சண்டைக்கு வருவார். `என்ன கையப்புடிச்சு இழுத்தயா?' வடிவேலு ரேஞ்சுக்கு பில்டப் செய்து பிரச்னையிலிருந்து மீளவேண்டி இருக்கும்!

பேருந்தினுள் தும்மல் போடுபவர் துச்சமாக மதிக்கப்படவும், இருமக் கூடியவர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படவும் அநேக வாய்ப்புகள் உண்டு!

Representational Image
Representational Image
Pixabay

பேருந்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் கம்பியைப் பிடிப்பதா வேண்டாமா என்ற குழப்பம் தீரும்முன் அடுத்த ஸ்டாப்பே வந்துவிடும். `நாங்கெல்லாம் அரபா நாட்லயே கம்பியப் புடிச்சதில்லை' என்றவாறு ரிஸ்கான பயணத்தைத் தொடர்ந்தால், அவ்வப்போது போடப்படும் பிரேக்குகள் `விழாமலே இருக்க முடியுமா' என நமது மனஉறுதியைக் குலைக்க ஆரம்பிக்கும். அப்போது திடீரென பேருந்தில் ஒலிக்கும் `ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்குத் தெரியுமா?' என்ற ரீதியிலான தத்துவப் பாடல்கள் நமக்கு பீதியைக் கிளப்பும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வொர்க் ஷாப்பில்;

நீண்ட நாள்களாகப் பயன்படுத்தாத காரணத்தால் வண்டி அவ்வப்போது இருமும். சரி ஒரு சர்வீஸ் செய்து விடலாம் என்று வொர்க் ஷாப் போனால், அங்கு நமக்கு முன்பே 30 பேர் வட்டத்தில் குத்தவைத்து அமர்ந்திருப்பர். வண்டியில் உள்ள குறைகளை நாம் பட்டியலிடுகையில் மெக்கானிக் வழக்கம் போலவே எதையுமே குறித்துக்கொள்ளாமல் நமது இமேஜை டேமேஜ் செய்வார். ஆனால், வண்டி பற்றி நாம் சொல்லச் சொல்ல `பேசிக்கலி ஐம் எ வாட்ச் மெக்கானிக்' ரேஞ்சில் மெக்கானிக்கின் முகபாவம் மாறுவது ரசிக்கக்கூடியதாய் இருக்கும்.

வண்டியில் 96 ஸ்பேர் பார்ட்ஸ்களைப் புதிதாக மாற்ற வேண்டும் என்பவரிடம் `இதற்கு நான் புதுவண்டி வாங்கிக் கொள்வேன்' என்ற நம் மைண்ட் வாய்ஸ்ஸை வெளியே சொல்ல முடியாது.

Representational Image
Representational Image
Palash Jain / Unsplash

ஸ்பேர் பார்ட்ஸ்களின் யானை விலை, குதிரை விலைகளைக் கேட்டு, நாம் வைத்திருப்பது பைக்கா? ராக்கெட்டா? எனும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது. வண்டி எப்ப திரும்பக் கிடைக்கும் என்றால், ஜோசியக்காரர் போல காலண்டரை வெறிக்க வெறிக்கப் பார்த்து திகிலூட்டுவார். `ஒரு வாரம் கழிச்சு எடுத்துக்கலாம்' என ஜெர்க் கொடுப்பவரிடம், மோட்டார் விகடனில் வந்த கட்டுரைகளின் சாரத்தைப் பேச்சுவாக்கில் அடித்துவிட்டோம் என்றால் அடுத்த நாளே வண்டி கிடைப்பது கேரண்டி!

அடிக்கடி பிளாஸ்டிக் கவரில் டீ வாங்க கிராஸ் ஆகும் வொர்க் ஷாப் பையன்களை சோப்புக் கம்பெனிகள் விளம்பரங்களில் ஏன் இன்னும் பயன்படுத்திக் கொள்ளவில்லை எனும் இமாலய சந்தேகம் மின்னி மறையும். வொர்க் ஷாப்பில் டீ மற்றும் தினத்தந்தியுடன் கூடிய வழக்கமான அரட்டை காதைப்பிளக்கும்.

அரட்டைக்கு என்றே பிறவி எடுத்து வட்டத்தில் அமர்ந்திருக்கும் சயன்டிஸ்ட்டுகள், கொரோனா குறித்து கோக்குமாக்காய் விளக்கம் அளிக்கத் துவங்குவதற்கு முன் அந்த இடத்தை விட்டு நாம் நகர்ந்து விடுவது நமது மனநலனுக்கு உகந்தது!

அலுவலகத்தில்;

`வொர்க் ப்ரம் ஹாம்' இல் நாம் செய்த தவறுகளை சரிசெய்ய ஒரு மாமாங்கம் தேவை என்ற ரீதியில் வழங்கப்படும் மேனேஜரின் அறிவுரைகளுக்கு பூம்பூம் மாடுகளாய் தலையாட்ட வேண்டும்.

விடுப்பு இன்றி அலுவலகம் வருவோர் எல்லாம் மாபெரும் குற்றவாளிகளாகக் கருதப்பட கணிசமான வாய்ப்புண்டு! எனவே, அவ்வப்போது லீவ் எடுத்து நம் இமேஜை காப்பாற்ற வேண்டி இருக்கும்!

`நீ எல்லாம் இன்னும் இருக்கியா' என்று அலுவலக நண்பர்கள் நம்மை ஆச்சர்யத்துடன் நோக்குவர். வீட்டிலேயே இருந்து வெயிட் போட்ட காரணத்தால் அலுவலகத்தில் பலபேரை நமக்கு அடையாளம் தெரியாமல் போகும். நாம் வலியப் போய் பேசுபவர் நம்மையும் அடையாளம் தெரியாமல் விழிப்பார்.

பெரும்பாலானோருக்கு உடை பத்தாமல் போயிருக்கும் என்பதால் அலுவலகமே சற்று `இறுக்கமாக' இருக்கும். நமது கணிப்பொறி மட்டும் வழக்கம்போலவே ஆன் ஆகவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும்.

அவருக்கு பேப்பர் போட்டுட்டாங்க, இவரை பெஞ்சுல உட்கார வெச்சிருக்காங்க என்று வரும் அலுவலக ஆட்குறைப்புத் தகவல்கள் மனதில் பீதியைக் கிளப்பும்.

பாத்ரூமில் உள்ள சானிடைஸரின் தரம் அலுவலகத்தின் தற்போதைய நிலையைச் சிம்பாளிக்காக சொல்லும்.

அலுவலகப் பணிகள் சரியான நேரத்தில் மறந்து தொலைத்திருக்கும் என்பதால், ஓ இதுதான் ஆபீஸா? இதுக்குப் பேருதான் கம்ப்யூட்டரா? இது என்ன மவுசா? இப்படித்தான் புராஜெக்ட் செய்யணுமா? என்று புதிய டிரெய்னி போல ஒவ்வொன்றையும் புதிதாகப் புரிந்துகொள்ள வேண்டிவரும்!

Representational Image
Representational Image
Damir Kopezhanov / Unsplash

சிக்னலில்;

மாஸ்க்கைக் கழற்றினால் மர்கயா செய்யத் தயாராய் காவலர்கள் சுற்றிவருவர்.

டூவீலரில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதால் காதலர்கள் எல்லாம் காவலர்களின் மேல் செமக் கடுப்பில் இருப்பர்.

டூவீலரில் டபுள்ஸ் வருகிறவர்கள் வெடிகுண்டு வைத்த தீவிரவாதியைவிட மோசமாக நடத்தப்படுவர். ``நான் குடிச்சனா இல்லையான்னு ஊதிக் காட்டட்டுமா சார்" என குடிமகன்கள் காவலர்களைக் கலாய்த்துக்கொண்டு இருப்பர்.

சிக்னலுக்கு சிக்னல் காவல்துறையின் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்கள் நம்மை விடாமல் விரட்டும். செயின் ஸ்னேட்சிங் செய்பவர்களைவிட மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு காவலர்களால் மரணபயம் கட்டப்படும்.

ட்ரோன், ரோபோ போன்றவை உதவியுடன் நடுரோட்டில் காவலர்களால் விழிப்புணர்வுத் தகவல்கள் நமக்கு வலிந்து ஊட்டப்படும். பச்சை விழுவதற்குள் பத்து மாஸ்க் விற்று பணக்காரர் ஆகும் நோக்கில் திரியும் விற்பனையாளர்களைப் பார்த்து ஒரு தடவை ஜோராகக் கைகளைத் தட்டியவாறு நாம் வேடிக்கை பார்க்க வேண்டிவரும்!

கொரோனா நோயின் அவலங்கள் என்ற ரீதியில் பக்கத்து பைக் ஆசாமியால் வழங்கப்படும் விளக்கங்களை `நாங்க ஏண்டா நடு சாமத்தில சுடுகாட்டுக்குப் போறோம்' எனக் கேட்டுக் கொண்டிருக்க நேரிடும்.

ஊதவே வேண்டாம் என்பதால் குடிமகன்கள் ப்ரியாக வாகனங்களில் வலம்வருவர். பொருளாதாரத்தை நெட்டுக்குத்தலாக நிமிர்த்த வேண்டி வேகமாகச் செல்லும் குடிமகன்களுக்கு சாலையில் உரியவாறு கௌரவம் அளிக்கப்படும். சிக்னலில் முன்னுரிமை கொடுக்கப்படவும் வாய்ப்புண்டு!

வங்கியில்;

வங்கியின் வாட்ச்மேன் கண்களாலேயே நம்மை `ரேபிட் டெஸ்ட்' செய்த பின்னரே உள்ளே அனுப்புவார். டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் குழந்தைகளிடம் `அதைத்தொடாத, இதைத்தொடாத' என நாம் அதட்டுவதுபோல வங்கியின் அதட்டல் அறிவிப்புகள் ஆங்காங்கே பளிச்சிடும். `மாஸ்க் அணிந்தவரெல்லாம் கொள்ளைக்காரர் அல்ல' எனும் தத்துப்பித்து தத்துவம் நமக்கு மட்டும் தோன்றித் தொலைக்கும்!

நேரம் ஆக ஆக, தப்பு செய்து மாட்டிக்கொண்ட மாணவன்போல வரிசையில் கால் மாற்றி மாற்றி நிற்க வேண்டிவரும். நமக்கு முன்பு வரிசையில் நிற்போர் பணம் எடுக்கிறார்களா அல்லது கேஷியரிடம் எல்லைப் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை ஏதேனும் நடத்துகிறார்களா எனும் சந்தேகம் மேலிடும்.

``இந்தப் பணத்தை ஏ.டி.எம்-மில் எடுக்க மாட்டீங்களா, இதை கால்சென்டரில் போன் பண்ணி கேட்க மாட்டீங்களா' என்ற வங்கிப் பணியாளரின் அதட்டல்கள் நமக்கு வயிற்றைக் கலக்கும்.

Representational Image
Representational Image
JESHOOTS.COM / Unsplash

நம் முறை வரும்போதுதான் அலுவலருக்கு மேனேஜரின் அழைப்பு வரும். அவரது ஆயிரத்து எட்டு கேள்விகளுக்கும் இவர் விளக்கம் அளிப்பதற்குள் சிந்துபாத் கதையே முடிவுக்கு வந்துவிடும்.

மேனேஜரின் சந்தேகத்தை தீர்த்து வைத்தவுடனே கைகழுவ வேண்டுமென்ற நினைவு அலுவலருக்கு வந்துவிடும்.

உடனே அவர் கணநேரத்தில் கழிவறைக்குள் சென்று மறைந்து விடுவார். நமக்கு பக்கத்துவரிசையில் நிற்பவர்கள் எல்லாம் பெரும் பாவியைப் பார்ப்பது போலவே நம்மை நோக்குவர்!

கைகளைக் கழுவிவிட்டு புத்துணர்வுடன் வந்த அலுவலர் நாம் கொடுத்த படிவத்தை வாங்கி டேபிள் மேல் வைத்துவிட்டு கணினியுடன் நீண்ட நேரம் போராடுவார்.

படிவத்தில் நாம் ஏதேனும் தவறு செய்திருப்போமா என்ற திக் திக் மனநிலையில் நமது காத்திருப்பு தொடரும். இறுதியாக நம் தேவையை வெற்றிகரமாக முடித்து வங்கியை விட்டு வெளியே வரும்போது பிறவிப் பலனை அடைந்த இன்பம் ஏற்படும்!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/