Published:Updated:

`தலைக்கு கொஞ்சம் சானிடைசர் போடுங்களேன்..!’ - சலூன் கடை பரிதாபங்கள் @ லாக்டௌன் 4.0 #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஒரே பாட்டில் பணக்காரர் ஆகும் தமிழ் ஹீரோ போல, ஒரு வாரத்தில் பணக்காரர் ஆகும் வித்தையைக் கரைத்துக் குடித்துவிட்டு வந்து கெத்தாக கடையைத் திறந்திருப்பார் சலூன்காரர்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

லாக்டெளன் 4.0-வில் தமிழகத்தின் சலூன்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சலூன்களில் ஆண்கள் முடிவெட்டப் போகும்போது இவையெல்லாம் நடக்க வாய்ப்புண்டு! - ஒரு வேடிக்கை பதிவு.

ஒரே பாட்டில் பணக்காரர் ஆகும் தமிழ் ஹீரோ போல, ஒரு வாரத்தில் பணக்காரர் ஆகும் வித்தையைக் கரைத்துக் குடித்துவிட்டு வந்து கெத்தாகக் கடையைத் திறந்திருப்பார் சலூன்காரர்.

Representational Image
Representational Image
Credits : Nanda kumar

யூடியூபைப் பார்த்து செல்ப் கட்டிங் செய்தோர் எல்லாம் பாவமன்னிப்பு கேட்க வந்தது போன்று சலூனில் பவ்யமாய் வட்டத்தினுள் அமர்ந்திருப்பர். ஆபரேஷன் செய்யப்போகும் சர்ஜன் போன்ற உடையில் கத்தி, கத்தரிக்கோலுடன் ஸ்டைலாக சலூன்காரர் என்ட்ரி கொடுப்பார். மாஸ்க் அணிந்திருப்பதால் சலூன் கடை கண்ணாடிகளில் நம் அழகு முகத்தைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு நமக்கு கிட்டாது போகும்.`கிட்டாதாயின் வெட்டென மற' என நினைத்து பின்வாங்குகையில், போன ஜென்மப் புண்ணியத்தின் மிச்சத்தால் நெற்றிக்கும் கண்களுக்கும் மட்டுமே சலூன் கடை கண்ணாடியைப் பார்க்கும் அரிய வாய்ப்பு கிட்டும்.

முகம் முழுவதும் முடியுடன் உள்ளவர் மாஸ்க்கைக் கழற்ற முயன்றால் சலூன் கடையைவிட்டுத் தள்ளி வைக்கப்படுவார்.

ஷேவிங் தேசவிரோதம் என்பதால் கட்டாயமாக கட்டிங் மட்டுமே என்ற அறிவிப்புப் பலகை தொங்கும். ட்ரோன் மூலம் முடிவெட்ட முடியுமா எனக் கேட்டு வில்லேஜ் விஞ்ஞானிகள் கடைக்காரரைத் திகிலூட்டுவர்.

முடிவெட்டி முடித்ததும் எங்க தலைக்கும் சானிடைசர் போடுவீங்களா என்று கேட்கும் அமெச்சூர் சயின்டிஸ்டுகளின் சந்தேகம் நமக்கு வயிற்றைக் கலக்கும். தினந்தந்தி மற்றும் டிவி -யைத் தவிர்த்துவிட்டு, `நீங்களும் ஒரு படைப்பாளிதான். எங்கள் அடையாளங்களை மீண்டும் உருவாக்குவதால்' என்று புரியாதவாறு கடைக்காரரைப் புகழ்ந்தால் சிறப்புக் கோட்டாவில் வரிசையில் முன்னுரிமை கிடைக்க வாய்ப்புண்டு.

Representational Image
Representational Image

காலில் சுடுதண்ணீர் ஊற்றிவிட்டு வந்தது போன்று சிலர் அவசரப்படுவர்.

கத்தரிக்கோலை சுடுதண்ணீரில் போடச்சொல்லி பலர் கடைக்காரரை அவஸ்தைப் படுத்துவர். அடுத்தது நாம்தான் என ஆவலாய் அமர்ந்திருக்கும்போது செல்போன் பேசிக்கொண்டே வரும் ஒருவர் திடீரென நாற்காலியை ஆக்கிரமிப்பார். `அவர் அப்பவே வந்துட்டார் சார்' எனக் கடைக்காரர் தன்னிலை விளக்கம் கொடுத்து தான் எப்போதுமே நீதிமான்தான் என்பதை உறுதியாக நிலைநாட்டுவார்.

நாம் எந்த ஸ்டைலில் முடிவெட்டச் சொன்னாலும் என் வெட்டு ஒன்றுதான் என்று வெட்டித் தள்ளுபவரிடம் எதுவும் பேச இயலாமல் கையறு நிலையில் நாம் கலங்க நேரிடும். கிருதாவும் மீசையும் இருபுறமும் ஒரே மாதிரி இருந்தது `ஒரு அழகிய நிலாக் காலம்' என்று மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டிவரும். அவசரகதியில் வெட்டப்படுவதால் நமக்கு முடி வெட்டப்படுகிறதா அல்லது கொத்துக்கொத்தாய் பிடுங்கப்படுகிறதா எனும் சந்தேகத்தை மனதினுள் புதைத்துக்கொண்டு, முடிவெட்டி முடியும்வரை தமிழ் சினிமா ஒரு தலைக்காதல் ஹீரோ போல சலூன்காரரிடம் உருக்கமாக டயலாக் பேச வேண்டும்.இது நம் தலைநலனுக்கு உகந்தது.

முடி கறுப்பாகத் தொடங்கும்போது சம்பள நாளுக்கு நிகரான ஆனந்தம் பலருக்கும் உண்டாகும். ஸ்ப்ரே அடிக்கும் நீரெல்லாம் அந்திமழை போன்று அழகானதாய் மாறும்.

சலூன் கடையில் பலரது அடையாளங்கள் படிப்படியாய் மீட்கப்படும்போது அவர்களால் ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல்போகும். காதலிக்கும்போது உண்டாகும் பரபரப்பைப் போன்று நீண்ட நாள்களுக்குப் பிறகு கட்டிங் செய்யும்போதும் ஒருவித பரபரப்பு தோன்றும்.

நம் மேல் போர்த்தப்படும் ஒன்யூஸ் பிளாஸ்டிக் துணிகளால் கத்தரி வெயிலில் முடி வெட்டியவுடனே குளித்தது போன்ற தோற்றம் நிச்சயம் உண்டாகும். அதற்கும் சி.ஏ.ஜி கணக்கில் என்றுமே வராத சர்வீஸ் சார்ஜ் மற்றும் ஜி.எஸ்.டி போடப்படும்.

Representational Image
Representational Image

சலூன் கடையில் இப்படி வந்து காத்துக் கிடப்பதற்கு மொத்தமாக மொட்டை அடித்துக்கொண்டு போய்விடலாம் என்று பலபேர் அவசர மொட்டை போடவும் வாய்ப்புண்டு. வெய்யில் காலம் என்பதால் இம்முடிவால் `முன்னே கசப்பும் பின்னே இனிப்புமாய்' முதுநெல்லிக்கனி போல பெரும்பயன் உண்டாகும். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, முடிவெட்டி சாதனை நிகழ்த்திய வெற்றியுடன் வீட்டுக்கு வந்தால் குழந்தைகளுக்கு நம்மை அடையாளம் தெரியாமல்போகும் அவலத்தையும் சகித்துக்கொள்ள வேண்டிவரும்.

எத்தனை குறைவாய் முடிவெட்டி வந்தாலும், "முடி வெட்டின மாதிரியே தெரியல. இன்னும் கொஞ்சம் கொறச்சிருக்கலாம்" என்று வழக்கம்போலவே கூறும் அப்பாவிடம், துக்கத்தை மனதினுள் புதைத்துக்கொண்டு வெளியே புன்னகைக்கும் சினிமா ஹீரோ போல நடிக்க வேண்டி வரும்.

முடி வெட்டி முடித்தவுடன் முடி இழந்த மன்னராய் நாம் மாறிவிடுவோம் என்பதால் நம்மை அடையாளம் தெரியாமல் நம் வீட்டு நாயே நம்மைப் பார்த்து குரைக்கவும் கணிசமான வாய்ப்புண்டு.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு