Published:Updated:

கொரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால்..! - ஜாலியான ஒரு புத்தாண்டு ராசி பலன்! #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

ராசிபலனின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்கூட ஒரு ஆர்வத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என ராசிபலன் பார்ப்பார்கள். தினசரி காலண்டரில் பார்த்தாலும் வருஷ ஓப்பனிங்கில் பார்க்கும் சுகமே சுகம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரொனா மட்டும் வராமல் இருந்திருந்தால் அவர்களின் ராசிபலன் எப்படி இருக்கும் என்பதற்கான ஜாலி அலசல்.

இந்த வருஷமாவது நம்ம ராசிக்கு நல்ல பலன் இருக்காதான்னு ஏக்கத்தோடு பார்க்கும் அனைத்து ராசி அன்பர்களே... இருக்கு இந்த வருஷமும் ராசிபலன் இருக்கு. HD பிரின்ட் எதிர்பார்த்தவனுக்கு தியேட்டர் பிரின்ட் கிடைப்பது மாதிரி... ஒவ்வொரு ராசியின் ஓப்பனிங்கிலும் நல்லா சொல்லிட்டு முடிவில் மரண பயத்தை ஏற்படுத்துவாங்க. 2020-ல நமக்கு எப்படி இருக்கும்... மொத்தத்துல ராசிபலன் பார்க்கலாமா வேண்டாமானு பார்க்கும்போது...

Representational Image
Representational Image

#மேஷம்

சனீஸ்வரனுக்கு சட்டை தைச்சு போட்ட மாதிரி அலையும் மேஷ ராசி நேயர்களே... சனியின் உக்கிரமான பார்வை சஞ்சரித்தாலும், 9-வதாய் இருக்கும் குருவின் குக்கரான பார்வையில் பணத்துக்கு பஞ்சமிருக்காது. எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மிதப்பில் இருப்பது ஆபத்து. புதிதாய் பணியில் சேருவோர் எல்லாம் உங்களைவிட ஒன்றரை டன் வெயிட் அறிவுடன் இருப்பதால் அவர்களிடம் ஜாக்கிரதையாய் செயல்படவும். கம்பெனி மாற நினைத்தால் காணாப் பொணம் ஆயிடுவீங்க. குடும்பத்துக்குள் விரிசல், பிளத்தல், பெயின்ட் உரிதல் இருந்தாலும் சாதுரியமான உங்க பல்லைக் காட்டி இழித்து பட்டி டிங்கரிங் பார்த்து சரிசெய்வீர்கள். ஆறு மாதத்தில் சாப்ட் வேர் அப்டேட் ஆக வாய்ப்பு உள்ளதால் இப்போதைக்கு புதிய மொபைல் எடுப்பதை தவிர்க்கவும். பரிகாரம்: ரேமன்ட்ஸ் துணியையே அணியும் நீங்கள், சிறுது காலத்துக்கு கட்பீஸ் பேன்ட்டுகளை அணிவது கண் திருஷ்டிக்கு நல்லது.

#ரிஷபம்

தலைகீழா சம்மர் சாட்தான் அடிப்பேன் எனக் குதிக்கத் துடிக்கும் ரிஷப ராசி நேயர்களே!

ராகு இரண்டாம் இடத்தில் இருந்தாலும், குரு பகவான் மற்ற ராசிக்கு டெப்டேஷனில் போயிருப்பதால் உங்களுக்கு எல்லாமே லேட்டாதான் கிடைக்கும்.

மினிமம் பேலன்சையே மெயின்டைன் பண்ண முடியாம, இ.எம்.ஐ யை எக்ஸ்ட்ரா வட்டியோடதான் கட்டுவீங்க. மனசால ஒரு பெண்ணை நினைப்பீங்க, அது மனசாட்சிக்காகவாவது உங்களை நினச்சிகூட பார்க்காது. காதலி கல்யாணத்துக்கு அர்ச்சனை போடுறதுக்காகவே அளந்து செஞ்ச கை மாதிரி இந்த வருஷம் முழுதும் இருக்கும். வீட்டு ஓனரிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

பரிகாரம்: விதி வீடியோகேம் ஆடிக்கொண்டிருப்பதால் ஆன் லைனில் ரம்மி விளையாடுவது ஆகவே ஆகாது. அமைதியாய் இருப்பது ஆன்மாவுக்கு நல்லது.

Representational Image
Representational Image

#மிதுனம்

காலம் பூரா காபி பேஸ்ட் செய்து காலத்தை ஓட்டும் மிதுன ராசி நேயர்களே! 7-ம் இடத்தில் இருக்கும் சனிக்கு சளி பிடித்திருப்பதால் செலவினங்கள் வரும் அபாயம் இருக்கும். உடல் நலக்குறைவு ஏற்படும். சுகரை சிசேரியன் அளவுக்கு போகாம சுகப்பிரஷரா வச்சிக்குங்க. வெளிநாட்டுல வேலைக்கு வாவான்னு கூப்பிடுவாங்க. விலகிச் சென்ற உறவுகள் எல்லாம் போடா டேய் என்றே பார்ப்பார்கள். அப்படியே சேர்ந்தாலும் வாரும் வந்துதொலையும்ங்கிற ரேஞ்சுக்குதான் பார்ப்பாங்க. தொப்பையை குறைக்க வாக்கிங் வரும் நண்பர்களிடம் அரசியல் பேசி அடிவாங்கும் வாய்ப்பு உள்ளதால் வாயில் கவனம்...வாக்கிங்கில் மரணம்.

இளம் பெண்களுக்கு ஆண்டின் ஆரம்பத்தில் அனுகூலம் வருவதால், கண்டிப்பாய் உங்களுக்கு இரும்பு சம்பந்தமான வேலை அமையும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போய் உண்டகட்டியும் சுண்டலும் வாங்கி சாப்பிடவும். பெண்களுக்கு சிறிது காலத்துக்கு ஐ ப்ரோவை அழகு படுத்த வேண்டாம்.

#கடகம்

பார்த்தாலே தூக்கி அடிக்கணும்போல தோணும் கடக ராசி நேயர்களே! குரு குதர்க்கமாய் பார்ப்பதால் எச்சரிக்கை. எச்சரிக்கைக்கு எல்லாம் எச்சரிக்கை... எச்சரிக்கையோ எச்சரிக்கை. இப்படியெல்லாம் அடக்கமாய் இருந்தாலும் வாய் வாய்தா வாங்கிட்டுப்போய் தல - தளபதி சண்டைக்கு சான்ஸ் கேட்கும். கொஞ்ச நாளைக்கு இணையத்தில் மஞ்சளின் மகிமை, அருகம்புல்லின் அருமை, அப்துல் கலாம் பொன்மொழியோடு மெய்ன்டைன் பண்ணுங்க.

மாணவர்களுக்கு மதிக்காத பெண்களின் எண்ணிக்கை உயரும். எப்பவுமே படிக்காத கேள்வியே பரிட்சையில் கேட்பதால் படிக்கவே தோணாது. பெண்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அடிக்கடி கனவில் வருவார்கள்... ஆனால், சுக்கிரனுக்கு சுதி இல்லாததால் 30 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்கும் மணமகனே மணாளனாய் வருவார்.

பரிகாரம்: ரிமோட்டை கையால் தொடக்கூடாது.

ஒரு மண்டலத்துக்கு டப்பிங் சீரியல் பார்க்கவும். முடிந்தால் அந்தக் கதையை அடுத்தவருக்கு சொல்லவும். பேன் சீப்புவாங்கி பத்துப் பேருக்கு கொடுக்கவும்

Representational Image
Representational Image

#சிம்மம்

வேலை எல்லாம் பரவாயில்லையானு கேட்டால் புலம்போ புலம்பு எனப் புலம்பும் சிம்ம ராசி சிங்கங்களே!

மூன்றாம் இடத்தில் இருக்கும் சனி ஃபார்மெட் ஆவதால், குரு லாகின் ஆக டைம் எடுக்கும். உடல் உபாதை, கட்டிச்சளி வரும். பெண்கள் பித்த வெடிப்புக்கு ஆளாவீர்கள். மனைவியுடன் இருக்கும்போது நமீதா, நயன்தாரா படங்களைப் பார்ப்பதை தவிர்க்கவும். இப்போதைக்கு வாகனம் வாங்குவதை தவிர்க்கவும். அப்படியே நீங்க வாங்கித் தள்ளிட்டாலும்... போங்க... கடுப்பேத்திக்கிட்டு

ஒடஞ்சிபோன இன்டிகேட்டரை முதலில் சரி செய்யவும். பண்டிகை நாளில் பைக் ஸ்டாண்டில் இடம் இருக்காது. சிம்மராசி எல்லாம் சிங்கம் மாதிரி என முட்டுக்கொடுப்போருக்கு தெரியாது... மனைவியிடம் மரண அடி வாங்கும் உங்க மனசுக்கு மட்டும்தான் தெரியும். வாரிசுகளுக்கு கின்டர் ஜாய் வாங்கிக்கொடுப்பது, போன் டிஸ்ப்ளே உடைப்பது என வாரிசுகளால் வாழ்க்கை கிரவுண்ட் ஃப்ளோரிலேயே இருக்கும். சொந்தங்களால் ஓரளவு உதவி கிட்டும். ஆனாலும், பெரும்பாலானோர் என்னாதம்பி என்னா ஆச்சுனு வடிவேலு மாதிரி வாய்ஸில் பேசுவாங்க.

பரிகாரம்: வாரத்தில் மூன்று நாளைக்கு உப்புமா சாப்பிடுங்க. வெள்ளிக்கிழமை எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டை கேட்கவும். தமிழனா இருந்தா ஆஃபாயிலை ஷேர் பண்ணுங்கனு பத்துப் பேருக்கு மெசேஜ் அனுப்பவும்.

#கன்னி

ஹலோ நேத்து அடிக்க வர்றேன்னு சொன்னீங்க அப்புறம் வரவே இல்லனு ஜாலியா வலியையே வான்டடாக வாங்கும் கன்னி ராசி அன்பர்களே!

அடுத்த வருஷம் தலை தீபாவளியாக வாழ்த்துகள்'னு வாழ்த்து சொல்லும் நண்பர்களை அன்ஃபாலோ செய்ங்க. அவங்க வாய் வைக்கிறதாலதான் சுபகாரியமெல்லாம் சுத்திப்போகுது. வாயில சனி என்பதை நாக்குப்புண் வந்தபின்தான் உணர்வீர்கள். குருபகவான் கும்பிட்டு பார்ப்பதால் பண வசதி பெருகும். வண்டி வாகனம் வாங்குவீங்க... ஆனால் சிலருக்கு ட்யூ கட்ட முடியாமல் வண்டி சீஸ் செய்யும் நிலைமையும் வரும். தொழில் ஸ்தானாதிபதி தொடர்ந்து ஸ்லீப்பிங் மோடிலியே இருப்பதால் அதை வைப்ரேட் மோடுக்கு கொண்டு செல்ல சிறிது காலம் ஆகும். வழக்கம்போல் முகத்தைப் பார்த்தே உங்களை முடிவு செய்துவிடுவதால், திறமையெல்லாம் தெரியாமலயே போயிடும்

பரிகாரம்: பத்துப் பேருக்கு புதுப்படங்களை ஷேர் இட் செய்யவும். ஒரு வாரத்துக்கு தினசரி ரேஷன் கடையில் என்ன போடுறாங்கனு பக்கத்து வீட்டுக்காரர்களுக்குச் சொல்லவும்.

Representational Image
Representational Image

#தனுசு

இக்கட்டான நிலையில் துணிவான முடிவையும், சமயோஜித புத்தியுடன் எப்போதும் அடுத்தவனுக்குதான் இருக்கும் என ஆணித்தரமாக நம்பும் தனுசு ராசி நேயர்களே!

சந்திரனையும் சனியையும் பழைய படத்தில் பார்த்திருப்ப, கிராபிக்ஸில பார்த்திருப்ப... ஆனா நேருக்கு நேரா கண்ணாடியில பார்த்திருக்கியா பார்த்திருக்கியா... அது நீங்கதான். உடல் உபாதைகளான கழுத்து சுளுக்கு, நாட்பட்ட தாடி வளரும். கோல்டன் பேசியலே செய்தாலும் முகம் வேம்புநாடு வொய்ட் சிமென்ட் அடித்தது மாதிரியும், ஆண்கள் பேர்&ஹேண்ட்சம் பூசினாலும் திட்டு திட்டா தேமல் வந்தா மாதிரியும் தெரியும்.

பரிகாரம்: தனுசு ராசிக்காரங்க எல்லாரும் ஒண்ணுசேர்ந்து வாட்ஸ் அப் ஆரம்பிக்கலாம்.

தனுஷ் படத்தை ஸ்க்ரீன் ஷேவரா வைக்கலாம்.

நிலவேம்பு கசாயம், கபசுரக் குடிநீர் தானம் செய்யவும்.

துலாம்

நெற்றியில் அடித்த மாதிரி கருத்தை வெளிப்படுத்தும் துலாம் ராசி நேயர்களே!

இந்த ஆண்டு குண்டடிபட்ட குரல் மாதிரி தொண்டை கட்டும் வாய்ப்புண்டு. அஞ்சாம் பாதம், ஏழாம் பாதம் எனத் தேடி அலைந்தாலும் ஒன்பதாம் பாதம் செருப்புதான் ஓரளவு செட் ஆகும். உங்க திறமை மதிக்கப்படும். பணி உயர்வு கிட்டும். அதாவது, முதல் மாடியிலிருந்து மூன்றாம் மாடிக்கு அலுவலகம் மாறும். பாடி ஸ்பிரே அடித்த வரை இனிய சூழல் நிலவும். வீடு, மனை, வாகனம் புதிதாய் வாங்குபவரை வேடிக்கை மட்டும் பார்ப்பீங்க. நண்பர்களால் கவனம் தேவை. முகநூலில் போட்டோ டேக் செய்பவன், கேம் ரிக்குவஸ்ட் அனுப்புறவனுக்கு எல்லாம் மனசார காசு வெட்டி போடலாம். இன்பாக்சில் வந்து குட்மார்னிங் சொல்பவனெல்லாம், காதுக்குள்ள வந்து கொசுக்கடிப்பதைவிட மோசமானவர்கள் .ஜாக்கிரதையா இருக்கணும்.

அலுவல் ரீதியாகத் திடீர் பயணம் ஏற்படும். அதாவது ஒத்தையில நாய் மாதிரி அலையப் போறீங்க. பிடிச்சமானவருக்கு பூ வாங்கிக் கொடுக்கலாம்.

முடியாதவர்கள் கார் மிரருக்கு பூ வாங்கிப் போடலாம்.

பூ விற்பவரின் வாழ்க்கையாவது மணக்கும்.

பரிகாரம்: ராயல் என்பீல்டில் எடுத்த செல்ஃபியை உடனடியாய் டெலிட் செய்திடுங்க. சனி பகவான் டென்ஷன் ஆனதே அந்த போட்டோக்களைப் பார்த்துதான். கூலரே அணியாத போட்டோக்களை டிபியாய் வைக்கவும். குறிப்பா க்ளோஸ் செல்ஃபி. அப்புறம் பாருங்க கண் திருஷ்டி கண் இருக்கிற வரைக்கும் வராது.

Representational Image
Representational Image

#விருச்சிகம்

பயந்து நடப்பதையே பவ்யமாக நடப்பதாக நினைக்கும் விருச்சிக ராசி நேயர்களே!

விஜயகாந்த் மாதிரி கம்பீரமா இருந்த நீங்கள் இந்த ஆண்டு காதல்பட விருச்சக காந்தாய் மாற வாய்ப்புள்ளது. 7-ம் வீட்டிலிருந்து புதன் எட்டாம் வீட்டுக்கு பால் காய்ச்ச வருவதால், ஓரளவு உக்கிர பார்வையிலிருந்து தப்பிக்கலாம். பழைய சிக்கல் தீர்ந்திடுச்சுனு நினைக்க வைக்கும். ஆனால், வாங்கிய கடன் அப்படியே மரம் மாதிரி நிற்கும். E.M.I கணிசமாக உயரும். சூரியனும் சனியும் சுமுகமான கூட்டணி உடன் இருப்பதால் ஃபுல் டாக்டைம் ஆஃபர் கிடைக்கும். முகநூலில் மொக்க ஸ்டேட்டஸ்க்கும் கணிசமான லைக் வரும். உடல் உபாதை குறையும்.

ஆனாலும், அவ்வப்போது குடல் எரிச்சல், நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

பரிகாரம்: பஸ் ஸ்டாண்டில் விற்கும் இஞ்சி மொரப்பா வாங்கி சாப்பிடவும். ரத்தம் வேண்டும் எனச் செய்தி வந்தால் உங்களுக்கு அந்த குரூப் ரத்தம்தான் என்றாலும் பத்துப் பேருக்கு ஃபார்வேர்டு செய்யவும்.

சண்டே மார்க்கெட்டில் விற்கும் 100 ரூபாய் சட்டை எடுத்து நெருங்கிய உறவினருக்கும் மேலதிகாரிக்கும் தரவும்.

#மகரம்

Pull&push கதவுகளை எந்த வித குழப்பமும் இல்லாமல் திறக்கும் மகர ராசி மகராசன்களே!

கலகலப்பாய் பேசுவதாய் நினைத்தாலும் மற்றவன் கடுப்பிலதான் அதைக் கேட்கிறான் என்பதே புரியாத வெள்ளந்தி நீங்கள். நெட் ஆப் செய்தாலும் அதை 5 நிமிடம் பார்த்தால்தான் திருப்தி வரும் உங்களுக்கு. சந்திரன் 5-ம் வீட்டிலும் குரு 10-ம் வீட்டிலும் இருப்பதால் இந்த வீடுகளில் உள்ளவர்கள் உங்களை ஒரு பரம்பரை எதிரியோட அசிஸ்டன்ட் மாதிரி பார்ப்பாங்க. அடிக்கடி எல்லாரிடமும் தரும அடி வாங்குவது போல் கனவு வரும். சனி 12-ம் வீட்டில் இருப்பதால் என்னைப் பிடிச்சிருக்கா சனியனேனு திட்டி சப்-ஸ்கிரைப் செய்யச் சொல்லி கேட்கும்.

பரிகாரம்: சனீஸ்வரனை ஸ்க்ரீன் சேவராக வைக்கவும். வாட்ஸ் அப் குரூப்பில் `சனிக்கு மேல எவன்டா' `சனி இருக்க பயமேன்' என்ற வார்த்தையை பத்து குரூப்புக்கு அனுப்பி இதை ஷேர் செய்யலைன்னா ரத்த வாந்தி, ரத்தப் பொரியல் எடுப்பேன்னு பயமுறுத்தலாம். மனைவியிடம் பேச்சில் கவனம் இருக்கட்டும்.

Representational Image
Representational Image

கும்பம்

ஏழு ஜோக்கரை வைத்துக்கொண்டு எப்ப டிக் அடிப்போம்னு யோசிக்கும் அசாதாரண நம்பிக்கையோட காத்திருக்கும் கும்பராசி நேயர்களே!

குரு 9-ம் இடத்தில குணச்சித்திர பாத்திரத்தில் வருவதால் உங்க ராசிக்கு கொஞ்சம் அனுகூலமுண்டு. திருமணம், சீமந்தம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் என எல்லா விஷேசங்களுக்கும் ஒரே நேரத்தில் மொய் வைக்கும் செலவு வரும். செவ்வாயும் சனியும் ராசியின் உச்ச ஸ்தானத்தில் இருப்பதால் பரம்பரை சொத்துக்கு பாகுபலி மாதிரி சண்டை போட வேண்டி வரும். வாகனத்தில் கவனம் தேவை. சர்வீஸ்க்கு பைக் விடும்போது பைக்துடைக்கிற துணி காணாமல் போகும். நெருங்கிய நண்பன் கடன் வாங்க கேரன்ட்டி கையெழுத்து கேட்க வழி மேல விழி வைத்து வாடகை கார்ல வருவாரு. அவனை சமாளித்து அனுப்பினால் போதும். ராசியின் உக்கிரம் அனைத்தும் போயிடும்

பரிகாரம்: கும்ப ராசியாய் இருப்பதால் கும்பக்கரை தங்கையா படத்தைப் பார்க்கவும். வெளிமாநில பீகாரிகளுக்கு ரேஷன் அரிசியை இலவசமாய் கொடுக்கவும். பக்கத்து வீட்டில் காலி மாற்று சிலிண்டர் கேட்டால் கொடுக்கவும்.

Representational Image
Representational Image

#மீனம்

போர் போடும்வரை காத்திருக்காமல், போர்வெல்லில் தண்ணீர் வரும்வரை காத்திருப்பது போல மேஷ ராசி பலனிலிருந்து பொறுமையாய் நம்ம ராசிக்கு எப்ப பலன் வரும்னு காத்திருக்கும் மீன ராசி நேயர்களே!

சனி 10-ம் இடத்திலும் குரு 8-ம் இடத்திலும் வருவது எனக்கு பத்து உனக்கு எட்டு என்ற ஷேரிலேயே இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். சூரியன், கேது சேர்ந்து வருவதால் பெண் தேடும் ஆண்கள், உங்கள் ஜாதகத்தை ஆயிரம் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்த பிறகு 1,001 வது ஜெராக்ஸ் காபியில் பெண் அமையும். நடுநிலை மனசு இருப்பதால் நீங்க எந்தப் பக்கம் சாய்ந்தாலும் சேதாரம் உங்களுக்கு வராது. எல்லா ராசிக்கும் நல்லது செய்துவிட்டு குரு சோர்ந்துவிடுவதால் அடிக்கடி சோடா குடிக்கவும். டிராஃபிக் போலீஸைக் கண்டால் தெறிக்க ஓடவும்.

பரிகாரம்: மனைவியை பொருள்காட்சிக்கு அழைத்துச் சென்று டெல்லி அப்பளம் வாங்கிக் கொடுக்கவும். லோக்கல் சேனலில் இடம் விற்பதைப் பார்க்கவும்.

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு