Published:Updated:

`ஹெலிகாப்டர் பிரசாரம்!' - ஃபன் சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

"அப்படியா... அப்படியா... மக்கள் என்னை பார்க்க முடியுமா?" என்று உற்சாகமான தலைவர், உயரத்தில் பறந்தபடி இருந்த ஹெலிகாப்டரில் இருந்தபடியே மக்கள் தன்னைப் பார்ப்பதாக எண்ணியபடி கையசைத்துக் கொண்டே வந்தார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

"சார்... இதற்கு மேல் ஹெலிகாப்டரை கீழிறக்கினால் நாமெல்லாம் மொத்தமாய் போய் சேர வேண்டியதுதான்" என்றேன் நான். நான் – கார்த்திக், இந்த ஹெலிகாப்டரின் விமானி.

"என் மக்கள் என்னை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்... அவர்களை நான் ஏமாற்றக் கூடாது அல்லவா..?" என்று கேட்டார் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்திருந்த லோக்கல் தலைவர்.

நிற்க. இந்தக் கதையை இதற்கு மேல் தொடர்வதற்கு முன்னால் ஒரு முன்நிகழ்வின் இடைப்பதிவை (அதாங்க ஃப்ளாஷ்பாக்) பார்த்துவிடுவோம்.

Representational Image
Representational Image
Pixabay

நான் – கார்த்திக், இந்த ஹெலிகாப்டரின் பைலட். இது ஒரு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது. பெரு நிறுவனங்கள், நிர்வாகிகள், அரசியல்வாதிகள் ஆகியோர்தான் எங்கள் வாடிக்கையாளர்கள். சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது அல்லவா? அதற்கு எங்கள் நிறுவனத்தின் ஹெலிகாப்டர்களைப் பல்வேறு அரசியல் கட்சியினரும் வாடகைக்குப் பயன்படுத்தினர். இவரது வேண்டுகோள் விசித்திரமானது.

தனது தேர்தல் சின்னம் ஹெலிகாப்டர் என்பதால் ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தினால் சின்னத்தை தொகுதி எங்கும் பிரபலப்படுத்திவிடலாம் என்று யாரோ இல்லூமினாட்டி அவருக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்.

ஹூம்... கொரோனாவை தடுக்க கிருமிநாசினியை ஊசி மூலமாக உடம்பில் செலுத்தலாம் என்று உன்னத ஆலோசனை சொன்ன தலைவர்கள் நிரம்பிய உலகமல்லவா இது! இதுபற்றி நினைக்கத் தொடங்கினால் நம் இயல்பறிவு வெந்து ஆவியாகிவிடும். விட்டு விடுவோம்... கப்பல், விமானம் என்று சின்னம் கிடைத்திருந்தால் அதில் போய்கூட ஓட்டு கேட்டிருப்பார்போல. தேர்தல் ஆணையத்தில் கிணறு சின்னம்கூட கொடுக்கிறார்கள். அதற்காக அதில் குதிக்க முடியுமா? இந்த லோக்கல் தலைவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.

மேற்கு இந்திய மாநிலங்களின் தேசியக் கட்சி ஒன்றில் இருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனக்கென்று இருந்த செல்வாக்கால் புதிய கட்சி ஒன்றை உருவாக்கியவர் இந்த தலைவர். இந்தத் தேர்தலில் அவரது கட்சி 10 இடங்களில் போட்டி போடுகிறதாம் - இது விகாஸ் கூறியது. விகாஸ் - எனது சக விமானி. அவனுக்கு வட நாட்டு அரசியல் விவகாரங்கள் அத்துப்படி. நிற்க - இடைப்பதிவு போதும். நம் விஷயத்தை தொடர்வோம்.

Representational Image
Representational Image
Pixabay

"சார்... இங்க இருந்தே மக்கள் உங்களைப் பார்க்க முடியும்..." என்றேன் நான் நமுட்டு சிரிப்புடன். விகாஸ் அதை ஆமோதித்தான், மெல்லிய சிரிப்புடன்.

"அப்படியா... அப்படியா... மக்கள் என்னைப் பார்க்க முடியுமா..?" என்று உற்சாகமான தலைவர், 2000 அடி உயரத்தில் பறந்தபடி இருந்த ஹெலிகாப்டரில் இருந்தபடியே மக்கள் தன்னை பார்ப்பதாக எண்ணியபடி கையசைத்துக்கொண்டே வந்தார். சுமார் 30 நிமிடங்கள் இது தொடர்ந்தது. ஹெலிகாப்டரின் விசிபிலிட்டி என்னவென்றே தெரியாத அந்தத் தலைவரின் கோமாளித்தனத்தைக் கண்டு எங்களுக்கு வாய்விட்டு சிரிக்க வேண்டும்போல் இருந்தது. ஆனால், கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டோம். வாடிக்கையாளர் அல்லவா? சில காலம் முன்பு ஹெலிகாப்டரில் பறந்த மாநிலத் தலைவரை கீழிருந்தே தரிசித்து சேவித்த அரசியல் தலைகள் உங்கள் ஞாபகத்துக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.

அடுத்து கூட்டம் நடக்கும் இடத்துக்கு வந்தவுடன் ஹெலிகாப்டரை தரை இறக்கினோம். தலைவரை பார்க்க ஜனங்கள் கூடினார்களோ இல்லையோ ஹெலிகாப்டரை காண கூடிவிட்டது கூட்டம். சொற்ப ஜனங்களே கூடியிருந்த சபையில் பேசிவிட்டு வந்த தலைவரை திரும்ப மாநிலத் தலைநகரில் விட்டுவிட்டு வருவதுதான் பயணத் திட்டம். வழியில் இரண்டு இடங்களில் மலர் தூவவும் அனுமதி வாங்கப்பட்டு இருந்தது. ஒன்று தலைவரின் பூர்வீக கிராமம். இரண்டாவது தலைவரின் தலைவர் சிலை.

ஹெலிகாப்டரில் தலைவர் ஏறியவுடன் ஒரு சிறிய பேப்பரை காட்டி கேட்டார், "நாம் இப்படித்தானே போகிறோம்?"

பேப்பரில் நட்சத்திர வடிவத்தில் ஏதோ படம் போட்டிருந்தது. விகாஸை பார்த்தேன். அவன் தலைவரிடம் பேசினான். பிறகு என்னிடம் சொன்னான், "இங்கே இவருக்கு செல்வாக்கு மிகுந்த ஊர்கள் ஐந்து உண்டு. அவற்றின் மேல் பறந்து மலர்கள் தூவ வேண்டுமாம்."

Representational Image
Representational Image
Pixabay

நான் தலைவரை கூர்மையாகப் பார்த்து, "சார்... புரிந்து கொள்ளுங்கள். அனுமதி வாங்கிய பாதையில் மட்டும்தான் பறக்க முடியும். இது ஆட்டோவோ டாக்சியோ இல்லை உங்க இஷ்டத்துக்குப் போக. ஏ டீ சீ (Air Traffic Control - விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்) இதற்கு அனுமதி தராது" என்றேன்.

தலைவரும் அவரது அடிப்பொடிகள் இருவரும் சிறிது நேரம் தங்களுக்குள் விவாதித்தனர். பின் "சார், நீங்கள் நாங்க சொல்கிற மாதிரியே போங்கள். ஏ டீ சீ இடம் இருந்து உங்களுக்கு அனுமதி கிடைக்கும். அங்கு நமக்கு ஆள் உண்டு. நான் கியாரண்டி" என்று அடித்துவிட்டார் தலைவர்.

என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? நான் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு, "சார், இத பாருங்க நாங்க கண்டிப்பா பெர்மிஷன் உள்ள இடத்திற்கு தான் பறக்க முடியும், மலரும் தூவ முடியும். மீறினால், யாராவது புகார் கொடுத்தால், எங்கள் நிறுவன பதிவை அரசாங்கம் ரத்து பண்ணிவிடும்" என்று கறாராகக் கூறினேன்.

என் கடுமை வேலை செய்தது. தலைவர் கொஞ்சம் இறங்கி வந்தார். கெஞ்சலாக என்னைக் கேட்டார். "நான் ஒரு ஏழை விவசாயி மகன் (அவர் ஒரு இரண்டு கிலோவுக்கு தங்க செயின்கள் அணிந்திருந்தார் அப்போது), கொஞ்சமே கொஞ்சம் உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டார். "அனுமதி வாங்கிய இடங்களுடன் என் குலசாமி கோயிலுக்கு மேல் பறக்க முடியுமா?" என்றார். அது ஊரில்தானே இருக்க முடியும் என்ற அனுமானத்தின் பேரில் சம்மதித்தேன்.

Representational Image
Representational Image
Pixabay

ஹெலிகாப்டரை கிளம்பினோம். தலைவர் ஊரை நெருங்கும்போது, `என் குலசாமி கோயில் மீது பற' என்றார். மேலிருந்து ஊரைப் பார்த்தால் அது இரண்டு தெருக்களுக்கு மேலில்லை என்பது போல் இருந்தது. மலர் தூவ ஆரம்பித்தனர். கன நேரத்தில் ஹெலிகாப்டர் ஊரைக் கடந்துவிட்டது.

"கோயில், கோயில்..." என்று அரற்றினார் தலைவர்.

"எங்கே, உங்கள் கோயில், காட்டுங்கள்..." என்றேன் நான்.

"அது... இங்கேதான் எங்கேயோ... ஊரில்... இல்லை... இல்லை ஊருக்கு வெளியில் உள்ள காட்டில் உள்ளது" என்று இழுத்தார் தலைவர்.

"தலைவர் தொகுதிக்கு வந்து ரொம்ப நாளாகிவிட்டது. தலைநகர் அரசியலில் பிஸியாயிட்டார் இல்லையா. கோயில் வழி குழம்பிடுச்சு தலைவருக்கு" என்றான் அடிப்பொடி.

அங்கே இங்கே என்று அலைக்கழித்து ஒரு வழியாக அத்துவான காட்டில் ஒரு சிறு கோயிலின் மேல் பறந்தபோது பக்திப் பரவசமானார் தலைவர்.

அடுத்து தலைவரின் தலைவர் சிலைக்கு மலர் தூவ வேண்டும். அந்தச் சிலை தலைவருக்கு சொந்தமான சர்வதேச பள்ளியில் (International School) உள்ளது என்றனர் அடிப்பொடிகள். அங்கு பார்த்தால் மிகச் சிறிய இடத்தில் தீப்பெட்டிகளை அடுக்கியது போல அப்பள்ளி கட்டப்பட்டிருந்தது. நடுவில் இருந்த சிறிய மேடையில் சிலை சொன்னார் தலைவர். "பில்டிங் அருகே போங்கள், அப்போதுதான் சிலை மேல் பூ விழும்" என்றார் தலைவர்.

Representational Image
Representational Image
Pixabay

"சிலை மேல் பூ விழும், ஆனால் ஹெலிகாப்டர் கீழே விழும்... பரவாயில்லையா" என்றேன் கடுப்புடன் நான்.

அரை மனதுடன் தலை அசைத்த தலைவர் "சரி... சரி... இங்கே இருந்தே பூ தூவலாம்" என்றார்.

பூத்தூவல் முடிந்து மாநிலத் தலைநகர் அடைந்தோம். அதுவரை தலைவரின் முகத்தில் சலனமில்லை. வரும் வழி முழுதும் பணத்தை தண்டம் செய்துவிட்டதாகவும் தன் சின்னத்தை பிரபலப்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் அவரது புலம்பல்களில் தெரிந்தது. எங்கள் விமான நிறுவனத்துக்கு கொடுத்த பணத்தை திரும்பப் பெற முடியுமா என்றுகூட கேட்டார். நாங்கள் ஒன்றும் கூறவில்லை.

இறங்கியவுடன் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி தெரிவித்துவிட்டு என்னைப் பார்த்துக் கேட்டார், "சார், இது என்ன பெட்டி?"

"இதுவா, நீங்க ஒரு ஊர்ல பேசினீங்கள்ல, அப்ப அந்த ஊர் கோயில் கடையில எம் பையனுக்கு வாங்கின பொம்மை" என்றேன் நான்.

"என்ன பொம்மை?"

"ஹெலிகாப்டர் பொம்மை" என்றேன் நான்.

"அடச் சே… இது எனக்கு முன்னமே தோணாம போச்சே" என்று தலையில் அடித்துக்கொண்டார் தலைவர் . அடிப் பொடிகளை பார்த்து "டேய்... உடனே பத்தாயிரம் ஹெலிகாப்டர் பொம்மைக்கு ஆர்டர் குடுங்க" என்றார்.

- ப.கல்யாணசுந்தரம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு