Published:Updated:

அட இது பயணக்கட்டுரைதான்.. நம்புங்க பாஸ்! MyVikatan

Representational Image
Representational Image

வீட்டின் வெளியே வந்து தரைதளத்துக்குச் செல்ல வேண்டுமென்று கீழ Lift பட்டனை அழுத்தினேன். எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.

எனக்கு ரொம்ப நாளாக பயணக்கட்டுரை எழுத வேண்டும் என்று ஆசை. அதனால்தான் இன்று ஒரே முடிவாக எழுத ஆரம்பித்துவிட்டேன். என்னை மாதிரியான சோம்பேறிக்கு நெடுந்தூரப் பயணம் எதுவென்றால், பக்கத்தில் இருக்கும் காய்கறி கடைக்குப் போய் வருவதுதான். கடையுடைய பேரு மறுஎட்ஜ். அந்தக் கடைக்கு நடந்துபோனால் ஐந்து நிமிஷம் ஆகும், ஓடினால் ஏழு நிமிஷம் ஆகும்! ஏனேன்றால் எனக்கு செருப்பு போட்டுக்கொண்டு ஓட வராது.

Representational Image
Representational Image

அது ஒரு அழகிய (நிலாக்காலம் இல்லை) சனிக்கிழமை. பிறந்த குழந்தை கண்விழித்துப் பார்க்கும் அல்லவா? அது எங்குப் பார்க்கிறது என்றே தெரியாதே அது மாதிரி நானும் அழகாக!? கண்விழித்து கடிகாரத்தை பார்த்தேன், பகல் பன்னிரெண்டு! நான் கண் விழித்தது தெரிந்ததும் வீட்டுக்காரம்மா ஓடிவந்து சுப்ரபாதம் பாடினார்கள். பழகின பாட்டுதான்.. ஆனால், கூடவே இரண்டு மூன்று புது வார்த்தைகள்... காதில் கேட்கவே முடியாதது போன்று. புரிந்துவிட்டது... ``நான் போய் காய்கறி வாங்கிட்டு வந்தாதான் அன்னைக்கி சமையல் நடக்கும்’’ - இதுதான் அந்தப் பாட்டுடைய முழுக் கருத்து. பல் தேய்த்துவிட்டுப் போகிறேன் என்று எல்லாம் சொன்னால் வாயில் ரத்தம் வரவைத்துவிடுவார்கள் என்று புரியாதவனா நான்? செருப்பு போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டேன். என்னுடைய நீண்ட நெடிய பயணத்தை நோக்கி. கதவை திறக்கும்போது எங்கள் வீட்டு கடைக்குட்டி அழுதுகொண்டே வந்து, ``எங்கப்பா போறீங்க’’- என்று கேட்டாள். நான் ஏதோ இமயமலைக்கு மூலிகை எடுக்கப் போகிறேன், திரும்ப வருவதற்கு நான்கு மாதம் ஆகும் என்று நினைத்துவிட்டால் போலும். ``நான் பக்கத்து தெருவுக்குதான் போறேன் பாப்பா. இன்னும் அரைமணி நேரத்தில் நீ இதே மூஞ்சில தான் முழிக்கணும்’’ -என்று சமாதானப்படுத்திவிட்டு கிளம்பினேன்.

வீட்டின் வெளியே வந்து தரைதளத்துக்குச் செல்ல வேண்டுமென்று கீழ Lift பட்டனை அழுத்தினேன். எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அதை கீழே யாரோ நீண்ட நேரமாக பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று இது வேலைக்கு ஆகாதென்று நினைத்து படி வழியாக இறங்கிவிடலாம் என்று இறங்கினேன். எங்கள் அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் ஒரு சிங்கப்பெண் மேலே ஏறி வந்துகொண்டிருந்தார். என்னைப்பார்த்து ஒரு ஹலோ வேறு சொல்லிவிட்டுப் போனார். படியில் இறங்குவதிலும் ஒரு புண்ணியம் இருக்கத்தான் செய்கிறது என்று மனதை தேற்றிக் கொண்டேன். தரை தளத்தில் வெளியூர் பயணம் போகும் கும்பல் ஒன்று, அந்தச் சின்ன லிஃப்டில், பன்னிரண்டு செக்-இன் lagguage-களை ஏற்றிவிட்டு, இப்போது இறக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்தனர். நான் திரும்பி வரும்போது கண்டிப்பாக அந்த லிஃப்ட் மோட்சம் அடைந்திருக்கும் .

Representational Image
Representational Image

ஒரு வழியாக வீட்டிலிருந்து இறங்கி தெருவில் நடக்க தொடங்கினேன். ஒரு வயசான பாட்டி (வயதானால்தானே பாட்டியென்று கேட்குறீர்களா?), தன் செல்ல நாயுடன் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். அந்த நாய் எப்படியான நாய் என்றால், இருக்கிறதா இல்லையா என்றே தெரியாதமாதிரியான, தரையோடு தரையாக இருக்குமே... அந்த நாய். இந்த நாயிடம் ஒரு வசதி இருக்கு. வாக்கிங் போகும்போது திடீரென்று மழை வந்துவிட்டால், டக்கென்று purse உள்ளே வைத்து அது நனையாமல் வீட்டுக்கு எடுத்து வந்துவிடலாம். அந்தப் பாட்டி என்னைப் பார்த்து புன்னகைக்கிறார்கள். ஆனால் அந்த நாய், உடம்பிலேயே அதற்கு பெரிதாக இருக்கும் இரண்டு கண்களை உருட்டி உருட்டி பார்த்து என்னை detailed ஆக ஸ்கேன் செய்தது. பேச தெரிந்திருந்தால் கண்டிப்பாக என்னுடைய Alien கார்டு கேட்டு விசா வேலிடிட்டி செக் செய்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஸ்கேன் முடிந்ததும் அந்தப் பாட்டியுடன் விளையாட ஆரம்பித்துவிட்டது. அந்தப் பாட்டி அந்த க்யூட் நாயை ஒரு குழந்தை மாதிரி கொஞ்சிக்கொண்டே கடந்து போனது மனதை என்னவோ செய்தது. .

Representational Image
Representational Image

சூரியன் சுள்ளென்று அடித்ததால், மரநிழலில் நடந்து சென்றேன். எதிரில் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், ``என்ன பாஸ் காலங்காத்தால?! வெளில கிளம்பிட்டீங்க’’ என்று என்னைப் பார்த்து சீரியஸாகக் கேட்டார். ``காலங்காத்தாலயா அட பாவிங்களா.. உச்சி வெயில் கொளுத்துகிறது.. சரி பரவாயில்லை, நம்மைவிட மோசமானவர்களை இந்த பூமாதேவி handle பண்றாங்க’’ என்று மனதில் நினைத்துக்கொண்டு, சமையலுக்குக் காய்கறி வாங்கப் போகிறேன் பாஸ்ன்னு அவருக்குப் பதில் சொன்னேன். அதற்கு அவர், இந்த நேரத்தில் போனால் எதுவுமே இருக்காதே... என்று நக்கலாகச் சொன்னார். அப்போது ``காலங்காத்தால" என்று சொன்னது, என்னை கலாய்க்கத்தான் என்று என்னுடைய வெகுளி மனசுக்கு அப்போதுதான் புரிந்தது. அதற்குமேல் அவரோடு பேச விருப்பமில்லாமல் கடந்து வந்துவிட்டேன்

கடை வந்துவிட்டது. யார் செய்த புண்ணியமோ, மனைவி சொல்லி அனுப்பிய காய்கறி எல்லாமே இருந்தது, கொத்துமல்லி தவிர. அது கடைசியில் சேர்ப்பதுதானே, வாங்காவிட்டால் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டு காய்கறி வாங்கிமுடித்து, கடையைவிட்டு வெளியில் வந்தேன். அங்கு என் உற்ற நண்பர்கள் இரண்டு பேர் அவர்களின் கஷ்டத்தை ஒரு மரத்தை நடுவில் நிற்கவைத்து சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

Representational Image
Representational Image

நான் இருக்கும்போது எதற்கு மரமென்று நான் போய் நடுவில் நின்றுகொண்டேன். நேரம் போனதே தெரியவில்லை. இருபது நிமிஷம் ஆகியிருந்தது. மொத்த கஷ்டத்தையும் மூன்று பேரும் சொல்லிமுடித்த பிறகு வீட்டுக்குக் கிளம்பினோம். கடைக்கு வரும் வழியில் ஒரு பாட்டி எதிரில் வாக்கிங் வந்ததுபோல், இம்முறை வயதான ஒரு தாத்தா. அவரும் தன் நாயுடன்தான் வாக்கிங் வந்தார். வாக்கிங் போக நேரம் காலமே இல்லையா என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

பாட்டியுடன் இருந்த நாய்க்குட்டி எவ்வளவு அழகாக விளையாடிக் கொண்டிருந்தது? ஆனால், தாத்தாவிடம் இருக்கும் நாய், தாத்தாவையும், என்னையும் போல எதையோ பறிகொடுத்த மாதிரி வானத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தது. இதுதான் அம்மாவிடம் வளரும் குழந்தைகளுக்கும் அப்பாவிடம் வளரும் குழந்தைக்கும் இருக்கும் வித்தியாசமென்று விளங்குகிறது. இந்தப் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் என்று நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

Representational Image
Representational Image

எங்கள்வீட்டு கடைக்குட்டி , ``என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க’’ - என்று வருத்தமாக பார்த்தாள். ``எல்லாம் கெடச்சிது, கொத்துமல்லி தவிர. இந்தா’’ என்று மனைவியிடம் பையை நீட்டினேன். ``நீங்க வர நேரம் ஆனதால, நான் சமையல் முடிச்சிட்டேன்” என்றார் கடுகடுத்தபடி.

`` ஓ, என்ன சமையல்?’’ என்றேன். `` தயிர் சாதம்’’ என்றார்.

Representational Image
Representational Image

(தெரியாமல்தான் கேக்குறேன், தயிர் கடையில் வாங்குனது. சாதம் குக்கர் செஞ்சது. பெசைஞ்சி சாப்பிட போறது நானு. இதில் ``சமையல்" எங்க இருந்து வந்ததுன்னு வாய்விட்டு கேக்க முடியுமா? அப்புறம் அடுத்த பயணம் நான் என்னோடு அம்மா வீட்டுக்குத்தான் போகணும்)

``சூப்பர்! நானே நினைச்சிட்டிருந்தேன்.. தயிர்சாதம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சின்னு!!!’’ என்று பதில் சொல்லியவாறே பயணம் இனிதே நிறைவடைந்தது!

-அசோக் மு

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

பின் செல்ல