Published:Updated:

ஜி.வி பிரகாஷ் பாடல்கள் எல்லாம் மிரட்டல்.. ஆனா..! - வருந்தும் ரசிகர் #MyVikatan

GV Prakash
GV Prakash

யுவன் + நா. முத்துக்குமார் கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது. ஆனால்..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஜி வி பிரகாஷ் குமாரின் இசைப்பயணம் எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

நா. முத்துக்குமார் என்றாலே அவருடைய பாடல்வரிகளும் அவருடைய நண்பரான யுவன் சங்கர் ராஜாவின் இசையும் தான் நினைவுக்கு வருகிறது. யுவன் "ஆனந்த யாழை" என்ற தங்கமீன்கள் பட பாட்டிற்காக நா. முத்துக்குமாருக்கு முதல் தேசிய விருது வாங்கி தந்தார். அதனால் யுவன் + நா. முத்துக்குமார் கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது. ஆனால் "அழகே... அழகே..." என்ற சைவம் பட பாட்டிற்கு அற்புதமாக இசையமைத்து நா. முத்துக்குமாருக்கு இரண்டாவது தேசிய விருது வாங்கி தந்த ஜிவியைப் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. ஆனந்த விகடன் விருது மேடை மட்டுமே ஜி வி நா.முத்துக்குமார் கூட்டணியை அடையாளப்படுத்தியது.

G.V.Prakash Kumar
G.V.Prakash Kumar

ஜிவியும் நா. முத்துக்குமாரும்:

ஜிவி-யும் நா. முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்களை பார்ப்போம். தனது முதல் படமான "வெயில்" படத்திலயே நா. முத்துக்குமாருடன் இணைந்து விட்டார் ஜிவி. ஜிவி-யும் நா.மு-வும் இணைந்து "வெயிலோடு விளையாடி", "உருகுதே மருகுதே" என்ற இரண்டு அட்டகாசமான பாடல்களை தந்தனர். எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்கள் இவை. அதை தொடர்ந்து "அங்காடி தெரு" படத்தில் ஜிவி-யும் நாமு-வும் இணைந்தனர். நா. முத்துக்குமார் எழுதிய "கதைகள் பேசும் விழியருகே..." என்ற பாடலில் நம் அனைவரையும் உருக வைத்தார் ஜிவி.

வெயில், அங்காடி தெரு போன்ற வசந்தபாலன் படங்கள் என்றால் அதில் முத்துக்குமாரின் வரிகளும் ஜிவி-யின் இசையும் வேற ரகத்தில்... மனதில் ஆழப்பதியும் வகையில் இருக்கும். இந்தக் கூட்டணியை போலவே இன்னொரு வெற்றிகரமான கூட்டணி உள்ளது. ஏ.எல்.விஜய், ஜிவி, நா. முத்துக்குமார் வெற்றிக்கூட்டணிதான் அது.

முதலில் இவர்கள் கூட்டணியில் உருவான "மதராசபட்டிணம்" படத்தைப் பார்ப்போம். "பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே யாரும் பார்த்ததில்லையே..." என்ற பாடலும் "வாம்மா துரையம்மா இது வங்க கரையம்மா..." என்ற பாடலும் செம ஹிட்.

நூறு தடவைக்கும் அதிகமாக நாம் இந்தப் பாடலை கேட்டிருப்போம், அப்போதும் நமக்கு இது சலிக்கவில்லை. இந்த இரண்டு பாடல்களை போல மிக அருமையான... நரம்பில் சுர்ரென்று... உணர வைக்கும் இன்னொரு பாடலும் உள்ளது. அது "காற்றிலே... காற்றிலே... ஈரங்கள் கூடுதே... போர்க்களம் நடுவிலும் ரகசியமாக பூவென்று மலர்ந்திடுமே..." என்ற பாடல் தான் அது. நியாயப்படி இந்தப் பாடலுக்காக ஜிவிக்கும் நா.முத்துக்குமாருக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் ஆனால் கிடைக்கவில்லை.

GV  Prakash
GV Prakash

அடுத்ததாக விக்ரமை வைத்து "தெய்வ திருமகள்" படத்தை எடுத்தார் ஏ.எல்.விஜய். யுவனுக்கும் நா.முத்துக்குமாருக்கும் எப்படி "ஆனந்த யாழை" பாடல் அமைந்ததோ அதைப் போல ஜிவி-க்கும் நா.முத்துக்குமாருக்கும் தெய்வ திருமகள் படத்தில் உள்ள "ஆரிரோ ஆராரிரோ... இது தந்தையின் தாலாட்டு" என்ற பாடல் அமைந்தது. ஆனால் இந்தப் பாடலும் தேசிய விருது பெறவில்லை.

அடுத்து மீண்டும் ஏ.எல்.விஜய், ஜிவி, நா. முத்துக்குமார் கூட்டணியில் உருவானது "தலைவா". இந்தப் படத்தில் "யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது..." என்ற பாடல் ஜிவி, சைந்தவி குரலில் நா.முத்துக்குமார் வரிகளில் உருவாகி பட்டிதொட்டி எல்லாம் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து ஏ.எல்.விஜய் உருவாக்கிய "சைவம்" படத்தில் "அழகே... அழகே..." பாடலுக்காக நா.முத்துக்குமாருக்கும் உத்ரா உன்னிகிருஷ்ணனுக்கும் தேசிய விருது வாங்கி தந்தார் ஜிவி.

அடுத்ததாக காக்கா முட்டை படத்தில் நா. முத்துக்குமாரும் ஜிவியும் இணைந்தனர். "செல்...செல்...செல்... சிறகை விரித்து செல்..." என்ற பாடலும் "கறுப்பு கறுப்பு நிறத்தை வெறுத்து..." என்ற பாடலும் ஜிவியும் நா.மு-வும் இணைந்து உருவாக்கியவை. இதில் "கறுப்பு கறுப்பு" பாடலுக்காக ஜீவிக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். அதுவும் மிஸ்ஸிங்!

ஜிவியும் செல்வராகவனும்:

"ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் செல்வராகவனும் ஜிவியும் இணைந்தனர். அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் "நெல்லாடிய நிலமெங்கே..." என்ற பாடலும் "celebration of life" என்ற பாடலும் அவ்வளவு மிரட்டலாக இருக்கும். ஜிவி-யின் இசை இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் இல்லை என்பதே உண்மை. அடுத்து "மயக்கம் என்ன" படத்தில் "பிறை தேடும் இரவிலே" பாடல் மூலம் நம்மை உருக வைத்தார்கள் ஜிவியும் சைந்தவியும்.

சைந்தவி - ஜி.வி.பிரகாஷ்...
சைந்தவி - ஜி.வி.பிரகாஷ்...

ஜிவியும் வெற்றிமாறனும்:

பொல்லாதவன் ரிலீசான சமயத்தில் எல்லாருடைய செல்போன் ரிங்டோனும் பொல்லாதவன் தீம் மியூசிக்காக இருந்தது. பொல்லாதவன் படத்தைப் போலவே ஆடுகளம் படத்தில் உள்ள எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும். ஆடுகளம் படத்திற்காக ஆறுபேர் தேசிய விருது வாங்கிய போதும் ஜிவிக்கு விருது கிடைக்கவில்லை. அசுரன் படத்தில் "எம் மினுக்கி காத்திருக்கா...", "கண்ணழகு ரத்தினமே..." "எள்ளு வய பூக்கலயே..." போன்ற பாடல்கள் நம் இதயத்தில் இடம்பிடித்தவை, எப்போது கேட்டாலும் சலிக்காதவை. அசுரனுக்காக ஜிவிக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதுவும் நடக்கவில்லை. நிறைய மீம் கிரியேட்டர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து இருந்தனர். கலைப்புலி தாணுவும் தன் வருத்தத்தை தெரிவித்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் முதல் பட இயக்குனரான வசந்தபாலனுடன் இணைந்துள்ளார் ஜிவி. வெயில் படத்தின் போதே கிடைத்திருக்க வேண்டிய தேசிய விருது "ஜெயில்" படத்திற்காக கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.


- ராசு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு