Published:Updated:

மகிழ்ச்சியை வயிறு முட்ட உண்டுவிட்டு கிளம்பிருவோம்! - பெண்ணின் ஃபிரெண்ட்ஷிப் பக்கங்கள் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

கல்லாரி முதலாம் ஆண்டில் முதன்முறையாகத் தோழிகளுடன் ஹோட்டலுக்குச் சென்றேன்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"எல்லாரும் வெஜ்லயே சொல்லுங்கடி... நான்வெஜ் சாப்பிட மாட்டேன்... எனக்கு ஒரு மஷ்ரூம் பிரியாணி" என்றாள் சிவப்பிரியா.

"ஒரு வெஜ் ஃப்ரைட் ரைஸ்... எல்லாரும் ஷேர் பணிக்கலாம்" என்றாள் அக்ஷயா.

"எனக்கு ஒரு கோபி மஞ்சுரியன்" என்றேன் நான்.

எனக்கு உள்ளுக்குள் கொள்ளை இன்பம்.

தோழிகளுடன் தனியாக உணவகம் வந்துள்ளேன்.

ஹோட்டல் என்றாலே அப்பா, அம்மா, தங்கை, நான் என நால்வரும் சேர்ந்துதான் செல்வோம். பெரும்பாலும் வெளியூர் சுற்றுலாவுக்கோ, கோவிலுக்கோ செல்லும்போது அத்தியாவசியம் என்றால்தான் ஹோட்டலுக்குச் செல்வோம். அதுவும் சில நேரம் வீட்டில் இருந்தே சப்பாத்தியையும் புளி சாதத்தையும் கட்டி எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்.

வீட்டில் இருக்கும்போது சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் ஹோட்டல் சென்றதெல்லாம் கிடையாது. வீடு சுத்தம் செய்யும்பொதும், அம்மாவுக்கு உடம்பு முடியாதபோதும் அப்பா ஹோட்டலில் இருந்து உணவு வாங்கி வருவார்.

Representational Image
Representational Image
Pixabay

அப்பா, அம்மாவின் திருமண நாள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அன்று ஹோட்டலில் உண்போம். அந்த சில்லி பரோட்டாவுக்கும், கோபி மஞ்சுரியனுக்கும் மீண்டும் ஒரு வருடம் காத்திருந்தால்தான் அடுத்த திருமண நாளில் எனக்கு கிடைக்கும்.

அவ்வளவே எனக்கும் ஹோட்டலுக்கும் உள்ள பந்தமாக இருந்தது. ஆனால், இப்போது தலைகீழ் ஆனது.

கல்லாரி முதலாம் ஆண்டில் முதன்முறையாகத் தோழிகளுடன் ஹோட்டலுக்குச் சென்றேன்.

ஹோட்டலின் கதவைத் திறக்கும்போதே முகத்தில் வந்து செல்லமாக அறைந்தது ஏசிக்காற்று.

புத்தகப் பையை ஓரமாக வைத்துவிட்டு, கண்ணாடி டம்பளரின் தண்ணிரால் நுனி நாக்கை நனைத்துக்கொண்டு, மெனு கார்டைக் கையில் தொடும்போது கையில் அத்தனை சிலிர்ப்பு.

எனக்கு என்ன வேண்டும் என்பதை நானே முடிவு செய்யலாம் அல்லவா அந்தச் சந்தோசம்.

இதில் என்ன இருக்கிறது என்று மனம் நினைத்தாலும்... முதல் முறை வாக்களிக்கும்போது ஓர் உணர்வு வருமே... அப்படித்தான் முதல் முறையாகத் தோழிகளுடன் ஹோட்டலில் மெனு கார்டை தொடும்போதும்... சாப்பிட்டுவிட்டு நானே பில் கொடுக்கும்போதும் தோன்றியது.

பின் கல்லாரி காலங்களில் அடிக்கடி உணவகத்துக்குச் செல்ல ஆரம்பித்தோம்.

ஹோட்டலும் ஒரு கொண்டாட்டத் தளமாக மாறியது எங்களுக்கு.

சைவ ஹோட்டல் என்றால் உள்ளே நுழையும்போது காபி வாடையும், உள்ளே செல்லச் செல்ல சிறிது சாம்பார் நெடி கலந்த சைவ வாசம் வீசும்.

Representational Image
Representational Image

அசைவ உணவகத்தில் வெளியே அனல் பறக்கும் கிரில் சிக்கன் வெப்பத்தைக் கடந்து உள்ளே சென்றால் அசைவ வாசம் கலந்த ரூம் ஸ்பிரே நறுமணம் வீசும்.

ஐஸ்கிரீம், ஜூஸ் என்றால் பழங்கள் வாசமும் அலங்காரமும் உள்ள இடமாக இருக்கும்.

ஹோட்டலில் சாப்பிடுகிறேன் என்று சொன்னால் வீட்டில் நன்றாக திட்டு விழும். அம்மாவோ, "அதெல்லாம் உடம்புக்குக் கெடுதல்... சுத்தமா செய்ய மாட்டாங்க" என்பார். அப்பாவோ, "ஹோட்டல்ல ஒருவர் சாப்பட்ர காசுக்கு அந்தப் பொருள வாங்கி வீட்ல செஞ்சா நாலு பேர் சாப்பிடலாம்" என்பார்.

ஆனால், என்னாலோ ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற ஆசையைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. அது ஒரு பித்து.

தோழிகளோடு பேசிக்கொண்டே மகிழ்வோடு உண்ணும் சுகம் இருக்கிறதே... சிவப்பிரியா ஃபுல் மீல்ஸ் சாப்பிடும் ரசனையே தனி. அக்ஷயாவுக்கு எப்படித்தான் இத்தனை வகையான டிஷ்யின் பெயர் தெரிகிறதோ! ஐஸ்வர்யா சாப்பிடும்போதுதான் அப்படி ஜோக் சொல்லி சிரிப்பாள். பலமுறை ஹோட்டலில் உரக்க சிரித்துள்ளோம். எங்களுக்கான உலகமாக நினைத்து எங்களை மறந்து உணர்வுகளைக் கொட்டித் தீர்த்த இடம்.

பல பேரை எங்கள் சிரிப்பு சத்தம் தொல்லை செய்து முறைப்பும் வாங்கியுள்ளோம். எனினும், அடக்க முடியாமல் சிரித்து உள்ளோம். அப்படியெல்லாம் கிறுக்குத் தனம் செய்யாமல் பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என்று பல முறை என்னை நானே திட்டிக்கொண்டுள்ளேன். இன்னும் மாறவில்லை.

Representational Image
Representational Image
Pixabay

சோகமாக இருக்கும்போது ஹோட்டலுக்குச் சென்று அந்த மணத்தை சுவாசித்து, அங்கே ஓடும் மென்மையான இசையை கொஞ்சமாகத் தொட்டுக்கொண்டு, தோழிகளின் சிரிப்பு சத்தம் கேட்டால் போதும் மனம் புத்துணர்ச்சிக் கொள்ளும்.

ரோட்டு கடைகளில் உணவை வாங்கிக்கொண்டு நிலவைப் பார்த்து உண்ட கதைகளும் பல... அப்பொழுது மேலே படும் காற்று... கொத்து பரோட்டா போடும் சத்தம்... காரம் தாங்காமல் உச்சுக் கொட்டிக்கொண்டே சாப்பிடும் பொழுதுகளும் சுவை மிக்கதே.

எங்கள் பிறந்தநாள்களை எங்களோடு சேர்ந்து உணவகமும் கொண்டாடும். கிளம்ப மனமே இல்லாமல் உட்கார்ந்திருப்போம். அம்மாவிடம் இருந்து எட்டாவது அழைப்பு வந்ததும் இனியும் இருந்தால் அவ்வளவுதான் என்று பிரியா விடைக் கொடுப்போம்.

உண்ணும்போது உணவில் இருக்கும் குறையும் தெரியாது. வாழ்வில் இருக்கும் குறைகளும் நினைவில் இருக்காது. மகிழ்ச்சியை வயிறு முட்ட உண்டுவிட்டு கிளம்புவோம்... எஞ்சிய சிரிப்பு சத்தங்களுடன்!

- செ. ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு