`சந்துபொந்தில் எல்லாம் தேடி... கேட்கிறேன்!' - மழைக் காதலியின் ஜில் அனுபவம் #MyVikatan

மதியநேர மழை வானை பார்க்கவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்
"ஆடி மாசம் பொறக்கப் போகுது... மாரி மாசம் இது. இனிமே எப்படி வானம் பொளக்க போகுது பாரு."
வழக்கம்போல் இந்த வருஷமும் அத்தை கூறினார்.
மழை எங்கள் வாசலுக்கு விருந்தாளியாக வர ஆரம்பித்துவிட்டது. ஆம், மழைக்காலம் வந்துவிட்டது. இல்லை இது உண்மையில் கவிதைக் காலம்.
அதிக வெயிலும் இல்லாது அதிக குளிரும் இல்லாது ஆனந்த சூழல் இந்த மழைக் காலம்.

மழையைப் பிடிக்காது எனக் கூறுபவர்கள் யாரும் இலர். எப்போதாவது வெளியில் இருக்கும்போது நம்மிடம் சொல்லாமலே வந்து நம்மை நனைத்துவிட்டால், துவைத்த துணிகளை ஈரம் ஆக்கினால், ஆசையாக வெளியிலே கிளம்பும்போது தடுத்தால் சிறு கோபம் கொள்வோம்.
ஆனால், மீண்டும் எப்போது வரும் என்று ஆசையோடு வானம் பார்க்க வைக்கும் அற்புதம் மழை.
மதியநேர மழை வானை பார்க்கவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும். எப்படி அப்பேர்ப்பட்ட சூரியனை அடக்கி இப்படிக் குளுமைப்படுத்தியது என்று தோன்றும். வாழ்வின் அழகை அவ்வப்போது அந்த மதிய நேர கார்மேகத்துக்குள் தேடிப் பார்க்கிறேன்.
சூரியன் சென்ற பிறகு, இடியுடன் வரும் கனமழை எனக்கு அந்நிய உணர்வை தரும்.
வெயிலோடு வரும் மழை என்றால் வானவில் தேடி திரிவேன்.
அணு அணுவாகப் பிரித்துப் பிரித்து ரசித்தாலும் தீராத ரசனை மழை.
மழை வரப் போகிறது என்று சொல்லிவிட்டுச் செல்லும் மண் வாசம். மழை காற்று, மழையில் நனைந்த மண்.

இவற்றில் எல்லாம் மயங்கி கிரங்கினாலும் மழையின் சத்தம் இருக்கிறதே. மழையின் உயிர் அது.
எத்தனையோ கவிஞர்கள் வர்ணித்து இருந்தாலும் இன்னும் தீராமல் தன் அழகை பெருக்கி வைத்திருக்கும் மழை.
எனக்கோ மழையின் சத்தத்தின் மேல் பித்து. மழைச் சத்தங்களை காதில் சேமித்து வைத்து கேட்க வேண்டும் என்ற அளவுக்கு அதன் மீதொரு அவா.
என்னதான் மொட்டை மாடி மேல் நின்று மழையை ரசித்தாலும் ஓட்டு வீட்டுக்குள் இருந்துகொண்டு ஓட்டின் மீது விழும் பட் பட் மழை சத்தத்தைக் கேட்கும் சுக அனுபவம் கிட்டாது.
சிமென்ட் தரையில் பட பட வென்று கேக்கும். மண் தரையில் விழும் பொழுது மண்ணோடு கலக்கும் ஒரு ரம்மியமான சத்தம்.
ஜன்னல் ஓரமாக சாரல் சத்தம். வெளியே கையை நீட்டி மழையை ஏந்தினால் கைதட்டும் சத்தம் எழும்.
இலைதலைகள் மேல் மரங்களுக்கு நடுவே ஒருவித சலசலப்பு.
என்னதான் குடை பிடித்துச் சென்றிருந்தாலும் பாதிக்கு மேல் நனைந்தே வீடு திரும்புவேன். குடை மேல் விழும் மழை சத்தத்தைக் கேட்பதிலே எண்ணம் எல்லாம் இருப்பதாலோ என்னவோ. பிளாஸ்டிக்களில், தகடுகளில் வேறு விதமான சத்தம்.
பாத்திரங்களில் விழும் மழைச் சொட்டுக்குத் தனி சத்தம். அதைக் கேட்கவே பாத்திரங்களை வாசலில் வைத்த நாள்கள் பல.
மழைநீர் தேங்கிய இடத்தில் மீண்டும் மீண்டும் அதில் டொக் டொக் என்று விழும் சத்தம்.

மழை பெய்து ஓய்ந்தும் வராண்டாவிலும் ஓட்டிலும் தேங்கிய மழையை அக்கறையோடு கீழே கொண்டு வரும் குழாய்களில் இருந்து வரும் நின்ற மழையின் சத்தம்.
நின்று சில மணி நேரங்கள் ஆகிய மழையை ஏக்கத்தோடு நினைத்திருக்கையில் மரங்களில் இருந்து சிதறும் தேங்கிய மழை சத்தம்.
இன்னும் சந்து பொந்துகளில் எல்லாம் தேடித் தேடி கேட்டுக் கொண்டிருக்கிறேன்
மழை சத்தத்தை!
- செ.ரேவதி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.