Published:Updated:

காசில்லாமல் ஆட்டோ பயணம்! -வாசகி பகிரும் வாழ்க்கைப் பாடம் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

எனக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. தேர்வுக்கு நேரம் ஆகிவிட்டதே என்ற பதற்றம். பேருந்தைத் தவறவிட்ட வருத்தம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

எத்தனை தேர்வுகள் எழுதி இருந்தாலும் தேர்வு என்ற சொல்லில் உள்ள பயம் மட்டும் இன்னும் போகவில்லை.

அன்று கல்லூரியில் செமஸ்டர் தேர்வு. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து படிக்கத் தொடங்கினேன். அப்படி நான்கு மணிக்கே எழுந்து என்ன படிக்கிறேன் என்றெல்லாம் தெரியாது. ஆனால் தேர்வன்று நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும். தூங்குமூஞ்சியுடன் புத்தகத்தைப் படிக்கிறேனோ இல்லையோ கையிலாவது வைத்திருக்க வேண்டும். அந்தத் திருப்தியிலே தேர்வைச் சந்திக்க சக்தி ஏற்பட்டுவிடும்.

போதும் போதும் என்று சொல்லச் சொல்ல சாப்பாடு ஊட்டிக்கொண்டே வாசல் வரை வந்தார் அம்மா. வாயைத் துடைத்துக்கொண்டு கிளம்பினேன்.

பேருந்து நிறுத்தத்திற்கு வந்ததும்தான் தெரிந்தது என்னை விட்டுவிட்டு கல்லூரிப் பேருந்து சென்றுவிட்டது என்று.

எனக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

Representational Image
Representational Image
Pixabay

தேர்வுக்கு நேரம் ஆகிவிட்டதே என்ற பதற்றம். பேருந்தை தவறவிட்ட வருத்தம்.

இங்கிருந்து கல்லூரிக்கு ஒரு மணி நேரப் பயணம். என்ன செய்வதென்று தெரியாமல் சில நொடிகள் அப்படியே நின்றுவிட்டேன்.

என் அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது.

"எங்க போணுமா.. பஸ் ஸ்டாண்டா" என்னிடம் கேட்டார்.

பேசாமல் ஆட்டோவில் ஏறிச் சென்று பேருந்தைப் பிடித்து விடலாமா?

எப்படியும் நிறுத்தங்களில் நின்றுதானே செல்லும். அதற்குள் பிடித்துவிட்டால் என்ன?

அப்பொழுதுதான் என் அறிவுக்கு இன்னொன்று உறைத்தது. நேற்றுதான் கையில் இருந்த நூறு ரூபாயையும் செலவு செய்தேன். என்னிடம் பணம் இல்லை என்பதை உணர்ந்தேன்.

இன்னும் என்னருகிலே நின்று இருந்தது அந்த ஆட்டோ.

"சொல்லுமா.. எங்க போனும் பஸ் ஸ்டாண்டா" மீண்டும் என்னிடம் கேட்டார் ஆட்டோ ஓட்டுநர்.

Representational Image
Representational Image
Vikatan Team

"அண்ணா.. காலேஜ் பஸ் மிஸ் பண்ணிட்டேன். கொஞ்ச தூரம்தான் போயிருக்கும். பஸ் பிடிக்கணும். ஆனா என்கிட்ட காசு இல்லண்ணா.. "

எந்தத் தைரியத்தில் காசு இல்லாமல் அவ்வாறு நான் கேட்டேன் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் தயங்கித் தயங்கிக் கேட்ட என்னிடம் அவர் சட்டென்று கூறினார்.

"சரி. ஆட்டோல ஏறுமா.. "

பேருந்தைப் பிடிக்க வேண்டும். கல்லூரிக்குச் செல்ல வேண்டும். தேர்வு எழுத வேண்டும் இந்த எண்ண ஓட்டமே மனதில் இருந்தது. வேறேதும் யோசிக்காமல் ஆட்டோவில் ஏறினேன்.

சிறிது தூரம் சென்றதும் ஆட்டோவை ஒரு தெருவுக்குள் திருப்பினார்.

எனக்குள் பயம் தோன்ற ஆரம்பித்தது.

"அண்ணா.. ரோடு மேலயே போலாம்ல"

"அங்க ஒரே டிராஃபிக்.. இது பக்கம் தான்மா"

ஆனாலும் அவர் சொன்னதை மனம் ஏற்கவில்லை. ஒரு பெண்ணாக ஏதேதோ அச்சுறுத்தும் காட்சிகள் மனதில் ஓடத்தொடங்கின.

பணம் இல்லை என்று கூறியும் இவர் ஏன் என்னை வண்டியில் ஏற்றினார். வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் கூறி அப்பாவுடனே கல்லூரிக்குச் சென்று இருக்கலாமே. ஏன் ஆட்டோவில் ஏறினேன்.

Representational Image
Representational Image
Vikatan Team

"அண்ணா.. வண்டிய நிறுத்துங்க.. நானே போயிக்கறேன்" கொஞ்சம் சத்தமாகக் கூறினேன்.

ஆனாலும் அவர் வண்டியை நிறுத்தவில்லை.

கைகள் நடுங்கத் தொடங்கியது. நெற்றியில் வியர்வைச் சிந்தியது. மூக்கிலும் வாயிலும் தடுமாறி தடுமாறி மூச்சை விட்டேன்.

"நிறுத்துங்க..... !!"

இந்த முறை கத்தியே விட்டேன்.

"அதுதான உன் காலேஜ் பஸ்"

தூரத்தில் நின்று இருந்த என் கல்லூரிப் பேருந்தைக் காண்பித்துக் கேட்டார்.

பேருந்தை முந்திச் சென்று பேருந்தை நிறுத்திவிட்டு என்னை அதில் ஏற்றி விட்டார்.

சில நொடிகளுக்குப் பிறகே இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.

நன்றி சொல்லும் மனநிலையில்கூட அன்று நான் இல்லை. திரும்பி அவர் முகம்கூட பார்க்காமல் பேருந்தில் ஏறிவிட்டேன்.

காசு இல்லை என்று கூறியும் என்னை எப்படியாவது பேருந்தில் ஏற்றிவிட வேண்டும் என்று நினைத்த அவருக்கு நன்றிகூட சொல்லாமல் வந்து விட்டோமே என்று இன்றும் என்னைத் திட்டிக்கொள்கிறேன்.

அவர் செய்த உதவியை மனம் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறது.

அவ்வப்போது முகம் மறந்து போன அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன் மனதுக்குள்.

-செ.ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு