`காதலை வீட்டில் சொல்ல நேரிடுகையில்!’ - பெண்ணின் தவிப்புக்குப் பதில் சொன்ன மழை #MyVikatan

அம்மாவுக்கு மட்டும் ஏற்கெனவே என் காதலைப் பற்றிக் கூறியிருந்தேன். என்னைப் போல் அம்மாவுக்கும் அனைவர் முன்னிலையிலும் கூற பயம்.
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
நான்கைந்து பேரின் பேச்சு சத்தம் காதில் ஒலிக்க எழுந்து அமர்ந்தேன்.
அலைபேசியில் மணி பார்த்தேன் நேரம் 7.47 AM என்றிருந்தது.
முகம் கழுவிக்கொண்டு ஹாலுக்கு வந்தேன்.
சித்தி, சித்தப்பா, அம்மா, அப்பா ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர்.
'கானல் ஆகுமோ காரிகை கனவு...
தாகம் தீர்க்குமோ
கோடையின் நிலவு'
தொலைகாட்சியில் ஓடிக்கொண்டிருந்த பாடல் வரிகள் என்னை வரவேற்றது.
என் அம்மா என்னைப் பார்த்ததும் கொத்தமல்லி கட்டைக் கையில் கொடுத்து அதை ஆய்ந்துத் தருமாறு கூறி அவர் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார்.
என் தங்கையை உள்ளே போகச் சொல்லிவிட்டு தொலைக்காட்சியையும் அணைத்தார்.

"அத்தை பையனுக்கு உன்ன கேட்ருக்காங்க ரேவதி... அப்பாக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு... எங்களுக்கும் சரின்னு படுது என்ன சொல்ற நீ?" எனச் சித்தப்பா ஆரம்பித்தார்.
"நல்ல குடும்பம். நமக்கு தெரிஞ்ச பையன். அவனும் இவள் படிப்புதான். குணமானவன். வேறென்ன வேணும்" அப்பா தொடர்ந்தார்.
நான் எதுவும் பேசாமல் கொத்தமல்லி தலைகளிடம் என் ஆதங்கத்தைக் காட்டிக்கொண்டிருந்தேன். பாவம் என் கைகளில் அவை சிக்கித் தவித்தன.
"ரேவதி படிச்ச பொண்ணு... மிஸ்ஸாகப் போற... உலகம் தெரியும். அவளுக்குப் பிடிச்சாதான் எல்லாம்" என்றார் சித்தி.
"அவள் மனசுல என்ன இருக்கு... வேற யாராது இருக்காங்களான்னு கேளுங்க" என என் மனதை அறிந்திருந்த அம்மா கூறினார்.
அம்மாவுக்கு மட்டும் ஏற்கெனவே என் காதலைப் பற்றி கூறியிருந்தேன். என்னைப் போல் அம்மாவுக்கும் அனைவர் முன்னிலையிலும் கூற பயம். அப்பா நான் சொல்ல வருவதைக் கேட்பாரா... என்னை புரிந்து கொள்வாரா என்ற குழப்பம்.
"சொல்லு ரேவதி. உனக்கு இந்த மாப்பிள்ளை ஓகே வா?" சித்தி கேட்டார்.
"இல்லை வேண்டாம்" மெதுவாக வாய் திறந்தேன்.
"ஏன்.. என்ன காரணம்?" அப்பா வேகமாகக் கேட்டார்.
"சின்ன வயசுல இருந்து அவங்கள பாக்குறேன். அவங்கதான் வாழ்க்கை... கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிலாம் எதுவும் தோணல" தேவையான உண்மையை மட்டும் கூறினேன்.
"சரி ரேவதி. உன்னை மீறி நாங்க எதுவும் பண்ண மாட்டோம். வேற யாராவது பிடிச்சிருந்தாகூட சொல்லு. ஆனால், நீ புத்திசாலி பொண்ணு. நீயே வெளில பாக்கிற... லவ்னு சொல்லி வீட்ட மீறி கல்யாணம் பண்ணி கஷ்டப்படுறவங்க எவ்ளோ பேர் இருக்காங்க... லவ் பண்றப்ப ஒரு மாதிரி இருக்கும். ஆனா கல்யாணம் வேறொரு உலகம். அதுக்காக நாங்க உன்ன பிடிக்காம யாருக்காவது கட்டி வைக்கவும் மாட்டோம். சொல்லு உனக்கு யாராவது பிடிச்சிருக்கா?"
சித்தப்பா பேசப் பேச குழப்பம், நம்பிக்கை, வருத்தம் இன்னும் பல உணர்வுகள் மாறி மாறி எழுந்தன.

"பையன் வேலைக்குப் போறானா. குடும்பம் எப்படி... போற இடத்தில நம்லவிட ஒரு படி அதிகமா வசதி இருக்கா... ரொம்ப வேணாம்... நீங்க புருஷன் பொண்டாட்டி பணத்துக்காகக் கஷ்டப்படக் கூடாது. அதுக்காக சண்டை போடக் கூடாது. முக்கியமா எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவனா... நல்லா உன்னைப் பார்த்துப்பானா இதைத்தான பார்ப்போம். சரின்னா கட்டி குடுக்க போறோம். சொல்லு ரேவதி."
"சித்தி... "
"அதெல்லாம் எனக்கு தெரியாம ஒண்ணும் இருக்காது" நான் பேச ஆரம்பிக்கும்போதே அப்பாவின் பதில் என்னைத் தடுத்தது.
"ரேவதி எங்க அதெல்லாம் பண்ணப்போது... தெளிவான பொண்ணு... குடும்ப சூழ்நிலை தெரிஞ்சி வளர்ந்த பொண்ணு" என்றார் சித்தப்பா.
"மணி 11 ஆகப் போகுது... பசிக்கும் அவளுக்கு. விடுங்க அப்புறம் பேசிக்கலாம். அவ யோசிச்சு முடிவு எடுக்கட்டும்" சித்தப்பாவை அழைத்தார் சித்தி.
"நீ என்னனு யோசி ரேவதி. உனக்கும் 24 வயசாய்டுச்சு. சரியா இருக்கும் இப்போ பண்ணா. என்னன்னு முடிவு பண்ணு."
"சரி சித்தப்பா."
இருவரும் சென்றவுடன் மனதில் அடக்கி வைத்திருந்த பாரத்துடன் அம்மாவை தனியாக அழைத்துப் பேசினேன்.
"அம்மா... பாலாஜி பத்தி சொல்லட்டா?"
"எனக்கே ஒண்ணும் புரிலடி... எனக்கும் பையன பிடிச்சிருக்கு. நல்ல குடும்பம். பையன் வேலைக்குப் போறான். சம்பாதிக்கறான். சித்தப்பா சொன்ன மாதிரி வேலை இல்லன்னு சூழ்நிலை வந்தா சமாளிச்சு பணக் கஷ்டம் இல்லாம உன்னை பாத்துப்பானா.. அதுல மீண்டு வருவீங்ளா?"
"ம்மா... நாங்க நல்லாருப்போம்... அவன் என்னை நல்லாப் பார்த்துப்பான்னு எப்படிதான் நான் நிரூபிக்கட்டும்."

"அது மட்டும் இல்லாம ஜாதகம் பார்க்கணும். அவங்க வீட்ல பேசணும். உங்க அப்பாக்கு வேற அத்தை பையன நீ கட்டணும்னு ஆசை. பேசிக்கலாம். இப்போ நீ போய் சாப்பிடு" என்று சொல்லிட்டு அம்மா, தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
என்னால் மனதின் குமுறலை அடக்க முடியவில்லை.
கண்களில் நீர் கசியத் தொடங்கியது. அந்தக் கண்ணீர் என் கோழைத்தனம் அல்ல. ஒருவித உணர்வுகளின் வெளிப்பாடு. எந்த சங்கடமும் ஏற்படாமல் மனக்கசப்பு இல்லாமல் என் காதல் வெற்றியில் தித்திக்குமா போன்ற கேள்விகளின் வெளிப்பாடு அந்தக் கண்ணீர்.
சித்தப்பா, அப்பாவின் மனதைப் புண்படுத்த நிச்சயம் என்னால் இயலாது. அவர்களுக்குப் புரிய வைத்து பாலாஜியை மணக்க வேண்டும். உறவுகளும் எனக்கு வேண்டும். அவர்களின் பாசம் வேண்டும். அவர்களின் துணை வாழ்வின் எல்லை வர வேண்டும்.
ஏன் அவர்களுக்காக மனம் மாறி அவர்கள் சொல்லும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ளலாமே என்றால்...
மனதின் ஒரு பெரும் நேசம் அவன். உண்மையாகவே என் அத்தை மகன் மேல் எந்த உணர்வுகளும் எனக்கில்லை. யார் மீது வேண்டுமானாலும் வருவதும் அது இல்லை. ஒரு நம்பிக்கை அளவு கடந்த அன்பு... காதல் உணர்வு எனக்கு பாலாஜி மீதுதான் உள்ளது.

எத்தனையோ காதலில் பணம் முக்கியமில்லை குடிசை போதும் என்று போனவர்கள் நிலைமையும் நான் பார்த்துள்ளேன். வெற்றியடைந்து முன்னேறியவர்களும் உண்டு. நாங்கள் அப்படியில்லை. இருவரிடமும் படிப்பு உண்டு. திறமை உண்டு. போதுமான பணம் உண்டு. இதை அவர்களுக்கு எப்படிப் புரிய வைக்கப்போகிறேன் என்று தெரியவில்லை. யார் மனதையும் புண்படுத்தாமல் வேண்டியதை பேச வேண்டும். தெளிவான பொண்ணு என்று என்னை நம்பும் அவர்களுக்கு என் முடிவு முட்டாள்தனம் அல்ல... சரியானதே என்று தோன்ற வேண்டும்.
கல்யாணத்துக்குப் பின் வாழ்க்கை வேறுவிதமாக இருக்கும். காதல் மட்டுமே கடைசிவரை போதாது என்கிற அவர்கள் வார்த்தையை ஏற்கிறேன். வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்து அவர்கள் கூறும் அறிவுரை.
எனினும் வாழ்க்கை தொடங்க ஓர் ஆசை, மனதின் திருப்தி, கல்யாணத்தில் எழ வேண்டும். எனக்கு அது அவனிடம் கிட்டுகிறது. என்னைப் பற்றி அறிந்தவன். நண்பனாக இருந்ததில் இருந்து என்னை அத்தனை நல்லவிதமாய் பார்த்துக் கொண்டிருக்கிறான். சின்னச் சின்ன உதவிகளில்கூட ஒருவர் குணம் அறியலாம். ஒருமுறை முக்கியமான தேர்வு ஒன்றுக்குச் செல்லும்போது ஹால் டிக்கெட் தொலைந்துவிட்டது. கடைசி நிமிடத்தில் அவன் உதவியால் அந்தத் தேர்வை எழுதினேன்.
திருமணத்துக்கு முன் ஒரு புத்தகம் எழுதி வெளியிட வேண்டும். பேங்கில் வேலை வாங்கிவிட வேண்டும்... என் லட்சியங்கள் ஏளனமாய் என்னைப் பார்த்து சிரித்தன.

துடைக்க துடைக்க கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது.
கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. அனுபவித்து கண்ணீர் வடித்தேன்.
வெளியில் மழை பெய்யத் தொடங்கியதாய் மழை சத்தம் என்னிடம் வந்து கூறியது.
எழுந்து சென்று முகத்தை மழையிடம் காட்டினேன். கண்ணீரை அது துடைத்தது.
கீழே விழுகின்ற மழை துளி உன் ஆசைகள் யாவும் நிறைவேறும் என்று சொல்லிவிட்டு மண்ணைச் சேர்ந்தது.
எது வந்தாலும் பார்த்துக் கொள்வோம். நடக்க வேண்டிய நேரத்தில் யாவும் நடக்கும். முயற்சிகளைத் தொடர்வோம்.
புது தைரியம் மனதில் தோன்றியது. நல்லதே நடக்கும்.
தெளிவடைந்தது மனம்.
- செ.ரேவதி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.