Published:Updated:

காட்டுப் பீர்க்கங்காய் குளியல் நார், மகளிர் குழுக்களுக்குப் பயிற்சி! அசத்தும் தஞ்சாவூர் அரசுப் பள்ளி

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

காட்டுப் பீர்க்கங்காய் நாரை குளியலுக்குப் பயன்படுத்தினால் தோல் நோய்கள் அனைத்தும் தீரும். தோலில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும்.

திருவாரூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் காட்டுப் பீர்க்கங்காய் மூலம் குளியல் மற்றும் சமையல் பாத்திரங்களுக்கு பயன்படுத்தக் கூடிய நார் தயாரித்துள்ளனர். இதைப் பயன்படுத்தினால் தோல் நோய்கள் நீங்கும். மக்கக் கூடிய தன்மை கொண்டதால் சுற்றுப்புறச் சூழலுக்கும் எந்தக் கேடும் இருக்காது என்கின்றனர்.

குளியல் நார்
குளியல் நார்

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் அருகில் உள்ள தென்குவளவேலி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அந்தப் பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர் இராமமூர்த்தி உதவியுடன் காட்டுப் பீர்க்கங்காயைக் கொண்டு குளியல் மற்றும் சமையல் பாத்திரங்கள் சுத்தம் செய்வதற்குப் பயன்படும் நார் தயாரித்து அசத்தியுள்ளனர்.

இன்றைக்குச் சமையல் பாத்திரங்கள் சுத்தம் செய்வதற்கு பிளாஸ்டிக் பை, நைலான் நரம்பு, கம்பி வலைகள் போன்றவற்றையே பெண்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையிலும் இதற்கு மாற்றாகவும் காட்டுப் பீர்க்கங்காயைக் கொண்டு நார் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைக் குளியலுக்குப் பயன்படுத்தினால் உடலில் எந்தவிதமான தோல் நோய்களும் வராமல் காக்கலாம் என, பள்ளி மாணவர்கள் ஆச்சர்யப்படுத்துகின்றனர்.

குளியம் நாருடன் மாணவர்கள்
குளியம் நாருடன் மாணவர்கள்

ஆசிரியர் இராமமூர்த்தியிடம் பேசினோம். ``கிராமங்களில் கிடைக்கக்கூடிய இயற்கை வளங்களைக் கொண்டு வணிகரீதியாகப் பொருள்களைத் தயாரிக்கத் திட்டமிட்டோம். மேலும், அதை விற்பனை செய்வதுடன் அவை மக்களுக்குப் பயன்படுவதுடன் கிராமப்புற மக்களுக்கு இதைத் தெரியப்படுத்தி அவர்களுக்கு வாழ்வாதாரத்தை உண்டாக்கும் வகையில் மாணவர்களைக் கொண்டு இதைத் தயார் செய்துள்ளோம்.

என் இளம் வயதில் என் அம்மா இந்த வகை நார்களைப் பயன்படுத்தியே என்னைக் குளிப்பாட்டுவார். ரொம்பவே புத்துணர்ச்சியாக இருக்கும். அதன் ஞாபகம் எனக்கு அப்படியே இருந்தது. அத்துடன் நான் பள்ளிக்கு வரும்போது வெண்ணாற்றங்கரையில் காட்டுப் பீர்க்கங்காய் காய்த்திருப்பதைப் பார்த்தேன். அப்போது வீணாகப் போகும் இதைப் பலர் உபயோகப்படுத்தும் வகையில் பொருளாக தயாரிக்கலாம் என முடிவெடுத்து அதை மாணவர்களிடம் கூறினேன்.

ஆசிரியருடன்  மாணவர்கள்
ஆசிரியருடன் மாணவர்கள்

அவர்களும் ஆர்வமுடன், `செய்யலாம் சார்' எனச் சொன்னார்கள். ஆனால், இதை வணிக ரீதியாக மட்டும் யோசிக்காமல் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சுய உதவிக்குழு பெண்களுக்கும் இதைத் தயாரிப்பதற்கான பயிற்சி கொடுக்க உள்ளோம். தயாரிப்பு என்றால் பெரிய வேலையெல்லாம் கிடையாது. பச்சை நிறத்தில் காய்த்து தொங்கும் காட்டுப் பீர்க்கங்காய் முத்திய பிறகு பழுப்பு நிறத்தில் மாறிவிடும். அது போன்ற காய்களைப் பறித்து அதன் தோலை வெட்டி எடுத்துவிட்டால் உள்ளே நார் போன்று இருக்கும். அதுதான் பீர்க்கங்காய்க்கு இயற்கை தந்த கொடை.

பின்னர், அந்த நாரை எடுத்து சதுரவடிவில் நறுக்குவோம். பிறகு அதை அழகுபடுத்துவதற்காக டெய்லர் கடை மூலம் பல்வேறு நிறங்களில் தயார் செய்யப்பட்ட நாடாவை அதன் ஓரத்தில் வைத்துக்கட்டிவிடுவோம். அவ்வளவுதான். வேறு வேலை இல்லை இதை ரூ.20-க்கு விற்பனை செய்கிறோம். அதில் வரும் வருமானத்தை மாணவர்களின் நலனுக்கும் பள்ளியின் வளர்ச்சிக்கும் பயன்படுத்துகிறோம்.

குளியல் நார்
குளியல் நார்

காட்டுப் பீர்க்கங்காய் நாரை குளியலுக்குப் பயன்படுத்தினால் தோல் நோய்கள் அனைத்தும் தீரும். தோலில் இருக்கும் இறந்த செல்களை நீக்கும் தன்மை கொண்டதால் தோல் புத்துணர்ச்சி அடைந்து மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவும். அத்துடன் காலில் ஏற்படும் பித்த வெடிப்புகளை மறைய வைக்கும். இப்படி மனித உடலுக்குப் பல்வேறு நன்மைகள் தரும் இந்தக் காய் சுற்றுச்சூழலையும் காக்கிறது" என்றார்.

காட்டுப் பீர்க்காங்காய் நாரில்
காட்டுப் பீர்க்காங்காய் நாரில்
`நடிப்பு வேண்டாம்; படிப்பு மட்டுமே கடைசி வரை உதவும்' வளர்ச்சி குறைப்பாட்டைக் கடந்து சாதித்த சரவணன்
அடுத்த கட்டுரைக்கு