Election bannerElection banner
Published:Updated:

`அலங்காரமற்ற அன்புதான் உலகை வெல்லும் ஆயுதம்!’ - மனதை வருடும் ஹெலன் திரைப்படம் #MyVikatan

ஹெலன்
ஹெலன்

ஒரு நடுத்தர குடும்பத்தில் நர்சிங் படித்துவிட்டு வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருக்கக்கூடிய நாயகி ஹெலன்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு மனிதன் தான் எந்த நிலையில் இருந்தாலும் சக மனிதனை மதிப்பதும், அன்பு காட்டுவதும் அடிப்படையான மனிதப் பண்பு. ஆனால், நமக்குக்கீழ் பணிபுரிகிற நபர்களையும், நமக்கு உதவியாக உள்ள சகமனிதர்களையும் நாம் உரியவாறு மதிப்புடன் நடத்துகிறோமா? அவர்களிடம் அன்பு காட்டுகிறோமா என்றால், 'இல்லை' என்பதே கசப்பான பதிலாக இருக்கும். இந்த உலகத்தை வெற்றிகொள்ள அன்பைவிட மிகச்சிறந்த ஆயுதத்தை உலகம் இதுவரை கண்டுபிடிக்கவே இல்லை. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவதைத் தொடர்ந்து தவிர்த்துவருகிறோம் அல்லது தவறவிடுகிறோம்.

ஹெலன்
ஹெலன்

ஒருவருக்கு அருகிலேயே அமர்ந்து, அவருடைய தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்துவைத்த வண்ணம், நமது எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டு இருந்தால் மட்டுமே அன்பு வெளிப்படும் என்பதில்லை. சக மனிதனைப் பார்த்து நாம் அவ்வப்போது சிந்தக்கூடிய ஒரு சிறு புன்னகைகூட நம்முடைய அன்பை வெளிப்படுத்தக் கூடியதாய், உலகை அழகானதாய் மாற்றப் போதுமானதாய் இருக்கும் என்பதை மையக் கருவாகக்கொண்ட மலையாளப் படமே ஹெலன் (Helen).

இந்த உலகத்தை வெற்றிகொள்ள அன்பைவிட மிகச்சிறந்த ஆயுதத்தை உலகம் இதுவரை கண்டுபிடிக்கவே இல்லை. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அந்த ஆயுதத்தைப் பயன்படுத்துவதைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறோம் அல்லது தவறவிடுகிறோம்.
- அகன் சரவணன்

ஹெலன் படத்தின் கதை:

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நர்ஸிங் படித்துவிட்டு வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருக்ககூடிய நாயகி ஹெலன். அவரின் தந்தை பால். ஹெலன் ஒரு பெரிய ஷாப்பிங் மாலில் இருக்கும் சிக்கன் ஹப்பில் பகுதி நேர வேலை உள்ளிட்ட பல பணிகளைச் செய்து வருகிறார். ஹெலனுக்கு ஒரு வேலையில்லாத காதலன் இருக்கிறான். ஒருநாள் இரவு நேரத்தில் காதலனுடன் வண்டியில் போகும்போது, அவன் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காதலர்கள் இருவரும் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

ஹெலன்
ஹெலன்

அங்கு மோசமான ஒரு போலீஸ்காரர் நாயகியின் அப்பாவைக் காவல் நிலையத்துக்கு வரவழைத்து நாயகிக்கு தேவையற்ற அறிவுரைகள் கூறி அனுப்புகிறார். தன்னுடைய மகளின் காதல் தெரிந்த அப்பா மகளுடன் பேச மறுக்கிறார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி தன்னைப் பெரும் சிக்கலில் மாட்ட வைத்ததால் தன்னுடைய காதலனுடன் பேச மறுக்கிறார் நாயகி!

தன்னுடைய தந்தை, காதலன் இருவருடனும் பிரச்னை என்ற நிலையில் அடுத்தநாள் வேலைக்குச் செல்லக்கூடிய நாயகி, அன்று இரவு சிக்கன் ஹப்பில் உள்ள குளிர்ப்பதனச் சேமிப்பு அறையில் (Cold Storage) மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து தப்பிக்க ஹெலன் மேற்கொள்ளும் திக் திக் போராட்டங்களும் ஹெலனைக் காணாமல் அவர் தந்தையின் தவிப்பும், இறுதியில் நாயகி தப்பித்தாரா, இல்லையா? என்பதுமே `ஹெலன்' படத்தின் கதை.

அறிமுக இயக்குநர் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில், ஹெலன் பாலாக அன்னாபென், ஹெலனின் தந்தை பாலாக லால் ஆகிய இருவரும் இயல்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். மலையாள சினிமாவுக்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு சிறந்த நடிகை அன்னா பென்.

'கும்பளங்கி நைட்ஸ்', 'ஹெலன்', 'கப்பெல்லா' என அன்னா பென் நடித்த மூன்று படங்களுமே வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளன.

ஹெலன் படத்தில் நான் ரசித்தவை:

1. குளிர்ப்பதனச் சேமிப்பு அறையில் மாட்டிக்கொண்டு உயிர்பிழைக்கப் போராடும் மனிதனின் ஒவ்வொரு நொடி தவிப்பையும் தன் கண்களில் அழகாகக் கொண்டுவந்து, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நாயகி அன்னா பென்.

2. தந்தை-மகள் இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய இயல்பான உறவு அவர்கள் உண்மையான அப்பாவும் மகளுமோ என்று எண்ண வைக்கிறது.

ஹெலன்
ஹெலன்

3. துணை கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் தங்களுடைய நேர்மையான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.

4. படத்தின் பிற்பாதியின் ஒவ்வொரு நொடியும் உயிர்வாழும் ஆவலை நம்மை உண்மையாக அனுபவிக்கச் செய்கிறது.

5. முதல் பாதியில் தென்றலாக நம்முடன் உறவாடும் திரைக்கதை, பிற்பாதியில் சூறாவளியாகச் சுழன்று அடித்துள்ளது.

6. உயிர் பிழைப்பதற்காக ஒரு மனிதன் மேற்கொள்ளும் அனைத்து விதமான முயற்சிகளையும் திக் திக் மனநிலையிலேயே நம்மை ரசிக்க வைக்கிறார் மதுக்குட்டி சேவியர்.

7. தமிழ் படங்களில் வில்லனாகவே நாம் பார்த்து ரசித்த லால், காணாமல்போன மகளைத் தேடித் துடிக்கும் அப்பாவாக ரசிக்க வைக்கிறார்.

8. ப்ரிட்ஜில் ஐஸ்கட்டியினுள் மாட்டிக்கொள்ளும் எறும்பு, குளிர்பதன அறையில் இருக்கும் எலி உள்ளிட்ட சில புனைவுகள் ரசிகர்களையும் அறிவாளியாகக் கருதி குறியீடாகவே வைக்கப்பட்டுள்ளன.

9. உண்மையாகவே அறையைக் குளிரூட்டி படப்பிடிப்பு நடந்துள்ளதால் -14.5° குளிர் ரசிகர்களின் கண்களிலும் உறைந்துபோய் கிடக்கிறது.

10. முதல்பாதியில் குழந்தைத்தனமான முகத்துடனும், பிற்பாதியில் சாவின் விளிம்பில் நிற்கும் ஒரு மனிதனின் வேதனைகளை முகத்தில் காட்டும்போதும் அன்னா பென் நடிப்பில் மிளிர்கிறார்.

11. கிளாஸ்ட்ரோஃபோபியா (Claustrophobia) பற்றி அன்னா பென் வழியாக இயல்பாக ரசிகர்களுக்கு கடத்திவிடுகிறார் இயக்குநர்.

ஹெலன்
ஹெலன்

12. தந்தை - மகள், காதலன் - காதலி, அலுவலர் - பணியாளர் ஆகிய மூன்றுவித உறவுகளில் உண்டாகும் சிக்கல்கள் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளன.

13. கதையின் இறுதியில் நாயகன், நாயகியை மீட்கப் பெரும் சாகசங்கள் எதையும் செய்வதில்லை என்பதே பெரும் நிம்மதி அளிக்கிறது.

14. கொச்சியின் அழகு, மனதுக்கு நெருக்கமான மற்றும் வண்ணமயமான காட்சிகள் என ஒளிப்பதிவாளர் அனேண்ட் சி.சந்திரன் படத்தின் உணர்வை அதிகரிக்கச் செய்துள்ளார்.

15. ஹெலனின் சிரமங்களைப் பொருத்தமான காட்சிகளால் தெரிவிக்க ஷான் ரஹ்மானின் பி.ஜி.எம்-கள் தூண்டிலாகப் பயன்பட்டுள்ளன.

16. ஒவ்வொரு காட்சியிலும் தொடர்ந்து அன்பை விதைத்துக் கொண்டேபோகிறது திரைக்கதை.

17. ஒரு சிறு புன்னகைகூட அதிசயங்களை உண்டு செய்யும் சக்தியுடையது என்கிறது நம் இதயத்தைத் தூண்டும் இந்த உயிர்ப்பான கதை.

18. ஆயிரக்கணக்கானோர் வந்துபோகும் ஷாப்பிங் மாலில் பணிக்குப் போகும்போதும், திரும்பி வரும்போதும் வாட்ச்மேனிடம் புன்னகையைச் சிந்தவிட்டுச் செல்லும் நாயகியின் பெயர்கூட வாட்ச்மேனுக்குத் தெரிவதில்லை. ஆனால், அந்தப் புன்னகைதான் இறுதியில் நாயகியைக் காப்பாற்றும் ஆயுதமாக மாறுகிறது. படத்தின் ஆன்மா முழுக்கவே "உங்கள் மகளின் பெயர் என்ன?" என அந்த ஷாப்பிங் மாலின் வாட்ச்மேன் நாயகியின் தந்தை பாலிடம் கேட்கும் அந்த இறுதிக் கேள்வியில்தான் அத்தனை குளிரிலும் உறையாமல் இருக்கிறது.

ஹெலன்
ஹெலன்

நல்ல போலீஸ்காரர்கள் இடையில் ஒரு கெட்ட போலீஸ்காரர், லாலுக்கு ஒதுக்கப்பட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகள் உள்ளிட்ட சில க்ளீஷேக்களும், பொறுமையைச் சோதிக்கக்கூடிய சில காட்சிகளின் நகர்வுகள் மற்றும் சிற்சில பதில் அளிக்கப்படாத கேள்விகள் என இருந்தாலும் ஹெலன் ரசனைக்குரிய ஒரு படமாகவே இருக்கிறது. அன்புதான் அனைத்துக்கும் ஆணிவேர் என்று சொல்லக்கூடிய ஹெலன். அனைவரிடமும் அன்பாக இருங்கள். அதனால் அன்பைப் பெறுபவருக்கு மட்டும் பயன் இல்லை. விதைப்பவருக்கும் விளைச்சல்தான் என்பதை அடித்துச் சொல்கிறது. ஹெலன் தெளிவாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு சர்வைவல் த்ரில்லர். அன்பிற்கு அடையாளமோ, அலங்கரமோ தேவையில்லை என்பதே ஹெலனின் ஜீவன்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு