Published:Updated:

இளைஞர்களை ஈர்த்த கிராமத்து கலாசாரம்... வில்லேஜ் டிக்கெட் கிராமிய திருவிழா 2020

கிராமிய திருவிழா
கிராமிய திருவிழா

நகரத்திலேயே பிறந்து வளர்ந்த இந்தக் காலத்து இளம் தலைமுறையினர் இந்தத் திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். இந்தத் திருவிழாவின் கூடுதல் சிறப்பம்சமாக 28 வகை சைவ மொய் விருந்து மற்றும் 28 வகை அசைவ மொய் விருந்தும் நடைபெறுகிறது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தனியார் அமைப்பு ஒன்று "வில்லேஜ் டிக்கெட் " என்ற பெயரில் கிராமிய திருவிழா ஒன்றை நடத்தி வருகிறது. இந்தக் கிராமிய திருவிழாவில் தமிழர்களின் பாரம்பர்யத்தையும் கலாசாரத்தையும் இத்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமத்து பாணியில் அமைக்கப்பட்ட குடில் இல்லங்கள், கிராமத்து தெய்வங்கள், ஓலை பாய், அம்மிக்கல்.. ஆட்டுக்கல், காளை மாடுகள் அணிவகுப்பு, நாற்று நடுதல் என இன்று சென்னைவாசிகளான நம்மால் பார்க்க இயலாத பார்த்திராத பலவும் அங்கு இடம் பெற்றிருக்கிறது.

கிராமிய திருவிழா
கிராமிய திருவிழா

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (7.2.20) அன்று தொடங்கிய இந்தக் கிராமிய திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை வரை அங்கு நடைபெறுகிறது. இந்த விழாவை அமைச்சர் பாண்டியராஜன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை சுஹாசினி முதலானோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். பாரம்பர்ய விளையாட்டுகளான நொண்டி, கிட்டிபுல், உறியடித்தல், சருக்குமரம் என நம்முடைய சிறுவயது விளையாட்டுகள் பலவும் இடம் பெற்றிருக்கின்றன.

கிராமத்து வாழ்க்கை எப்படி இருக்கும் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து இந்தக் காலத்து குழந்தைகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. நகரத்தில் பிறந்து இயந்திரங்களோடுதான் தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அப்படி இருக்க பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கிராமத்து வாழ்க்கை முறையை செய்முறை வடிவில் எளிதில் விவரிக்கும் வகையில் குடில்கள் மற்றும் பொருள்கள் அமைக்கப்பட்டிருந்தன. குதிரை வண்டி சவாரி, மாட்டு வண்டி சவாரி, கயிறு இழுத்தல், சைக்கிள் டயர் ஓட்டுதல், பம்பரம் விடுதல் எனச் சிறுவர் சிறுமியர்களைக் கவரும் வகையில் பல்வேறு பாரம்பர்ய பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

கிராமிய திருவிழா
கிராமிய திருவிழா

கிராமிய வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் கலை வேலைப்பாடுகள், கிராமிய விளையாட்டுகள் தவிர தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும் பல உணவு பொருள்கள் இடம் பெற்றிருக்கின்றன. விருதுநகர் கொத்து பரோட்டாவில் தொடங்கி சேலம் தட்டு வடை செட் வரை நம் தமிழ்நாட்டின் பல ஊர்களின் பாரம்பர்ய உணவுகளும் நொறுக்குத் தீனிகளும் பார்ப்போரை சுண்டி இழுக்கும் வகையில் ஃப்ரெஷ்ஷாகவும் சுவையாகவும் கிடைக்கின்றன. இந்தக் கிராமிய திருவிழாவின் ஒரு பகுதியாக வயலில் நாற்று நடுதல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதில் இளம் தலைமுறையினர் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று நாற்று நட்டு மகிழ்ந்தனர். கிராமிய இசை கலைகளான தப்பாட்டம், பறை மற்றும் கரகாட்டம் முதலிய கலைகளையும் கலைஞர்கள் அருமையாகக் காட்சிப்படுத்தி இருந்தனர்.

நகரத்திலேயே பிறந்து வளர்ந்த இந்தக் காலத்து இளம் தலைமுறையினர் இந்தத் திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். இந்தத் திருவிழாவின் கூடுதல் சிறப்பம்சமாக 28 வகை சைவ மொய் விருந்து மற்றும் 28 வகை அசைவ மொய் விருந்தும் நடைபெறுகிறது. வில்வித்தை கற்றுக்கொடுப்பது முதல் பானை செய்ய பயிற்சி அளிப்பதென நகரத்து வாழ் மக்களுக்கு கற்றுக்கொடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிராமத்து மக்களும் விவசாயிகளும் இங்கு குவிந்துள்ளனர். ஆர்கானிக் காய்கறிகள், வேளாண் விளைபொருள்கள் என ஒரு கிராமத்து மக்களின் வாழ்க்கைமுறையை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மிக அருமையாகக் காட்சி படுத்தியிருக்கின்றனர்.

இன்று கடைசி நாள் என்பதால், விடுமுறையை நல்ல முறையில் கழிக்க விரும்புவோர் தாராளமாக இந்தக் கிராமிய திருவிழாவில் திரளானோர் கலந்துகொண்டுவருகிறார். ஆட்டம் பாட்டம் பொழுதுபோக்கு இவற்றையெல்லாம் தாண்டி தமிழர்களான நம்முடைய மரபையும் மாண்பையும், கலாசாரத்தையும், பாரம்பர்யத்தையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம்முடைய மிக முக்கிய கடமையாகும். பெருகி வரும் அந்நிய நாட்டு உணவுப் பொருள்களின் ஆதிக்கத்தால் அழிந்து வரும் நம் பாரம்பர்ய உணவுப் பொருள்களை மீண்டும் வரவேற்று ஆதரவளிப்போம்.

(7, 8, 9) என மூன்று தினங்களும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை இந்தத் திருவிழா நடைபெறுகிறது. நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.200 மட்டுமே. உணவுப் பொருள்களுக்கு தனித்தனியாக டோக்கன் வாங்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு