Published:Updated:

`ராணி வேலுநாச்சியின் சிறப்பை ஒப்புக்கொண்ட புனே ஆசிரியை!' - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
News
Representational Image

என் மகள் அனிச்சம் படிக்கும் பள்ளியில் (ரயன் இன்டர்நேஷனல்-புனே) சுதந்திரப் போராட்ட தியாகிகள் போல வேடமிட்டு சில வசனங்களைப் பேச வேண்டுமென்று சொல்லியனுப்பினார்கள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

என் மகள் அனிச்சத்தின் பள்ளியில் (ரயன் இன்டர்நேஷனல்-புனே) சுதந்திர போராட்ட தியாகிகள்போல வேடமிட்டு சில வசனங்கள் பேச வேண்டுமென்று சொல்லி அனுப்பினார்கள்.

அனிச்சம்
அனிச்சம்

பல வட இந்தியர்களுக்கு தென்னிந்தியாவைப் பற்றிய எந்த தகவலும் தெரியாது. வட இந்தியர்கள் செய்த சிறிய செயலைக்கூட பெரிதாகப் பேசுவார்கள். உதாரணமாக, புனே அருகில் உள்ள ப்ரக்ருதி ரிசார்ட்டில் (Prakruti Resort) ஒரு குதிரை வண்டி வைத்திருக்கிறார்கள். அதில், ``ஜான்சியின் ராணி லக்குமிபாய் தன் குழந்தையுடன் தப்பிக்க பயன்படுத்திய வண்டி" என்று எழுதியிருந்தார்கள். ஆகா எவ்வளவு பெரிய வரலாற்றுச் சின்னம் என்று ஆச்சர்யம் அடைந்தேன். அடுத்த வரி, ``இந்தத் தகவலை உறுதி செய்ய முடியவில்லை" என எழுதி வைத்திருந்தனர். இப்படி உறுதிபடுத்தப்படாத பொருள்களை வைத்தெல்லாம் விளம்பரம் செய்வார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜான்சியின் ராணி லக்குமிபாய் புகழப்பட வேண்டியவர்தான். ஆனால், அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ராணி வேலுநாச்சியாரை ரயன் பள்ளிக்கு அறிமுகம் செய்வோம் என முடிவெடுத்தேன். `` I am the Queen of Sivaganga and my name is Queen Velunachiyar. I am the first woman freedom fighter. I won two battles against British" என்று என் மகளுக்குச் சொல்லிக்கொடுத்து அனுப்பினேன்.

Representational Image
Representational Image

அனிச்சம் சொன்னதைக் கேட்டுவிட்டு, ஜான்சியின் ராணி லக்குமிபாய் தான் முதல் பெண் சுதந்திரப் போராட்ட தியாகி என்று சொல்லியிருக்கிறார் ஆசிரியை. இதை எதிர்பார்த்திருந்த நான், ராணி வேலுநாச்சியாரின் பிறந்த நாள் மற்றும் அவர் போரில் வென்ற காலத்தைச் சொல்லிக் கொடுத்திருந்தேன். அதை அனிச்சம் சொல்லியிருக்கிறார். அந்த ஆசிரியை இணையத்தில் தேடிவிட்டு, அனிச்சம் சொன்னது சரி என்று ஏற்றுக்கொண்டார்.

ராணியின் வரலாற்றைக் கேட்டது முதல், ராணியின் அரண்மனைக்குப் போக வேண்டுமென்று அனிச்சம் சொல்லிக் கொண்டிருந்தார். சமீபத்தில் சிவகங்கை அரண்மனைக்கு போனோம். உள்ளே ஒன்றுமேயில்லை.

ராணி வேலுநாச்சியார்
ராணி வேலுநாச்சியார்

ராணி பயன்படுத்திய பொருள்கள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டேன். இருந்த பொருள்களை அருங்காட்சியகத்துக்கு கொடுத்துவிட்டோம் என்று சொன்னார்கள். சரி என்று அருங்காட்சியகத்துக்குப் போனால், அங்கே குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பன போன்ற அரிய (?) தகவல்கள் இருந்தன!

அருங்காட்சியகத்தில் அரிதாக சில வரலாற்று சிறப்புமிக்க பொருள்களும் இருந்தன. அவற்றுள், மாமன்னர்கள் மருது சகோதரர்களின் தளபதி நைனப்பன் சேர்வை பயன்படுத்திய வளைத்தடி முக்கியமானது. அங்கே வாள்களும் இருந்தன. ஆனால், அந்த வாள்கள் தொடர்பாக எந்தத் தகவல்களும் இல்லை. இது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தது.

ராணி லக்குமி பாய் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் வண்டி
ராணி லக்குமி பாய் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் வண்டி

எகிப்தின் மன்னராக இருந்த துட்டன்காமுன் பயன்படுத்திய கத்தி இன்றும் பத்திரமாக இருக்கிறது. அந்தக் கத்தி 3300 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டது. இரும்பு, கோபால்ட் மற்றும் நிக்கல் ஆகிய தனிமங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது அந்த கத்தி. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், மன்னர் துட்டன்காமுனின் காலம் வெண்கல காலம். அதன் பிறகு வந்ததுதான் இரும்பு காலம்.

இரும்புக் காலம் வருவதற்கு முன்பே மன்னர் துட்டன்காமுன் இரும்பில் கத்தி செய்து பயன்படுத்தியிருக்கிறார். அந்தக் கத்தி, பூமியைத் தாக்கிய விண்கற்களில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதேபோல புகழ்மிக்க இன்னொரு கத்தி/வாள் டமாஸ்கஸ் வாள் (Damascus swords).

வாள்கள்
வாள்கள்

டமாஸ்கஸ், சிரிய (Syria) நாட்டின் தலைநகரம். அங்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உலகப் புகழ்பெற்றது. சிலுவைப்போரில் இஸ்லாமியர்கள் பயன்படுத்தியது டமாஸ்கஸ் வாள்கள். மிகுந்த வளைந்து கொடுக்கும் தன்மையும், பல சண்டைகளுக்குப் பிறகும் கூர்மை இழக்காத தன்மையும் டமாஸ்கஸ் வாள்களின் தனிச்சிறப்பு. இந்த வாள்களை தயாரிக்கப் பயன்படுத்திய இரும்பு இந்தியாவில் உருவாக்கப்பட்டது என்பதை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

சாதாரண இரும்பைவிட மிக அதிகமான கரி இந்த இரும்பில் இருந்திருக்கிறது. அதுதான், இந்த வாள்களின் தனித்த குணத்துக்கான காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், அவற்றை எப்படி தயாரிப்பது என்ற தகவல் இந்தியாவில் இல்லை. சிவகங்கை அருங்காட்சியகத்தில் இருந்த வாள்களைப் பார்த்தபொழுது இந்த வரலாறெல்லாம் என் மனதில் ஓடியது.

நேதாஜி சிலை
நேதாஜி சிலை

இந்திய வரலாற்றில் முதல் முறையாக வெள்ளையர்களின் கழுத்தில் வாளை வைத்து மண்டியிட வைத்த ராணியின் வாளெங்கே? அருங்காட்சியகத்தில் இருப்பது ராணி பயன்படுத்திய வாள் தானா? ஒரு தகவலும் இல்லை. சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாருக்கு ஒரு மணிமண்டபம் இருக்கிறது. அதில் ராணியின் கம்பீரமான சிலை ஒன்று இருக்கிறது. அதை ஒட்டி அசிங்கமான ஒரு படிக்கட்டும் இருக்கிறது. அந்தப் படிக்கட்டை சிலையின் அருகில் இருந்து அப்புறப்படுத்துவது நல்லது. ராணி வேலுநாச்சியார் பற்றிய தகவல்களைத் திரட்டி, அவர் பயன்படுத்திய பொருள்களை கண்டெடுத்து நல்ல அருங்காட்சியகம் அமைப்பதுதான் அந்த மகாராணிக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

ராணி வேலுநாச்சியார் பற்றிய ஒரு சிறப்பான நாடகத்தை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தயாரித்து அரங்கேற்றினார். அதை திரைப்படமாக தயாரிக்க வேண்டுமென்பது அவர் விருப்பம். ராணிக்கு சிறப்பு செய்ய, தமிழர்கள் crowdfunding மூலம் நிதி திரட்டி, உலகம் போற்றும் வகையில் ராணி வேலுநாச்சியார் திரைப்படம் தயாரிக்க முயற்சி செய்யலாம்.

ராணி வேலுநாச்சியார் நாடகம்
ராணி வேலுநாச்சியார் நாடகம்

ராணி வேலுநாச்சியாரின் மணிமண்டபத்திலிருந்து மதுரை திரும்பும் வழியில் அரண்மனையின் முன்னே உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையைக் கவனித்தேன். இந்தச் சிலையை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அந்தச் சிலையின் உடையை வைத்து அது நேதாஜி என்று கணிக்கலாம். மற்றபடி சிலைக்கும் நேதாஜியின் உண்மை உருவத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பொதுவாக இதுபோன்ற குறைபாடுகள் சிற்பியின் திறமையின்மையால் ஏற்படுவது. ஆனால், சிவகங்கை சிலையில் குறைபாடுகளுக்கு காரணம் வேறு என்று நினைக்கிறேன்.

இந்தச் சிலை திறக்கப்பட்டது 23-01-1946 (நேதாஜியின் பிறந்தநாள்). அதாவது நேதாஜி பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளான ஐந்தாவது மாதம் திறக்கப்பட்ட சிலை. இந்தியாவில் முதல் முதலில் நிறுவப்பட்ட நேதாஜி சிலை இதுவாகத்தான் இருக்கும். அந்தக் காலத்தில் நேதாஜியின் புகைப்படங்களே அரிதாகத்தான் இருந்திருக்கும். இருந்த புகைப்படங்களும் தெளிவில்லாத கறுப்பு வெள்ளை புகைப்படங்களாக இருந்திருக்கும். இந்தப் பின்புலத்தில் சிற்பிக்கு சிலை செதுக்குவதில் இருந்த சிக்கலைப் புரிந்துகொள்ளலாம்.

`ராணி வேலுநாச்சியின் சிறப்பை ஒப்புக்கொண்ட புனே ஆசிரியை!' - வாசகர் பகிர்வு #MyVikatan

பின் குறிப்பு: மதுரைக்குத் திரும்பிய பிறகுதான் வீராங்கனை குயிலிக்கும் மணிமண்டபம் இருப்பதை தெரிந்துகொண்டேன். அங்கே போகாதது துயரம். நண்பர்கள் சிவகங்கை போனால் வீராங்கனை குயிலிக்கும் மரியாதை செய்துவிட்டு வரவும்.

-கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/