Published:Updated:

`எந்தக் காலகட்டத்திலிருந்து பொங்கல் கொண்டாடப்படுகிறது?' - வரலாற்றுப் பக்கங்கள் #MyVikatan

Representational Image
Representational Image

பொங்கலைப் பற்றிய வரலாற்று ஆதாரம் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்திலேதான் நமக்கு கிடைக்கிறது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தமிழரின் மனிதநேய பண்பாட்டுத் திருவிழா பொங்கல் திருவிழா. உழவர் சமூகத்தின் வளமைத் திருவிழா. பொங்கல் தமிழரின் வாழ்வோடும் வளத்தோடும் செழித்த உயரிய பண்பாட்டின் வெளிப்பாடே பொங்கல்.

Representational Image
Representational Image

எந்த மத வரையறைக்குள்ளும் அடங்காத வேளாண்மை வாழ்வின் உற்பத்தி சார்ந்த வளமைச் சடங்குகளின் தொகுப்பே பொங்கல்.

இதில், அவதார அம்சங்கள் ஏதுமில்லை. நிறுவப்பட்ட கடவுள் தன்மை இல்லவே இல்லை. மறு உலக மேன்மை, ஆன்மிகத் தேடல் என்று எதைத் தேடினாலும் கிடைக்காது. மத உணர்வும் இன உணர்வும் கடந்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டின் மக்கள் விழாவாகவே பொங்கல் ஒளிர்விட்டுப் பிரகாசிக்கிறது.

பொங்கல் வரலாறு

பொங்கலைப் பற்றிய வரலாற்று ஆதாரம் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்திலேதான் நமக்கு கிடைக்கிறது. முதலாம் ராஜேந்திரன் காலத்து திருவொற்றியூர் கல்வெட்டு `புதியீடு விழா’ எனப் பொங்கலைக் குறிக்கிறது. (புதியீடு என்பது முதல் அறுவடை). தமிழக விவசாயத்தில் தொடர்ந்து நிலவும் இருவகை உற்பத்தி முறைகளை (மருதம்/முல்லை வேளாண் முறைகள்) ஒரே பண்பாட்டின் கீழ் பொருத்தமுற இணைப்பதில் தமிழர் அடைந்த வெற்றியின் சின்னமே பொங்கல் விழா.

Representational Image
Representational Image

புறநானூற்றுப் பாடலிலும், பரிபாடலிலும் பொங்கல் விழா குறிப்பிடப்படுகிறது. பொங்கல் விழா காலப் போக்கில் பல வளர்ச்சிகளைக் கடந்து வந்துள்ளது. தமிழகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியோடும் பேரரசுகளின் வளர்ச்சியோடும் மிகுந்த தொடர்புடையதாகவே பொங்கல் தமிழ் மக்களின் பண்பாடாக மலர்ந்தது. தமிழகம் முழுவதுமான விவசாயிகளின் ஒற்றுமையை வளமைப் பண்பாட்டை ஒரே சமயத்தில் வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் திருவிழா உருக்கொண்டது. தை முதல் நாளை மையமாகக் கொண்டு, வேளாண்மை ஆண்டு தொடங்கப்பட்டு அறுவடைத் திருவிழா கொண்டாடப்பட்டது.

பொலிக! (தமிழரின் மனிதநேயம்)

நெற்பல பொலிக! பொன் பெரிது சிறக்க

எனப் பழந்தமிழ் இலக்கியமான ஐங்குறு நூறு கூறுகிறது.

பொலி என்ற சொல்லுக்குப் பொருள் செழித்தல், மங்கலமாதல் வளமடைதல் என்பதாகும். பொலியிடுவது என்பது முதியோர் முதல் சிறார் வரை ஒன்று சேர்ந்து `பொலியோ பொலி’ எனக் கூடி ஒலி எழுப்புவது.

Representational Image
Representational Image

இத்தகைய பொங்கலை சங்கராந்தியாக - மதம் சார்ந்த பண்டிகைகளில் ஒன்றாக மிகப் பிற்காலத்தில்தான் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதற்கு வேர் இல்லாததால், பொங்கல் விழா இத்தகைய விளக்கங்களுக்கு என்றுமே அடிமையாகிவிடவில்லை. தமிழர் பண்பாடே அனைவருக்ககாவும் பொலிக! என்பதே. மாபெரும் தமிழ் மக்கள் இனம் அத்தகைய உயரிய பண்பாட்டையே உருவாக்கியது. தமிழரின் பண்பாடு மேட்டுக் குடிகளின் `உயர்ந்து வாழும்’ மனிதரின் ஆதிக்கப் பண்டு அல்ல. தமிழரின் பண்பாடு அனைவருக்குமான சமத்துவப் பண்பாடு.

தமிழர் பண்பாடு (திருவள்ளுவர் முதல் பாரதி வரை)

தமிழர் பண்பாடு `பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே’ ஆகும். தமிழரின் தனிப் பெருமையாய் விளங்கும் திருவள்ளுவர் மனிதநேய சமத்துவ சமுதாயம் என்ற லட்சியத்தையே முன்வைத்தார்.

``பழிஅஞ்சி பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.”

தனது உணவை பிறருடன் பகிர்ந்து உண்பதைப் பண்பாடாக முன்வைக்கும். - வள்ளுவர்,

``இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்

பரந்துகெடுக உலக இயற்றியான்”

எனப் போர்க்குரலும் எழுப்புகிறார்.

Representational Image
Representational Image

திருவள்ளுவர் காலம் தொடங்கியே தமிழர் முன்வைத்த வாழ்க்கை வர்க்க வேறுபாடுகள் அற்ற ``வம்பறியா வாழ்க்கை முறையே” ஆகும். வையத்து வாழ்வாங்கு வாழவே தமிழர் முயன்றனர்.

``யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொதுமைப் பண்பாட்டில் வளர்ந்த தமிழர் பண்பாடு சமயம் கடந்த சமத்துவ நெறியையே முன்வைக்கிறது.

அதனால்தான் சமயம் பாடினாலும்,

``பகுத்துண்ணா பாவிகள் விலங்காகவே பிறப்பார்” எனத் திருத்தக்க தேவர் பழிந்துரைக்கிறார். ஆண் - பெண் என்ற வேறுபாடின்றி இருபாலரும் தமிழகத்தில் மனிதன் மீது திணிக்கப்பட்ட தீமைகளை எதிர்த்துப் போராடியதே தமிழர் மரபாக உருப்பெற்றது. மாதவியின் அருந்தவப் புதல்வி மணிமேகலை உலகெங்கும் பசிப்பிணியால் வாடுவோருக்கு அன்னமளிப்பதையே வாழ்க்கைப் பணியாக மேற்கொண்டு அட்சயப் பாத்திரம் ஏந்தினாள். தமிழ்நாட்டுப் பெண்களிலேயே மானுட விடுதலைக்கான புரட்சிக்குரலை எழுப்பிய இயக்கமாகத் திகழ்ந்த சூடிக்கொடுத்த சுடர் மங்கை ஆண்டாள் போராடிய மரபு தமிழ் மக்களின் மரபு.

Representational Image
Representational Image

சோழப் பெருமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் சாதி - மத ஆதிக்கமும் அரசு சுரண்டலும் தாழ்வுற்ற வறுமை மிஞ்சிய நிலையை - தமிழக மக்களுக்கு அளித்ததை எதிர்த்து கவியரசன் கம்பன் குரல் எழுப்பினான்.

``வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லை பொய் உரை இலாமையால்

ஒண்மை இல்லை பல் கேள்வி ஓங்கலால்”

``எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே

இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ”

கம்பனின் இந்தப் பொதுமைப் பண்பு தமிழரின் பண்பாட்டில் தமிழரின் குருதியில் தோய்ந்த பண்பாடாகும். இவற்றுக்கு எதிரான ஆதிக்கப் பண்பாடுகளை எதிர்த்துப் போரிட்டனர் தமிழர்கள்.

Representational Image
Representational Image

சாதி, குலம், பிறப்பென்னும் நிறுவனங்கால் மனிதர்கள் பிளவுபடுத்தப்படுவதை தமிழ் சித்தர்கள் மிகுந்த போர்க்குணத்தோடு எதிர்த்தார்கள்.

``சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்” - பாம்பாட்டி சித்தர்.

``மனிதனே உலகத்தின் தலைவர் - அவனே அனைத்துக்கும் மாண்புள்ள புதல்வன்” - உகலாகாயத் சித்தர்.

பறச்சி ஆவதேதடா?

பணத்தி ஆவதேதடா?

இறைச்சி தோல் எலும்பிலும்

இலக்கம் கட்டிருக்குதோ? - சிவவாக்கியர்

Representational Image
Representational Image

தமிழிலே இயக்கம் கண்ட சமயவாதிகள் யாவரும் தமிழரின் மனிதநேயப் பண்பாட்டு வழியிலேயே இயக்கம் கண்டதால்தான் நிலைத்தனர். சமய வழிபட்ட ஆதிக்கத்தை எதிர்த்த சமய வழிபட்ட மனிதநேயப் போராளிகளாகவே அவர்கள் விளங்கினர்.

சித்தர்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து பக்தி இயக்கமும் சூஃபி இயக்கமும் மனிதநேய ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் பெரும் பங்காற்றின.

தாழ்த்தப்பட்டவர்களை `திருக்குலத்தோர்' ஆக்கி அனைவருக்கும் ஆன்ம விடுதலை என முழங்கிய ராமாநுஜர் தொடங்கி எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என முழங்கிய தாயுமானவர் வரை அனைவருமே இந்தப் பண்பாட்டை வளர்த்தவர்களே ஆவர்.

Representational Image
Representational Image

19-ம் நூற்றாண்டில் வைகுண்டர் சுவாமிகளும் ராமலிங்க வள்ளலாரும் மானுட சமத்துவம் என்ற தமிழ்ப் பண்பாட்டு பதாகையை உயர்த்திப் பிடித்தனர்.

``ஆடுகிடாய் கோழி பன்றி ஆயனுக்கு வேண்டாங்கான்

மேல்தாளம் குரவை தொனி வேண்டாம் கான் ஈசனுக்கு.”

``காணிக்கை யீடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ

வீணுக்கு தேடு மதல் விருதாவில் போடாதுங்கோ”

என்ற வைகுண்டர் சுவாமிகள் ஏழைகளுக்கு தர்மமிடுவதையே பரம்பொருளை அடையும் வழி என்றார்.

நமது புரட்சி எண்ணங்கள் கொண்ட தேசிய இனத்தின் மனித நேயப் பண்பாடு பற்றிய பெருமிதங்கள் நமது நெஞ்சினுள் நிரம்பியிருக்கின்றன.

Representational Image
Representational Image

இத்தகைய பெருமிதம் வர்க்க உணர்வும், புரட்சிகர தேசிய இனமாகத் தமிழர்கள் முன்னேற்றமடைய அவசியமாகும். அதனாலேயே இத்தகைய விழாக்கள் மக்கள் விழாக்களாக மலர வேண்டும்.

மறைந்த தேவ.பேரின்பனின் 'பொங்கல் விழா - தமிழரின் மனித நேய பண்பாட்டு விழா' என்ற நூலிலிருந்து.

- மருத்துவர் இரா.செந்தில் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தர்மபுரி)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு