பேரன்புக் கொண்ட பொப்பி மலரும் நினைவு தினமும்! #MyVikatan
உலகில் எல்லாப்பாகங்களிலும் பரவிக்கிடக்கும் இந்த பொப்பி பூவின் வரலாறு பிரம்மிக்கத்தக்கது.

நான் றின்னோஸா (Rinnozah), உலகில் பல நாடுகளுக்கும் வேலை நிமிர்த்தம் இடம்பெயர்ந்து, தற்போது வசிப்பது கோப்பன்ஹேகன் - டென்மார்க். எனது மூத்த சகோதரன் யசாரின் . என்னை விடப் பத்து வயது பெரியவனென்பதால் எனை சீராட்டி வளர்த்த இன்னொரு தகப்பன்! இலங்கை விமானப்படை அதிகாரி. உள்நாட்டு யுத்தத்தில் நாட்டுக்காக போரிட்டு தன் இருபத்து மூன்று வயதிலேயே உயிர் நீத்த வீரன். கட்டவிழ்க்கப்படாத பல கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்து சொரக்கலோகம் சென்று விட்டார், இன்னும் சொல்லிலடங்கா துயரில் நாங்கள்.
பொப்பி என்ற அதிசய மலரைப்பற்றி என் சகோதரனின் மறைவுக்கு பின்னர் தான் தெரிந்து கொண்டேன். வீழ்ந்த ஒவ்வொரு போர்வீரனின் நினைவாகவும் அணியப்படுவதாலேயே இந்த மலரின் மேல் எனக்கு ஒரு தீராக்காதல். உலகில் எல்லாப்பாகங்களிலும் பரவிக்கிடக்கும் இந்த பொப்பி பூவின் வரலாறு பிரம்மிக்கத்தக்கது.

பொப்பி எனும் அழகான பூக்கள், அபின் எனப்படும் போதை மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. கோடீன், மார்பின் மற்றும் மிக வலிமையான நிவாரணி மாத்திரைகள் உற்பத்தியிலும் அதன் பயன்பாடு முக்கியம் பெறுவதே, Poppy மிகவும் மதிப்புமிக்கதாக தேடப்படுவதற்கான மிகப்பெரிய காரணம். இது எல்லாம் ஒருபுறம் இருக்க இப்பூவின் மீதான என் தீராக்காதல், அது உயிர்நீத்த போர்வீரர்களின் நினைவாக அணியப்படுவதனாலேயே!
யுத்தத்தில் மடியும் ஒவ்வொரு போர்வீரனின் மறைவும் அவனைச்சார்ந்தவர்களின் வாழ்வில் அழியா துயரத்தை, ஒரு நிரப்பமுடியா வெற்றிடத்தை விட்டுச்செல்லும் என்பதை என் அண்ணனின் இறப்பில் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு யுத்ததகளத்திலும், பிரியும் ஒவ்வொரு போர்வீரனின் உள்ளத்திலும், மற்ற எல்லா சாமானியர்களைப்போலவும் ஆயிரம் ஆயிரம் ஆசைகளும் கனவுகளும் கலந்திருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். இத்தகைய, இழப்பின் ஞாபகர்த்தமாய் அணிய எதற்காக குறிப்பாக இந்த பொப்பி மலர் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது ஒரு சுவாரஸ்யமான வரலாறு..!!

முதலாம் உலகப் போரின்போது, பிரான்சில் ஃபிளாண்டர்ஸ் என்ற இடத்தில் ஒரு போர் நடந்தது. சண்டை நிறுத்தப்பட்டதும், ஆழமற்ற கல்லறைகளில் ஆயிரக்கணக்கான வீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்டபின், அதன்மேல் புதிதாக நிரப்பப்பட்ட மண்ணில், சிவப்பு நிற பொப்பிக்கள் பெருமளவில் பூக்க ஆரம்பித்தன. இந்த உருக்கமான நிகழ்வை ஒரு கனட வீரரும் கவிஞருமான Lieutenant colonel John McCrae என்பவர் , 1915-ல் ``ஃப்ளாண்டர்ஸ் ஃபீல்ட்" (“In Flanders Field.”) என்ற தலைப்பில் ஒரு கவிதையாக எழுதினார். பின்னர் இது சகாப்தத்தின் மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்றாக, உலகப் போரின் 1-வது கவிதையாக மாறியது. இந்த கவிதை கனடா, ஐரோப்பா, மற்றும் அமெரிக்கா முழுவதும் பரவியது!
சில ஆண்டுகளுக்குப் பிறகு, Moina Michael என்ற ஒரு பெண் அமெரிக்க பேராசிரியர், போரின் போது உயிர் இழந்தவர்களை நினைவுகூரும் அடையாளமாக எப்போதும் சிவப்பு பொப்பி பூவை அணிவதாக உறுதியளித்தார். அன்றுமுதல் இன்றுவரை வீழ்ந்த ஒவ்வொரு வீரனின் நினைவாகவும், முக்கியமாக Remembrance Day அன்று பொப்பி பூக்கள் அணியப்பட்டு வருகிறது.

நினைவு நாள் (Remembrance day!) முதன்முதலில் 1919 இல் பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகள் (British commonwealth countries) முழுவதும் அனுசரிக்கப்பட்டது. நவம்பர் 11, 1918 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த போர் ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் இது அனுசரிக்கப்பட்டது. போர்களில் இறந்த மக்களை நினைவுகூரும் வகையில் நவம்பர் 11 காலை 11 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செய்யப்படுகிறது. இது இன்றுவரை மறைந்த ராணுவ வீரர்களை நினைவுப்படுத்தி கௌரவிப்பதற்காக தொடர்ந்து பரவலாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. செயற்கை பொப்பி மலர்கள் இன்று லண்டனில் உள்ள Richmond எனும் இடத்தில் யுத்தத்தில் ஊனமுற்ற போர் வீரர்களால் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் சேர்க்கப்படும் நிதி போரில் இறந்த, காயப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வீரர்களின்/ அவர்கள் குடும்ப நலனுக்காக செலவிடப்படுகிறது.
அக்டோபர் கடைசிவாரத்தில் இருந்து, நான் உலகில் எங்கிருந்தாலும், பொப்பி மலர்களை தேட ஆரம்பித்துவிடுவேன். பலகோடி மலர்கள் உலகில் இருந்தாலும் இந்த பிளாஸ்டிக் மலரின் மீது எனக்கு இருக்கும் பெருங்காதல் வேறு எதிலும் இல்லை! அவற்றை எங்கு எப்போது பார்த்தாலும் வங்கி விடுவதை பலவருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன்.

ஒவ்வொரு தடவையும் அந்த சிறிய மலரை கையில் ஏந்தும் போதும் ஏதோ ஒரு இனம்புரியாத பாரம் நெஞ்சை அழுத்தும். இளம் வயதிலேயே, நிறைவேறாத பல்லாயிரம் கனவுகளோடு மறைந்து சென்ற என் சகோதரனின் நினைவுகள் அந்த பொப்பி மலரில் புதைந்திருக்கும். இன்றுவரை, உலகில் எங்கோ ஒரு இடத்தில் பல ஆயிரம் இராணுவ வீரர்கள் மடிந்துகொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களின் சமாதிகளில் குருதியின் சிகப்பை ஏந்தி பொப்பிக்களும் பூத்துக்கொண்டேதான் இருக்கிறன...!
-றின்னோஸா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/