Published:Updated:

ஒரு சாக்லேட் தேசம் வீழ்ந்த கதை..! - குட்டி வரலாறு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

முழு சாக்லேட் என்பது சிறுவயதில் எட்டாக் கனியாகவே இருந்து வந்துள்ளது. தங்கைக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதாலேயே முழு சாக்லேட் கிடைத்தால்கூட எனக்குப் பிடிக்காது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்று நண்பனின் பிறந்தநாள். அவன் கொடுத்த அந்த அரையடி ஸ்கேலைப் போன்ற அழகான பளபளக்கும் பேப்பருக்குள் பிரௌன் நிறத்தில் உருகிவிடத் தயாராக அங்குமிங்கும் வெளியில் எட்டிப் பார்க்கும் பாதாம் பிஸ்தா போன்ற பருப்புகள் எனப் பார்க்கும்போதே நாவினில் தோன்றிய நீர்வீழ்ச்சியை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

Representational Image
Representational Image
Julia Androshchuk / Unsplash

இந்த முழு சாக்லேட் என்பது சிறுவயதில் எட்டாக் கனியாகவே இருந்து வந்துள்ளது. தங்கைக்கு ரொம்பப்பிடிக்கும் என்பதாலேயே முழு சாக்லேட் கிடைத்தால்கூட எனக்குப் பிடிக்காது.

``அவளுக்கே குடுத்திடுங்க’’ என விவரம் புரிந்தும் புரியாத வயதில் எடுத்த முடிவு இன்றும் மனைவியின் ஆசைக்காய் அப்படியே பழகிவிட்டது. இதில் துளி அளவும் வருத்தமில்லை, மகிழ்ச்சிதான்.

வீட்டிற்கு வந்து ரிலாக்ஸாக ஈசி சேரில் அமர்ந்துகொண்டு மொபைலில் வாட்ஸ்அப்பும் ஃபேஸ்புக்கும் என மாறிமாறி பார்த்திருந்தேன். லைக் செய்து வைத்திருந்த ஆப்பிரிக்க வரலாற்றுப் பக்கத்தின் ஒரு பதிவு மனதைப் பாதித்தது. தங்களது வளமை தூர்ந்து போய்விட்டிருந்ததை பல ஆதாரங்களுடன் மேற்கோள்கள் காட்டிக் கூறியிருந்தனர்.

டி.வி-யை ஆன் செய்தபோது, ஒரு சாக்லேட் கம்பெனியின் விளம்பரம்... ஒரு வெள்ளைக்கார முதலாளி நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி பத்துப் பதினைந்து ஆப்பிரிக்க மரபுக்குடிகள் நின்றவாறே அவரை ஏக்கத்துடன் பார்ப்பார்கள். அந்த முதலாளி கைகளில் ஒரு சிறு இடுக்கியும் லென்ஸும் இருக்கும்.

அவர் சுற்றி நிற்பவர்களைப் பார்த்து, "நான் அந்த கோகோ பருப்பிடம் மன்னிப்பு கேட்டதாகக் கூறிவிடுங்கள். அது எனது தேர்வில் தேர்ச்சிபெறவில்லை" என்பார். வெளியே பல கோகோ பருப்புகள், தேர்வுறாததால் அழும் பருப்பைத் தேற்றுவதாக முடியும். அதாவது, அந்த நிறுவனம் ஒவ்வொரு பருப்பையும் சோதித்து மிகவும் தரமான சாக்லேட்டாகத் தயாரிப்பதாய் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

Representational Image
Representational Image
Unsplash

திடீரெனக் குழப்பம்... சாக்லேட் என்றாலே பெல்ஜியம் பிரான்ஸ் எனப் பிரபலமாக இருக்கும்போது ஏன் ஆப்பிரிக்க நாட்டினரைக் காட்டினர்.

கூகுலிடம் கேட்டபோது, பிரபலமான பெல்ஜியம் சாக்லேட்டுக்கான கோகோ ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தே தயாரிக்கப்படுவதாய் இருந்தது. பெல்ஜியத்தின் முக்கிய வருவாய் ஈட்டும் தொழிலாக சாக்லேட் உற்பத்தி இருந்தது. அப்படி என்றால், ஆப்பிரிக்க நாடுகள் ஏன் வளர்சியுராமல் போனது?

ஆங்கிலேயர்கள் எப்படி இந்தியாவை உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தவிடாமல் பருத்தி விவசாயத்திற்கு மாற்றினார்களோ, அப்படித்தான் ஆப்பிரிக்காவையும் உணவுப் பயிர்களுக்குப் பதிலாக கோகோ உற்பத்திக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். அவர்களது வறுமை நிறைந்த வாழ்க்கை முறைக்கு அவர்களது நிலம் சுரண்டப்பட்டதே காரணம்.

Representational Image
Representational Image

எப்படி நதிகளின் பிறப்பிடமாய் இருந்த மலைக்காடுகளை அழித்து டீ எஸ்டேட்டாய் மாற்றிவிட்டதற்குக் காரணமாக இருந்துவிடக்கூடாது என என்னளவிலாவது டீ குடிப்பதில்லை என முடிவெடுத்ததுபோல சாக்லேட்டையும் சாப்பிடக்கூடாது என முடிவெடுத்தேன். ஆனால், தற்போது அவர்களுக்கு வாழ்வாதாரமே அந்த கோகோ விவசாயம்தானே.

இந்த சாக்லேட்டை சாப்பிடலாம் என அந்த கவரைப் பிரித்து உண்டேன்.... கசப்பாகவே இருந்தது அந்த சாக்லேட்!

- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு