Published:Updated:

புத்தம் புது காலை: Ungnyeo என்ற கொரியக் கரடிக் கதை சொல்வதென்ன?

இந்தியாவையும் கொரியாவையும் இணைக்கும் ஓர் இனிய வரலாற்றுக் கதை உள்ளது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இராவணன் சீதையை சிறை வைத்திருந்தபோது, சீதையைத் தேடுவதற்கு அனுமனுக்கு உதவியது 'ஜாம்பவான்' எனும் ரிக்ஷராஜா (கரடிகளின் ராஜா) என்று இராமாயணம் கூறுகிறது. அந்த ஜாம்பவான் பத்து லட்சம் சிங்கங்களின் பலம் பொருந்தியவன் என்றும், அவனிடம் இருந்த 'சியாமந்தக மணி' என்ற அரியதொரு ரத்தினத்தைக் கவர்ந்துசென்ற ஒரு பெரும் சிங்கத்தை, அதன் குகையிலே சந்தித்து, அதை வென்று, அந்த இரத்தினத்தை மீட்டதாக ஒரு மகாபாரத கிளைக்கதை ஒன்று இருக்கிறது. ஜாம்பவான் தான் மீட்ட ரத்தினத்தை தனது மகள் ஜாம்பவதிக்கு பரிசாகத் தர, வேறு ஒரு காரணத்திற்காக அந்த இரத்தினத்தை தேடிவந்த இறைவன் கிருஷ்ணனிடம் சியாமந்தக மணியை ஒப்படைக்கிறாள் ஜாம்பவதி. அவளது தியாகத்தின் பலனாக இறைவன் அளித்த வரத்தால் கரடி உருவத்தில் இருந்த ஜாம்பவதி ஒரு அழகிய ராணியாக உருமாறி நாட்டை ஆண்டதோடு, கண்ணனையும் மணந்ததாகச் சொல்கிறது இந்த மகாபாரதக் கதை.

இந்த ஜாம்பவதியின் கதையைப் படித்த கையோடு, 'Ungnyeo' என்ற கொரியாவின் கரடிக்கதையைப் படிப்போமா?

தங்களுக்கு மிருக வாழ்வு வேண்டாம் என்று ஒரு புலியும், கரடியும் இறைவனிடம் வேண்டிக்கொள்ள, அந்த இருவரின் வேண்டுதலுக்கு செவிசாய்த்த இறைவன் ஹவானுங் அவர்கள் முன்தோன்றி, இருவர் கையிலும் சில பூண்டுப் பற்களைக் கொடுத்து, அவற்றை மட்டுமே உண்டபடி பொறுமையாக தவம் இருக்கும்படி சொன்னாராம். வெளிச்சத்தைக்கூட பார்க்காமல், வேறு எதையுமே உண்ணாமல் 20 நாட்களுக்கு மேல் தாங்க முடியாமல் புலி ஓடிவிட, வெற்றிகரமாக நூறு நாட்கள் வரை பொறுமையுடன் இருந்த அந்தப் பெண் கரடி யங்கியோ (Ungnyeo), ஓர் அழகிய பெண்ணாக மாறியதோடு இறைவன் ஹவானுங்கையே மணமுடித்தாகவும், அவர்களுக்குப் பிறந்த டேங்கன் என்ற மகன்தான் கொரிய நாட்டை திறம்பட ஆட்சி செய்தான் என்றும் கூறுகிறது இந்தக் கொரியக் கதை.

யங்கியோ
யங்கியோ

இரு கதைகளிலும், கரடி மனித உருவம் பெற்றதும், அனைவரையும் காக்கும் இறைவனையே மணமுடித்ததும், பிறகு தனது நாட்டை சிறப்பாக ஆட்சி செய்ததும் என இரு வேறு நாட்டின் கதைகளிலும் ஒற்றுமை காணப்படுவதைப் போலவே, இந்தியாவையும் கொரியாவையும் இணைக்கும் ஓர் இனிய வரலாற்றுக் கதையும் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கி.மு 40-200 ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர் கொரிய மன்னர் பெயர் கிம்-சுரோ. சொர்க்கத்திலிருந்து இறைவன் ஆறு குழந்தைகளை ஒரு தங்கப்பேழையில், சிவப்புத் துணியில் சுற்றி உலகிற்கு அனுப்பி வைத்ததில் முதல் குழந்தை என்று கருதப்படும் இந்த கிம்-சுரோ, கொரியாவின் பான்-கயா என்ற அன்றைய கராக்-குக் நாட்டை (தற்போதைய ஜிம்ஹே நகரம்) ஆண்டு வந்திருக்கிறார்.

கிம்-சுரோ
கிம்-சுரோ

இறைவன் தன்னை பூமிக்கு அனுப்பியதைப் போலவே, தனக்கு மனைவியாக வருபவளையும் இறைவனே அனுப்பிவைப்பார் என்று உறுதியாக நம்பினாராம் இந்த கிம்-சுரோ மன்னர்.

அதேசமயத்தில் கொரியாவுக்கு சம்பந்தமேயில்லாத ஒரு தூரதேசத்தில், அந்த இராச்சியத்தின் மன்னரது கனவில் தோன்றிய இறைவன், அவரது மகளை கயா தேசத்திற்கு மணமகளாக அனுப்பிவைக்குமாறு சொல்லவும், அந்த மன்னரும் தனது மகளை அனுப்பி வைக்கிறார். தனக்கான மணமகள் தன்னைத் தேடி வருவதை தனது உள்ளுணர்வால் உணர்ந்த மன்னர் கிம்-சுரோ, இளவரசியை வரவேற்க தனது நாட்டின் எல்லையில் காவலர்களை நிறுத்தி வைத்துக் காத்திருந்திருக்கிறார்.

தோழியர் மற்றும் பாதுகாவலர்களுடன், தெய்வத்தின் பாதுகாப்பு என தனது கோயிலிலிருந்து ஒரு பெரிய பவளப்பாறையையும் சுமந்துகொண்டு மாதக்கணக்கில் பயணித்து கொரியா வந்து சேர்ந்த அந்த இளவரசியை வரவேற்று, அதற்குப்பின் மணமுடித்த மன்னர் கிம்-சுரோ, அவளுக்கு 'ஹே ஹூவான் ஓக்' என்று பெயரிட்டு தனது கயா நாட்டின் ராணியாக்கி உள்ளார்.

கிம்-சுரோ மற்றும் ஹே ஹூவான் ஓக் தம்பதியினருக்குப் பிறந்த பனிரெண்டு குழந்தைகளில் பத்து பேர் ஆண் குழந்தைகள் என்றும், அவர்கள் அனைவரையும் கிம் அல்லது ஹே என்ற அவர்களது குடும்ப பெயரைக் கொண்டு நாம் அறியலாம் என்றும் கூறப்படுகிறது.

கொரியா
கொரியா

கிம்-சுரோவின் மரணத்திற்குப் பின், ராணி ஹே ஹூவான் தான் நாட்டை ஆண்டதாகவும், அவரது நல்லாட்சியின் நினைவாக அவரது மரணத்திற்குப் பின், ராணி வந்தடைந்த கடற்கரையிலேயே இருவருக்கும் நினைவிடத்தையும் நிறுவியதோடு, அவர் கொண்டுவந்த அந்த கல்லையும் வைத்து அங்கே வழிபடுவதுடன், ஒவ்வொரு ஆண்டும் கொரியர்கள் அதற்கு விழாவும் எடுக்கிறார்கள் என்கிறது 'சம்குக் யூசே' என்ற கொரிய நாட்டின் வரலாற்றுப் புதினம்.

கொரிய சரித்திரத்தைப் படிக்கும்போது, அந்த இளவரசி யார், அவர் எந்த தேசத்திலிருந்து வந்தார், இளவரசி கொண்டுவந்த அந்தக் கல்லுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என்பதைத் தேடினால், சில ஆச்சரியமூட்டும் தகவல்கள் கிடைக்கின்றன.

அந்த இளவரசி, அயுட்டா (Ayuta) தேசத்திலிருந்து வந்ததாகவும், இளவரசி கொண்டுவந்த கல்லில் இரு மீன்கள் வரையப்பட்டிருந்தது என்றும், அது இந்தியாவின் அயோத்தி நாட்டின் பிரத்தியேக சின்னம் என்றும் கூறும் ஒரு வரலாறு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தனியாக பயணம் மேற்கொண்டு, தனது கனவு தேசத்தையும், காதலையும் அடைந்தது அயோத்திய இளவரசியான சூரிரத்னா தான் என்று கூறுகிறது.

இப்போதும் கூட வருடந்தோறும் கொரிய மக்கள் பலரும், தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கள் இராணியின் தாய்மண்ணான அயோத்திக்கு வருகை தருகின்றனர் என்று கூறப்படுகிறது..

அத்துடன் சில வருடங்களுக்கு முன், மரியாதை நிமித்தமாக இந்தியா வந்த கொரிய நாட்டின் முதல் பெண்மணி கிம் ஜங் சூக், தனது வேர்களை வலியுறுத்தும் வகையில், அயோத்தி மண்ணிற்கு வருகை புரிந்ததுடன், அங்கு கட்டப்பட்டுள்ள சூரிரத்னா மணிமண்டபத்தில் வணங்கிச் சென்றதையும் அதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.

ஆனால், இந்த அயுட்டா வரலாற்றுக்கு மாற்றாக சொல்லப்படும் இன்னுமோர் வரலாறு நமக்கு இன்னும் ஆச்சரியத்தை அளிக்கிறது..

கொரியா
கொரியா

உண்மையில் Ayuta என்பது பண்டைய தமிழகத்தின் "ஆய்" முடியரசு என்றும், அது தற்போதைய கன்னியாகுமரி என்றும் கூறும் தமிழ் மரபியலாளர்கள், அதற்கு வலுவூட்டும் இன்னும் பல தகவல்களை அளிக்கின்றனர்..

உண்மையில், 'ஹே ஹூவான் ஒக்' என்பதன் மொழிபெயர்ப்பு "செம்பவளம்" என்பதுடன், கடற்பயணத்துக்கான வாய்ப்புகள் அயோத்தியைவிட தமிழகத்துக்குத்தான் அதிகம் என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகிறார்கள். இதன்படி பண்டைய தமிழ்ப்பெண் தான் கடல் கடந்து, தனது காதலனைச் சென்றடைந்தாள்... அவள் கொண்டு சென்ற கல்லில் இருந்தது பாண்டிய நாட்டின் மீன் சின்னம் தான் என்றும் உறுதியாகக் கூறும் இந்த வரலாற்று நிபுணர்கள், பாண்டிநாட்டின் பவளத் தொழிற்சாலைகளையும் நமக்கு நினைவுப்படுத்துகிறார்கள்.

அனைத்திற்கும் மேலாக, "அம்மா, அப்பா, அண்ணி, புல், நாள், தெரு... என கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேலான தமிழ்ச்சொற்கள் கொரிய மொழியில் காணப்படுகிறது. கூடவே உரத்துக்கு 'உரம்' என்றும், கண்ணுக்கு 'நுகண்' என்றும், மூக்குக்கு 'கோ' என்றும், பல்லுக்கு 'இப்பல்', புல்லுக்கு 'புல்', கொஞ்சம் என்பதற்கு 'சொங்கும்' என்றும், சந்தோசம் என்பதை 'சந்துதம்' என்றும், 'ஏன்' என்பதற்கு 'வேன்' என்றும் கொரியர்கள் இப்போதும் கூறுவதும், நம்முடைய வேஷ்டி சட்டை போல கொரியர்களும் வெள்ளை ஆடைகளை அணிவதற்கு ஆர்வம் காட்டுவதையும் சுட்டிக்காட்டி, பாண்டிய இளவரசிதான் கொரிய அரசி என்றும், அவர்களுடன் சென்றவர்களால் இந்த தமிழ் கொரிய மொழிகளின் ஒற்றுமைக்கு காரணமாக இருக்கலாம் என்று இந்த வரலாற்றுக்கு இவர்கள் வலு சேர்க்கின்றனர்.

ஆனாலும், இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும் ஆரம்பநிலையிலேயே இருக்க, இப்போதும் கூட கொரிய நாட்டு பட்டத்து அரசி அயோத்தி தான், ஆய் தேசம்தான் என்று வட இந்தியர்களும், தமிழர்களும் தொடர்ந்து இணையத்தில் சண்டையிடுவதைக் காணலாம்.

அயோத்தி
அயோத்தி

எது எப்படியோ, முழுமையான ஆராய்ச்சிகள் ஒருநாள் அனைத்தையும் தெளிவுபடுத்தும் என்றாலும், உலகெங்கும் இருக்கும் மொழிகளில் தமிழ்மொழி கலந்து எத்திசையும் தமிழ் மண‌‌க்கச் செய்வதுடன், தமிழின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகள் கொரிய வரலாற்றிலும் உண்மையாகிக் கொண்டிருப்பது உண்மையிலேயே பெருமகிழ்ச்சியை நமக்கு அளிக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு