Published:Updated:

ஹிட்லர் நம்பிய அந்த இரண்டு பேர்! - சர்வாதிகாரியின் காதல் பக்கம் #MyVikatan

Hitler
Hitler

சிறு வயதிலிருந்தே விலங்குகளின்மீது தனி ஆர்வமும் பாசமும் கொண்டிருந்திருக்கிறார், ஹிட்லர். அதிலும் நாய்களின்மீது அவருக்கு தனி பிரியம் உண்டு.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

'என் வாழ்க்கையில் ஈவா, பிளாண்டியைத் தவிர வேறு யாரையும் நான் நம்பியது இல்லை'.
ஹிட்லர் தன் வாழ்நாளின் கடைசி தருணத்தில் உதிர்த்த வார்த்தைகள் இவை.

ஈவா...

ஹிட்லரின் காதலிகளுள் ஒருவராக இருந்து, மரணத்திற்கு சில மணி நேரங்கள் முன்பு மனைவி என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர்.

பிளாண்டி...

அது, ஹிட்லரின் செல்ல நாய். ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த ஒரு பெண் நாய்.

சிறு வயதிலிருந்தே விலங்குகளின்மீது தனி ஆர்வமும் பாசமும் கொண்டிருந்திருக்கிறார், ஹிட்லர். அதிலும் நாய்களின்மீது அவருக்கு தனி பிரியம் உண்டு.

பல நாய்களை அவர் வளர்த்திருந்தாலும், பிளாண்டி வரலாற்றில் இடம் பிடித்த காரணம் என்ன?

ஹிட்லரின் நாஜிப்படை வீரர்களுள் ஒருவர், 1941 ஆண்டு, ஒரு அழகான நாய்க்குட்டியை ஹிட்லருக்குப் பரிசாக வழங்கினார். ஒரு வயதே ஆன அந்த நாய்க்குட்டியைப் பார்த்தவுடன் ஹிட்லருக்கு பிடித்துப்போனது. நாய்க்குட்டியும் வால் ஆட்டியபடியே ஹிட்லரிடம் ஒட்டிக்கொள்ள, குழந்தையைப் போல உற்சாகம் அடைந்தார். நாய்க்குட்டிக்கு பிளாண்டி எனப் பெயரிட்டார். அன்றிலிருந்து ஹிட்லரின் நம்பிக்கையான பாதுகாவலனாக மாறியது பிளாண்டி.

ஈவாவைத் தவிர, ஹிட்லரின் படுக்கை அறையினுள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால், பிளாண்டியை ஹிட்லர் அனுமதித்தார். நாள் முழுக்க ஹிட்லரின் அருகில் இருக்கும் பிளாண்டி, அவர் தூங்கும் நேரத்திலும் அருகிலேயே இருந்தது.

பிளாண்டியைப் பராமரிக்க மட்டுமே ஒரு தனி நபரை வேலைக்கு அமர்த்தினார் ஹிட்லர். பிளாண்டி விளையாட அதே ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சார்ந்த ஒரு நாயை ஏற்பாடுசெய்தார். அதற்கு, பெல்லா எனப் பெயரிட்டார்.

Blondi
Blondi
Credits : Wikipedia

1945-ம் ஆண்டு,

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வர இன்னும் குறுகிய நாள்களே இருந்தன. நண்பர் முசோலினியின் படுகொலை ஹிட்லருக்கு அதிர்ச்சியைத் தந்தது.

சோவியத் ராணுவம் தன்னை நெருங்கிவிட்ட செய்தியை அறிந்தார் ஹிட்லர். எதிரிகளிடம் சிக்கினால், தான் உட்பட அனைவரும் பல சித்ரவதைகளையும், கொடுமைகளையும் அனுபவிக்க நேரிடும் என ஹிட்லருக்கு நன்றாகவே தெரியும்.

தன் பணியாளர்கள் அனைவரையும் அழைத்து, 'எதிரிகளிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிடுங்கள், உடனே இங்கிருந்து புறப்படுங்கள்' என ஆணையிட்டார்.

பெர்லினில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்றுக்கு இடம் பெயர்ந்தார் ஹிட்லர். பிளாண்டியும் வழக்கம் போல வாலாட்டியபடியே அவருக்குப் பின்னால் ஓடியது.

1945 ஏப்ரல் 29..

ஹிட்லருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அந்தப் பதுங்கு குழியில் இருந்தனர். ஹிட்லரின் பிரத்யேக மருத்துவர் வெர்னர் ஹசியும் அதில் ஒருவர்.

தற்கொலை செய்துகொள்வதற்கான 'சயனைடு கேப்ஸ்யூல்கள்' ஹிட்லரின் மேசைக்கு வந்து சேர்ந்தன. ஹிட்லர் அவற்றை உற்று நோக்கினார். விஷத்தின் வீரியத்தை சோதிக்க விரும்பினார்.

Hitler
Hitler

ஆனால் யாரிடம் சோதிப்பது?

மருத்துவர் வெர்னரை திரும்பிப் பார்த்தார் ஹிட்லர். ஹிட்லரின் பார்வை வெர்னருக்குப் புரிந்தது. வெளியே உலாவிக்கொண்டிருந்த பிளாண்டி, ஹிட்லரின் அறைக்குள் அழைத்து வரப்பட்டது.

ஏதுமறியா அப்பாவியான பிளாண்டி, தனது முன்னங்கால்களை மேலே உயர்த்தி ஹிட்லரைப் பார்த்துக் குழைந்தது.

பிளாண்டியின் முகத்தை ஹிட்லர் பார்க்கவில்லை அல்லது பார்க்கத் துணிவில்லை. கை அசைத்துவிட்டு அருகில் இருந்த வேறு ஒரு அறைக்குச் சென்றுவிட்டார்.

பிளாண்டியின் வாய்க்குள் சயனைடு கேப்ஸ்யூல் திணிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியும், நான்கு கால்களைப் பலமாக அசைத்தவாறும் செத்து மடிந்தது.

ஹிட்லருக்கு பிளாண்டி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட ஹிட்லர், தன் அறையின் கதவை சிறிது நேரம் அடைக்கச் சொன்னார். வெற்று முகத்துடன் அந்த அறையில் தனியாக அமர்ந்திருந்தார்.

Hitler
Hitler

பிளாண்டி இறந்த அடுத்த நாள் (ஏப்ரல் 30), உலகின் மாபெரும் சர்வாதிகாரியான ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்.

பல கோடி யூத மக்களைக் கொன்றுகுவித்து, அதன்மூலம் ஆனந்தமடைந்த ஹிட்லர், சிதைந்த ஒரு உயிருக்காகக் கலங்கியது, வரலாற்றில் பிளாண்டிக்காக மட்டுமே இருக்கும்.

- சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு