Published:Updated:

`உணவகங்களில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு!’ - அசத்தும் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி #MyVikatan

பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன்
பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன்

ஹோட்டல்களில் பசிக்காக சாப்பிடச் செல்கிறோம், ருசிக்காக சாப்பிடச் செல்கிறோம், இனி ஆரோக்கியத்துக்காகவும் சாப்பிடச் செல்வோம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

உணவே மருந்து என்று சொல்லிக்கொண்டு, உண்ட உணவு செரிக்க மருந்தைத் தேடி ஓடுபவர்கள் பலர் இருக்க, கொரோனா நோய் தடுப்பில் உணவையே மருந்தாகக் கொடுக்க புதிய முயற்சிகளை அறிமுகம் செய்து வருகிறார் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் குகன்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் இயங்கி வரும் உணவகங்களில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை மட்டுமே விற்பனை செய்யும் திட்டத்தை பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தொடங்கி வைத்துள்ளார்.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் ஹோட்டல்கள்...
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் ஹோட்டல்கள்...

உலகமெங்கும் கொரோனா நோய்த்தொற்று தடுக்க கிருமிநாசினி தெளித்தல், முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் கைக் கழுவுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றினாலும்கூட கொரோனாவிலிருந்து தப்பிக்க தனி மனித நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிக முக்கியம். தனி மனித நோய் எதிர்ப்பு சக்தி வளர்க்க ஆரோக்கிய உணவுமுறை அவசியம் என்பதை மக்களுக்குப் புரிய வைக்கவே இந்தத் திட்டம் என்கின்றனர்.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் உள்ள இல்லத்தரசிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் உணவு முறை விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரோக்கிய சமையல் ஆன் லைன் போட்டிகள் தொடர்ச்சியாக ஒருமாத காலம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சார்பில் நடத்தப்பட்டு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து, அலுவலகப் பணியாளர்களின் நலன்கருதி, "குக் ஃப்ரம் ஆபீஸ்" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பேரூராட்சி அலுவலகத்திலேயே நோய் எதிர்ப்பு தரும் ஆரோக்கிய சமையல் செய்து பணியாளர்களுக்கு பரிமாறப்பட்டது.

இதன்படி, மதிய உணவில் மிளகு சீரகப் பொடி, கீரைக் கூட்டு, காய்கறி சாம்பார், தூதுவளை- எலுமிச்சை ரசம், இஞ்சி கலந்த மோர், நெல்லிக்காய் ஊறுகாய் அல்லது துவையல் மற்றும் இந்துப்பு என்ற பட்டியல் தயார் செய்யப்பட்டு அனைத்து உணவகங்களும் இதைப் பின்பற்றி வாடிக்கையாளர்கள் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி

"நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்ற திருக்குறள் அச்சடிக்கப்பட்டு, உணவு பட்டியலோடு பேரூராட்சி சார்பில் அறிவிப்பு பதாகைகள் வைத்துள்ளனர்.

இது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள், நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு முறையை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும். வாடிக்கையாளர் நலனில் எங்கள் அக்கறையை வெளிப்படுத்தும் வாய்ப்பாகக் கருதுவதாகவும் தெரிவித்தனர். மேலும், பேரூராட்சியுடன் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் நாங்களும் பங்குபெறும் வாய்ப்பாக இதைப் பார்க்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன், ``ஹோட்டல்களில் பசிக்காக சாப்பிடச் செல்கிறோம், ருசிக்காக சாப்பிடச் செல்கிறோம், இனி ஆரோக்கியத்துக்காகவும் சாப்பிடச் செல்வோம்" என்றார்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு