Published:Updated:

``படிக்கிற புள்ள ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வந்தது எப்படி..?’’ - குட்டி சக்சஸ் ஸ்டோரி #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

"நீ வாடா கண்ணா. நீ ஒருத்தன்தான் சொன்ன பேச்சைக் கேட்கிற" என்றவுடன் குளிர்ந்துபோய் நான் கை ,கால் கழுவி ஒரு புத்தகத்துடன் நடுக்கூடத்தில் உக்கார்ந்து விடுவேன்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

நான் சிறுவனாக இருக்கும்போது, விளையாட்டு என்பது படிப்பைக் கெடுக்கும் ஒரு கெட்ட பழக்கம் என்றே பெற்றோர்கள் கருதினர். விளையாடும் ஒரு பயலும் உருப்பட மாட்டார்கள் என்று நம்பிவந்த காலம் அது. இன்றும் பரவலாக அந்தக் கருத்து இருந்துவருகிறது. நிறைய பள்ளிகள் வாரம் ஏழு நாள்களும் திறந்திருக்கின்றன. இது சிறுவர்களை அவர்கள் கையில் எப்போதும் குடியிருக்கும் மொபில் போனிலிருந்து கொஞ்சம் பிரித்து வைக்கவும், இருவர் வேலை செய்யும் வீடுகளில் பெற்றோருக்கு குழந்தைகளிடம் இருந்து கொஞ்ச நேரம் விடுதலை வாங்கித் தரவும் தோதுதலாக இருந்தாலும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அபாயகரமான விஷயம். குழந்தைகள் பெரும்பாலும் கூன் போட்டுக்கொண்டு, கையில் இருக்கும் மொபைலில் இருந்து கண்ணெடுக்காமல் "வாட்ஸ் அப்?" என்று கேட்கும்போது ஐந்து கிலோ வாட்ஸ் அப்பு ஒன்று அப்பலாமா என்று தோன்றுகிறது.

Representational Image
Representational Image
Pixabay

சிறு வயதில் நான் படிக்கிற பிள்ளை என்று பெயர் வாங்கியிருந்தேன். இருக்கிற அரையணா பாடத்தை நெட்டுருப் போட்டு பரிட்சையில் வாந்தி எடுத்தால் படிக்கிற பிள்ளை என்று பட்டம். வீட்டில் வேறு பேச்சைக் கேட்டு நடப்பவன் என்று விருது வேறு கொடுத்திருந்ததால் நான் விளையாட்டை ஒரு தொத்து வியாதியைப் போல தவிர்த்து வந்தேன். வீதியில் எல்லா குழந்தைகளும் பள்ளி விட்டு வந்தவுடன் கடகட என ஏதோ வாயில் போட்டுக்கொண்டு உடனே வீதியில் விளையாட ஓடிவிடுவார்கள். என் அண்ணன் வீட்டுக்குள்ளே கூட வர மாட்டான். வெளியில் ஓடிக்கொண்டே பள்ளிப் பையை திறந்திருக்கும் வீட்டினுள் ஒரு கடாசு கடாசிவிட்டு "அம்மா, நான் விளையாடிவிட்டு வரேன்" என்று காணாமல் போவான். "நீ வாடா கண்ணா. நீ ஒருத்தன்தான் சொன்ன பேச்சைக் கேட்கிற" என்றவுடன் குளிர்ந்துபோய் நான் கை, கால் கழுவி ஒரு புத்தகத்துடன் நடுக்கூடத்தில் உக்கார்ந்து விடுவேன்.

நான் இப்படி அம்மாஞ்சித்தனமாக இருந்ததனால் எவ்வளவு இன்பங்களை இழந்திருக்கிறேன் என்பதை ஒரு நாள் எதேச்சையாகக் கண்டுகொண்டேன். வீதிக்கு சற்று வெளியே ஒரு தனியார் இருக்குமிடம். காலனி என்று அழைப்போம். ஒரு மாலை அம்மா அங்கு தங்கியிருக்கும் ஒருவருக்கு ஏதோ சாமான் கொடுத்துவிட, உள்ளே நுழைந்த நான் அந்த சொர்க்கத்தைக் கண்டுகொண்டேன்.

காலனி உள்ளே நுழைந்தவுடன் சிறுவருக்கான விளையாட்டுத் திடல். அங்கு வயது வாரியாக மூன்று கிரிக்கெட் மாட்சுக்கள் ஒரே சமயத்தில் நடக்க சிறுவர்கள் காச், மூச் என்று ஒரு கத்தல். எனக்கு தெரிந்த அனைத்து சிறுவர், சிறுமியர் அங்கு ஆஜர் மற்றும் தெரியாத பல பேர் வந்த விஷயம் மறந்து அங்கேயே நின்று விட்டேன். அது நாள் முதல் நானும் விளையாட்டுப் பிள்ளையாகத் தவம் கிடந்தேன்.

Representational Image
Representational Image
Pixabay

பலநாள் காலனி சென்று தயங்கி தயங்கி நின்றபின், போனால் போகட்டும் என்று சேர்த்துக்கொண்டார்கள். ராகிங் வகையறா பல சின்ன அவமானங்களைக் கடந்தபின் நானும் அந்தப் பெரிய ஜோதியோடு ஐக்கியம் ஆனேன். இருப்பினும் எனக்கு முழு அங்கீகாரம் கிடைக்க வில்லை. அவர்களுக்கு நான் ஒரு படிக்கிற பிள்ளை. விளையாட்டில் சோடை இல்லை. சீசனுக்கு சீசன் கிரிக்கெட், மசைப் பந்து, கில்லி தண்டா என்று ஒரு சுற்று வருவோம். முரட்டுத் தனமாக இருக்கும் மசைப் பந்து போன்ற விளையாட்டுகளில் நான்தான் முதன் முதலில் அடி வாங்கி அழுபவனாக இருப்பேன். அதனால் படிக்கிற பிள்ளை பட்டம் தங்கிவிட்டது. கேலிதான் அதிகமானது.

நான் ஏழாவது படிக்கும்போது ராமலிங்கம் என்பவர் என் வாத்தியார். அவர் எந்த விதமான விளையாட்டுக்கும் தீவிர எதிரி! "முட்டாள் பசங்கதான் விளையாடுவாங்க. நல்ல பசங்கல்லாம் ஒழுங்கா படிப்பாங்க "என்று அடிக்கடி சொல்வார்.

பள்ளியில் மதிய உணவு நேரத்தில் அவருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஒரு சிலர் வேகாத வெய்யிலில் ஓடி, ஆடி விளையாடுவோம். நாங்கள் கோள் மூட்டப் போகிறோம் என்று ஒரு படிக்கிற கோஷ்டி எங்களை எப்போதும் பயப்படுத்துவார்கள். அந்த வருடம் பள்ளி தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தபோது பார்க்க சென்றவன், யாரோ உந்துதலில் 800 மீட்டர் ஓட்டத்துக்கு பெயர் கொடுத்துவிட்டேன்.

Representational Image
Representational Image
Pixabay

ஓட்ட வீரர்கள், காலில் ஏதோ முள் வைத்த ஷூ எல்லாம் போட்டிருக்க, நான் வெறும் காலுடன் தட் தட் என்று ஏதோ ஓடி அப்படியும் நான்காவதாக வந்துவிட்டேன். அதைப் பார்த்த என் நண்பன் "நாளைக்கு 1,500 மீட்டர் பந்தயம் இருக்கு. என்னோட ஷூ கொண்டாறேன். அதுல நீ எப்படியும் முதல் மூணுல வந்துடுவே" என்று ஊக்கப்படுத்தினான். மறுநாள் நான் ஷூ மாட்டி தயாராகிக் கொண்டிருக்கும்போது, ராமலிங்கம் வாத்தியார் வேக வேகமாக வந்தார். "யாரைக் கேட்டு நீ ஓட்டப் பந்தயத்தில் சேர்ந்த? படிக்கிற பையன் நீ தறுதலை மாதிரி இதென்ன புதுப் பழக்கம்?" என்று கையில் குச்சியிடன் மிரட்டி, நான் மறுக்க, மறுக்க தரதரவென்று என்னை வகுப்புக்கு இழுத்துச் சென்றுவிட்டார். யார் கோள் சொன்னார்கள் என்று தெரியவில்லை. அதுமுதல் மதிய உணவு வேளை - சிறை! ஓட்டத்திலாவது சுமாராக வரமுடியும் என்கிற கொஞ்ச நம்பிக்கையையும் அவர் ஒரே நாளில் தகர்த்தார்.

கிரிக்கெட்டில் மூன்று வகை பந்துகள். சிறுவர்கள் டென்னிஸ் பந்து போன்ற ஒரு ரப்பர் பந்தை உபயோகிப்போம். பெரியவர்கள் மாட்டுத் தோலில் செய்த மிகவும் கெட்டியான அபிஷியல் பந்தில் விளையாடுவார்கள். ஒரு அடி வாங்கினால் ஆள் அதோ கதி! ரெண்டுங்கெட்டான் வயசில் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் கார்க் பால்.

Representational Image
Representational Image
Pixabay

கட்டியான கார்க்கினால் செய்த பந்து துள்ளி குதிக்கும். கார்க் பந்துவரை மட்டுமே விளையாடிய நான், ஒருமுறை பள்ளி பந்தயம் என்றவுடன் ஏதோ ஒரு மயக்கத்தில் பெயர் கொடுத்தேன். இது நிஜ கிரிக்கெட் பந்தில் விளையாடப்படும் அடிதடி போட்டி. கை, கால் எல்லாவற்றுக்கும் க்ளோவ், பேட் முதலியவை அணிந்து எச்சரிக்கையுடன் விளையாட வேண்டியது. அவற்றை வாங்கும் சக்தி இல்லை என்பதால் நங்கள் ஒரு கைக்கு க்ளோவ், ஒரு காலுக்கு பேட் என்று குறைத்து, வெறும் காலில் விளையாடுவோம். ஒரு அடி வாங்கினால் காலோ ,கையோ காலி.

முதல் மேட்சில் எதிர் தரப்பில் ஒரு வேகப் பந்து வீச்சாளன். அவன் வெகு வேகம் என்பதால் அவன் பெயரே மறந்து போய் , டெய்லர் என்றே கூப்பிடுவோம். அவனுக்கெதிரே நான். அவன் ஓடி வருவதை பார்த்தே பயந்தேன். இருப்பினும், தைரியப் படுத்திகொண்டு அடிக்க, முதல் பந்தே பவுண்டரி. பின் ஒரு கை பார்த்துவிடலாம் என்று இறங்கி, ஒரு புல், ஒரு கவர் டிரைவ் என்று ஓரிரு பவுண்டரிகள் குவித்தேன். நடுவில் திரும்பி பார்க்கையில், பால்கனியில் கன்னியப்பன் வாத்தியார். அவர் கைதட்டிக் கொண்டிருந்தார். குஷி வந்து அடுத்த பௌன்சர் மீது மட்டையை வீச அது எப்படியோ பட்டு மேலும் ஒரு பவுண்டரி.

Representational Image
Representational Image
Pixabay

"டேய், ஹூக் அடிக்கறாண்டா " என்று பார்வையாளர் கூச்சம் போட அப்போதுதான் எனக்கே தெரிந்தது. ஹூக் கடினமான ஒரு ஷாட். கண்பட்டதுபோல் என்பார்களே, அது எனக்கு இரண்டு வகையில் உண்மையாக, அடுத்த பௌன்சரில் கண்ணில் மொக்கையாக அடி வாங்கி உலகம் இருள கீழே விழுந்தேன். அபோது வீங்கிய கண் இரண்டு வாரங்களுக்கு பிரிப்படவில்லை. அதற்குமேல் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிட்டேன். ஒரு முறை பார்த்த கன்னியப்பன் வாத்தியார் பாராட்டப்போகிறார் என்று எதிர்பார்த்தபோது "ஏனப்பா உனக்கு இந்த விளையாட்டெல்லாம்? படிப்போடு நிறுத்திக்க வேண்டியதுதானே?" என்றவுடன் அழுகை வந்தது.

எனக்கு விளையாட்டுக்கு பிராப்தம் இல்லை என்று விரக்தியாக இருந்தபோது, மேசைப் பந்து விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. எப்போதும்போல அண்ணன்தான் இதையும் கண்டுபிடித்து விளையாடி வந்தான். அவனுக்கு கிரிக்கெட் லீகில் விளையாட வாய்ப்பு வர, அவனுடைய மட்டையை எனக்கு தானம் செய்தான். என்னவோ, மேசைப் பந்தின் பல்வேறு ஸ்பின் போன்ற விஷயங்கள் புரிபட, நான் கொஞ்சம் தேறினேன். ஒரு போட்டியில் விளையாடியதை பார்த்து மாவட்ட ஜூனியர் அணியில் சேர்த்துக் கொண்டார்கள்.

Representational Image
Representational Image
Pixabay

அதன் பிறகு மாநிலம் வரை சென்றேன். வீட்டில் செய்தித் தாள்கள் வாங்காததால் போட்டிகள் எப்போது என்று எனக்குத் தெரியாது. கிளப்பில் இருந்த நண்பர்கள் அதைப் பார்த்து அவர்கள் வேலை முடிந்தவுடல் வீடு வரை வந்து எனக்கு தெரியப்படுத்துவார்கள். அதுமட்டும் இல்லாமல் முகவரி, பணம் கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். அவர்களுக்கு என் நன்றி எப்போதும் உரித்தாகும்.

பள்ளி முடிந்து கல்லூரிக்கு விண்ணப்பம் செய்யும்போது, நான் ஸ்போர்ட்ஸ் கோட்டாவிலும் விண்ணப்பித்தேன். அதற்கு கையெழுத்து வாங்கச் சென்றபோது, PT மாஸ்டர் "அட, நம்ம பள்ளியிலிருந்து ஸ்போர்ட்ஸ் கோட்டாவா?" என்றவர் என்னைப் பார்த்துவிட்டு "அட, நீயா?" என்று அசந்தார். மாநிலத்திலேயே முதலிடம் வாய்த்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தேன். படிப்பின் வழி கோயம்புத்தூர் கல்லூரியில் அனுமதி கிடைக்க அங்கு சேர்ந்துவிட்டேன். அதன் பின்னரே அந்தக் கடிதம் வந்தது. அண்ணா பல்கலைக்கழக மேசைப் பந்து குழுவில் விளையாட அழைப்பு.

Representational Image
Representational Image
Pixabay

நான் துள்ளி குதித்தேன். விளையாட்டு வராத, படிக்கிற பிள்ளைக்கு படிப்பின் வழி கிடைக்காத அனுமதி விளையாட்டின் மூலம். என்னை கேலி செய்த அனைவருக்கும் நோட்டீஸ் போட்டு ஓட்ட வேண்டும் என்று தோன்றியது. முக்கியமாக ஒருவருக்கு - ராமலிங்கம் வாத்தியார். நேரில் சென்று காண்பித்து "ஐயா, இனிமேலாவது விளையாட்டுக்குத் தடை போடாதீர். எதிர்கால விளையாட்டு வீரர்களை அழிக்காதீர்" என்று ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். அப்படியே சைக்கிளில் ஒரு மிதி.

அவர் வீட்டின் வாசலில் அவர் அம்மா கூன் போட்டுக்கொண்டு ஆங்கிலத்தின் G எழுத்துபோல உட்கார்ந்திருந்தாள். புட்டிக் கண்ணாடிக்குள் கூடைப் பந்து கண்கள். "உக்காருப்பா, கூப்பிடறேன்" என்று நத்தை போல் ஊர்ந்தாள். திரும்புவதற்குள் ஒரு வயது கூடியிருந்தது. "அவனுக்கு காக்காய் வலிப்பு வந்து விழுந்துட்டான். உன் பெயரைக் கேட்டதும் பார்க்கோணும்னு சொல்றான். சத்த நேரம் பொறு கண்ணு" என்றாள். ராமலிங்கம் தலையில் ஒரு பெரிய கட்டோடு வந்தார். "கண்ணு, நெம்ப சந்தோசம். நீதான் பள்ளியில் முதல் மதிப்பெண்ணு கேள்விப் பட்டேன்" நான் நெளிந்தேன்.

Representational Image
Representational Image
Pixabay

"எந்தக் கல்லூரிக்கு போகப் போற?" என்றார். நான் "ஐயா, கோயம்புத்தூர்." "அது சுமார்தானே ? நீ எம்பேச்சைக் கேட்டு, விளையாடறத நிறுத்திபோட்டு மேலும் நல்லாப் படிசிருந்தீன்னா அண்ணா பல்கலைக்கழகமே போயிருக்கலாமல்ல?" என்றார். அந்தக் கேள்வி என்னை டைலரின் பௌன்சர் போலத் தாக்கியது! ஆனால், அவர் தலை கட்டைப் பார்த்தவுடன் நான் அவ்வளவு தொலைவு தாண்டி சொல்லவந்தது ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. அவர் கேட்ட கேள்வியின் அஞ்ஞானத்தை விட அவர் அன்பு பெரியது என்பதால், அவர் தலைக் கட்டைப் பார்த்துக்கொண்டே அந்தக் கேள்வியில் என்னைக் கோபப்படுத்திய, அதே சமயம் சிறு கவிதை கலந்த முரணை கஷ்டப் பட்டு முழுங்கிவிட்டு, என் கையில் வைத்திருந்த அண்ணா பல்கலைக் கழகத்தின் அழைப்பை மறைத்து, தலையைக் குனிந்தபடி சொன்னேன் "சரிதான், ஐயா".

- சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு