Published:Updated:

`ஒரு சிறிய வைரஸ் கிருமி இத்தனை மாற்றங்களை ஏற்படுத்துமா?’ - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Sandeep Kr Yadav / Unsplash )

ஹோட்டல் சாப்பாடு இல்லாமல் வீட்டிலேயே ஆரோக்கிய சமையல் செய்து சாப்பிட முடிகிறது. குழந்தைகளுடன் நிதானமாக உட்கார்ந்து பேச முடிகிறது....

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா - கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய வைரஸ் கிருமி நமது வாழ்க்கையில், வாழும் முறையில் பல மாற்றங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது நாம் கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் இந்தத் தற்காலிக (அப்படி தான் பலரும் எண்ணுகிறார்கள்) வாழ்க்கை முறை இயல்பாக நமக்கு முந்தைய தலைமுறை வாழ்ந்த வாழ்க்கை முறைதான்.

Representational Image
Representational Image

பல மாற்றங்களை தினமும் பார்த்து வருகிறோம். சினிமா என்ற ஒன்று இல்லாமல் இருக்க முடிகிறது. ஹோட்டல் சாப்பாடு இல்லாமல் வீட்டிலேயே ஆரோக்கிய சமையல் செய்து சாப்பிட முடிகிறது. குழந்தைகளுடன் நிதானமாக உட்கார்ந்து பேச முடிகிறது. அவர்களின் விளையாட்டை ரசிக்க முடிகிறது. வீட்டிலேயே நாள் முழுவதும் இருக்கும் மனைவியின் சிரமத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் சமைத்து, குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, அவர்கள் படிப்புக்கு உதவி செய்யும் மனைவியின் கஷ்டத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது.

எப்போதும் ஸ்பெஷல் கிளாஸ், டியூஷன் என்று மன அழுத்தத்திலேயே இருந்துகொண்டிருந்த குழந்தைகள் தற்போது நிம்மதியாக இருக்கின்றன. வசதி வாய்ப்பு உள்ள பலரது வீடுகளில் வேலையாட்கள் இல்லாமல் பலர் தங்கள் வேலைகளை தாங்களே பார்த்துக்கொள்ள கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த ஊரடங்கு. சின்ன பிரச்னைக்கெல்லாம் டாக்டர் டாக்டர் என்று ஓடும் பலர் இப்போது வீட்டிலேயே பாட்டி வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். நிதானமாக வீட்டின் உள்ளே இருக்கும்போதுதான் வீட்டில் நமக்கு தேவை இல்லாத பல பொருள்களை வாங்கிக் குவித்திருக்கிறோம் என்று பலருக்குப் புரிகிறது.

Representational Image
Representational Image
Martin Jernberg / Unsplash

வீட்டுத் தோட்டத்தில் பூத்திருக்கும் புதிய பூக்களை நிதானமாக ரசிக்க முடிகிறது. போன் கேம்ஸ் சலித்துப்போய் நம்முடைய பாரம்பர்ய விளையாட்டுகளான தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை கற்றுக்கொள்ள வைத்திருக்கிறது இந்தச் சூழ்நிலை. தினமும் குடித்துக்கொண்டிருந்தவர்களால் டாஸ்மாக் இல்லாமல் இப்போது இருக்க முடிகிறது. இதுபோல எவ்வளவோ மாற்றங்களை இந்த ஊரடங்கு நேரத்தில் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். வாகன இரைச்சல் இல்லாத அமைதியான சாலைகள். அதிகாலையிலேயே கேட்கும் காக்கை, குருவி, கிளிகளின் இனிய கீ..கீ.. சத்தம். காற்று மாசு குறைவால் செம்மண் நிறத்தில் இருந்த வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் செடிகளின் இலைகள் பச்சைப் பசேல் என்று மாறிப்போய் இருக்கின்றன.

சுத்தமான காற்றில் சுவாசிப்பதே சுகமாக இருக்கின்றது. தொலைக்காட்சி அறிமுகமாவதற்கு முன்பு மாலை ஆறு மணி ஆனதும் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெரியவர்கள் வெளியே வந்து அமர்ந்து விடுவார்கள். அடுத்த வீடு, எதிர் வீடு என்று அனைவரும் வெளியே வந்து அமர்ந்து அரசியல், சமூகம், சினிமா என்று ஏதோ ஒன்றைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். சிறுவர், சிறுமிகள் ஏதாவது விளையாடிக்கொண்டிருப்பார்கள். அந்தச் சத்தத்தில் தெருவே அவ்வளவு அழகாக இருக்கும். பின்பு, தொலைக்காட்சி வந்தது. அத்தனையும் மாறிப்போனது. ஆறு மணி ஆனதும் எல்லோரும் கதவைச் சாத்திக்கொள்கிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்குள் இருந்தும் ஏதோ ஒரு மெகா சீரியலின் சத்தம் மட்டும்தான் வெளியே கேட்கிறது. யாரும் அரசியல் பேசாமல் போனதன் விளைவு, இன்று இருநூறுக்கும், முந்நூறுக்கும் நம்முடைய ஓட்டை விற்றுக்கொண்டிருக்கிறோம். தன்மானம், சுயமரியாதை என்று அனைத்தையும் இழந்து விட்டு வாழ்கிறோம் என்ற போர்வையில் வெறுமனே இருந்துகொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸ் தான் பலருக்கு அடுத்த வீட்டுக்காரர்கள் பெயர்களையே தெரிய வைத்திருக்கிறது.

Representational Image
Representational Image
Tim Cooper / Unsplash

பலருக்கு வீட்டுக்கு மேலே ஒரு மொட்டை மாடி இருப்பதே இப்போதுதான் தெரிந்திருக்கிறது. தொலைக்காட்சியில் போட்ட மெகா சீரியலையே திரும்பத் திரும்பப் பார்த்து சலித்துப் போனவர்கள் மாலை ஆனதும் மொட்டை மாடிக்கு வருகிறார்கள். குழந்தைகளும் ஓடி ஆடி விளையாடுகின்றன. மொட்டை மாடியில் இருந்தே அடுத்த வீட்டு மொட்டை மாடியில் இருக்கும் அடுத்த வீட்டுக்காரர்களிடம் பேசுகிறார்கள்(பலர் முதல் முறையாக).

இங்கே நாம் மேலே பார்த்தது எல்லாம், ஊரடங்கு காலத்திலும் பணப் பிரச்னை, உணவுப் பிரச்னை என்ற ஒன்று இல்லாமல் இருக்கும் பணக்கார, மேல் நடுத்தர, நடுத்தர மக்களுக்கு மட்டும்தான். அன்றன்றைக்கு சம்பாதித்து அன்றைய வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த ஏழைகளுக்கு/கூலி தொழிலாளர்களுக்கு அவை பொருந்தாது. அவர்கள் வாழ்வாதாரமே இந்தக் காலகட்டத்தில் சிக்கலில் இருந்துகொண்டிருக்கிறது. அவர்கள் அடுத்த நாள் சாப்பாட்டிற்கு அரசாங்கத்தையே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். சில நல்ல உள்ளங்கள் செய்யும் உதவிகளால் பலரது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

பணக்கார, மேல் நடுத்தர, நடுத்தர மக்களுக்கு ஊரடங்குக்கு முன்பு இருந்த வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ, நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அந்த ஏழைத் தொழிலாளர்கள்தான் உதவிக்கொண்டிருந்தார்கள். இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வது வெறும் கடமை மட்டுமல்ல, அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனும் கூட. இந்தக் கொரோனா போன்ற வைரஸ்கள் இந்தத் தற்காலிக வாழ்க்கை முறையை நம்முடைய நிரந்தர வாழ்க்கை முறையாக மாற்றலாம். அல்லது, மனிதர்கள் வழக்கம் போல எல்லாவற்றையும் மறந்து விட்டு தங்களுடைய பழைய மனஅழுத்தம் தரும் அவசர வாழ்க்கை முறைக்கே மாறலாம்.

Representational Image
Representational Image
Antoine Plüss / Unsplash

மொட்டை மாடிகள் மறந்து போகலாம், ஆறு மணிக்குக் கதவுகள் சாத்தப்படலாம், சாலைகள் வாகனங்களால் மூழ்கிப்போகலாம். அதிகாலை பறவைகளின் சத்தங்கள் காணாமல் போகலாம், காலம்தான் பதில் சொல்லவேண்டும். எது எப்படி இருந்தாலும், மனிதர்கள் ஒன்றைப் புரிந்துகொண்டிருப்பார்கள் இப்போது. இந்த பூமி என்பது தங்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறது என்று எப்போதும் நினைத்துக்கொண்டிருந்தார்கள் மனிதர்கள், இல்லை இல்லை, பூமி என்பது மனிதனுக்கு மட்டுமன்றி, விலங்குகள், பறவைகள், செடிகொடிகள், மரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று அனைத்துக்கும் சேர்த்து தான் படைக்கப்பட்டது, மனிதன் என்பவன் அதில் ஒரு சிறிய அங்கம்தான் என்று அவனுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது கண்ணுக்குத் தெரியாத இந்தச் சிறிய கிருமி.

-விஜயகுமார் ஜெயராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு