Election bannerElection banner
Published:Updated:

``வாவ்.. அருமையான நடனம்!’’ - ஸ்ரீபிரியாவுக்காக காத்திருக்கும் ஜெர்மனி ரசிகர்! #MyVikatan

Representational Image
Representational Image ( Glenn Carstens-Peters / Unsplash )

ஒருநாள் யூடியூபில் பாடல் ஓடவிட்டு துணி அயன் செய்துகொண்டிருந்தேன். கதவு தட்டும் சத்தம்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பிராங்பேர்ட்ல் நான் முன்பு குடியிருந்த வீட்டில் பக்கத்து வீட்டுக்காரர் தொல்லை மிக அதிகம். கதவைக் கொஞ்சம் வேகமாக சாத்தினாலே ஓடி வந்து, அந்தச் சத்தம் தனக்கு தொந்தரவாக இருப்பதாகச் சொல்வார். கிச்சன் ஸ்மோக் சிம்னி ஆன் செய்தால், சமையல் மணம் எரிச்சல் ஊட்டுவதாகவும் அவர் துணிகளுக்குள் இந்த மணம் சென்று விடுவதாகவும் சொல்வார். அதனால் ஜன்னலைத் திறந்துவிட்டுதான் சமைப்பேன்.

Representational Image
Representational Image
Filip Mroz / Unsplash

ஒருநாள் யூடியூபில் பாடல் ஓடவிட்டு துணி அயன் செய்துகொண்டிருந்தேன். கதவு தட்டும் சத்தம்!. `வில்லன்தான்' என நினைத்து கம்ப்யூட்டர் சத்தத்தை உடனே குறைத்தேன். மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்தேன். சிரித்துக்கொண்டு நின்றார். அவர் சிரிப்பதை அப்போதுதான் பார்க்கிறேன்.

``என்ன?" என்றேன் விரக்தியாக.

`மியூசிக் நல்லா இருக்கு. இந்தியன் மியூசிக்?'

``எஸ்"

``மீண்டும் ஒரு முறை கேட்கலாமா? எனக்கு அதை காப்பி பண்ணித் தர முடியுமா?" என்றார்.

உள்ளே அழைத்தேன். யூடியூபில் பாடலை மீண்டும் பிளே செய்தேன்.

ரசித்துப் பார்த்தார்.

ஒரு கட்டத்தில் கதாநாயகி ஆலமரத்தின் விழுது வழியாக தலைகீழாக இறங்குவதை மிகவும் ரசித்தார். அந்த ஒரு காட்சியை மட்டும் திரும்பவும் போடச் சொல்லிப் பார்த்தார்.

``இது எப்படி தலை கீழாக.................!" என்று என்னிடம் மீண்டும் மீண்டும் ஆச்சர்யமாய் கேட்டார்.

``நல்லா ஆடுறாங்க, இவங்க ஜெர்மனி வருவார்களா? வந்தா என்னிடம் மறக்காம சொல்லுங்க" என்றவர் அந்த url ஐ வாங்கிச் சென்றார்.

என்ன பாடல் என்கிறீர்களா? `நீயா' படத்தில் ஸ்ரீபிரியா தனிமையில் பாடும் `ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' பாடல்தான் அது.

அதன்பின் அவர் தொல்லை இல்லை. ஆனால் `ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' பாடல் மட்டும் அடிக்கடி அவர் வீட்டிலிருந்து என்னை தாலாட்டியது. பின் நான் வீடு மாறினேன்.

சமீபத்தில் பிராங்பேர்ட்ல் உள்ள தமிழ் கடைக்குப் போகும் வழியில் அவரைச் சந்தித்தேன். கொஞ்ச நேர அளவலாவலுக்குப் பின்,

``அந்த நடிகை ஜெர்மனி வந்தார்களா? வந்தா மறக்காம என்னிடம் சொல்லுங்க" என்றார்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மொழி தெரியாத ஒரு வெளிநாட்டுக்காரரை நம் இசையும் நடனமும் எப்படி கட்டிப் போட்டிருக்கிறதென்று வியந்தேன்.

``எனக்கொரு சந்தேகம்?' என்றார்.

``என்ன?"

``நகைகளைப் போட்டுக்கொண்டு எப்படி அவரால் இவ்வளவு நளினமாக நடனமாட முடிகிறது?''

ஸ்ரீபிரியாவுக்காக ரசிகர் ஒருவர் ஜெர்மனியில் காத்துக்கொண்டிருக்கிறார் ஒரு கேள்வியுடன்.

பின் குறிப்பு: அந்தப் பாடலை நான் அவருக்குக் கொடுத்த பின், எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. அதனால் பிரத்யேகமாக ஸ்ரீபிரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

-ஜேசு ஞானராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு