Published:Updated:

`வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் எவ்வாறு அழைத்து வரப்படுகிறார்கள்?' - ஒரு லைவ் ரிப்போர்ட் #MyVikatan

Representational Image
Representational Image ( Alessandra Tarantino / AP )

தற்போது வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் இந்திய அரசின் உதவியுடன் எவ்வாறு சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள், அதற்காக எவ்வளவு பணம் அவர்களிடம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்த இத்தாலி வாசகரின் பகிர்வு.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இத்தாலி, கடந்த இரண்டு மூன்று மாதங்களாய் கொரோனாவின் கோரத் தாக்குதலுக்கு கிட்டத்தட்ட 34,000 மக்களை இழந்து இப்போதுதான் வெகு சிறப்பாக மீண்டு வந்துகொண்டிருக்கிறது.

கடந்த ஜூன் 3-ம் தேதி முதல் இங்கு பல கடைகளும் பார்க் முதல் முடிதிருத்தும் கடைகள் வரை திறக்கப்பட்டுள்ளன. எல்லைகளும் திறக்கப்பட்டு, மக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வரத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், முகக்கவசம் அவசியமாக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் எல்லைக்குள் மற்ற நாட்டுக்குச் செல்ல இருந்த தடைகள் கூட விலக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஐரோப்பாவின் வெளியில் உள்ள பிற நாடுகளுக்குச் சென்று வர தடை இருந்தபடியேதான் உள்ளது.

Representational Image
Representational Image
Pixabay

இரண்டு மாதம் முன்பு இந்திய அரசின் விசேஷ விமான சேவையின் பொருட்டு பல இந்திய மாணவர்களும் சுற்றுலாப் பயணிகளும் இத்தாலியிலிருந்து தங்கள் தாயகம் திரும்பினர்.

அதேசமயம் இந்தியாவிலும் கொரோனாவின் தாண்டவம் அதிகரித்த காரணத்தினால் இந்த மீட்பு நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது. எனவே, இந்தச் சேவையை இந்திய அரசு தொடர முடியாமல் போனதால், பல இந்தியர்கள் இங்கே சிக்கிக் கொண்டார்கள்.

இந்தவேளையில் நமது இந்திய தூதரக அலுவலர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஆம். அப்படிச் சிக்கிக்கொண்ட பல இந்தியர்களுக்கு ஆதரவும் உணவுப் பொருள்களையும் அளித்து உதவினார்கள்.

அயல்நாட்டில் சிக்கியுள்ள இவர்கள் ஒரு குறிப்பிட்ட காலங்கள் வரையில் இங்கு இருக்கவே அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும். மேலும் மாணவர்களும், சுற்றுலா வந்தவர்களும் அந்தப் பயணங்களுக்கு என்று ஒரு பட்ஜெட் போட்டு, குறிப்பிட்ட செலவுக் கணக்கை மனதில் கொண்டு வந்திருப்பார்கள்.

சில நாள்கள் இத்தாலியில் தங்கவும் அதற்கான செலவுகளையுமே எண்ணி வந்திருப்பார்கள். ஆனால், அதை விடுத்து மேலும் ஒரு மாதம் இங்கே இருக்க வேண்டி இருப்பின், அதற்காகும் செலவுகளை எண்ணிப்பாருங்கள். எதிர்பாரா இந்த அதீத செலவுகளைச் சமாளிக்க அவர்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் என்றும் எண்ணிப் பாருங்கள். செலவுகள் ஒருபுறம், அனுமதிக்கப்பட்ட நாள்களும் முடிந்த மறுபக்கம் என்று பெரிய இன்னல்களுக்கு ஆளாகி இருந்தார்கள்.

Representational Image
Representational Image
Alessandra Tarantino / AP

நல்ல வேலையாக, இத்தாலி அரசு அவ்வாறு அனுமதிக்கப்பட்ட நாள்களைவிட அதிகமாக தங்கிய அனைவருக்கும் அந்த அனுமதியை நீட்டித்ததால், ஒரு தலைவலி நீங்கியது.

இருந்தும், அவர்கள் இந்தியா திரும்ப பெரிதும் பாடுபட்ட வண்ணமே இருந்தனர். இந்த நிலையில்தான், அவர்களைப் போன்றவர்களும் மாணவர்களையும் இந்திய நாட்டுக்குக் கொண்டு செல்ல இந்திய தூதரகம் இரவுபகலாக பாடுபட்டு அவர்களது விவரங்களைச் சேகரித்தது.

இத்தாலியிலிருந்து இந்தியா திரும்ப எண்ணிய இந்தியர்களுக்கு தங்கள் பெயர்களைப் பதிவு செய்திட வேண்டி ஒரு வலைதளமும் பகிரப்பட்டது. அப்படிப் பதிவு செய்த மக்களுக்கு இந்திய தூதரகம் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு அவர்களது விவரங்களைச் சேகரித்தது.

வார நாள்களில் மட்டுமல்லாது சனி, ஞாயிறு நாள்களிலும், இரவு 8, 9 மணிக்குக்கூட தொலைபேசி அழைப்பு வந்தது, எங்கள் அனைவருக்குமே வியப்பைக் கூட்டியது. ஒருவழியாக தகவல்கள் சேமிக்கப்பட்டு, இந்திய அரசு மீண்டும் வந்தே பாரத் என்ற இந்தச் சேவையை தொடங்கியது.

Representational Image
Representational Image
AP

இதுவரை இரண்டு விமானங்கள் மூலமாக இத்தாலியிலிருந்து பல இந்தியர்களை தாயகம் அழைத்துச் சென்றுள்ளது நமது அரசு. அடுத்த விமான சேவை இந்த மாத இறுதியில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் விமானத்தில் சென்ற என் நண்பர்களின் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

இந்திய அரசும் ஏர் இந்தியா நிறுவனமும் எவ்வாறு இத்தாலியில் இருந்த இந்திய மக்களுக்கு உதவியாக இருந்தது? உண்மையில் நடந்ததுதான் என்ன?

இந்தியர்கள் இந்தியா திரும்ப வேண்டி தூதரகத்தில் பதிவு செய்த பின், அவர்களுக்கு அந்தப் பயணத்துக்கான செலவுகள் அடங்கிய விவரங்கள் அளிக்கப்படுகிறது. இந்தச் செலவு, வெறும் விமானக் கட்டணம் மட்டுமல்ல, இந்தியா சென்றபின், அங்கே முதல் 7 நாள்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்தி தங்குவதற்கான ஹோட்டல் செலவுகளும் அடக்கம்.

அவசரகால நடவடிக்கை என்ற காரணத்தினால் இந்த டிக்கெட் கட்டணங்கள் சாதாரண சமயங்களைவிட சற்றே கூடுதலாக இருந்தது. மேலும், அனைத்தும் இந்தியா சென்று சேர மட்டுமே (One-way tickets). சென்று திரும்ப அல்ல. பெரியவர் ஒருவருக்கு இந்தியா செல்ல டிக்கெட் கட்டணம் நம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 57,000.

Ticket Picture
Ticket Picture

அனைவரையும் துரிதமாக இந்தியா கொண்டு செல்ல வேண்டியதால் விமானங்களில் தனிமனித இடைவெளி இல்லை. அனைவரும் என்றும் போன்றே அடுத்தடுத்து அமரவேண்டி இருந்தது. இருப்பினும், முகக்கவசங்கள், கையுறைகள் என்று அனைத்து வசதிகளையும் செய்து தந்திருந்தது ஏர் இந்தியா நிறுவனம். மேலும், விமானங்களுக்குள் சென்றதும், அவர்களுக்கு உண்ண உணவுகளும் அளிக்கப்பட்டன. ஆனால், அது விமானம் புறப்படும் முன்பே உங்களிடம் அளிக்கப்பட்டதால் அதை மடியில் தாங்கியவாறேதான் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது என் நண்பருக்கு.

குழந்தைகளுடன் செல்லும் பெற்றோரின் நிலைமை கடினம்தான். இந்தியா சென்று சேர்ந்ததும், உங்களுக்கு ஒரு அட்டவணை கொடுக்கப்படும். அதில் அருகில் உள்ள பல ஹோட்டல் விலாசங்கள் இருக்கும். அதிலிருந்து நீங்கள் உங்களுக்குக் கட்டுப்படியாகும் ஒரு ஹோட்டலைத் தேர்வு செய்து அடுத்த ஏழு நாள்களுக்குத் தங்க வேண்டும்.

நாளொன்றுக்கு 2,000 ரூபாய்களுக்குக் குறையாமல் இருக்கிறது இந்த ஹோட்டல்களின் வாடகைகள்.

Representational Image
Representational Image
Alessandra Tarantino

எப்படிப் பார்த்தாலும் ஒருவர் இந்தியா திரும்ப ஆகும் செலவு என்று பார்த்தால், குறைந்தது 70-75,000 ஆகும்.

எந்த ஒரு நாட்டின் அரசும் தங்கள் குடிமக்களை இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து உதவ வேண்டியது கடமை. அதை நமது இந்திய அரசும் செய்திருக்கிறது. அதே சமயம், இந்திய அரசுக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கும் ஒரு சிறிய வேண்டுகோள்.

அவசியக் காரணம் இருக்கும் மக்கள் மட்டுமே இந்தச் சேவையை மேற்கொள்ள வேண்டும் என்பது ஏற்க வேண்டியதே. இருப்பினும், பயணத்துக்கான செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

விமானக் கட்டணத்தை சிறிது குறைத்தால் பலருக்கும் உதவியாக இருக்கும் என்பதே இங்கிருக்கும் என் போன்ற மக்களின் கோரிக்கை.

-இத்தாலியிலிருந்து மகேஷ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு