Published:Updated:

மெட்ராஸ் ஸ்டேட் தமிழ்நாடு ஆனது எப்படி..? – தகவல் பெட்டகம் #MyVikatan

மெட்ராஸ் ஸ்டேட்
மெட்ராஸ் ஸ்டேட்

தியாகி சங்கரலிங்கனார் மறைவை தொடர்ந்து, 1957 இல் திமுகவும், 1961 இல் சோசியலிஸ்ட் கட்சியும், 1963 இல் மீண்டும் திமுகவும் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்தன. ஆனால்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

26-01-1950 அன்று, மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் ஸ்டேட்டாக இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், 1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மெட்ராஸ் ஸ்டேட் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு மொழிவழி மாநிலமாக மறுசீரமைக்கப்பட்டது. இறுதியாக, மெட்ராஸ் ஸ்டேட் ஜனவரி 14, 1969 அன்று தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.

27.07.1956 அன்று, விருதுநகரை சேர்ந்த, சுதந்திர போராட்ட தியாகி சங்கரலிங்கனார், மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி விருதுநகர் தேசபந்து திடலில் உண்ணாவிரதத்தை தொடங்கினர். அப்போதைய முதல்வர் காமராஜர், காங்கிரஸ் தலைவர் கக்கன், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம், திமுக தலைவர் அறிஞர் அண்ணா, தமிழரசு கழகம் கட்சின் தலைவர் ம.பொ.சிவஞானம் ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிட கேட்டு கொண்டும், அதை கைவிடாமல் கொண்ட லட்சியத்திற்காக 76 நாட்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து, இறுதியாக 13.10.1956, அன்று உயிர் துறந்து தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான பெரும் நெருப்பை தமிழ் சமூகத்திடம் பற்றவைத்தார்.

மெட்ராஸ்
மெட்ராஸ்

தியாகி சங்கரலிங்கனார் மறைவை தொடர்ந்து, 1957 இல் திமுகவும், 1961 இல் சோசியலிஸ்ட் கட்சியும், 1963 இல் மீண்டும் திமுகவும் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்தன. ஆனால், மெட்ராஸ் ஸ்டேட் என்பதே புழக்கத்தில் இருப்பதாகவும், மேலும் சில காரணங்களை சொல்லி இந்த தீர்மானங்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக இருந்த காங்கிரஸ் அரசால் நிராகரிக்கப்பட்டது.

1962 இல் அண்ணாதுரை அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரை மெட்ராஸ் ஸ்டேட் சட்டமன்றத்திற்குள் மட்டுமே விவாதிக்கப்பட்டு கொண்டிருந்த தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை, முதல் முறையாக 1963 இல் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) மேற்கு வங்கத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பூபேஷ் குப்தா மாநிலங்கள் பெயர் மாற்றம் குறித்த தனிநபர் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்த போது இது அகில இந்திய அளவில் எடுத்து செல்லப்பட்டது அப்போது மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா அந்த சட்ட மசோதா குறித்து பேசிக்கொண்டிருக்கையில், அவையிலிருந்த சில உறுப்பினர்கள் தமிழ்நாடு என்ற சொல் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லை எனவும், அது சேர, சோழ மற்றும் பாண்டிய அரசுகள் என்றுதான் இருந்தது என்று கேள்வி எழுப்பினர்.

அண்ணா
அண்ணா

அதற்கு, அண்ணா அவர்கள் தன் பதிலுரையில்,

"வடவேங்கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து "

என்ற தொல்காப்பிய வரிகளையும்,

"இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடக்கிய"

என்ற இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகார வரிகளையும் மேற்கோள் காட்டி வரலாற்று சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு பெயர் மாற்ற காரணத்தை அழுத்தமாக எடுத்துரைத்து மாநிலங்களவையில் வாதிட்டார். அதன் பின்னரும் சில உறுப்பினர்கள் தமிழ்நாடு என்று பெயரிடுவதால் என்ன பலனை நீங்கள் அடையப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணா பார்லிமென்ட் என்பதை லோக்சபா என்றும், கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்யசபா என்றும், ப்ரெசிடெண்டை ராஷ்டிரபதி என்றும் மாற்றியதனால் என்ன பலனை நீங்கள் அடைந்தீர்கள் என்று தன் பதில் வாதத்தை திடமாக எடுத்துரைத்தார். இந்த கடுமையான விவாதத்திற்கு பிறகும் இந்த சட்ட மசோதா தோற்கடிக்கப்பட்டது.

இதற்கிடையே தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் குறித்து தமிழரசு கழகம் கட்சின் தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள் உட்பட பல அரசியல் தலைவர்களின் ஆதரவு கிடைத்தது. இதனையடுத்து 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸிடம் இருந்து முதல்முறையாக ஆட்சியை திமுக கைப்பற்றியது. அதன் தலைவர் அண்ணாதுரை அவர்கள் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். இதன்பிறகு, 18 ஜூலை 1967 அன்று அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தது. மேலும், அதை ஆதரித்து "தமிழ்நாடு" என்று மூன்று முறை அண்ணா முழங்க அவையில் இருந்தவர்கள் “வாழ்க” என்று முழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின், 1968 ஆண்டு நவம்பர் மாதம் அது நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு அதன் ஒப்புதல் பெறப்பட்டது.

எந்த கோரிக்கைக்காக தியாகி சங்கரலிங்கனார் உயிர் துறந்தாரோ அந்த கோரிக்கை அவர் இறந்து 12 ஆண்டுகள் கழித்து இறுதியாக,14 ஜனவரி 1969 தமிழர் திருநாள் அன்று மெட்ராஸ் ஸ்டேட் தமிழ்நாடாக பெயர் மாற்றம் பெற்று நிறைவேறியது.

-க.சேதுராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு