Published:Updated:

``குதிரை வண்டிக்காரன் ஆகணும்ம்மா..’’ ! - சுவாமி விவேகானந்தரின் தாய் உணர்த்திய பாடம் #MyVikatan

ஒரு குழந்தையின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது மரபணுக்களா, சூழ்நிலையா என்பது குறித்த ஆய்வுகள் இன்றுவரை முடிவின்றித் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

பெற்றோரின் நேர்மறையான எண்ணங்கள்தான் குழந்தைகளைச் சாதனையாளர்களாக மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு குழந்தையின் வெற்றிகரமான வாழ்வையும், அந்தக் குழந்தை ஞானியாகவோ விஞ்ஞானியாகவோ வளரவிருப்பதையும் அதன் இளமைப் பருவமே பெரும்பாலும் தீர்மானித்துவிடுகிறது.

குழந்தைகள் தவறுகள் செய்யும்போது தண்டிப்பதும், தேவையானபோது கண்டிப்பதும் நியாயமானது என்றாலும், அவற்றின் காரணமாகக் குழந்தைகள் மனதில் எதிர்மறை சிந்தனைகள் வளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.

Representational Image
Representational Image
Pixabay
``படிக்கிற புள்ள ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வந்தது எப்படி..?’’ - குட்டி சக்சஸ் ஸ்டோரி #MyVikatan

ஒரு குழந்தையின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது மரபணுக்களா அல்லது சூழ்நிலையா என்பது குறித்த ஆய்வுகள் இன்றுவரை முடிவின்றித் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன. எனவே மரபணுக்கள் போன்றே சூழ்நிலையும் ஒரு மனிதனின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

பிற குழந்தைகளுடன் தன் குழந்தையை எந்த விதத்திலும் ஒப்பிடாமல், தன் குழந்தை தனித்துவமானது (Unique) என ஒரு பெற்றோர் நம்பும்போது, அந்தக் குழந்தையின் வளர்ச்சி சிறப்பான ஒன்றாக மாறுகிறது.

ஒப்பீடுகள் பற்றி ஓஷோ கூறும்போது,

``நல்லவேளை மனிதர்களோடு மட்டும் நீ உன்னை ஒப்பிட்டுக்கொள்கிறாய். மரங்களுடன் உன்னை ஒப்பிட்டுக் கொள்ளவில்லை. அப்படிச் செய்திருந்தால் நீ மிகுந்த பொறாமைப்பட்டிருப்பாய்.

`நான் மட்டும் ஏன் பச்சையாக இல்லை, எனக்கு மட்டும் ஏன் பூக்களைத் தாங்கும் சக்தி இல்லை' என்றெல்லாம்கூட நீ வருத்தப்பட்டிருப்பாய்"

என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்.

Parenting mistakes
Parenting mistakes

மேலும், ``ரோஜாவையும் மல்லிகையையும் அல்ல, ஒரு ரோஜாவை இன்னொரு ரோஜாவுடன்கூட ஒப்பிடாதீர்கள். ஒவ்வொன்றும் தனித்துவமானது'' என்கிறார் ஓஷோ!

ஒப்பீடுகள் அற்ற, உயர்வான நேர்மறை சிந்தனைகொண்ட பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் சாதனையாளர்களாக மாறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை விளக்க, புவனேஸ்வரி தேவியின் உயர்ந்த எண்ணம் குறித்த ஒரு கதை இதோ...

ஒரு சிறுவன் குதிரைவண்டி மூலமாகத் தனது பள்ளிக்குச் செல்வது வழக்கம். அந்தக் குதிரை வண்டிமீதும், குதிரையோட்டி மீதும் அந்தச் சிறுவனுக்குத் தீரா காதல். ஒருநாள் அவனது வகுப்பறையில் ஆசிரியர் அனைத்து மாணவர்களிடமும் ஒரு வழக்கமான கேள்வியைக் கேட்டார்.

``நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்?" என்ற ஆசிரியரின் கேள்விக்கு மாணவர்கள் டாக்டர், போலீஸ், வக்கீல், ஆசிரியர் எனப் பல பதில்களைக் கூறினர். குதிரைவண்டி மீது தீரா காதல்கொண்ட அந்தச் சிறுவன், ``நான் குதிரையோட்டியாக ஆவேன்" என்றான்.

Representational Image
Representational Image
Pixabay

இதைக் கேட்டதும் வகுப்பில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. மாணவர்கள் அனைவரும் அந்தச் சிறுவனைக் கிண்டல் செய்தனர். ஆசிரியர் சிறுவனிடம், "எப்போதும் உயர்ந்த லட்சியங்கள் நமக்கு வேண்டும். குதிரை வண்டிக்காரனாக மாறுவதெல்லாம் ஒரு மனிதனின் லட்சியமாக இருக்கக் கூடாது" என அறிவுரை கூறி அவனை அமரவைத்தார்.

அந்தச் சிறுவனுக்குக் குழப்பம். குதிரை வண்டிக்காரனாக ஆவது ஏன் உயர்ந்த லட்சியமாக இல்லை எனத் தனக்குள் கேட்க ஆரம்பித்தான். மாலையில் வீட்டுக்குச் சென்றவுடன் தன் தாயிடம் இது குறித்து அவன் வினவினான். அதற்கு அவன் தாய், "நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய்?" என்றார்.

Representational Image
Representational Image
jaikishan patel on Unsplash

"அம்மா, நான் தினமும் பள்ளிக்குச் செல்லும்போது நமது குதிரை வண்டிக்காரர் குதிரை ஓட்டுவதைப் பார்ப்பேன். அவர் குதிரைகளை ஓட்டுவது மிகமிக அழகாகவும், என் மனதுக்குப் பிடித்தமானதாகவும் இருக்கும். மனதுக்குப் பிடித்ததைச் செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்? எனவேதான் ஆசிரியர் எனது எதிர்கால லட்சியம் என்னவென்று கேட்டதும் குதிரைக்காரன் ஆவேன் என்று கூறினேன்" என்றான் சிறுவன்.

அதைக் கேட்ட தாய் சற்றும் கோபப்படாமல் வீட்டின் பூஜை அறைக்குள் சென்று கிருஷ்ணர், அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டுமாறு இருக்கும் ஒரு மகாபாரதப் படத்தை எடுத்து வந்தார். அதை மகனிடம் காட்டி, "மகனே, நீ குதிரை வண்டிக்காரன் ஆவேன் என்று கூறியதில் தவறில்லை. ஆனால் நீ ஒரு சாதாரண குதிரை வண்டிக்காரன் ஆகக்கூடாது. மகாபாரதத்தில் அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டினானே கிருஷ்ணன், அந்த கிருஷ்ணனைப் போன்ற மிகச்சிறந்த சாரதியாக நீ திகழ வேண்டும்" என்றார்.

Swami Vivekananda
Swami Vivekananda
Vikatan Library

அந்தச் சிறுவன்தான் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவரும், அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியவரும், இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரும், மக்களைச் சரியான ஆன்மிகப் பாதையில் வழிநடத்திய சாரதியுமான சுவாமி விவேகானந்தர். அவரின் தாயாரான புவனேஸ்வரி தேவியின் நேர்மறையான, உயர்ந்த எண்ணமே விவேகானந்தர் என்னும் ஞானமாய் மலர்ந்தது.

'குதிரையோட்டி ஆவேன்' என மகன் கூறியதைக் கேட்டு தாய் கோபம் கொண்டிருந்தாலோ, பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுக் கண்டித்திருந்தாலோ, அல்லது பிறரது கிண்டலை நியாயப்படுத்தியிருந்தாலோ நமக்கு விவேகானந்தர் என்னும் ஞானி கிடைத்திருக்கமாட்டார்.

குழந்தையின் நன்மைக்கும், எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்றுமே அவர்களைப் பிற குழந்தைகளுடன் ஒப்பிடுகிறோம், போட்டிபோடச் சொல்கிறோம்' என்பது பெற்றோரின் எண்ணம். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள மறுக்கிறோம். படைப்பால் ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன் என்பது உண்மை. எந்த இரு மனிதர்களின் எண்ணங்களும், செயல்களும் எப்போதும் ஒரே நேர்கோட்டில் வராது என்பது நிதர்சனம். எனவே மற்றவர்களுடன் நம் குழந்தைகளை ஒப்பிடுவதும், போட்டிபோடச் செய்வதும் தேவையற்றதுதானே!

Swami Vivekananda
Swami Vivekananda
Vikatan Library

குழந்தைகளுக்கு எப்போதுமே எதிர்மறையாகச் சிந்திக்கத் தெரியாது. அதை நாம்தான் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம். ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு நேர்மறையான லட்சியம் இருக்கிறது. வாழ்க்கை குறித்த தேடல் இருக்கிறது. அதை நமது எதிர்மறை எண்ணங்களால் அசுத்தப்படுத்திவிடாமல், அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ அனுமதிப்போம்.

இதுவரை உள்ள கண்டுபிடிப்புகளும், வாழ்க்கை முறைகளும் மட்டுமே நமக்குத் தெரியும். கிணற்றுத் தவளைகள்போல இதிலேயே நம் குழந்தைகளின் வாழ்க்கை இருந்தால் போதாது. இவற்றைத் தாண்டி ஒரு நதிபோன்று செல்ல அவர்களைத் தூண்ட வேண்டும்.

Representational Image
Representational Image

புதிய கண்டுபிடிப்புகளை நோக்கியும், இன்னும் கடல்போன்ற அழகான வாழ்க்கையைத் தேடவும் நம் குழந்தைகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். சுயசிந்தனையே கண்டுபிடிப்புகளின் தாய் அல்லவா?!

ஞானத்தின் மூலமும் இதுவே!

அவரைப்போல ஆகவோ, இவரைப்போல ஆகவோ நம் குழந்தைகள் பிறக்கவில்லை. அவர்கள் அவர்களைப்போலவே ஆகட்டும்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு