Published:Updated:

லாக்டெளனுக்குப் பின் தமிழகத்தில் என்னவெல்லாம் நடக்கும்? - வாசகரின் ஜாலி பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image

டூர் என்னும் சொல் அகராதியில் இருந்து அப்புறப்படுத்தப்படும். நண்பர்களுடன் கோவா, பாங்காக் என்பதெல்லாம் கனவுகளாகவே போகும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

#பேருந்துகளில் சமூக இடைவெளி காரணமாய் ஒரு சீட்டு விட்டு ஒரு சீட் என்று மட்டுமே மக்கள் அமர அனுமதிக்கப்படுவர். கோ-பாசஞ்சர் தொல்லைகள் மற்றும் ஹியர்போன் போடாத பாடல்களின் கதறல்களில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கும்!

#வங்கிகளுக்குள் முகமூடி அணிந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். எவரேனும் முகமூடியைக் கழற்றினால் உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் என்ற அறிவிப்புகள் பளிச்சிடும்!

#அரசியல்வாதிகள் கூட்டங்களைப் பார்த்தாலே ஆசிட் பட்டது போல அலறுவர். கூட்டங்களுக்குள் சென்று மக்களை கட்டிப்பிடித்து நலம் விசாரிக்கும் `ஜிமிக்ஸ்' வேலைகள் எல்லாம் இனி வேலைக்கு ஆகாது!

Representational Image
Representational Image

#ஒரு ஹீரோ நூற்றுக்கணக்கான வில்லன்களை அடித்துத் துவைப்பது போன்ற அபத்தமான சண்டைக் காட்சிகள் சட்ட விரோதம் ஆகும்!

#கடை திறப்பு விழாவுக்கு நடிகைகள் வந்தால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்கள் காட்சிப் பிழையாகும். நடிகைகள் `தனியே தன்னந்தனியே' கடைகளைத் திறந்துவைக்க வேண்டிய நிலமை ஏற்படும்!

#பார்க்குகளிலும், பீச்களிலும் அமர்ந்து காதல் செய்யக்கூடிய ஜோடிகள் தங்களுக்குள் சமூக இடைவெளி கடைப்பிடிப்பர். முத்தங்கள் அனைத்தும் வழக்கொழிந்து போகும். ஃபிளையிங் கிஸ் மட்டுமே டிரெண்டிங்கில் இருக்கும்!

#இரண்டு நபர்கள் சந்திக்கும்போது கைகுலுக்கிக் கொள்வது சட்டவிரோதமாகக் கருதப்படும். வணக்கம் சொல்வது எப்படி என வெளிநாட்டு ஆட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும். தமிழின் வணக்கம் உலகம் முழுவதும் பரவலாக்கப்படும்!

#கார்களின் முன் சீட்டில் ஒருவரும் பின் சீட்டில் ஒருவருமாய் இருவர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் சட்டமியற்றப்படும். பைக்குகளில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்பதால் பில்லியன் சீட்டுகள் கட்டாயமாக அகற்றப்படும். சினிமாவின் பைக் டூயட்டுகள் தடை செய்யப்படும்!

#``நெருக்கியடித்து சரக்கு வாங்கியதெல்லாம் ஒரு காலம்" என்று மலரும் நினைவுகளைப் புன்னகையுடன் அசைபோட்டபடியே குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் வட்டத்தினுள் நிற்பார்கள்!

Representational Image
Representational Image

#தியேட்டர்களில் சமூக இடைவெளி காரணமாய் கல்லாக் கட்டவேண்டிய மாஸ் படங்கள் கூட அவார்டு படங்கள் ரேஞ்சுக்கு காற்று வாங்கும். படத்தின் முதல்நாள் முதற்காட்சியில் கூட தியேட்டர்கள் மயான அமைதியிலேயே ஆழ்ந்திருந்தும்!

#பயணங்கள் என்பவை பனிஷ்மென்டுகள் என மாறும். பயணங்கள் செல்வோரை அவரவர் குடும்பத்தினரே சமூக விரோதிகளாகப் பார்ப்பர்!

#விசேஷ வீடுகளில் பெண்கள் தங்களுடைய புடவைகளையும், நகைகளையும் தூரத்திலிருந்து காட்டித்தான் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்! விசேஷங்களில் அனைவருமே மாஸ்க் அணிந்திருப்பர் என்பதால் ஆடையும் நகையுமே ஒருவரின் ஐடண்டி ஆகும்!

#யாருக்கு என்ன உறவு என்றே தெரியாமல் கூட்டங்கூட்டமாக நடிகர்கள் நடிக்கும் குடும்பத் திரைப்படங்களும், எந்நேரமும் கூட்டம் குவிந்து கிடக்கும் நாடகங்களும் சட்ட விரோதமாகும்!

#சினிமாத் தயாரிப்பாளர்கள் சானிடைஸர் வாங்கிக் கொடுத்தே தங்களுடைய சொத்தில் பாதியை இழப்பர்! சீரியல் தயாரிப்பாளர்களுக்கு கிளிசரினைவிட சானிடைஸருக்குச் செலவு அதிகம் பிடிப்பதால், கிளிசரின் போடாமலேயே கண் கலங்குவர்!

#குத்துச்சண்டைப் போட்டிகள் எல்லாம் `தொட்டா போச்சு' ரேஞ்சுக்கு தொடாமல் அடிக்கும் வெத்துச் சண்டை போட்டிகளாக மாறிவிடும்!

#குழாயடி அடிதடிச் சண்டைகள் எல்லாம் வரலாற்றுப் பிழையாக மாறிவிடும். வட்டத்தைத் தாண்டுபவர்களுக்கு மட்டுமே வசவுச் சொற்கள் கிடைக்கும்!

# "நான் குடிச்சிருக்கேனா இல்லையானு செக் பண்ணுங்க சார்" என்று குடிமகன்கள் வான்டட் ஆக வந்து ஊதிக் காட்டி காவலர்களைக் கலவரமூட்டுவர்!

#ஆசிரியர்கள் மாணவரை அருகில் அழைக்கத் தயங்குவர். ``தைரியம் இருந்தா தொட்டுப் பாருங்க" ரேஞ்சில் மாணவர்கள் தில்லாக வலம் வருவர்!

#தினமும் அலுவலகத்துக்கு வருபவனை சமூகவிரோதி போல அதிகாரிகள் பார்ப்பர்! விடுமுறை எடுக்காமல் வருவது பெரும் பாவச்செயலாகக் கருதப்படும்!

Representational Image
Representational Image

#வெளிநாடு போகத் தயார் என்றால் உடனடியாக புரமோஷன் கிடைக்கும். வெளிநாட்டு மாப்பிள்ளைகள் முற்றின கத்திரிக்காயாகிப் போவர்!

#கல்யாண மண்டபங்கள் காற்று வாங்கும். மொய் வைக்கும் பழக்கம் வழக்கொழிந்துபோகும்!

#உள்ளாட்சித் தேர்தல் போன்றே, தங்கள் தொகுதிப் பிரதிநிதிகளின் வெளிநாட்டுப் பயணத்தையும் மக்கள் ஆவலுடன் எதிர்நோக்குவர்!

# "கூட்டமாக அலைபவனைவிட சிங்கிளாக இருப்பவனே டான் " என்று டான்களுக்கான இலக்கணம் மாற்றி எழுதப்படும். வயதான டான்கள் கூட தனது சிகரெட்டை தானே பற்ற வைத்துக்கொள்ளக் கூடிய அவலமான சூழ்நிலை ஏற்படும்!

#ரயில்களும், பஸ்களும் சோதனை ஓட்டம் போல காலியாகவே போய் காலியாகவே வரும்!

#டூர் என்னும் சொல் அகராதியில் இருந்து அப்புறப்படுத்தப்படும். நண்பர்களுடன் கோவா, பாங்காக் என்பதெல்லாம் கனவுகளாகவே போகும். கட்டாய அலுவலகப் பயணங்கள் பனிஷ்மென்ட் பயணங்களாக மாறும்!

Representational Image
Representational Image

#ஒருவர் மட்டுமே விளையாடக்கூடிய அவுட்டோர் விளையாட்டுக்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு பிரபலமடையும்!

#டிவி ஷோக்களுக்கு கைதட்ட ஆள் கிடைக்காமல் நிர்வாகங்கள் திணறும்!

#இருமலும், தும்மலும் துப்பாக்கி, வெடிகுண்டுகளைவிட மிகப்பெரிய ஆயுதங்களாக மாறிவிடும்!

#ரங்கநாதன் தெருவிலும் கூட்டத்தில் தனித்திருக்கும் ஜென் மனநிலையிலேயே மக்கள் செல்வர்!

#சலூன் கடைகளும் பியூட்டி பார்லர்கள் ஓவர்டைம் செய்யும். பலரது அடையாளங்கள் படிப்படியாக மீட்கப்படும்!

#விருது விழாக்கள் என்றாலே `ஆள விடுங்கடா சாமி' என்று பிரபலங்கள் ஓட்டம் பிடிப்பர்!

#சலூன்கள் எல்லாம் ஆபரேஷன் தியேட்டர்கள் போன்ற தோற்றம் பெறும். கருவிகள் சுடுநீரில் கழுவப்படுவதே ஸ்பெஷல் கட்டிங் என்று மாறும்!

#பொது இடங்களில் கைக்குட்டை இன்றி இருமவும், தும்மவும் செய்பவர்கள் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட வாய்ப்புண்டு!

#"மனிதர்கள் மரங்களுடனோ, சுவர்களுடனோ பேசினால் அது மனநோய் அல்ல! அவை உங்களிடம் திரும்ப பேசினால் மட்டுமே எங்களிடம் வாருங்கள்" என்று மனநல மருத்துவமனைகளில் அறிவிப்புகள் ஒட்டப்படும்!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு