Published:Updated:

மின்னணு நோன்புகள் காலத்தின் கட்டாயம்..! - எப்படி செய்வது? #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஒரு வாரத்தில் 38.5 மணி நேரத்துக்கும் மேல் ஒரு மனிதன் இணையத்தைப் பயன்படுத்தினால் அவர் சமூக ஊடக போதைக்கு ஆட்பட்டுள்ளார் என ஆய்வுகள் கூறுகின்றன...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தொழில்நுட்பங்கள் என்பவை நன்மை - தீமை என்ற இரு முனைகளைக்கொண்ட கத்திகள் போன்றவை. இன்று இணையதளங்கள் மூலம் பெரும் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.

அதேநேரம் தற்போது இணையதளக் குற்றங்கள் தொடர்ந்து பெருகிக்கொண்டேதான் போகின்றன. அது மட்டுமல்லாது மனிதனது சமூக ஊடக அடிமைத்தனத்தால் இணையதளமே பல நேரங்களில் குற்றவாளியாகவும் மாறிவிடுகிறது.

இந்தச் சமூக ஊடக அடிமைத்தனத்தில் நல்ல செய்தி குற்றவாளியை நமக்கு நன்கு தெரியும். ஆனால் இதில் கெட்ட செய்தி நாம் அவற்றை ஒருபோதும் தண்டிக்க விரும்புவது இல்லை!

Representational Image
Representational Image
Pixabay

சமூக ஊடக அடிக்‌ஷன்:

மனிதன் கண்டறிந்த தொழில்நுட்பம் மனிதனையே அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் மனிதன் மட்டுமே. சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும், குறிப்பிட்ட நோக்கமின்றி அதிக நேரம் செலவிடுவது ஒரு போதை என்று அழைக்கப்படுகிறது.

இந்த போதைக்கு மதிப்புமிக்க நமது நேரம் தேவையின்றிச் செலவாகிறது. ஆனால் இதன் வரவாக உடல் நலம் கெடுதல், மோசமான சமூக உறவுகள், தனிமைப்படுத்தல், நிர்பந்தம், பழிவாங்குதல், மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம், உண்மையான உலகத் தொடர்புகளை விட டிஜிட்டல் தொடர்புகளுக்கான விருப்பம் போன்றவை அமைகின்றன!

சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்தச் சிக்கல்கள் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும். எனவே சமூக ஊடக போதையிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை நாம் சிந்திப்பது அவசியம்.

இது புத்திசாலித்தனமும் கூட. ஒரு வாரத்தில் 38.5 மணி நேரத்துக்கும் மேல் ஒரு மனிதன் இணையத்தைப் பயன்படுத்தினால் அவர் சமூக ஊடக போதைக்கு ஆட்பட்டுள்ளார் என ஆய்வுகள் கூறுகின்றன.

(ஆனால் இணையம் மூலமே பணி என்போருக்கு இந்தக் கணக்கீடு பொருந்துவதில்லை.)

குறிப்பிட்ட சில அறிகுறிகள் மூலம் இணைய அடிமைத்தனத்தை நம்மால் கண்டறிந்துவிட முடியும். நமது சமூக ஊடகப் பயன்பாடு ஒரு போதையாக மாறியுள்ளதா இல்லையா என்பதைச் சில நிமிடச் சிந்தனையிலேயே நாம் சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

Representational Image
Representational Image
Pixabay

பெர்கனின் ஃபேஸ்புக் அடிமையாதல் அளவிலான ஆய்வு அளவீடுகள் (The Bergen Facebook Addiction Scale -BFAS) மற்றும் IAT எனப்படும் Internet Addiction Test கள் உள்ளிட்ட உலகளாவிய ஆய்வுகளும் மனிதர்களது இணைய போதையை அளவிடத் துணை புரிகின்றன.

அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாட்டை நிர்வகிக்க மற்றும் நமது நேரத்தை மீட்டெடுக்க உளவியல் ரீதியான சிகிச்சைகளும், சமூக ஊடக சார்பு சிகிச்சைத் தொகுப்புகளும் கட்டண அடிப்படையில் இருக்கின்றன. ஆனால் இந்த விஷயத்தில் நாமே சுயமாக நடவடிக்கை எடுப்பது நல்லது மற்றும் மலிவானது.

சமூக ஊடகங்களிலிருந்து முற்றிலுமாக விலகுவது சாத்தியமில்லை. ஆனால் அவற்றின் பயன்பாட்டைக் குறைப்பது அவசியம். இதற்கு E - Fasting எனப்படும் "மின்னணு நோன்பு" சிறந்த தீர்வாக அமையும்.

எலக்ட்ரானிக் ஃபாஸ்டிங் (மின்னணு - நோன்பு) என்பது ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற மின்னணு சாதனங்கள் மற்றும் சேவைகளில் இருந்து குறிப்பிட்ட நாளில் அல்லது நாளின் ஒரு பகுதியில் முற்றிலும் விலகி இருப்பதை நோக்கமாகக் கொண்டது.

மாதத்தின் ஒருசில நாள்கள் மேற்கொள்ளும் உண்ணா நோன்புகள் நமக்கு பெரும் நன்மை அளிக்கின்றன. அது போலவே மாதத்தில் சில நாள்கள் மின்னணு பொருள்களைக் கையாளாமல் இருப்பது மின்னணு நோன்பு எனப்படுகிறது. உளவியல் ரீதியாக இந்த மின்னணு நோன்பு மனித மனநிலையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது. மின்னணு நோன்புகள் காலத்தின் கட்டாயம். இவை நமது இணைய போதையை நீக்க நிச்சயம் உதவும்.

Representational Image
Representational Image
Pixabay

மின்னணு நோன்பு சிறப்படைய நாம் செய்ய வேண்டியவை:

# நாள் தேர்வு:

மின்னணு நோன்பிற்கான சரியான நாளை நாம் தேர்ந்தெடுப்பது மிகவும் அடிப்படையான ஒன்று. நமக்கு அதிகமான வேலை இல்லாத, போனை உபயோகப்படுத்தாமல் இருந்தால் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாத நாளாகத் தேர்வு செய்ய வேண்டும். வார நாள்களை விட, வார இறுதி நாள்கள் பொருத்தமானவையாக அமையும்.

# அறிவிப்பு:

மின்னணு நோன்பிற்கு நாம் தேர்ந்தெடுக்கும் நாள் குறித்து குடும்பத்தினரிடமும், இணைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் முன்கூட்டியே அறிவித்து விட வேண்டும். அதனால் சமூக வலைதளங்களில் அன்று நம்மை அவர்கள் எதிர்பார்க்காமல் இருப்பது மட்டுமல்லாமல், நாம் பிறரிடம் அறிவித்துவிட்டதால் அன்றைய நம்முடைய மன உறுதி குலையாமல் இருக்கும்.

# உண்மை உலகம்:

டிஜிட்டல் உலகம் மட்டுமே உலகம் இல்லை.

நாம் வாழக்கூடிய உண்மையான உலகம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நாம் அவ்வப்போது நமது மூளைக்கு நினைவூட்டி கொள்ள வேண்டும்.

# சுயகட்டுப்பாடு:

மின்னணு நோன்பின் அடிப்படையே சுய கட்டுப்பாடு தான். சுய கட்டுப்பாடும், தீர்க்கமான முடிவும் நோன்பைச் சிறப்படையச் செய்யும்.

Representational Image
Representational Image
Pixabay

# விளையாட்டு:

நோன்பு நாளில் குழந்தைகளிடமும், குடும்பத்தினரிடமும் விளையாடுவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

# ஊர்சுற்றல்:

நோன்பு நாளில் வீட்டிலேயே இருக்காமல் அவ்வப்போது வெளியில் சென்று வருவது சிறந்தது. வேலை எதுவும் இல்லாவிட்டாலும் சும்மாவேனும் ஊரைச் சுற்றி வருவது நல்லது.

# நண்பர்கள்:

நண்பர்களை வெறும் நம்பர்களாகவும், பெயர்களாகவும் போனில் வைத்துக்கொண்டிருக்காமல், அவர்களை நேரடியாகச் சென்று சந்திக்கக் கூடிய வாய்ப்பாக இந்த நாளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

# நோட்டிஃபிகேஷன்:

நோன்பு நாள் அன்று போனை சுத்தமாக அணைத்து வைத்து விடுவது சிறந்தது.

மற்ற நாள்களில் ஆப்களின் நோட்டிஃபிகேஷன்களை ஆப் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். நாம் விரும்பும்போது செய்திகளைப் பார்க்க வேண்டுமே தவிர, ஆப்கள் விரும்பும் போது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

# நேரத் தடை:

மின்னணு நோன்பு என்பது ஒரு குறிப்பிட்ட முழு நாளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அன்றாடம் நமக்கு வசதியான சில மணிநேரங்களில் கூட நாம் இணையத்திற்குத் தடை விதிக்கலாம்.

Representational Image
Representational Image
Pixabay

# தூக்கம்:

மன அழுத்தத்தைப் போக்கும் மிகச்சிறந்த மருந்து தூக்கம். நாம் மின்னணு நோன்பு நோற்கும் நாளில் சில மணிநேரங்கள் பகலில் உறங்குவது மன அழுத்தம் குறைய உதவும்.

# ஹாபி:

நம்மிடம் இதுவரை இல்லாத ஏதேனும் ஒரு புதிய ஹாபியை வளர்த்துக்கொள்வது நம்முடைய நோன்பு நாளின் இறுக்கத்தைப் போக்கி மனமகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கும்.

# குடும்பம்:

குடும்பத்தினரின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள, குடும்பத்துடன் நேரம் செலவிட, உண்மையான வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற இந்த நோன்பு நாளை நாம் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

# விருந்து போல கருதுதல்:

நாம் அன்றாடம் சமூக வலைதளங்கள் உடன் தொடர்பில் இருக்கிறோம். அவை சாதாரணமான நாள்கள் என்றும்,

இணையத் தொடர்பு இல்லாத மின்னணு நோன்பு நாள்கள் நம்முடைய விழா மற்றும் விருந்து போன்ற நாள்கள் எனவும் மனதளவில் கருதி கொண்டாட வேண்டும்.

# லட்சியம்:

மின்னணு நோன்பு நாள்களில் சாதிப்பதற்கு என்றே புதிதாக சில சுவாரஸ்யமான லட்சியங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

Representational Image
Representational Image
Pixabay

# ஒரே சாதனம்:

ஒரு சிலர் பல மொபைல் போன்கள், லேப்டாப், டேப்லட் எனப் பல மின் சாதனங்களைப் பயன்படுத்துவர்.

அவற்றின் உபயோகத்தைக் குறைத்து நாம் வழக்கமாக ஒரே சாதனத்தை மட்டுமே பயன்படுத்த பழகிக்கொள்வது நோன்பு நோற்பதைச் சிறப்பாக்க உதவும்.

# சுயசிந்தனை:

சுயசிந்தனையின் மிகப்பெரிய தடை இணையதளமே. எனவே இணைய தொடர்பு இல்லாத நோன்பு நாளில், சுய சிந்தனையின் பக்கம் நம் கவனத்தைத் திருப்பி நம்முடைய அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ளலாம்.

# ஸ்மார்ட்னெஸ்:

நம்முடைய அன்றாடப் பணிகளில் இணையத்தைப் பயன்படுத்தும் போது குறைவான நேரத்தில் நிறைவான பணி என்று ஸ்மார்ட்டாகப் பணிபுரிவோம் என்றால், நம்முடைய தினசரி வாழ்வின் மின்னணு நோன்பு நேரங்கள் மிக அதிகமாவது உறுதி.

# புத்தகங்கள்:

புத்தகங்கள் மிகச்சிறந்த, நேர்மறையான நேரக் கள்வர்கள். மின்னணு நோன்பு நாள்களில் நாம் புத்தகங்களின் பக்கம் நம் கவனத்தைச் செலுத்துவது நம் வாழ்வில் மிகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்.

# குழந்தைகள்:

குழந்தைகளுடன் நாம் கழிக்கும் நேரம் செலவு அல்ல, அது நம் வாழ்க்கையின் வரவு. எனவே இந்நாளில் குழந்தைகளுடன் பெரும்பாலான நேரத்தை நாம் செலவிட்டு மகிழப் பழகிக்கொள்ளவேண்டும்.

Representational Image
Representational Image

# மனமாற்றம்:

நமக்குக் கிடைக்கக்கூடிய லைக்குகள், ஷேர்கள், கமென்ட்கள், ரீ ட்வீட்கள் போன்றவற்றால் நாம் மிகப்பெரிய சமூக வலைதள செலிபிரிட்டி ஆக மட்டுமே மாறமுடியும். நம் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு மிகச் சிறந்த நபராக, ஒரு நல்ல மனிதனாக நாம் மாறுவதே வாழ்வின் உண்மையான வெற்றி ஆகும். இந்த வெற்றியை உண்மை உலகத்தில் நாம் செய்யும் செயல்கள் மூலமாக மட்டுமே சாதிக்க முடியும் என்ற புரிதல் நமக்கு அவசியம்.

உண்மை உலகின் ஒத்த அன்பையும், நட்பையும் பெற நாம் விரும்புகிறோம்.

ஆனால் அதை உருவாக்கத் தகுந்த நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்பதே இன்றைய இணையவாசிகளின் முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.

மின்னணு நோன்பு அதற்குச் சிறந்ததொரு தீர்வாக அமையும்.

மின்னணு நோன்பு என்பது நமது வாழ்க்கையை மீட்டெடுக்கவும், வாழ்க்கை சமநிலையை அடையவும், சமூக ஊடகங்களுக்குப் பணயக்கைதியாக மாறுவதைத் தடுக்கவும் உதவும் ஒரு கிரியா ஊக்கி என்றால் அது மிகையில்லை.

மின்னணு நோன்பை உடனே அதிரடியாக ஆரம்பித்துவிடுவதா அல்லது படிப்படியாகக் கூட்டுவதா என்பது அவரவர் வாழ்வியல் மற்றும் மனவியல் நிலையைப் பொருத்தது. ஆனால் மின்னணு நோன்புகள் நமது வாழ்வின் கவர்ச்சியையும், சுவாரஸ்யத்தையும் அதிகரிக்க வல்லவை என்பது உறுதி! மேலும் இவை "எனது நேரம் என்பதை,எங்கள் நேரம்" என்பதாக மாற்றவல்லவை என்பது நிதர்சனமான உண்மை!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு