Published:Updated:

`கொரோனா' - தொடுவதைத் தவிர்த்து தொடர்பில் இருப்போம்! முத்தான 20 யோசனைகள் #MyVikatan

Representational image
Representational image ( Pixabay )

வீட்டுக்குள் அடைந்துகிடக்கும் இந்த காலகட்டத்தில், வெறுமனே முடங்கிவிடாமல், என்னென்ன ஆக்கபூர்வமான பணிகளை நாம் சமூகத்திற்காக மேற்கொள்ள முடியும் என்பதற்கான சில யோசனைகள்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது.

மனிதர்கள் வீடுகளுக்குள்ளே அடைந்துகிடக்கின்றனர். பெரும்பாலானோர் தொலைக்காட்சி, செல்போன், புத்தகவாசிப்பு, வீட்டுவேலை உள்ளிட்ட பணிகளைச் செய்து நேரத்தைக் கடத்தி வருகின்றனர்.

வீட்டுக்குள் அடைந்துகிடக்கும் இந்த காலகட்டத்தில் வெறுமனே முடங்கிவிடாமல்,மேற்சொன்ன பணிகளைத் தாண்டி வேறு என்னென்ன ஆக்கபூர்வமான பணிகளை நாம் சமூகத்திற்காக மேற்கொள்ள முடியும் என்பதற்கான சில யோசனைகள்:

1) நாம் புதிய புதிய நீதிக் கதைகளை உருவாக்கி, அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் அறம்சார்ந்த கருத்துகள் அனைவரிடமும் சென்றடைவது உறுதி. நல்லனவற்றை ஏற்றுக்கொள்ள, தற்போது மக்கள் திறந்த மனதுடன் தயாராக இருக்கின்றனர்.

Representational image
Representational image

2) உங்களுக்கு முக்கியமான மற்றும் பிடித்தமானவர்களின் பணத்தேவைக்கு டிஜிட்டல் முறையில் உதவுவது இப்போது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

3) காய்கறிகளை வீட்டிலேயே உற்பத்திசெய்ய, தேவையான முயற்சிகளைத் தற்போது தொடங்கினால், அது எதிர்காலத்திற்குப் பயன்படும்.

4) உங்களுக்குப் பிடித்தமான கவிதைகளை, சிறு சிறு கதைகளை குரல்பதிவு செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்தால், அதிகமான வாசிப்பனுபவம் இல்லாதவர்களும் படைப்புகளை ரசிக்க வாய்ப்பு உண்டாகும்.

5) உங்கள் சுற்றுவட்டார குழந்தைகளுக்காக ஓவியம்,விநாடி- வினா உள்ளிட்ட போட்டிகளை ஆன்லைனில் நடத்தி, அவர்களது திறமைகளை ஊக்குவிக்கலாம்.

6) நண்பர்களுடன் இணைந்து ஸ்கைப் மூலமாக புதிய தொடர் கதைகளை, படைப்புகளை உருவாக்குவது, சிறந்ததொரு அனுபவமாக இருக்கும்.

7) புதிய உணவு ரெசிப்பிகளைப் பரிசோதனைசெய்து, அவற்றை மற்றவர்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாகப் பகிர்ந்தால் எண்ணற்ற ரெசிப்பிகள் உருவாக வாய்ப்பு உண்டு.

Representational image
Representational image

8) உங்களுடைய அல்லது நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் வருங்கால வளர்ச்சிக்காக சிறுசிறு ஸ்மார்ட்டான யோசனைகளை அலுவலக வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்தால் நிறுவனம் எதிர்கால வளர்ச்சியில் வேகம்பெறும். நமது சிந்தனை ஆற்றலும் மேம்படும்.

9) குழந்தைகளுக்கு சுயசிந்தனை வளரவேண்டி அவர்களின் புத்தக வாசிப்பை மேம்படுத்தலாம்.மேலும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க குழந்தைகளை ஊக்குவித்தால் பல புதிய கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கலாம்.

10) புதிய விளையாட்டுகளையும், அவற்றுக்கான விதிமுறைகளையும் குழந்தைகள் பங்களிப்புடன் உருவாக்கினால், குழந்தைகளுக்குப் பிடித்தமான மற்றும் தேவையான புதிய விளையாட்டுகள் உருவாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

11) வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பர். அந்நாட்களில், அவர்கள் எந்த மாதிரியான ஆக்கபூர்வமான,சமுதாயத்திற்கு பயனளிக்கக்கூடிய மேம்பட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபடலாம் என்பது குறித்த நமது புதுமையான ஆலோசனைகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளலாம்.இதனால் தனிமைப்படுத்தலில் உள்ளோர் மன ஆரோக்கியம் மேம்படுவது உறுதி.

12) அரசாங்கத்திடமும்,சமூக வலைதளங்களிலும் நோய் கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வுக்கான நமது எண்ணங்களை பகிர்ந்து கொண்டால் அவற்றில் சிறந்தவை செயல்பாட்டிற்கு வர வாய்ப்புண்டு.ஆக்கப்பூர்வமான, புதுமையான,சுயமான சிந்தனைகள்தான் தேவை.வாட்ஸ்அப் வதந்திகளை கவனமாகத் தவிர்த்துவிட வேண்டும்

Representational image
Representational image

13) நோய் குறித்த பாசிட்டிவான செய்திகளை அவற்றின் உண்மைத் தன்மையை அறிந்த பின்னர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டால் விழிப்புணர்வும்,நேர்மறை சிந்தனையும் பரவலாக்கப்படும்.

14) புதிய புதிய கதைகள் மற்றும் பாடல்களை குழந்தைகளுக்கென உருவாக்கி அவற்றை மற்றவர்களுக்கும் பகிரலாம். இதனால் படைப்புகள் பரவலாக்கப்படும்.

15) இணையதள வங்கிச் சேவை மற்றும் இணையம் சார்ந்த பிற சேவைகள் பற்றி தெரியாதவர்களுக்கு அவற்றை நாமே செய்து கொடுப்பது தற்போதைய சமூகக் கடமை.

16) நமது அன்றாட பணிகளில் நமக்கு வழக்கமாக உதவக்கூடிய நபர்களுக்கு தேவையான வசதிகளை தூரத்திலிருந்து செய்து கொடுப்பது இச்சூழலில் அடிப்படை அறமாகும்.

17) நாம் கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள் முதலியவற்றை எழுத முயற்சிக்கலாம். அவற்றை நண்பர்களுடன் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டு படைப்பாற்றல் சிந்தனையை வளர்க்கலாம்.

18) உணவை ரசித்து உண்ணவும், நீரை ருசித்துக் குடிக்கவும் பழகலாம்.

19) முதியவர்களுக்கு அருகில் நெருங்கிவிடாமல் சற்று எட்ட நின்றே அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதும் தற்போது அடிப்படை கடமைதான்.

20) குழந்தைகளுக்கு நோய் குறித்து பயமூட்டாமல் கற்றுத்தருவது அவசியமான ஒன்று.

Representational image
Representational image

இன்றைய சூழலில் ஒரு முக்கியமான விஷயத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

சமூகத்துடனான அனைத்து வித தொடர்புகளையும் முற்றிலும் துண்டித்துக்கொண்டு வாழ்வது தனிமை.(Loneliness)

உடல்சார்ந்த தொடுகையைத் தவிர்க்கவேண்டி தனியாக இருப்பது தனிமைப்படுத்தல்.(Isolation)

எனவே, நோயுற்றவர்களைத் தனிமைப்படுத்துவதும், ஒருவர் சமூகத்தை விட்டு விலகி தனிமையில் இருப்பதும் வெவ்வேறானவை என்ற புரிதல் அனைவருக்கும் அவசியம்.

மனிதன் தனியாக வாழ்வது கடினம். நமது உடல் மற்றும் மனம் சார்ந்த தேவைகளுக்காக சமூகத்துடன் ஏதேனும் ஒருவகையில் நாம் தொடர்பு கொண்டாக வேண்டியுள்ளது.

இன்று இணையதளங்கள்,சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் அதற்கு உதவிபுரிகின்றன.

சமூகத்தை, சகமனிதர்களை முற்றிலும் விடுத்து தனிமையில் வாழாமல், சமூகத்துடன் ஏதேனும் ஒருவகையில் தொடலற்ற தொடர்பில் வாழ்வதே இன்றைய சூழலில் அவசியமாகிறது.

மேற்கூறிய யோசனைகள் இதனை ஆக்கபூர்வமாக சாத்தியமாக்கக் கூடும்.

Representational image
Representational image

"அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க"

என்ற திருக்குறளில், நெருப்பு காய்பவர் அதனை விட்டு விலகிவிடாமலும்,மிகவும் நெருங்கிவிடாமலும் குளிர்காய்வர் என்று அரசனைச் சார்ந்து வாழ்பவர் நடந்துகொள்ளவேண்டிய முறை குறித்த வள்ளுவரின் விளக்கம், இன்றைய சூழ்நிலைக்கும் பொருத்தமாக அமைகிறது.

நெருப்பு காய்பவர் போலவே நாமும் இன்று சமூகத்தை விட்டு விலகிவிடாமலும்,அதே நேரம் நெருங்கி விடாமலும் சரியான தொலைவில் இருப்பது அவசியமாகிறது.

"கொரோனோ" மனிதனுக்கான ஒரு ஆஸிட் டெஸ்ட்.இதில் மனித சமூகம் வெற்றியடைவது உறுதி.அந்த வெற்றியின் அடித்தளமாக தற்போதைக்கு நாம் "தொடலைத் தவிர்த்த தொடர்பைப் பராமரிப்போம்"

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு