Published:Updated:

வேற வேற வேற..! - கால் சென்டர் கலாட்டாக்கள் #MyVikatan

Representational image
Representational image ( Pixabay )

நம்முடைய அடையாளத்தை உறுதிப்படுத்தும் பட்டனை அழுத்தி முடிப்பதற்குள், நம் அடையாளமே நமக்கு மறந்துபோய்விடும்..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கால் சென்டரைத் தொடர்பு கொண்டாலே உரத்த குரலில் கோபமாகத்தான் பலரும் பேசுகின்றனர். எப்போது கால் சென்டருக்குப் பேசினாலும் கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் மட்டுமே பேசுவோம் என்று ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் புத்தாண்டு சபதம் எடுக்கிறார்களோ என்று தோன்றும் அளவிற்கு கால் சென்டர்களில் உரையாடல்கள் அனல் பறக்கும். கால் சென்டர் கலாட்டாக்கள்-ஒரு ஜாலி பதிவு!

*பல மொழி வித்தகராய், பொறுமை என்னும் கடலில் மூச்சுப் பிடிக்க மூழ்கி முத்தெடுத்தால் மட்டுமே கால் சென்டரை லைனில் பிடிக்க முடியும்!

*நம்முடைய அடையாளத்தை உறுதிப்படுத்தும் பட்டனை அழுத்தி முடிப்பதற்குள், நம் அடையாளமே நமக்கு மறந்துபோய்விடும். அது உண்மையில் நாம் தானா என்னும் சந்தேகம் ஹவியாய் எழும்.

Representational Image
Representational Image
Pexels

*ஏழுகடல், ஏழுமலை தாண்டி அதிசயமாக நமக்கு லைன் கிடைத்தாலும், 'காத்திருங்கள்' என புரியாத இசையைப் போட்டுவிட்டு நம்மை அரைத்துக்கத்தில் ஆழ்த்தும் பணியை செவ்வனே செய்வார்கள்.

*"பொறுமை கடலினும் பெரிது" என்பதை கரைத்துக் குடித்தவர்கள் மட்டுமே கால் சென்டர்களில் எப்போதுமே பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பர்.

*தங்களுடைய பெயரை 'மிஸ்டர்' என்ற அடைமொழியோடு கால் சென்டரில் விளிக்கும்போது, ஆண்களில் பலருக்கும் பெருமை பிடிபடாது. வீரத்தின் அடையாளமான தங்களின் மீசையைப் பெருமையுடன் ஒருமுறைக்கு இருமுறை தடவி விட்டுக் கொள்வர்.

*நாம் என்ன பேச ஆரம்பித்தாலும், எமர்ஜென்சி வார்டில் உள்ள டாக்டர் போலவே அவசர அவசரமாக நம்முடன் பேசுவார்கள். நாம்தான் ஏதோ வேலையற்று பேசிக்கொண்டு இருப்பது போல எண்ணத் தோன்றும்.

*கால் சென்டர் அலுவலர் நம்முடன் பேசி முடித்ததும் உச்சி மாநாடு எதிலும் கலந்து கொள்ள ப்ளைட்டைப் பிடிக்கப் போகிறாரோ என்ற சந்தேகம் மின்னி மின்னி மறையும்.

*வேலைக்கு போகாத பையன் என்ன கேட்டாலும் 'முதல்ல நீ வேலைக்கு போ' என்று அம்மாக்கள் கூறுவது போலவே, நாம் என்ன கேள்வி கேட்டாலும் 'ப்ராஞ்சுக்குப் (branch) போங்க, ப்ராஞ்சுக்குப் போங்க' என்றே கூறுவார்கள். இது என்னவோ 'கூப்புக்குப் போ' என்பது போலவே நமக்கு கேட்கும்.

*ப்ராஞ்சுக்குப் போறதா இருந்தா நாங்க எதுக்கு கால் சென்டருக்கு போன் பண்ணப் போறோம் என்ற மில்லியன் டாலர் கேள்வி மட்டும் எப்போதும் அந்தரத்திலேயே நிற்கும்.

*நமது உயரதிகாரி நம் கேள்விக்கு பதிலாய் கேள்விகளே கேட்பது போன்று, கால் சென்டர் உரையாடல்களில் அவ்வப்போது கேள்விகள் வந்து நம்மைத் திகிலூட்டும்.

Representational Image
Representational Image

*போகாத ஊருக்கு வழி சொல்வது போல, நாம் ஒன்று கேட்டால் வேறு ஒரு பதிலே எப்போதும் கிடைக்கும்.

*அபாய கட்டத்தில் உள்ள நோயாளிக்கு கெடு வைப்பது போன்றே, நமது பிரச்சனைகளின் தீர்விற்கும் 48 மணி நேரம் என கெடு வைக்கும் போது நமக்கு லைட்டாய் ஜெர்க் ஆகும்.

*வீட்டில் ரசத்தில் உப்பு அதிகமானதால் உண்டான கோபத்தையும், உப்புமா சாப்பிட்ட கடுப்பையும் சிலர் கால் சென்டர் அலுவலரிடம் கொட்டித் தீர்த்து விடுவார்கள். இதையெல்லாம் கேட்டபிறகும், உங்களுக்கு வேறு ஏதாவது தகவல் தேவையா என்று கேட்கும்போது "நீ ரொம்ப நல்லவன்டா" என்று பலரது நெஞ்சு விம்மும்.

*கால் சென்டரில் தாங்கள் நடத்திய சண்டைகளையும், வெற்றிகரமான உரையாடல்களையும் பதிவு செய்து, அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து இணையப் போராளிகள் நம்மை வெறி ஏற்றுவார்கள்.

*இதை ரெக்கார்டு செஞ்சு உங்க மேலதிகாரிக்கு போட்டுக் காட்டுங்க என இந்தியன் தாத்தா போல பலர் கெத்தாக சவால் விடுவர்.

*மளிகை கடை அண்ணாச்சிகள் 'வேற வேற' என்று கூறுவது போல, வேறு ஏதேனும் தகவல் தெரியவேண்டுமா என்ற கேள்வி வந்து விழுந்து கொண்டே இருக்கும்.

மளிகைக்கடை வரிசையில் வட்டதில் இருப்பது போன்ற எண்ணம் நமக்கு தோன்றுவதை தவிர்க்க முடியாது.

*கால் சென்டரில் வேலை பார்ப்போர் எல்லாம் யோகா மற்றும் தியானம் எல்லாம பழகி ஒருவித ஜென் மனநிலையில் இருக்கிறார்களோ என்று சந்தேகம் நமக்கு அவ்வப்போது எழுவதை தவிர்க்க முடியாது.

*'உங்க கம்ஃப்ளைண்டை பதிவு செய்து கொள்ளலாமா?' எனக் கேட்கும்போது போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டையா FIR எழுதுவது போன்றதொரு பிம்பம் மின்னி மறையும்.

Representational Image
Representational Image

*3 நிமிடம் மூச்சு பிடிக்க நாம் பேசியதை எல்லாம் கேட்டுவிட்டு,'இது எங்க டிபார்ட்மெண்ட் இல்லை.உரிய டிபார்ட்மெண்ட் அதிகாரிக்கு உங்க இணைப்பை கனெக்ட் பண்றேன்' என்று கூறும் போது,மே மாத வெய்யிலில் மண்டையில் மிளகாய் அரைத்துப் பூசியது போன்று பலருக்கும் எரிச்சல் மேலிடும்.

*ஒரு தடவை பேசி வச்சாலே நமக்கு பி.பி அடிக்குது. இதே வேலையா எப்படித்தான் இருக்காங்களோ என்னும் ஐயம் இளகிய மனம் படைத்தோருக்கு உண்டாகி கண்ணோரம் கசிய வைக்கும்.

*கால்சென்டரில் சொல்லக்கூடிய ஆலோசனைகளை 'நாங்க ஏன்டா நடுச்சாமத்துல சுடுகாட்டுக்குப் போறோம்' என்ற ரீதியிலேயே பலர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

*பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கிறதோ, இல்லையோ, பொறுமையுடனும்-அவசரமாகவும் ஒரே நேரத்தில் பேசும் வித்தையை நாமெல்லாம் எப்போது கற்றுக்கொள்வது என்ற கவலையுடன் பலரும் இணைப்பைத் துண்டிப்பர்!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு