Published:Updated:

தவிப்பு முதல் ஏக்கம் வரை... வெளிநாடு வாழ் கணவன் தன் மனைவிக்கு எழுதும் கடிதம்! #MyVikatan

நாம் தினமும் பேசுவோம். அங்கே என்ன நடக்கிறது என்று நீ சொல்வாய். இங்கே ஏதாவது சுவாரஸ்யமான விஷயம் நடந்தால் நான் சொல்வேன்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நாம் 80 அல்லது 90-களில் வாழ்ந்துகொண்டிருந்தால் இப்போது முகம் பார்த்து வாட்ஸ்அப்பில் பேசுவதுபோல அப்போது பேசியிருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்தில் தொலைபேசியே சிலர் வீட்டில்தான் இருக்கும். அப்போதெல்லாம் கடிதம்தான்.

எனக்கு நினைவிருக்கிறது... அப்போது நான் சிறுவன். என் அப்பா தொலைத்தொடர்புத் துறையில் பணியில் இருந்தார். ஒரு பயிற்சிக்காக ஆறு மாத காலம் சேலம் சென்றிருந்தார். அப்போது அடிக்கடி கடிதம் எழுதுவார். எங்கள் கிராமத்தில் தொலைபேசியே கிடையாது. அப்பாவிடம் பேச வேண்டும் என்றால் அருகில் உள்ள நகரமான அரக்கோணம்தான் செல்ல வேண்டும். அங்குள்ள உறவினர் வீட்டில்தான் தொலைபேசி இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு சென்று பேசுவாள் அம்மா.

couple
couple

அப்பா மாதம் இருமுறை கடிதம் எழுதுவார். இப்போதுகூட நாங்கள் ஒன்றாக வீட்டில் இருக்கும் நேரங்களில் அப்பாவைக் கலாய்ப்போம். `இங்கே இருக்கும் சேலம் சென்றுவிட்டு என்னா பில்ட் அப் பண்ணியிருக்கீங்க அப்போ’ என்று.

இந்த உரையாடலின்போது நான் உன்னிடம் சொன்னேன்... `எனக்கு ஒரு கடிதம் நீ எழுது’ என்று. நீ சொன்னாய், `எனக்கும் நீங்கள் எழுத வேண்டும்’ என்று. எனக்கும் இது புதிதாக உள்ளது. நானும் யாருக்கும் கடிதம் எழுதியது கிடையாது. உறவுகளுக்கு கைபேசியில் பேசிவிடுவேன் அல்லது குறுந்தகவல் அனுப்பிடுவேன்.

எழுதுகிறேன் உனக்காக!

பொதுவாக நான் வேலைக்கு மலேசியா வந்தால் ஆறு மாதத்தில் வந்துவிடுவேன். அல்லது ஒரு வாரம் விடுப்பு எடுத்தாவது வந்து உன்னைப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன். இந்த இக்கட்டான சூழலில் என்னால் வரமுடியவில்லை. எனக்கும் ஒரு வனவாசம்தான். நான் காட்டில் இருக்கிறேன்... நீ வீட்டில் இருக்கிறாய். இருவருக்கும் அதே கஷ்டம்தான்.

சில நேரங்களில் யோசிப்பேன்... என்னடா வாழ்க்கை என்று.

அதை நினைத்து நான் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த பாடல்...

`பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை
நீலத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித் தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை...'

marriage
marriage

நாம் தினமும் பேசுவோம். அங்கே என்ன நடக்கிறது என்று நீ சொல்வாய். இங்கே ஏதாவது சுவாரஸ்யமான விஷயம் நடந்தால் நான் சொல்வேன். நான் தொலைபேசியில் காணொளியில் பேசும்போது நீ சிரித்துப் பேசினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சிலநேரம் மகிழ்ச்சியாகப் பேசுவாய்... சிறிது நேரத்தில் குறுந்தகவல் அனுப்புவாய்... `எனக்கு மனசு சரியில்லை’ என்று.

எனக்கு வருத்தமாக இருக்கும். நான் யோசித்துப் பார்ப்பேன். மற்றவர்களுக்கு நீ கஷ்டப்படுவது தெரியக்கூடாது என்று மகிழ்ச்சியாகப் பேசுவாய். பிறகு, என்னிடம் சேதியைச் சொல்வாய், என்னிடம் சொன்ன பிறகுதான் உனக்கு மனது இலகுவாகும். கொஞ்சம் நிம்மதியாகத் தூங்குவாய் என்று நான் நினைக்கிறேன். பின்பு அதை நினைத்து நான் தூங்காத நாள்களும் உண்டு. எல்லாம் கடந்துபோகும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாம் திட்டமிட்டோம்... 2020-ல் இரண்டாவது குழந்தைக்கு. அது இப்போது தள்ளிப்போகிறது. என்ன செய்வது? காலச்சூழ்நிலை அப்படி உள்ளது. எனக்கும் வருத்தம்தான். மறுபக்கம் நம் மகள். அவளுடைய வளர்ச்சி, சுட்டித்தனம் மற்றும் நினைவாற்றல் என்னை பிரமிக்க வைக்கிறது.

தொலைபேசியில் பேசும்போது, `அப்பா எப்போ வருவீங்க ஃபிளைட்ல’ என்று அவள் கேட்கும்போது, `என்னடா வாழ்க்கை இது குடும்பத்தைப் பிரிந்து’ என்று நினைக்கத் தோன்றும். `என்ன செய்வது என் வேலை அப்படி’ என்று மனதைத் தேற்றிக்கொள்வேன்.

Love
Love
Representational Image

அவளது எதிர்காலத்தை எப்படித் திட்டமிடுவது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். எந்தப் பள்ளியில் சேர்ப்பதென்று. அவளுடைய நடனத்துக்கு நான்தான் முதல் ரசிகன். தினமும் அவளுடைய அனைத்து நடன காணொளிகளையும் பார்த்துவிடுவேன். அது எனக்குப் புத்துணர்வு தரும். அதைப் பல நேரங்களில் நினைத்து நான் தனியாக சிரித்துக்கொண்டிருப்பேன். உடன் பணிபுரியும் நண்பர்கள் சொல்வார்கள்... `இவன் இந்த லோகத்தில் இல்லை’ என்று. என்ன செய்வது, மகளை நினைக்கும்போது இந்த உலகத்தையே மறந்துவிடுகிறேன்.

மற்றவற்றை வரும் காலத்தில் எழுதுவோம்...

- பாலாஜி கோதண்டன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு