Published:Updated:

முதல்வர் நிவாரண நிதி: ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் 10 கோடி நன்கொடை!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் நிதியுதவி
ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் நிதியுதவி

மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு ஹூண்டாய் ரூ.10 கோடி நன்கொடை! இந்த நிவாரணம் ரூ. 5 கோடி ரொக்கம் மற்றும் ரூ.5 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கியது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சிஎஸ்ஆர் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் அமைப்பு தனது ‘ஹூண்டாய் கேர்ஸ் 3.0’ முயற்சியின் கீழ் ரூ.5 கோடி நன்கொடையை கோவிட்-19க்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியது. கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழக அரசின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் இந்த நன்கொடை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அளிக்கப்பட்டது. மேலும், ரூ.5 கோடி மதிப்பில் ஆக்ஸிஜன் செலுத்தும் இயந்திரங்கள், பிபாப் இயந்திரங்கள், ஆக்ஸிஜன் செரிவூட்டிகள் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களும், தண்டையார்பேட்டை மற்றும் தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளும் நிறுவப்படும் எனவும் ஹூண்டாய் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த முன்களப்பணியாளர்களுக்கு மருத்துவ நுகர்பொருள்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் சார்பாக பேசிய நிர்வாக இயக்குநர் திரு. SS கிம், “கடினமான காலங்களில் எல்லாம் ஹூண்டாய் நிறுவனம் தமிழக அரசுடன் இணைந்து இருந்துள்ளது. இன்று, கொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக இந்த மாநிலம் சிறப்பாக போரிட்டு வரும் நிலையில் இதிலிருந்து தமிழகம் மீண்டுவர நமது நிவாரண உதவிகளை அளித்துள்ளோம். 25 ஆண்டுகளாக ஹூண்டாய் நிறுவனத்தின் இருப்பிடமாக இருந்து வரும் தமிழகத்தின் மக்களுடனான நமது உறவின் வெளிப்பாடாக இந்த நிவாரண உதவியைக் கருதுகிறாம். ‘மனிதகுலத்திற்கான முன்னேற்றம்’ எனும் எங்களது உலகளாவிய கொள்கையின்படி, இந்தியா இந்த பேரிடரில் இருந்து மீண்டு எழ ஹூண்டாய் முனைப்புடன் செயல்பட உறுதிகொண்டுள்ளது.” என்றார்.

2020ம் ஆண்டு, கொரோனா முதல் அலையின்போதும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் மாநிலத்தின் பல்வேறு பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ரூ.10 கோடி நிவாரண உதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு