Published:Updated:

மாபெரும் சபைதனில் - 32

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

பிரீமியம் ஸ்டோரி
அந்தப் பள்ளி வளாகத்தில் அடியெடுத்து வைக்கும்போதே மனதில் இனம்புரியாத உற்சாகம். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அலைமோதுகின்றன. வரவேற்கக் காத்திருக்கும் ஆசிரியர்களின் முகங்களில் புன்னகையும் பெருமிதமும். ஆம், பத்து வருடங்கள் வண்ணக் கனவுகளுடன் மாணவனாக வலம் வந்த அந்த வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறைச் செயலராக நுழைந்த தருணத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

காலை வணக்கக் கூட்டம் தொடங்குகிறது. மாணவர்களின் உயரக் குறைவு, ஊட்டச்சத்துக் குறைவு குறித்தெல்லாம் என் கண்கள், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்கின்றன. சாரண இயக்க மாணவரின் சீருடை, அன்றைய செய்திகள் வாசித்த மாணவியின் தமிழ் உச்சரிப்பு, தாமதமாய் வந்து சேர்ந்த ஆசிரியர் எனப் பள்ளி வளாகத்தை அளவிட முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். கூட்டம் முடிந்ததும், ஒவ்வொரு வகுப்பிலும் நான் படித்த வகுப்பறைகளைச் சுற்றிப் பார்த்து நினைவுகளை மீட்டியபடியே தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைகிறேன். மேசையில் முப்பது ஆண்டுக்கால ஆவணங்கள் காத்திருக்கின்றன. பத்தாம் வகுப்பின் வருகைப் பதிவேட்டில் பெயர்களை வருடிச் செல்கின்றன கண்கள். `ஒருநாள்கூட நீங்கள் விடுமுறை எடுக்கவில்லை’ எனத் தலைமை ஆசிரியர் நினைவூட்டுகிறார். நிமிர்ந்து பார்க்கிறேன்.

மாபெரும் சபைதனில் - 32

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது உறவினர் திருமணத்திற்காக ஒன்றரை நாள்கள் எடுத்த விடுப்பு தவிர, வேறெப்போதும் விடுமுறை எடுத்ததில்லை என்று திருத்துகிறேன். `பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறீர்கள்’ என்கிறார் உடன் வந்த கல்வி அலுவலர். `அது மிகவும் இயல்பானதுதான். எங்கள் வகுப்பில் பத்து மாணவர்களுக்கு மேல் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றோம். எனவே அது பெரிய சாதனை இல்லை’ என்கிறேன். தன்னடக்கமா அல்லது தற்பெருமையா என்று தெரியாமல் குழம்புகிறார் அவர். என் நினைவுகள் பத்தாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு நோக்கிப் பயணித்தது. கணிதத்தில் முழுமையான மதிப்பெண்கள் பெற்று ஒவ்வொரு தேர்விலும் அலட்சியமாய் சதமடித்த எங்களுக்குப் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிர்ச்சி காத்திருந்தது. மிகக் கடினமான கேள்வித்தாள். தேர்வு எழுதி முடித்து அறையை விட்டு வெளியே வந்துவுடனேயே தெரிந்துவிட்டது நான்கு மதிப்பெண்களுக்கான ஒரு கேள்விக்குத் தவறாக விடை அளித்துவிட்டேன் என்பது. கனத்த மனதுடன் வீடு திரும்பினால், காலையிலிருந்து விரதம் இருந்து காத்துக் கொண்டிருக்கிறார் அம்மா... அவரிடம் எப்படிச் சொல்வது? இருவரும் அரை மணி நேரம் அழுது கொண்டேயிருந்தது இன்னும் நினைவுகளில் தேங்கியிருக்கிறது. பின்னாளில் இரண்டு லட்சம் பேர் எழுதிய சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 38-வது இடம் பெற்றதில் கிடைத்த மகிழ்ச்சியின் அளவைவிட பொதுத்தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்கமுடியாத சோகம் ஏற்படுத்திய வலி அதிகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அறிவை விரிவாக்க வேண்டிய கல்விச்சூழல் மதிப்பெண் கொண்டு எழுப்பிய மதிற்சுவருக்குள் சிறை வைக்கப்பட்டது, விநோதம்தான். மாணவர்களுடன் அழகிய உரையாடலை மலரச் செய்ய வேண்டிய வகுப்பறைச் சூழல், அதிகாரம் செலுத்தும் அமைப்பாய் இறுகி, காலத்தால் உறைந்துபோனது எப்படி? அறிவுச் சாளரத்தின் வழியே தேடலைத் தொடங்கி வைக்க வேண்டிய பாடநூல், வெறும் கேள்விகளுக்கான விடைகள் புதைக்கப்பட்ட பாலைநிலமாக ஏன் மாறியது? மதிப்பெண் என்பது வெறும் முகவரி மட்டுமே என்ற புரிதல் எப்போது வரும்? கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர் என அனைவரும் தொடர்ந்து ஆழமாக விவாதிக்க வேண்டிய கேள்விகள் இவை.

சில மாதங்களுக்கு முன் பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க நேர்ந்தது. புதிய பாடநூல்களின் தரம், தேர்வு நேரத்தில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டிய செய்திகள் எனப் பேசி முடித்தபின் கேள்விகளுக்கான நேரம். மாணவர்களை முந்திக்கொண்டு ஓர் ஆசிரியரின் கேள்வி. சென்னையின் ஒரு பிரபல தனியார் பள்ளியில் பணியாற்றுவதாகவும், தமிழக அரசு 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் ரேங்கிங் முறையை எடுத்துவிட்டதால் தலைசிறந்த மாணவர்களைச் சரியாக ஊக்குவிக்க முடியாமல்போகிறது. தரவரிசை முறையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னபோது அரங்கம் மௌனமானது. உள்மனதில் பொங்கிய கோபம் வார்த்தைகளாய் வடிவம் பெற சில விநாடிகளாயின. அவரைப் பார்த்து ‘ஒரு கதை சொல்லட்டுமா’ என்று கேட்கிறேன். அரங்கத்தில் மாணவர்கள் நிமிர்ந்து உட்காருகின்றனர். நான் படித்த கோட்டைப் பள்ளியின் சிறப்புகளைப் பட்டியலிட்டபடியே முதல் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை நடந்த ஒவ்வொரு தேர்விலும் நான் முதல் ரேங்க் வாங்கிய கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறேன். மஞ்சள் நிற அட்டையில் சிவப்பு நிறத்தில் தனித்துத் தெரியும் முதல் ரேங்க் முதலில் மகிழ்ச்சியைக் கொடுத்தது. பின்னர் பெருமிதம் தந்தது. இறுதியில், கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடும் வெறியை ஊட்டியதும் நிகழ்ந்தது என்று தொடங்கியது கதை. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை வீழ்த்த முடியாப் பேரரசனாக வலம் வந்தவன், ஒரு புதிய எதிரியைச் சந்திக்க நேர்ந்தது. அவன் பெயர் விஜயசேகர். வேறொரு பள்ளியில் படித்துவிட்டு இங்கே மாறிவந்தவனைச் சற்று அலட்சியமாகவே முதலில் எடுத்துக்கொண்டோம். ஆனால் அரையாண்டுத் தேர்வு முடிவுகளில் அதிர்ச்சி காத்திருந்தது. வாழ்வில் முதல் முறையாக நான் முதல் ரேங்கை இழந்த தருணம் அது... அந்த நாளை, என்னை வீழ்த்திய மாணவனை, ஏன் அவன் பெயரைக்கூட முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்தும் நான் வெறுத்துக்கொண்டிருக்கிறேன். மாணவர்களின் பிஞ்சு மனதில் இவ்வளவு வன்மத்தை விதைக்கத்தான் வேண்டுமா? கதை இந்தக் கேள்வியுடன் நிறைவுபெற்றபோது அரங்கில் மாணவர்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். கேள்வி எழுப்பிய ஆசிரியரின் முகத்தில் தெரிந்த ஏமாற்றம், மாணவரின் கரைபுரண்ட உற்சாக அலைகளில் சிக்கி மறைந்து போனது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்கள் பெயரை அறிவிக்கும் நடைமுறையைக் கைவிட்டுப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் வரைவில் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன. “கற்றல் என்பது தெரிதல், அறிதல், புரிதல், பயன்படுத்தல், வினவுதல், திறனடைதல், புதியன படைத்தல் என்று பல்வேறு நிலைகளில் நடைபெறும் ஓர் அழகிய செயல்பாடு. இதில் எழுத்து வழித் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்து ஒரு சில மாணவர்கள் மட்டும் போற்றப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்...” அரசாணையில் வழக்கமான வறண்டுபோன வரிகளை இடமாற்றம் செய்து அழகுதமிழ் தழைக்கச் செய்திட்ட ஒரு சிறு முயற்சி அது!

மதிப்பெண் பெறும் போராட்டம் ஒரு புறம்... என்ன படிப்பது என்ற குழப்பம் மறுபுறம்... பெற்றோரின் கனவுகள் துரத்திட, களைத்துப்போன வீரர்களாய் மாணவர்கள். மே மாதத் தட்பவெப்ப நிலை மோசமடைய இதுவும் ஒரு காரணமாய் இருக்கக் கூடும்.
மாபெரும் சபைதனில் - 32

பன்னிரண்டாம் வகுப்பில் என்னோடு மொத்தம் 25 மாணவர்கள். ஆங்கில வழிப் பாடப்பிரிவு என்பதால் எண்ணிக்கை சற்றுக் குறைவு. ஆனால் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. 25 பேரில் 21 மாணவர்களுக்குத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. மருத்துவம், பொறியியல், கால்நடை மருத்துவம், வேளாண்மைப் பிரிவுகள் என, தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் அடியெடுத்து வைத்தோம். அந்த வருடம் மாநில அளவில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்கள் பட்டியலில் என் வகுப்புத் தோழரின் பெயரும் இருந்தது. மிகக் கடினமான வினாத்தாள் அமைந்த வேதியியல் பாடத்தில் மாநிலத்திலேயே நூறு சதவிகித மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்களில் அவரும் ஒருவர். அப்போது நடைமுறையில் இருந்த நுழைவுத்தேர்விலும் நல்ல மதிப்பெண். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணிப்பொறியியல் படிக்க ஆர்வம் அவருக்கு...

கலந்தாய்வின் முதல் நாளிலேயே சென்னை மருத்துவக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் இரண்டிலும் அவருக்கு இடம் கிடைத்தது என்ற செய்தியறிந்து அவரிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள தொலைபேசியில் அழைத்தால், அவர் உண்ணாவிரதம் இருந்துவருவது தெரிய வந்தது. தன் மகனை டாக்டராக்கிப் பார்க்கவேண்டும் என்ற வைராக்கியம் அவர் அம்மாவுக்கு. பிறகு, அம்மாவின் ஆசைப்படியே மருத்துவக் கல்லூரியில் சேர, அவருடைய பொறியியல் கனவுகள் சிதைந்துபோயின. அதைவிடப் பெரும் சோகம், மருத்துவக் கல்லூரியில் முதல் செமஸ்டரில் மிகக் குறைந்த மதிப்பெண் வாங்கியது. இன்று ஒரு மருத்துவராகத் தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் கணிப்பொறியியல் துறையில் காலடி வைத்திருந்தால் அவர் அரிய சாதனைகள் செய்திருப்பார் என நண்பர்கள் சந்திக்கும்போது பேசிக்கொள்வோம். பெற்றோர் தங்கள் கனவுகளை எல்லாம் குழந்தைகள்மீது திணித்து வளர்க்கும் முறையை `Helicopter Parenting’ என்பார்கள். பதின் பருவ வயதினரைத் தோழமையுடன் அணுகும் பெற்றோரே, பிள்ளைகளுக்கு நல்ல பாதையை அமைத்துத் தருகிறார்கள்.

மாணவர்களின் கல்லூரிப் பயணத்துக்கு வழி காட்டுவதில் ஆசிரியர்களின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாய் எழுவது உண்டு. அதுகுறித்த வித்தியாசமான அனுபவம் ஈரோடு மாவட்டத்தில் எனக்குக் கிடைத்தது. வழக்கம்போல் அன்றும் திங்கட்கிழமை... குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நிறைவேறாத அடிப்படைத் தேவைகள், வேலை வாய்ப்பு, ஓய்வூதியம் கோரி வழங்கப்படும் மனுக்களுக்கு நடுவே பள்ளிச் சீருடை அணிந்து சிறுவன் வந்து நின்றால் எப்படி இருக்கும்? `பெருந்துறை அரசுப் பள்ளியில் படித்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த அவனுக்கு, கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிப்பது கனவு. ஆனால் விண்ணப்பிக்கும் தேதி முடிந்துவிட்டதால் வேறு வழி தெரியாமல் கலெக்டர் அலுவலகம் வந்திருக்கிறான். அருகில் அவன் தந்தை அப்பாவியாக நிற்கிறார். அவர் தோளில் பறவைகளைச் சுட்டு வீழ்த்தும் துப்பாக்கி மௌனமாய் அசைந்துகொண்டிருக்கிறது. ஆம், நாடோடிகளாகத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு சமூகத்தின் விளிம்பு நிலையில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தைச் சேர்ந்த குடும்பம் அது. அவர்கள் கைவண்ணத்தில் உருவாகும் ஊசி, பாசி, மணிகள் அடுத்தவரை மட்டுமே அலங்கரிக்கும் அவலம். நிலையில்லா அந்தச் சமூகச் சூழலிலிருந்து நல்ல மதிப்பெண் பெற்ற அந்தச் சிறுவனைக் கால்நடை மருத்துவராக்கிப் பார்க்க, படிக்காத அந்தப் பாமரக் குடும்பம் விரும்புகிறது. உடனடியாகச் செயலில் இறங்குகிறோம். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னைத் தலைமையகம் வரை முயன்றும் பலனில்லை. `காலம் கடந்துவிட்டது. தளர்வுகள் சாத்தியமில்லை’ என்று தகவல் கிடைக்கிறது. ஒரு வருடம் காத்திருந்தால் அந்தச் சிறுவன் மீள முடியாத சூழலுக்குத் திரும்பி விடுவானோ என்ற பயம். வேளாண் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாள்கள் அவகாசம் உள்ளது என்று ஒரு செய்தி வருகிறது. வேளாண் கல்லூரியில் அடியெடுத்து வைக்கத் தயக்கத்துடன் சம்மதிக்கிறது அந்தக் குடும்பம். அடுத்த சில வாரங்களில் கல்லூரிக்கு விண்ணப்பிப்பதில் தொடங்கி, கலந்தாய்வு, தொடக்கக் கல்விச் செலவுகளுக்கு நன்கொடையாளர் மூலம் நிதி உதவி, கல்விக் கடன் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு, மதுரை வேளாண் கல்லூரி நோக்கிப் பயணமானான் விஜயன் என்ற அந்தச் சிறுவன். அதற்கிடையே அவன் படித்த பள்ளியின் தலைமையாசிரியருக்கு கலெக்டர் அலுவலகத்திலிருந்து அழைப்பு சென்றது.

காரணம் தெரியாமல் ஈரோடு வந்தார் தலைமையாசிரியர். வந்தவருக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பாமரக் குடும்பத்தில் பிறந்து, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவனைக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியாமல் தடுமாற விட்டது யாருடைய குற்றம்? வழிகாட்டி யாருமின்றி கலெக்டரிடம் அடைக்கலம் கேட்டு ஓடிவந்த சிறுவனை அலைக்கழித்தது யார்? கலெக்டரைச் சந்தித்து முறையிட முடிந்த அந்தச் சிறுவனால் அந்தப் பள்ளித் தலைமையாசிரியரை ஏன் சந்திக்க முடியவில்லை? வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? கேள்விக் கணைகளால் அன்று அதிர்ந்தது என்னுடைய அறை. அந்த ரௌத்திரத்தின் விளைவுதான், பின்னாளில் 11 மற்றும் 12-ம் வகுப்புப் பாடநூல்கள் அனைத்திலும் தொழில்நுட்பப் படிப்புகள் மட்டுமன்றி ஒவ்வொரு துறையிலும் என்னென்ன உயர் படிப்புகள் உள்ளன, எப்படி விண்ணப்பிப்பது, கல்வி உதவித்தொகை விவரங்கள் அடங்கிய வழிகாட்டிப் பக்கங்கள் இடம்பெற்றன.

மாபெரும் சபைதனில் - 32

என்ன படிப்பது, எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது என்று பெற்றோரின் எதிர்பார்ப்பும், மாணவரின் கனவுகளும் உரசிக் கொள்ளும் காலம் இது. ஒரு ஆங்கில நாளிதழ் `Passion or Profession’ என்ற தலைப்பில் பெற்றோர், மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்றது சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது.

ஒரு பெற்றோருக்குத் தன் மகளை டாக்டராக்க வேண்டும் என்பது கனவு, மகளுக்குச் சட்டம் பயில விருப்பம். இன்னொரு தந்தைக்குத் தன்மகன் தேர்ந்தெடுக்கும் Bio technology துறையில் வேலை வாய்ப்பு எப்படி இருக்குமோ என்ற கவலை... மாணவர்கள் சிலருக்கு தங்களுக்குப் பிடித்த Ethical hacking, Formula racing, Blog writing போன்றவற்றில் முழுநேரம் ஈடுபட முடியுமா என்ற எதிர்பார்ப்பு... அவர்களுக்கு அன்று நான் கொடுத்த பதில். `வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்களை உற்று நோக்குங்கள்... அவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள். அதில் மிகக் கடுமையாக உழைத்திருப்பார்கள்... வெற்றியின் ரகசியம் அதுதான்!’

அதுமட்டுமல்ல, நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வேறுமாதிரியானது. It is an era of Specialisation. தேடித்தேடிக் கற்றுக்கொண்டு நம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பல்வேறு துறைகளின் எல்லைகள் மறைந்து ஒன்றோடு ஒன்று உறவாடத் தொடங்கியிருக்கின்றன. கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கணித்திட, கணித மாதிரிகள் (Mathematical Modeling Tests) உதவுகின்றன. கீழடி அகழாய்வில் தொல் DNA பகுப்பாய்வு (Ancient DNA Analysis) அதிகம் பயன்படுகிறது. இந்தியாவில் காலனிய ஆதிக்கம் குறித்து ஆராயும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இன்று பொருளாதார அறிவும் அவசியம். மரபு சார் அறிவை அரவணைத்துச் செல்லும் தொழில்நுட்பம் நம் எதிர்காலத்தைச் செதுக்கும். தனித்தனித் தீவுகளாய் ஒவ்வொரு துறையும் செயல்பட்ட காலம் மாறி இணைந்த கரங்களுடன் முன்னேற வேண்டிய நேரமிது.

வானவில் என்பது நிறங்களின் அணி வகுப்பு. அது பழைமையின் குறியீடு. நிறங்கள் பல உறவாடி உருவாகும் வண்ணச் சிதறல்தான் நமது நவீன அடையாளம்.

‘புதிய வார்ப்புகள்.’

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு.

மாபெரும் சபைதனில் - 32

Gene Machine - தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்த வெங்கடராமன் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு வென்ற கதை இது. பரோடாவில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர் அமெரிக்காவில் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பிஹெச்டி பட்டம் பெறுகிறார். திடீரென்று ஆர்வம் திசை மாற, கலிபோர்னியா பல்கலைக்கழக உயிரியல் இளங்கலை வகுப்பில் சேர்ந்ததுதான் ஆச்சர்யம். அவர் எப்படி டிஎன்ஏ மற்றும் ரைபோசோம் ஆராய்ச்சிக்குள் நுழைந்து, வேதியியல் பிரிவில் நோபல் பரிசை வென்றார் என்பதை சுவைபடக் கூறும் நூல் இது. ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே காணப்படும் போட்டி, பொறாமைகள், நோபல் பரிசை நோக்கிய பயணம் என அனைத்தும் நகைச்சுவை கலந்து பரிமாறியிருப்பார். ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு