Published:Updated:

மாபெரும் சபைதனில் - 36

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
மாபெரும் சபைதனில்

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

மாபெரும் சபைதனில் - 36

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

Published:Updated:
மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
மாபெரும் சபைதனில்
நான்கு மாதங்களுக்கு முன் சென்னை அண்ணாநகரில் வணிக வளாகத் திரையரங்கு ஒன்றில் குடும்பத்தோடு ‘Jojo Rabbit’ படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போதுதான் அந்தப் பெயரை மீண்டும் கேட்டேன். ‘ஷாம்லி.’ கூட்டத்தில் விலகிப்போன அந்தச் சிறுமி மீண்டும் தன் தாயின் கரங்களைப் பற்றிக்கொண்டு இளவரசிபோல் நடந்து செல்கிறாள்.

இல்லம் திரும்பிய பின் சில மணித்துளிகளுக்குத் திரை விமர்சனம் நீண்டது. குழந்தைகளின் பார்வையில் சர்வாதிகாரி ஹிட்லரை நகைச்சுவை கலந்து விமர்சிக்கும் திரைப்படம் அது. திரைமொழியின் அழகியலை விவரித்துக் கொண்டிருக்கும் போதே நினைவுகள் பின்னோக்கிப் பயணித்துக் கல்லூரி வாசலைத் தொட்டு நிற்கின்றன. பொறியியல் கல்லூரியில் அடியெடுத்து வைத்தவுடனே நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் பக்கங்கள் விரிகின்றன. புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட் எழுதிய சிறுகதை ஒன்றை, அவரின் மானசிக அனுமதியோடு சில திருத்தங்கள் செய்து நான் மொழிபெயர்த்த சிறுகதையின் தலைப்பு ‘இன்னும் சற்று நேரத்தில் ஷாம்லி.’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தில்லியில் தங்கிப் படித்துவரும் கல்லூரி மாணவனைப் பற்றிய கதை அது. ஒவ்வொரு விடுமுறையிலும் உத்தரப் பிரதேச மலைக் கிராமத்திலிருக்கும் பாட்டி வீட்டுக்கு அவன் செல்வது வழக்கம். தான் இறங்கவேண்டிய இடத்திற்கு முப்பது மைல் தூரத்திற்கு முன்னால் அதிகாலை ஐந்து மணிக்கு ரயில் நுழைந்து நிற்கும் இடம்தான் ’ஷாம்லி.’ வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அந்த ரயில் அங்கு நிற்கும். பயணிகள் யாரும் அங்கே ஏறி இறங்கி அவன் பார்த்ததில்லை. ரயில் நிலையமே வெறிச்சோடித்தான் கிடக்கும். தேநீர், பழங்கள் விற்கும் சில கடைகளும் பசியோடு அலைந்துகொண்டிருக்கும் நாய்க் குட்டிகளும் மட்டுமே அந்த ரயில் நிலை யத்துக்கு அடையாளம். ரயில் நிலையத்தோடு கோபித்துக் கொண்டு விலகும் மண்பாதை மட்டும் அருகிலிருக்கும் அடர்ந்த கானகத்தினுள் சென்று தஞ்சமடையும்.

மாபெரும் சபைதனில் - 36
மாபெரும் சபைதனில் - 36

இந்த முறையும் அப்படித்தான். ஷாம்லியின் தனிமையைச் சிதைக்க விரும்பாமல் மெதுவாகவே நகர்ந்து வருகிறது ரயில். வெற்றிடத்தை எதிர்நோக்கியவன் கண் முன்னால் ஓர் அழகு தேவதை. வெற்றுப் பாதங்கள், நைந்துபோன உடைகளில் தயக்கம். மிதந்து வந்தவளின் கரங்களில் மலர்க் கூடை. இவனுடைய பெட்டியின் ஜன்னலருகே புத்தம் புது மலர்களின் மணம் பரவத் தொடங்குகிறது. இவன் பார்வையை முதலில் புறக்கணிக்க முயன்று தோற்றுப்போன அவளின் கண்கள் திரும்பி வருகின்றன. பழுப்பு நிற முகம், அகன்ற விழிகளை மறைத்திட முயலும் அலைபாயும் கூந்தல். கண்களில் மட்டும் மெல்லிய சோகம் இழையோடுகிறது. நடைமேடையில் மௌனம் தவழ்கிறது. விற்பனையை எதிர்பார்த்து ஏமாந்தவள் விலகிச் செல்கிறாள். பின்தொடர்ந்தவன் நடை மேடையிலுள்ள தேநீர்க் கடைக்கருகே செல்கிறான். அருகில் வந்த பெண் மலர்க் கொத்தின் நறுமணம், மலர்க் கூடையின் தரம் குறித்து அடுக்கிக் கொண்டே செல்கிறாள். இதழ்கள் உதிர்த்திடும் இயல்பான சொற்களும், விழிகள் தேர்ந்தெடுத்த வியூகமும் வேறுவேறு திசைகளில் பயணிக்கத் தொடங்குகின்றன.

மலர்க்கூடையை மறுத்தவனின் விரல்கள் அவள் கரங்களைப் பற்றிய விதத்தில் காலங் காலமாய் உடனிருந்த உணர்வைப் பெற்றாள் அவள். `விடுமுறைக்குப் பின் தில்லி செல்ல வேண்டும்’ என்கிறான் அவன். அவளோ, `தான் செல்வதற்கு எந்த இடமும் இல்லை. தன் வாழ்வே இந்த நடைமேடையும், அந்தச் சிற்றூரும் தான்’ என்கிறாள். விலகிய அவள் கரங்கள் மீண்டும் சரணடைய விரும்பின. அடர்ந்த வனப்பகுதியில் எதிர்பாராமல் முகிழ்ந்த அந்த நேசத்தைக் குலைத்திட முயல்கிறார் ஸ்டேஷன் மாஸ்டர். ரயில் புறப்படத் தயாராகிறது. ‘நான் மீண்டும் வருவேன். எனக்காகக் காத்திருப்பாயா?’ என்கிறான். மென்மையாகத் தலைசைக்கிறாள். ஓடும் ரயிலில் தாவி ஏறிக்கொள்கிறான். அந்தப் பயணம் மட்டுமல்ல, அந்த வருடம் முழுவதும் அவன் நினைவுகளில் நிறைந்திருக்கிறாள் அவள்.

மாபெரும் சபைதனில் - 36

அடுத்த விடுமுறையில் சற்று முன்னதாகவே பாட்டி வீட்டுக்குக் கிளம்புகிறான் அவன். ஷாம்லி ரயில் நிலையத்தில் அவளிடம் என்ன பேசுவது, எப்படி நடந்துகொள்வது என்ற ஒத்திகையிலேயே இரவு கழிந்தது. சரியாக ஐந்து மணிக்கு ஷாம்லி நடைமேடையில் நுழைகிறது ரயில். சன்னல் கம்பிகளுக்கிடையே தன் தேவதையைத் தேடுகிறான். கண்டுபிடிக்க முடியவில்லை. நடைமேடையில் இறங்கியவன் அங்குமிங்கும் தேடியோடிப் பார்க்கிறான். அவளைக் காணவில்லை. அருகிலிருந்த தேநீர்க்கடைக்காரரிடம் விசாரித்தால், தேநீருடன் சேர்ந்து பொங்கியபடியே, `ரயில் புறப்படத் தயராகிவிட்டது’ என நினைவூட்டுகிறார். பிரிய மனமின்றிப் பயணத்தைத் தொடர்ந்தவனின் நினைவுகள் மட்டும் ஷாம்லி நடைமேடையிலேயே தங்கிப்போயின.

கசந்துபோயின விடுமுறை நாள்கள். திரும்பிச்செல்லும்போது ஒரு நாள் அங்கு தங்கியாவது அவளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான். ஒரு முறை மட்டுமே பார்த்து, பெயர்கூடத் தெரியாத பெண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது? இந்த முறை ஸ்டேஷன் மாஸ்டரையே சந்திக்கிறான். அவர் புதிதாய்ப் பணியில் சேர்ந்தவர். பழக் கடைக்காரரைக் கைகாட்டுகிறார். சோகம் கவிந்த கண்கள், வலது கன்னத்தின் ஓரம் கருவண்ண ஓவியம் என்று அந்தப் பெண்ணின் அங்க அடையாளங்களைப் பதற்றத்துடன் பட்டியலிடுகிறான். பழக்கடைக்காரர், தனக்கு அந்தப் பெண்ணைத் தெரியும் என்றும், சில மாதங்களாக வருவதில்லை என்றும் சொல்கிறார். `ஏன், என்னவாயிற்று..?’ அவன் கேள்விகளுக்கு `எனக்கெதுவும் தெரியாது’ என்று அலட்சியமாய் பதில் வரும்போது ரயில் புறப்படத் தயாராகிறது.

மாபெரும் சபைதனில் - 36

அடுத்த விடுமுறையின்போதும் அவன் கண்கள் மலர்க்கொத்தை எதிர்பார்த்து ஏமாற்றமடைகின்றன. என்ன நடந்தது அவளுக்கு? ஒரு நிமிடம் பயணத்தை நிறுத்தி அவளைத் தேடி அந்த வனப்பகுதிக்குள் செல்லலாமா என்று நினைக்கிறான். பின் நிதானமாக யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறான். அவளைத் தேடிப் போய்ப்பார்க்கும்பொழுது யாராவது ஒரு முதியவருடன் அவளுக்குத் திருமணம் ஆகி, தன் வாழ்வையே தொலைத்திருந்தால்..? அல்லது உடல்நலமின்றி நலிந்துபோயிருந்தால்... என்ன செய்வது? அதை எதிர்கொள்ள மனமில்லை அவனுக்கு. அந்த இளவரசியின் புன்னகையை மட்டும் நினைவுகளில் ஏந்தியபடியே பயணத்தைத் தொடர முடிவு செய்கிறான்.

அதற்குப் பிறகு பலமுறை அவன் ஷாம்லி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றிருக்கிறான். ஒவ்வொரு முறையும் மலர்க்கூடையை ஏந்திவரும் கரங்களைத் தேடும் இவன் கண்களில், என்றாவது ஒருநாள் இதழோரம் புன்னகை தவழ அந்த இளவரசி வருகை புரிவாள் என்ற நம்பிக்கை மட்டும் தொடர்கிறது என்று முடியும் அந்தச் சிறுகதை.

பத்தொன்பது வயதில் மொழிபெயர்த்த அந்தச் சிறுகதை, கல்லூரியில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. முன்பின் அறிமுகமில்லாத இரு உள்ளங்களை இணைத்திடத் துணிந்த ரயிலும், உதவிபுரிந்த ஷாம்லி ரயில் நிலையச் சூழலும் அதற்கு ஒரு முக்கியக் காரணம். தன்னை நெருங்கி வருபவர்களை ரயில் என்றும் ஏமாற்றுவதே இல்லை. மனம் கவர்ந்தவருடன் சந்திப்பை உறுதி செய்யும் தோழமையாக, பிரிவு தரும் வலியையும் தனிமையின் ஏக்கத்தையும் குறைத்து ஆறுதல் அளிக்கும் நட்பாக, எதிர்பாராமல் மலர்ந்திடும் தோழமையாக, நினைவலைகளின் மீட்டலாக நம் வாழ்வின் முக்கியத் தருணங்களில் எல்லாம் உடன் வருகிறது ரயில்.

பிரிக்க முடியா உறவாகிப்போன ரயில், மதராசப்பட்டினத்தில் அறிமுகமான கதையே சுவையானது. இந்தியாவிலேயே முதல்முறையாக இருப்புப் பாதை அமைத்து சக்கரங்கள் சுழலத் தொடங்கியது திருச்சிக்கு அருகே கொள்ளிடம் பகுதியில்தான். காவிரிக்குக் குறுக்கே அணை கட்டிக்கொண்டிருந்த ஆர்தர் காட்டனின் சிறு முயற்சிதான் அது. பின்னர் அவரே சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து செங்குன்றம் வரை இருப்புப் பாதை அமைந்து கட்டுமானப் பொருள்களை விரைவாக எடுத்துச் செல்ல முடியுமா எனப் பரிசோதிக்கத் தொடங்கினார். சிறைக் கைதிகளின் உதவியோடு ஏற்றப்பட்ட பொருள்கள் அடங்கிய பெட்டிகளை இருப்புப் பாதையில் இழுத்துச் செல்வதில் சற்றுப் புதுமையை உணர்ந்தன குதிரைகள். பாதையின் ஏற்ற இறக்கமும், காற்றின் போக்கும் பயணத்தின் வேகத்தைத் தீர்மானித்தன. பின்னர், பரங்கிப்பேட்டையில் உருவான சரக்குப் பெட்டியில் பயணிகளும் அமர்ந்து செல்ல முடியும் என்பதைப் பார்த்த மதராசப்பட்டின மக்கள் வியந்துதான் போனார்கள். 1838-ஆம் ஆண்டு தொடர்ந்த இந்த முயற்சி, ஆர்தர் காட்டன் உடல்நலக்குறைவால் ஆஸ்திரேலியா சென்றுவிட போதிய ஆதரவின்றி, நின்றே போனது.

இங்கிலாந்தில் பரவலான வரவேற்பைப் பெற்ற ரயில் இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு பட்டாம்பூச்சி விளைவு உதவியது. ஆம், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தின் பருத்தித் தேவையை நிறைவேற்றி வந்த அமெரிக்காவின் வட மாகாணங்கள் தொடர் வீழ்ச்சியைச் சந்தித்தன. அங்கு நடந்த உள்நாட்டுப் போர் கூடுதல் சிக்கலை உருவாக்க, இங்கிலாந்து வணிகர்களின் பார்வை இந்தியா நோக்கித் திரும்பியது. உள்ளூர் ஆங்கிலேய வணிகர்களின் உதவியுடன் ரயில் சேவையை ஏற்படுத்திட மதராஸ், பம்பாய் மற்றும் வங்காள மாகாணங்கள் என மூன்றுமே போட்டி போட்டன. 1845-இல் முதன் முதலில் உருவாக்கப்பட்ட மதராஸ் ரயில்வே கம்பெனிக்கு முதலில் போதிய ஆதரவு கிடைக்காததால், போட்டியில் பம்பாய் மாகாணம் வென்றது. எனினும் மூன்றாண்டுகள் இடைவெளியில் மதராசப்பட்டினத்திற்கு ரயில் சேவை அறிமுகமானது.

மாபெரும் சபைதனில் - 36

மதராஸ் ரயில் சேவையில் பயன்படுத்தும் வகையில் தலா 13 டன் எடை கொண்ட நான்கு நீராவி என்ஜின்கள் கிளாஸ்கோவில் தயாரிக்கப்பட்டன. அவற்றைச் சுமந்துகொண்டு ‘ஹேவ்லிஸ்’ என்ற கப்பல் ராயபுரத்திற்கு 12 மைல் தொலைவில் நங்கூரமிட்டு நின்ற நாளில் கடற்கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான ராயபுரத்திலிருந்து 60 மைல் தொலைவில் ஆற்காடு, வாலாஜா நகர் வரையிலான முதல் ரயில் சேவையினை 1856-ம் வருடம் ஜூலை முதல் தேதி, கவர்னர் ஹாரிஸ் தொடங்கி வைத்தார். சிம்சன் நிறுவனம் தயாரித்த பெட்டிகளில் 300 பயணிகளுடன் வந்து சேர்ந்த ரயிலுக்கு வாலாஜா ரயில் நிலையத்தில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, பேண்டு வாத்திய இசையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. ஆனால் வரும் வழியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களோ, புகை கக்கியபடியே அவர்களை நோக்கி வரும் புகை ரதத்தைப் பார்த்து பயந்து ஓடினர். சிலரோ கிராம தேவதையைப் பார்த்ததைப்போல் வணங்கி ஒதுங்கினர்.

கோவையில் விளைந்த பருத்தியைப் பரங்கிப்பேட்டைத் துறைமுகத்திற்கு எடுத்துச் சென்ற ரயில்கள், திரும்பி வரும்போது இங்கிலாந்தின் லிவர்பூல் நகரத்தில் தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகளைச் சுமந்து வந்தன. கைவினைஞர்கள், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வு சிதையத் தொடங்கியது. கிராமங்களில் விளைந்த தானியங்கள் நகரங்களை நோக்கிச் சென்றதில் உழவர்களைவிட வணிகர்களே அதிகம் பயன டைந்தனர். உணவு தானியப் பயிர்கள் விடைபெற்று, பணப்பயிர்கள் நாடெங்கும் பரவத் தொடங்கின. வறண்ட பகுதிகளுக்கு உரிய நீர்ப்பாசன வசதிகள் செய்து கொடுக்காமல், நாட்டின் வளத்தை உறிஞ்சிட உருவான ரயில் பாதைகள் பின்னர் ராணுவ வீரர்களையும் சுமந்து சென்றன. இந்தோ - சாரசெனிக் முறையில் கட்டப் பட்ட பிரமாண்ட ரயில் நிலை யங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ் யத்தின் வலிமையை இந்தியர் களுக்குத் தொடர்ந்து நினைவூட்டின.

மதராஸ் மாகாணத்தைத் தாது வருடப் பஞ்சம் உருக் குலைத்த போது, மக்களின் பசி தீர்க்க உணவு தானியங்களை எடுத்து வர வேண்டிய ரயில் சேவை, ஒரு விநோதமான வரவேற்பினை நல்கப் பணிக்கப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் பட்டினிச் சாவில் வீழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவிற்கு வருகை புரிந்தார் வேல்ஸ் இளவரசர் எட்வர்டு. ‘செராபிஸ்’ கப்பலில் பவனி வந்த அவருக்கு தூத்துக்குடித் துறைமுகத்திலும் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும் எட்டயபுரம் ஜமீன்தாரும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்களும் கொடுத்த வரவேற்பு, இளவரசரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. மதுரை ரயில் நிலையத்தின் புதிய வழித்தடத்தின் முதல் ரயிலை இழுத்து வந்த நீராவி என்ஜினுக்கு ‘அலெக்சான்டிரா’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் இளவரசர்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்திட உருவாக் கப்பட்ட ரயில் சேவை இந்திய தேசிய எழுச்சிக்கும் பயன்பட்டது. தென்னாப் பிரிக்கா ரயில் நிலைய நடைமேடையில் இந்தியராகத் தன்னை உணர்ந்த மகாத்மா காந்தியின் கரங்களில் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியும் ஒரு விடுதலைப் போராட்ட வடிவமாக உருமாறியது. மகாத்மா பயணம் செய்த பாதைகளில் அவர் முகத்தைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. நடைமேடைகளே பொதுக் கூட்ட அரங்குகளாக மாறின. மூன்றாம் வகுப்பில் பயணம் செய்யும் ஏழை, எளியவரின் வாழ்வு குறித்து முதல் வகுப்பு செல்வந்தர்களும், அரசு அதிகாரிகளும் என்றாவது கவலைப்பட்டதுண்டா என்று கேள்வி எழுப்பினார் காந்தி. இறுதியில் மதவெறிக்குப் பலியான காந்தியின் அஸ்திக் கலசமும் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்ததை வரலாறு கவனமாகக் குறிப்பெடுத்துக்கொண்டது.

விடுதலைக்குப்பின் நாட்டில் நடந்த பல மாற்றங்களுக்கு, மௌன சாட்சியாய் வலம் வரத் தொடங்கியது ரயில். சென்ற மாதம், கொரானா நோய்த் தொற்று காரணமாகத் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலரைத் தாம்பரம் ரயில் நிலையத்தில் சந்தித்தேன். விமான நிலைய விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டி ருந்தவர்கள்... நடந்தே ஒடிசா மாநிலம் சென்று சேர முடிவெடுத்தவர்களைத் தடுத்து அவர்களுக்குரிய வசதிகள் செய்து கொடுத்திருந்தோம். அன்று மாலை ரயிலில் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். சிலர் திருமண மாகி, கையில் கைக் குழந்தையுடன் காத்திருக் கிறார்கள். தங்கள் உறவுகளைப் பார்த்துவிட முடியும் என்ற நினைப்பே அவர்கள் முகத்தில் மலர்ச்சியைக் கொண்டு வந்திருந்தது.

ரயில் புறப்படும் நேரத்தில் மூச்சிரைக்க ஓடிவந்தார் தாம்பரம் தாசில்தார். அவர் கையில் ப்ளாஸ்க் ஒன்றும், சில ரொட்டித் துண்டுகளும் இருந்தன. பசியில் அழுது கொண்டிருந்த குழந் தைகளை அணைத்துக் கொண்டு, செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்த பெண்ணின் கைகளுக்குச் சென்று சேர்கின்றன உணவும், பாலும். அந்தப் பெண்ணின் உதடுகளும் கரங்களும் ஒரு சேர நன்றி சொல்ல முயன்றன. சக மனிதரை நேசிக்கும் மனிதம் மலர்ந்த மகிழ்ச்சியில் ரயில் மெதுவாக நகர்ந்து செல்கிறது.

’பயணங்கள் முடிவதில்லை!

- நடை பயில்வோம்...

மாபெரும் சபைதனில் - 36

சபைக் குறிப்பு.

ந்தியாவை அதற்கு முன் பின் பார்த்திராத ஒருவர், சிம்லாவில் அமர்ந்துகொண்டு வெறும் ஐந்தே வாரங்களில் எல்லைக்கோட்டை வரைந்தால் என்னவாகும்? சுமார் ஒரு கோடி மக்கள் இடம்பெயர்ந்தனர். வழியில் வன்முறைக்கும் பஞ்சத்திற்கும் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் மடிந்தனர். துயரம் கவிந்த பிரிவினைக் களத்தை மையமாக வைத்து குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’ என்னும் நூல் சமீபத்தில் தமிழிலும் வெளிவந்துள்ளது.