Published:Updated:

உயிரா, வயிறா..? - சாமானியர்களும் கொரோனாவும்! #MyVikatan

திருமழிசை சந்தை
திருமழிசை சந்தை ( பா.காளிமுத்து )

வாடகை, மாதாந்தர மளிகை, குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிப்பின்மை போன்றவற்றின் பயமுறுத்தலால் செய்வதறியாது நிற்கின்றனர்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மகாபாரதத்தில் யட்சன், தருமரிடம் கேட்கும் கடைசி கேள்வி...

``மனிதனிடம் இருக்கும் அதிசயமான குணம் எது?''

``அவன் தினமும் சாகிறவர்களைப் பார்த்தும், நம்மை சாவு அண்டாது என எண்ணுகிறானே... அதுதான்'' என்கிறார் தருமர்.

இது சாதாரண மனிதனின் மனநிலையை குறிக்கச் சொல்லப்பட்டாலும் தற்போதைய காலகட்டத்துக்குப் பொருந்தக்கூடியதாக இருக்கிறது.

லாக் டெளன்
லாக் டெளன்
ராகேஷ்
உயிரா, வயிறா என்று கேட்டால், வயிறே வெல்கிறது. வெளியே போ என்கிறது.
மணிகண்டபிரபு

"வெளிநாட்டில் வேகமாகப் பரவியபோதுகூட பத்திரமாக வீட்டுக்குள் இருந்தோம். ஆனால், இப்போது பக்கத்து வீட்டுக்கு வந்த பிறகும் பந்தாவாய் வெளியே சுற்றுகிறோம்."

இதுதான் இப்போதைய யதார்த்த நிலை. நாளுக்கு நாள் தொற்று அதிகமாகிறது. மக்கள் தம் வாழ்வாதாராத்துக்குப் போராடத் தயாராகிவிட்டனர்.

`அதுதான் இலவச அரிசி கிடைத்துவிட்டதே... அப்புறம் ஏன் வெளியே வருகிறீர்கள்?’ எனக் கேட்டால், `நாளைக்கு உயிரோடு இருப்போமா என்பதைவிட, இன்று உயிரோடு இருக்க வெளியே வேலைக்குச் செல்கிறோம்’ என்கின்றனர்.

உயிரா, வயிறா என்று கேட்டால், வயிறே வெல்கிறது. வெளியே போ என்கிறது.

#மழைக்கால நோய்கள்

கொரோனாவிடமிருந்து மட்டுமல்ல, இனி மழைக்கால நோய்களிடமும் அலட்சியம் காட்டாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

காய்ச்சலும் சளியும் பிடிக்காமல் பார்த்துக்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். மழைக்காலம் வந்துவிட்டதால் இயல்பாக வரும் சளி, காய்ச்சலும் கூட மன உளைச்சலைத் தருகிறது" ஏன் ராத்திரி 2 மணிக்கு தொடர்ந்தாப்பில ஆறு தும்மல் தும்முனீங்க" எனப் பக்கத்து வீட்டுக்காரர் விசாரிக்குமளவுக்கு உலகமே நம்மை உற்றுப்பார்க்க ஆரம்பித்துள்ளது. ஆகவே, மற்றவர் சகஜமாகப் பேச வேண்டுமெனில் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருப்பதும் அவசியம். பகலில் கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்வது, குடிநீரை காய்ச்சிக் குடிப்பது என சிலர் முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், பலர்... வந்தால் பார்த்துக்கொள்ளலாம் எனும் மனநிலையில் இருக்கிறார்கள். இதை மாற்றிக்கொள்ளுங்கள் பாஸ்.

திருமழிசை சந்தை
திருமழிசை சந்தை
பா.காளிமுத்து

#அமைப்பு சாரா தொழிலாளர்கள்

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளவர்களில் நோய்த் தொற்றாளர்களைவிட சாமானிய அமைப்பு சாரா தொழிலாளர்களே அதிகம். அன்றாடம் பூ விற்பவர்கள், சாலையோரங்களில் கடை வைத்திருப்பவர், கட்டுமான தொழில் செய்வோர் போன்றவர்கள் முறையான சேமிப்போ, நிரந்தர வருமானமோ இல்லாதவர்கள். அன்றாடம் செய்யும் வேலைக்கு வரும் கூலியை வைத்தே பிழைப்பவர்கள்... இன்று செய்வதறியாது நிற்கின்றனர். இருப்பினும் உயிரைப் பணயம் வைத்தே பொது வெளியில் தங்கள் குடும்பம் காக்கப் போராடுகின்றனர்.

கட்டட பணிகள் உள்ளிட்ட பல வேலைகளைச் செய்துவந்த பல தினக்கூலிகளும் வேலை இழந்துள்ளனர்.

உரிய விலை கிடைக்காமல் தம் பொருள்கள் வீணாவதை கண் முன்னேயே பார்த்து வாடுகின்றனர் வியாபாரிகள். பல மைல் தூரத்துக்கு நீளும் டிராஃபிக் ஜாமில் எங்கோ கடைசியில் நின்று கொண்டு ஹாரன் அடிக்கும் மனநிலையில்தான் இவர்களில் பலரும் உள்ளனர்.

லாக் டெளன்
லாக் டெளன்
ராகேஷ்

#பெண்கள்

விலைவாசியையும் சமாளித்துக்கொண்டு, கையிருப்பு காலியானதும் தொற்று வந்து இறந்தாலும் பரவாயில்லையென துணிந்து வேலைக்குச் செல்கின்றனர் ஆண்கள். போக்குவரத்து முடக்கப்பட்டிருப்பதால், வேலைக்குச் செல்லும் நண்பர்களிடம் உதவி கேட்டாவது செல்கின்றனர். ஆனால், சில ஏழைப் பெண்களோ ஆட்டோவுக்கு செலவழிக்க மனமின்றி, வழியுமின்றி பல கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்கின்றனர். நகரத்தை நம்பி வாழும் கிராமத்துப் பெண்கள் பொதுப் போக்குவரத்து இல்லாததால் வேலை இழந்து வீட்டிலுள்ளனர்.

தினசரி நடைப்பயிற்சி மேற்கொண்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பெண்கள் இன்று கொரோனா தொற்றுக்கு அஞ்சி வீட்டிலேயே இருப்பதால்... அவர்களின் சர்க்கரையின் அளவு கூடிவிட்டது. வாடகை, மாதாந்தர மளிகை, குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிப்பின்மை போன்றவற்றின் பயமுறுத்தலால் செய்வதறியாது நிற்கின்றனர்.

லாக் டெளன்
லாக் டெளன்

#ஆண்களுக்கு

டாஸ்மாக் செல்லாத ஆண்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் மாதாந்தர இ.எம்.ஐ, வீட்டு லோன், கிரெடிட் கார்டு போன்றவ்றை நினைத்து தினசரி காலண்டரையே பயந்து பயந்துதான் கிழிக்கிறார்கள். இதுபோக அலுவலகத்தில் பெற்ற முன் பணம், வாகன கடன், பெட்ரோல் விலை, வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்விக்கட்டணம் என அவர்களின் சுமை பெரியது. இவைதவிர வயதான பெற்றோருக்கான பராமரிப்பு செலவு, மருந்து செலவு, என ஒவ்வொன்றுக்குமே பணம் தேவைப்படுகிறது.

இக்கட்டான சூழலில் கடன் கொடுக்கவும் யாரும் முன்வருவதில்லை. அப்படியே வாங்கினாலும் அதைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்ற தயக்க நிலை.

கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்தி நடக்கும் ஆட்குறைப்பு, ஊதிய வெட்டு போன்றவற்றால் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர் ஆண்கள். ஒவ்வொரு மாதமும் ஊதியம் வந்தால் மட்டுமே நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். தனக்கோ தன் குடும்பத்துக்கோ எந்த இடர்ப்பாடும் வந்துவிடக் கூடாதென எப்போதும் வேண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

லாக் டெளன்
லாக் டெளன்
ராகேஷ்

#அறியாமை

ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்று குறித்து வரும் தகவல்களைக் கண்டு அச்சவுணர்வு கொள்ள வேண்டாம் என்று சொல்லப்படுவதை சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நமக்கெல்லாம் எங்கே வரப்போகிறது என எண்ணிக்கொண்டு அலட்சியம் கொள்வோரும் உண்டு. தற்போது நகரங்களுக்கு மட்டும்தான் வருகிறது... கிராமங்களுக்கெல்லாம் வராது, நம் ஊருக்கு வராது, மழைக்கு வராது என்றெல்லாம் சொல்பவர்களைப் பார்க்கும்போதுஅறியாமையை மையப்படுத்தி வால்டர் ஸ்காட் எழுதிய An old man எனும் கதைதான் நினைவுக்கு வருகிறது.

"வயதான முதியவர் ஒருவர் அருகிலுள்ள முதியோர் இல்லத்துக்கு மாதந்தோறும் செல்கிறார். அம்மாதம் இறந்தவர்களின் பட்டியலை எடுத்து, எதனால் அவர்கள் இறந்துள்ளனர் என ஆராய்கிறார். சிலர் ரத்த அழுத்தத்தால், சிலர் வழுக்கி விழுந்ததால் இறந்தார்கள் எனத் தெரிந்துகொண்டு சந்தோஷப்படுவார். ஏனெனில், எனக்கு ரத்த அழுத்தம் இல்லை, நான் கீழே விழவில்லை, எனக்கு சர்க்கரைநோய் இல்லை என நினைத்துக்கொண்டு இறுதியாக யாரும் வயதானதால் இறக்கவில்லை என எண்ணிக்கொண்டு திரும்புவார். இவரின் அறியாமையைப் போலவே நாமும் நோய்குறித்த விழிப்புணர்வின்றி இருக்கக்கூடாது.

லாக் டெளன்
லாக் டெளன்
ராகேஷ்

#அலட்சியம் வேண்டாமே!

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை"

அஞ்ச வேண்டிய விஷயங்களுக்கு அஞ்சாமல் இருப்பது அறிவீனம் என்கிறார் வள்ளுவர். வாழ்வாதாரம், நோய்த் தொற்று இரண்டையும் சமமான அளவில் பேண வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இன்று ஒரு நாள் நோய்க் கிருமிக்கு நான் ஆளாகாமல் இருக்க வேண்டுமென ஒவ்வொரு நிமிடமும் விழிப்புணர்வுடன் இருந்தால் நோய்த் தொற்றை தினசரி ஒவ்வொருவரும் கட்டுப்படுத்தலாம். எல்லா விழிப்புணர்வுமே நம்மிடம் தோன்றினால் மட்டுமே அதற்கு மகத்துவம்.

"எந்தப் பொருளும் இழக்கப்படும்வரை உணரப்படுவதில்லை, இழந்துவிடுவோம் எனும் நிலையில்தான் உயிர்கூட பிரம்மாண்டமானதாய் தெரிகிறது எனும் வரிதான் நினைவுக்கு வருகிறது."

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு