Published:Updated:

அப்பாகிட்ட சாரி கேட்கணும்..! - லாக் டெளன் கண்ணீர் கதை #MyVikatan

Representational Image
Representational Image

அப்பா முன்னெல்லாம் வேலைய முடிச்சிட்டு வரும்போது சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வருவாரு. இப்பல்லாம் எப்பவும் கோபமாகவும் சிலசமயம் அழுதுகிட்டும் இருக்காரு...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

எனக்கும் என் தம்பிக்கும் இரண்டு வயதுதான் வித்யாசம். எனக்கு நான்கு வயது. யுகேஜி போகிறேன் அவனுக்கு இன்னும் வயசாகலயாம் அதனால வீட்லயே தான் இருப்பான். எப்பவும் அம்மாகூடவே இருப்பான் எனக்கு கொஞ்சம் பொறாமையாதான் இருக்கும். ஆனா ஒரு வாரமா நானும் ஸ்கூலுக்கு போகல பீஸ் கட்டுனாத்தான் வரனும்னு மிஸ் சொல்லிட்டாங்க அதுவரை எனக்கும் லீவுதான்.

போன லீவுல கொடைக்கானல் போயிருந்தோம். சில்லுன்னு இருந்துச்சு. இப்ப கேட்டதுக்கு அப்பா கோவமா கொல்ல போறேன் ஓடிறுன்னுட்டாரு. அப்பா கோபப்பட்டாலே சந்தோசம்தான் கொஞ்சநேரம் கழிச்சு ஐஸ் வாங்கி தருவாறு. போன மாசம் கூட அம்மாவ அடிச்சுட்டு அடுத்தநாள் சினிமாக்கு போயி கோன் ஐஸ் லாம் வாங்கித்தந்தாரு.

Representational Image
Representational Image

அப்பா முன்னெல்லாம் வேலைய முடிச்சிட்டு வரும்போது சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வருவாரு. இப்பல்லாம் எப்பவும் கோபமாகவும் சிலசமயம் அழுதுகிட்டும் இருக்காரு. எங்க கூட விளையாடவும் வருவதில்லை. அம்மாவும் அழுதுகிட்டே தான் இருக்காங்க. ஏதோ பணம் வேணுமாம்.

ஒருதடவை சண்டையில மாப்ள மாமா... ஆமா அப்பாவோட பிரண்டு அவங்க என்ன எப்பவும் மாப்ள அப்டின்னு தான் கூப்டுவாங்க. அதனால அவங்கள நான் அப்படிதான் கூப்டுவேன் ஏதோ ஏமாத்திட்டாங்களாம் அதனால் நஷ்டமாயிருச்சு அப்டினு பொலம்பிக்கிட்டு இருந்தாங்க.

ஏமாத்துனா என்ன அதுக்கு போயா அழுவ. நம்ம மாமாதானே னு எனக்கே நெறயதடவ ஆறுதல் சொன்ன அப்பா இப்ப ஏன் அழுவுறாரு.... சரி அவங்க சொன்னத அவங்களுக்கு நாமளும் சொல்லலாம்னு நேத்து சொன்னதுக்கு கோபத்துல நல்லா நாலு அடி விட்டாரு.. தம்பியே அழுதுட்டான் அந்த சத்தத்துல.

இப்பல்லாம் நெறயபேரு வீட்டுக்கு வந்து அப்பாகிட்ட ஏதோ கோபமா திட்டிட்டு போறாங்க....

இனிக்கு காலைலயே அப்பா எங்களல்லாம் கூட்டிக்கிட்டு கிளம்பினார். ஓகோ நேத்து என்ன அடிச்சதுக்கு பதிலாதான் வெளிய போறோம் போல... அப்ப இன்னிக்கு ஐஸ் கிரீம் கேட்டுற வேண்டியதுதான்... எனக்கு எப்பவுமே சில்லுனு இருந்தாதான் பிடிக்கும்....

அன்னைக்கு கடைத்தெருவுல போறப்ப பேப்பர் டப்பாலருந்து எடுத்து சாப்டற குச்சி ஐஸ அடுத்த தடவ வரும்போது வாங்கித் தரேன்னாரே... அதையே கேட்டுற வேண்டியதுதான்...

Representational Image
Representational Image

அந்த அண்ணா அன்னிக்கு சாப்ட்டப்ப பிரௌன் கலருக்குள்ள இருந்து வெள்ளைக் கலரு அவங்க கைல வலிஞ்சப்ப படக்குன்னு நக்கிட்டு சிரிச்சாங்களே, இன்னிக்கு நானும் அப்படிதான் சாப்ட போறேன்....

ஏதோ சந்தைக்குள்ள வந்துட்டோம் போல நெறய கூட்டமாருந்தது. சுத்தியும் பார்த்தேன் ஐஸ் கடைய காணவே காணோம்.

எதையோ எம்மேலயும் தம்பி மேலயும் ஊத்துனாரு சில்லுனு இருந்துச்சு ஆனா இந்த வாசம் மாப்ள மாமா வண்டிலயும் வரும் ... அம்மாவும் அப்பாவும் கூட ஊத்திகிட்டாங்க.

தீபாவளிக்கு பக்கத்து வீட்டு அண்ணா அந்த சங்குச்சக்கரம் வச்சாங்களே அதேமாதிரி தம்பி மேலயும் என் மேலயும் வச்சுட்டாங்க அவங்களுக்கும் வச்சுக்கிட்டாங்க.

வலி தாங்காம அழும் தம்பியையும் என்னையும் பாத்துக்கிட்டே அவங்க ரெண்டு பேரும் தரைல விழுந்துட்டாங்க....

திடீர்னு வலி எரிச்சல் எல்லாம் மறைஞ்சு சில்லுனு ஆய்டுச்சு பக்கத்துல தம்பியும் சிரிச்சுகிட்டு இருந்தான். ஆனா அப்பாவும் அம்மாவும் மட்டும் கத்திகிட்டே இருக்காங்க...

Fire
Fire
Pixabay

ஐஸ் கடைக்கு பக்கத்து கடைல எங்க போட்டோல்லாம் போட்ட பேப்பர் தொங்குச்சு. இரண்டு பேரு புலம்பிகிட்டு இருந்தாங்க படுபாவிங்க கடன் தொல்லைனா தான் மட்டும் சாக வேண்டியதுதான அந்த பச்சப்பிள்ளைங்களப் போய் கொன்னுருக்கானே இவன்லாம் மனுசனே கிடையாது....


நேத்து நானும் தம்பியும் ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டோம் போல அதான் அப்பா அடிக்கடி கோபத்துல சொல்லுவாரே கொல்ல போறேன் பாருன்னு. அப்படியே பண்ணிட்டாரு. இன்னிக்கு அப்பா வந்ததும் மன்னிச்சுக்கப்பான்னு கேட்றனும் தம்பி ஓகேவா????

- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு