Published:Updated:

இந்தியாவில் வலிமையான பிளாஸ்டிக் சாலைகள்! - முன்னோடியாகத் திகழும் தமிழகம் #MyVikatan

பிளாஸ்டிக்கை சாலையில் போடாதீர்கள்னு சொன்ன காலம் போய் பிளாஸ்டிக்கில் சாலை போடும் காலம் வளர்ந்துவிட்டது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"அங்க பாத்துப் போங்க, கல்லு கொட்டியிருக்காங்க. ரோடு போடுறாங்களோ இல்லையோ ஆறு மாசத்துக்கு முன்னாடியே கல்ல கொண்டுவந்து கொட்டியிடுறாங்க" என்று ரத்தக் கண்ணீரில்

எம்.ஆர்.ராதா பேசிய வசனம் புகழ்பெற்றது. அதற்குத் தீர்வாக உருவெடுத்திருக்கிறது இன்றைய பிளாஸ்டிக் சாலைகள்.

பிளாஸ்டிக்கை சாலையில் போடாதீர்கள்னு சொன்ன காலம் போய் இப்போது பிளாஸ்டிக்கில் சாலை போடும் காலம் வந்துவிட்டது.

Representational Image
Representational Image
John Cameron on Unsplash

சாலை கட்டுமானத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்துவதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 2016-ல் அறிவித்திருந்தார். அண்மையில் இந்தியாவிலுள்ள 11 மாநிலங்களில், 'பிளாஸ்டிக்' கழிவுகளைப் பயன்படுத்தி சுமார் 1 லட்சம் கி.மீ துாரமுள்ள சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இது இன்னும் இரு மடங்காகும் என மத்திய அரசுஅறிவித்துள்ளது.

இந்த மாதிரியான பிளாஸ்டிக் சாலை அமைக்க, 1 கி.மீ தூரத்துக்கு 9 டன், 'தார்' மற்றும் 1 டன் பிளாஸ்டிக் கழிவு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 1 டன் தாரின் கொள்முதல் விலையான, 30,000 ரூபாய் சேமிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் சாலைகள் தயாரிக்கப்படுவது எப்படி ?

"எந்த வடிவத்துக்கும் மாற்றலாம் என்று பொருள்படும் கிரேக்க வார்த்தையான "பிளாஸ்டிகோஸ்" என்பதிலிருந்து பிறந்த வார்த்தைதான் "பிளாஸ்டிக்."

ஒவ்வொரு நகரத்திலும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் எதிரியே பிளாஸ்டிக்தான். இந்நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது செலவு குறைப்பை தாண்டியும் பல நன்மைகளைச் செய்கிறது.

Representational Image
Representational Image
tanvi sharma on Unsplash

பொதுவாக சாலைகளுக்காக பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய, அதை சேகரித்து சுத்தம் செய்து, உலர்த்தி, சிறுதுண்டாக்கி, தூசிகள் அகற்றப்பட்டு, 165° செல்சியஸ் வெப்பப்படுத்தப்பட்டு கலவை போல மாற்றப்படுகிறது. இதில் தார் கலவை சேர்க்கப்பட்டு 160° வெப்பநிலையில் சூடாக்கி நல்ல பிணைப்பை ஏற்படுத்திய பின்னர் இறுதிக்கலவையாய் அது பயன்படுத்தப்படுகிறது. 6 - 8 சதவிகித பிளாஸ்டிக் மற்றும் 92 - 94 சதவிகிதம் தார் கலவை கொண்டு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, பிளாஸ்டிக் சாலைகள் தயாரிப்பதற்கு பாலிப்ரொப்பிலீன் (பிபி), பாலிஸ்டிரீன் (பிஎஸ்) மற்றும் பாலிஎதிலீன் (பிஇ) ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும். பாலி வினைல் குளோரைடு (பி.வி.சி) தயாரிக்கப் பயன்படுத்த முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிளாஸ்டிக் சாலையின் சிறப்பம்சங்கள்

இந்த பிளாஸ்டிக் ரோடுகள் 2,500 கிலோ வரையிலும் எடை தாங்கக் கூடியது. மழையில் உடையாமலும் வெயிலிலும் உருகாமலும் நீடித்து உழைக்கிறது. சாலையின் வலிமை அதிகம். அதுமட்டுமன்றி தார் குறைக்கப்படுவதால் மறைமுகமாக கார்பன் வெளியீட்டு அளவை குறைக்கிறது.

Representational Image
Representational Image

இந்தியா தினமும் குறைந்தது 25,940 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது, இதில் 60% மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை சுற்றுசூழல் மாசடைய காரணமாகிறது. சாலைகள் பிளாஸ்டிக் கலவைகள் கலப்பதால், பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுவது அதிகரிக்கும். பிளாஸ்டிக் குப்பையின் அளவு குறையும் என்பதும் இந்தச் சாலைகளில் ஏற்படும் முக்கிய நன்மை. மேலும், சாலை போடப்படும் பகுதியில் இருந்து உள்ளூர் கழிவுகளையே பயன்படுத்துவதால் அப்பகுதியின் பிளாஸ்டிக் மாசு குறையும். அதுமட்டுமன்றி, இறக்குமதி மற்றும் போக்குவரத்து செலவும் இல்லை.

ப்ளாஸ்டிக் கலவை வழக்கமான காங்க்ரீட்டை விட அதிகமாக வெப்பத்தை எதிர்க்கும். இதனால் காலப்போக்கில் சாலை பலவீனமடைவது குறையும். பிளாஸ்டிக்கின் மேம்பட்ட பிசின் விரிசலையும் குழிகளையும் குறைகிறது. மேலும், இந்தச் சாலைகளைப் பராமரிப்பதும் எளிது.

பிளாஸ்டிக் சாலைகளுக்கு தமிழகம் முன்னோடி

பிளாஸ்டிக் சாலை எனும் புரட்சிக்கு வழிகாட்டிய பெருமையும் தமிழகத்தையே சாரும். மதுரை தியாகராஜர் கல்லூரியின் பேராசிரியர் வாசுதேவன் இந்தத் தொழில்நுட்பத்தை கண்டறிந்ததற்காக 'இந்தியாவின் பிளாஸ்டிக் மேன்' எனப் புகழப்படுகிறார். இவருக்கு 2018-ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி மத்திய அரசு சிறப்பித்தது.

Representational Image
Representational Image

2002-ம் ஆண்டு அவர் பணிபுரிந்த கல்லூரி வளாகத்தில் முதன் முதலில் வெற்றிகரமாக பிளாஸ்டிக் சாலைகள் போடப்பட்டன. இம்முறையில், முதலில் கற்கள் கொட்டப்பட்டது. பின்பு அதன்மீது பிளாஸ்டிக்கை உருக்கி ஊற்றப்பட்டது. பின்னர் பிளாஸ்டிக் மீது தார் ஊற்றி சாலைகள் அமைக்கப்பட்டன. இந்த முயற்சி வெற்றி அடைந்ததையடுத்து பேராசிரியர் வாசுதேவன் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளித்தார்.

அதன்பின்னர் தமிழக சாலைகளில் பிளாஸ்டிக் அறிமுகமானது. சென்னையில் நுங்கம்பாக்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, ஹால்ஸ் சாலை, எத்திராஜ் சாலை தெரு மற்றும் சர்தார் படேல் தெரு போன்றவை பிளாஸ்டிக் கூறுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 4, 2002 அன்று தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டியில் `பிளாஸ்டிக் சாலை’ போடப்பட்டது.

2012-13-ம் ஆண்டில் தமிழகத்தில் 1,002 கி.மீ தூரத்துக்கு கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமன்றி, பழைய சாலைகளை உடைத்து எடுக்கும்போது அதிலும் பிளாஸ்டிக் கலந்து கொடுக்கப்பட்டன. 65 சதவிகித ஸ்க்ராப்பில் 35 சதவிகிதம் புது பிளாஸ்டிக் கோட்டிங் கலந்து சாலை அமைக்கும்போது செலவு 50 சதவிகிதமாகக் குறைந்தது.

Representational Image
Representational Image

தமிழகத்தைத் தொடர்ந்து இந்தியாவின் 9 மாநிலங்கள் பிளாஸ்டிக் சாலை அமைக்க முன்வந்தது. இந்தியாவின் தூய்மையான நகரம் எனும் பட்டத்தை இரு முறை வென்ற இந்தூர், கடந்த ஆண்டுகளில் 45 கி.மீ நீளமுள்ள சாலைகளை உருவாக்க 5,000 கிலோ கழிவு பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியுள்ளது.

2018-ல், ஹரியானாவின் குருகிராம் மாநகராட்சி மற்றும் ஜம்மு - காஷ்மீரில், சுமார் 270 கி.மீ. சாலை அமைக்க, பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. சூரத் பகுதியில் 2017 ஜனவரியில் பிளாஸ்டிக் சாலைகள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

Vikatan

புனே முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) மற்றும் ருத்ரா சுற்றுச்சூழல் தீர்வு (இந்தியா) லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிளாஸ்டிக் சாலைகளை அதிகளவில் உருவாக்கியது.

டெல்லி-மீரட் நெடுஞ்சாலையில், 2 கிலோமீட்டர் நீளத்துக்கு சுமார் 1.6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தி சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஜாம்ஷெட்பூர் நகரத்தில் அதிக பிளாஸ்டிக் சாலைகள் போடப்பட்டுள்ளது. `பிளாஸ்டிக் தொல்லை இல்லாத நகரம்’ என்று அந்நகரம் அழைக்கப்படுகிறது.

இந்தியா மட்டுமல்ல, உலகமும் இந்த பிளாஸ்டிக் சாலைகள் மீது கவனத்தை திருப்பியுள்ளது. நெதர்லாந்து நாட்டில் ஸ்வொல்லே நகராட்சியில் 2016-ம் ஆண்டு பிளாஸ்டிக் சாலை பற்றிய சோதனைகள் தொடங்கப்பட்டன. 2018-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அங்கு 30மீட்டர் நீளம்கொண்ட பிளாஸ்டிக் சாலை திறக்கப்பட்டது.

Representational Image
Representational Image
PRINT-132

பிளாஸ்டிக் சாலைகள் மட்டுமே பிளாஸ்டிக் ஒழிப்பதற்கு தீர்வல்ல...

பிளாஸ்டிக் சாலைகள் மாசு கட்டுப்பாட்டில் பெரும் உதவியாக இருப்பது உண்மைதான். அதேசமயம், சாலைகளுக்காக பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்வதால் மட்டும் உலகம் பிளாஸ்டிக் காரணமாக சந்திக்கும் பிரச்னைகள் தீர்ந்துவிடப்போவதில்லை. நாம் தூக்கி எறியும் கேரி பைகள் இன்னும் மிகப்பெரிய சவாலாக தான் உள்ளன. மைக்ரோ பிளாஸ்டிக்கினால் சாலையிடுவது தற்காலிக தீர்வு தானே தவிர நிரந்தர தீர்வல்ல.

சாலைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது மட்டும் நாம் பிளாஸ்டிக்கிலிருந்து விடுபட உதவாது. நாம் அதிக அளவு அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது அவசியம்.

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு