Published:Updated:

ஊருவிட்டு ஊருவந்தும் ஒரே பாராட்டுதான்! - என் `முடி’ புராணம்

Representational Image

கையில் காசு கொடுக்கும் வழக்கமெல்லாம் அப்பொழுது இல்லை. ஆண்டிற்கொரு முறை, அறுவடை நேரத்தில் நெல் கொடுப்பதோடு சரி. ஆனாலும் அவர்கள், எப்பொழுது முடி வெட்டிக்கொள்ளச் சென்றாலும் முகஞ் சுழித்ததில்லை.

ஊருவிட்டு ஊருவந்தும் ஒரே பாராட்டுதான்! - என் `முடி’ புராணம்

கையில் காசு கொடுக்கும் வழக்கமெல்லாம் அப்பொழுது இல்லை. ஆண்டிற்கொரு முறை, அறுவடை நேரத்தில் நெல் கொடுப்பதோடு சரி. ஆனாலும் அவர்கள், எப்பொழுது முடி வெட்டிக்கொள்ளச் சென்றாலும் முகஞ் சுழித்ததில்லை.

Published:Updated:
Representational Image

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர் நீப்பர் மானம்வரின்’

என்பது ‘மானம்’ என்ற அதிகாரத்தின் கீழ் வரும் 969 வது குறள் என்பதைப் பலரும் அறிவர்.’தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப் போன்றோர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டு விடுவர்’என்று இதற்கு உரை பகருவார் மு.வ.

‘குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல- நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.’

என்று பேசும் நாலடியார்.

‘தலை முடியின் அழகும், வளைத்து அணியும் உடையினது கரையின் கவர்ச்சியும், மஞ்சள் பூச்சி அழகும் (உடல் வண்ண அழகு என்றும் கொள்ளலாம்)

உண்மையான நிலைத்த அழகல்ல. நெஞ்சார யாம் நல்லவனாகவும், நடுவு நிலைமை தவறாதவனாகவும் வாழ உதவும் கல்வி பெறுவதே உலகில் அழகு’ என்பதே இதன் பொருள்.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால்,எல்லாக் காலங்களிலுமே தலை முடி அழகு சிறப்புப் பெற்றே விளங்குகிறது.

Representational Image
Representational Image

வள்ளுவர் காலத்தில் சைவமும், சமணமுமே தழைத் தோங்கி இருந்ததாம். சைவர்கள் நீண்ட முடி வளர்ப்பவர்களாக இருந்ததனால் சமணர்கள் ‘க்ளீன் ஷேவ்’, அதாவது முடியை முழுதாக எடுத்துவிட்டு, மொட்டைத் தலையுடன் காட்சியளிப்பார்களாம். இந்த நிலை இருந்த காரணத்தாலேயே

‘மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்த தொழித்து விடின்.’

என்ற குறளை தெய்வப் புலவர் எழுதினாரென்று வரலாற்றாசிரியர்கள் விளம்புகின்றனர்.

எக்காலத்திலுமே அழகிய தலைமுடி வேண்டுமென்றே மனித சமுதாயம் விரும்பி வருவது இதிலிருந்து தெளிவு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால்தான் இன்றைய விஞ்ஞான உலகிலும் தலைமுடியை பிரதானமாகக் கொண்டே பெரும் வணிகம் நடைபெற்று வருகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் மூலதனத்தில் உலக அளவில் பெரும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

முடி வளரச் செய்யும் தைலங்கள்,

முடி உதிர்வதைத் தடுக்கும் மூலிகை ஆயில்கள்,

அழுக்கைப் போக்கி அடர்த்தி தரும் ஷாம்பூக்கள்,

பொடுகைப் போக்கி புது மயிர் வளரச் செய்பவை,

வெளுப்பைக் கருப்பாக்கும் ஹேர் டைகள்,

இத்யாதி... இத்யாதி…

இது ஒரு புறமிருக்க,மறுபுறத்திலோ…முடி உதிர்ந்த தலையில் முடி நடவு செய்யும் நிலையங்கள்,

கோரை முடியைச் சுருள் முடியாக்கும் சுவாரசியங்கள்,

இது போல் பலப் பல.

இவற்றின் விளம்பரங்கள் எல்லா சானல்களிலும்-பணங் காய்ச்சி மரங்களாக!

எனவேதான்,‘அலை போல் அவளின் கூந்தல்’என்று புலவர்களும், புதுமை எழுத்தாளர்களும் தங்கள் கதாநாயகியைக் காட்சிப் படுத்தினார்கள்.

திருமண வரவேற்புகளிலும் முடியலங்காரம் முக்கியம் பெறுகிறது.

Representational Image
Representational Image

தற்காலத்தில் பல வரவேற்பு நிகழ்வுகள் தாமதமாகத் தொடங்க இந்த அலங்காரங்களே காரணமாகிவிடுவதும் நிதர்சனம்.

அக்காலத்தில் டவுன்களில் உள்ள சலூன்கள் ‘கண்ணாடிக் கடை’ என்றே அழைக்கப்பட்டதாகவும், எனது தாயாருடன் பக்கத்து வீட்டுப் பாட்டி திருத்துறைப் பூண்டி சென்றிருந்த போது, தவறுதலாக சலூனுக்குள் நுழைய எத்தணிக்க, ’அது கண்ணாடிக் கடை’ என்று என் தாயார் எச்சரிக்க, பாட்டியோ, ’சரிடியம்மா! எம் பொண்ணு மொகம் பார்க்கக் கண்ணாடி கேட்டுக்கிட்டிருந்தா. ஒண்ணு பாத்து வாங்கிக் கொடு வா!’ என்றழைத்ததைப் பலமுறை என் தாயார் சொல்லி, பாட்டியின் அறியாமையைக் கூறிச் சிரித்ததுண்டு.

சலூன்களுக்கு இப்பொழுது பல பெயர்கள் வந்து விட்டன.

முடி திருத்தும் நிலையம், அழகு நிலையம், சிகை அலங்கார நிலையம், என்றெல்லாம் அழைப்பதோடு, இன்னாரின் நிலையம் என்று தங்கள் பெயர்களையும் இணைத்துக் கொள்கிறார்கள்.

ஐடியின் வளர்ச்சிக்குப் பிறகு ‘க்ரீன் ட்ரெண்ட்’ போன்ற பெரும் நிறுவனங்களும் முடி திருத்தும் பணியில் முழுதாக இறங்கி விட, இத்தொழில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்தக் கொரோனா காலத்தில் சலூன்காரர்கள் பாடுதான் பேரவஸ்தை.

போதாக்குறைக்கு, தனக்குத் தானே எப்படி முடி வெட்டிக் கொள்வதென்று விளக்கும் வீடியோக்கள் வேறு வாட்ஸ் அப் பில் வலம் வந்தன.

எங்களூரில் அப்பொழுதெல்லாம் இரண்டு பேர் மட்டுமே முடி திருத்த இருந்தனர். வடக்குத் தெரு, கீழத்தெரு, தெற்குத்தெரு இம்மூன்றுக்கும் சேர்த்து முத்துக் கிருஷ்ணன் என்பவர்.

மேலத்தெரு, வல்லம்பர் தெரு இரண்டிற்கும் விஸ்வநாதன் என்பவர். அவர்களின் குடும்பத்திலுள்ள இரண்டு மூன்று பேர் முடி திருத்தும் பணியைச் செய்வார்கள்.

நான் மிகச் சிறுவனாக இருந்தபோது, வாரத்தில் ஒரு நாள் வீட்டிற்கே வந்து முடி வெட்டி விடுவார்கள். காலக் கிரமத்தில் அந்த நிலை மாறி, அவர்களின் வீட்டிற்குச் சென்று சிறுவர்கள் முடி வெட்டிக் கொள்வோம்.

கையில் காசு கொடுக்கும் வழக்கமெல்லாம் அப்பொழுது இல்லை. ஆண்டிற்கொரு முறை, அறுவடை நேரத்தில் நெல் கொடுப்பதோடு சரி. ஆனாலும் அவர்கள், எப்பொழுது முடி வெட்டிக்கொள்ளச் சென்றாலும் முகஞ் சுழித்ததில்லை.

Representational Image
Representational Image

எனக்கு முடி வெட்டும்போது கணேசன் சொல்வார்- ‘ஒங்க வயசுப் பையன்க எல்லாரும் ஒங்க மாதிரியே முடி வெட்டச் சொல்றாங்க. அது எப்படி என்னால முடியும். ஒங்களுக்குச் சுருட்டை முடி. அதனால அழகா இருக்கு. கோர முடிக்காரங்களுக்கு இது ஒத்து வராதில்ல’ என்பார்.

முடி வெட்டுவதுடன், தேள் கொட்டு, விஷக்கடிக்கெல்லாம் கூட அவர் மந்திரித்து மருந்து கொடுப்பார்.

கிராமத்து நாவிதர்கள் (முடிவெட்டுபவர்களை இப்படியும் அழைப்பதுண்டு) சமுதாய வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடுபவர்கள்.

எனவேதான் பல கிராமங்களில் அவர்களுக்கென்று நஞ்சை நிலத்தைக் கொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் டெல்டா பகுதிகளில் உண்டு.

அந்தக் கோடை விடுமுறையின் போது, இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு நானும் எனது அத்தை மகன் சிவாவும் வழக்கம்போல் காற்று வாங்க வெளியில் கிளம்பினோம். செங்கலண்ணி மதகில் அமர்ந்து தூக்கம் வரும்வரை கதை பேசுவது வழக்கம். அன்று என்னவோ எனக்கு அலுப்பாக இருந்தது. சிவா வற்புறுத்தவே கிளம்பினோம்.

பாதி தூரம்தான் சென்றிருப்போம். காலில் ஏதோ சுரீர் என்றது. அவ்வளவுதான். தாங்க முடியாத அளவுக்குக் கடு கடுப்பு. சிவாவைத் திட்டியபடியே நாங்கள் வீட்டிற்குத் திரும்பி விட்டோம்.

வீட்டிற்கு வந்து விஷயத்தைச் சொல்ல ஆளுக்கு ஒரு வைத்தியம் சொன்னார்கள்.

வெங்காயத்தைத் தேய்த்தோம்.

அம்மா கொடுத்த காய்ந்த மிளகாயைக் கடித்து விட்டு, ’உரைப்பாக இருக்கிறது’ என்று நான் சொல்ல, அந்த நேரத்திலும் அம்மாவின் முகத்தில் சிறிதாய் ஒரு திருப்தி இழையோடியது.-விஷம் உடம்பில் கலக்கவில்லையாம்.

கொட்டு வாயில் சுண்ணாம்பு வைத்தார்கள்.

ஊஹூம்... எதற்கும் கடுகடுப்பு அடங்கவில்லை.

Representational Image
Representational Image

சைக்கிள் டைனமோவிலிருந்து வயரை இழுத்து வாளித் தண்ணீரில் வைத்து அதனுள்ளே காலை வைக்கச் சொன்னார்கள்.

பாவம். என் சகோதரர் பெடலைச் சுற்றிக் களைப்படைந்ததுதான் மிச்சம். எனக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.

இதற்குள்ளாகக் கணேசனுக்கு ஆள் போய், அவரும் வந்து விட்டார். கையில் வேப்பிலைக் கொத்தைப் பிடித்து வாயில் எதையோ முணுமுணுத்தபடி கொட்டுப்பட்ட காலில் குழையடித்தார். 5 நிமிடம் முயன்றிருப்பார். கொஞ்சம் குறைந்ததாய் உணர்ந்தேன்.

எனது மூத்த சகோதரர் ஒருவர் ‘சாப்பிட்டுட்டு வீட்டில படுத்திருந்தா இந்தத் தொல்லையெல்லாம் வந்திருக்காதில்ல!’ என்று சலித்துக் கொண்டார்.

அடுத்த மூன்றாம் நாள் அவரைத் தேள் கொட்ட, வலியில் துடித்த அவரை 6 கி.மீக்கு அப்பாலுள்ள சங்கந்தி ராமாமிர்தம் ஆஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றது தனிக்கதை.

நேரம் ஆக... ஆக ஒவ்வொருவராக விடை பெற, நான் கொட்டுப்பட்ட காலின் மேல் பகுதியில் சணலால் இறுகக் கட்டியபடி தூங்கிப்போனேன்.

திருச்சி கல்லூரிக்குச் சென்ற பிறகு அங்கு ஒரு முடி திருத்தகத்திற்கு வழக்கமாய்ச் செல்வேன்.

அதன் ஓனர்தான் முடி வெட்டிவிடுவார்.

என்னைப் பார்த்ததும்’ இருங்க.பக்கத்து டீக் கடையில ஒரு முட்டைப் பால் சாப்பிட்டுட்டு வந்திடறேன்’ என்று போய் வருவார்.

‘ஒங்க முடி அவ்வளவு ஸ்ட்ராங்க்... எக்ஸ்ட்ரா எனர்ஜிக்காக இந்த முட்டை பால்!’

என்ற அவரின் நமட்டுச் சிரிப்பு, நாற்பது ஆண்டுக்கு முந்தியது என்றாலும், இன்றும் பசுமையாய் மனதில்.

கல்லூரி விடுதியில் இருந்தபோது ஶ்ரீலங்கா மாணவர் ஒருவர், ஒங்க மாதிரி முடி வளர என்ன செய்ய வேண்டுமென்று அடிக்கடி கேட்பார்.

எங்க அம்மா-அப்பாவைத்தான் கேட்க வேண்டுமென்று நான் சிரிப்பதுண்டு.

அப்புறம் சென்னை வந்து செட்டிலான பிறகு அருகிலுள்ள முடி திருத்தும் நிலையங்களுக்குச் செல்வதுண்டு.

Representational Image
Representational Image

எல்லா முடிதிருத்தகக் காரர்களும் சொல்லி வைத்தாற்போல், நன்றாகப் பேசுவதும், கொஞ்சமும் முகஞ் சுழிக்காமல் இருப்பதும் உண்மை.

சாவி அவர்கள் ‘வாஷிங்டனில் திருமணம்’ என்ற தொடர் எழுதியபோது, நாமெல்லாம் அந்த வாஷிங்டனைப் பார்க்க முடியுமா என்று எண்ணியதுண்டு.

சென்னையில் பணி புரிந்ததாலும், குழந்தைகள் இருவரும் நன்கு படித்ததாலும், இன்று அமெரிக்காவின் வாஷிங்டனுக்கும், சுவிட்சர்லாந்தின் ஜூரிக்குக்கும் சென்றும், தங்கியும் வர முடிகிறது.

இப்பொழுது நாங்கள் இருக்கும் மெக்லீனில் பக்கத்து வீட்டு நண்பர் ‘அடுத்த வாரம் குழந்தைக்குப் பிறந்த தின விழா. நீங்களனைவரும் அவசியம் வர வேண்டும்.’ என்று அழைத்தார்.

அது என்னவோ தெரியவில்லை. இந்தியர்கள், விழாக்கள் என்றால் உடனே முடி வெட்டிக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வந்து விடுகிறோம். நானும் அந்த முடிவுக்கு வந்து விட்டேன்.

‘வாரத்தில் ஒரு நாள் முதியவர்களுக்கு என்று ஒதுக்கி,அந்த நாளில் குறைந்த கட்டணத்தில் முடி வெட்டுவார்கள்’என்று எனது மகள் கூறி விட்டு விபரம் தேடினால்,

‘புதன் கிழமைகளில் அந்தச் சலுகை உண்டு’ என்று விபரம் சொன்னது வெப்சைட்.

நாங்கள் பார்த்ததோ வியாழக்கிழமை.

மருமகனோ,பரவாயில்லை என்று அழைத்துச் செல்ல,’Great Clip’என்ற அந்த பால்ஸ் சர்ச் சலூனில் எனக்கு முன்னர் மூவர் சீனியாரிட்டியில் காத்திருக்க,நான்காவதாக நான் அமர்ந்தேன்.

மிக’ நீட்’டாக இருந்தது அந்த முடி திருத்தகம்.

Representational Image
Representational Image

‘நீட்’ என்றதும் தேர்வை ஞாபகப்படுத்தி அரசியல் பக்கம் போக வேண்டாம்.

வரவேற்பு மேஜையில் இருந்த சிறு கம்ப்யூடர் திரையில், நம் சீனியாரிட்டியும், இன்னும் எவ்வளவு நிமிடங்கள் காத்திருக்க வேண்டுமென்பதும் ஓடிக் கொண்டேயிருக்கிறது.

முடி சம்பந்தமான சில பொருட்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். சலுகை விலையில் விற்பனையும் செய்கிறார்கள்.

பக்கத்திலேயே பல மெகசீன்கள். என்னென்ன மாடல்களில் அந்த சலூனில் முடி வெட்டுகிறார்கள் என்ற போட்டோ ஆல்பம்! முடி திருத்திக் கொண்டவர் மற்றும் திருத்தி விட்டவரின் புகைப்படங்களுடன்.

பொழுதைக் கழிக்க டி.வி., கொரோனாவுக்குப் பிறகு சமீபத்திலேயே சலூன்கள் திறக்கப்பட்டுள்ளதால், ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மட்டுமே பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். ஆனாலும் ஒரே நேரத்தில் ஐந்தாறு பேரை எங்கேஜ் செய்யுமளவுக்கு ‘சீட்’ கள் இருந்தன. அது ஒரு நடுத்தர சலூன்தான்.

புதன் கிழமைகளில் வயதானவர்களுக்கும் , சிறியவர்களுக்கும் சலுகை உண்டு என்று விளம்பரப் பலகை கூறியது.

எனது முறை வந்தது. ’என்னிடமா? அந்தப் பெண்ணிடமா?’ என்று அவர் கேட்க,

‘உங்களிடமே!’ என்ற என்னை அழைத்து, அந்த சீட்டை நன்கு தட்டிச் சுத்தம் செய்த பிறகு அமர வைத்தார்.

அமெரிக்காவில் எனக்குப் பொன்னாடை போர்த்தினார். ஆடைதான் கருப்பாக இருந்தது.

எவ்வாறு வெட்ட வேண்டுமென்று அவர் ஆங்கிலத்தில் கேட்க, நானும் மிகக் குட்டையாக என்று பதிலிறுக்க, மாப்பிள்ளை சொல்லிக் கொடுத்தபடி, இரண்டாம் நம்பர் மெஷினை உபயோகிக்க வேண்டினேன். அதனைக் கூறியதும் அவர் கண்களில் சிறு ஆச்சரியம் மின்னி மறைந்தது. ’இவருக்கு இது கூடத் தெரிந்திருக்கிறதே’ என்ற எண்ண ஓட்டமே அதற்குக் காரணமென்று யூகித்துக் கொண்டேன்.

‘லாங் அன்ட் நைஸ் ஹேர்’ என்றபடி மெஷினை ஓட விட்டார்.

அப்பாடி! அமெரிக்காவிலும் நம் முடிக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டதே என்று மனது மகிழ்ந்தது.

போட்டிருந்த முகமூடி, அதாங்க மாஸ்க், சற்று இறுகலாக இருந்ததால், புதிதாக ஒன்று போட்டு விடவா? என்று என்னிடம் அனுமதி கேட்ட பிறகு, புது மாஸ்க் போட்ட பின்னர் வேலையைத் தொடங்கினார்.

பத்தே நிமிடங்கள்தான். ஏறியிருந்த தலைக் கனத்தை, முடியைத் தாங்க சொல்றேன்!

முழுதுமாக இறக்கி விட்டுவிட்டார்.

நடு நடுவே ஒரு முதியவர் மிக ஜோவியலாகப் பேச, அவருக்குப் பதில் அளித்துக் கொண்டே வேலையை முடித்தார்.

அது என்னவோ தெரியவில்லை. உலகம் முழுவதுமே சலூன்காரர்கள் எந்த இறுக்கமுமின்றி மிகச் சந்தோஷமாகவே காணப்படுகிறார்கள். ஒரு வேளை அவர்கள் சோகங்களைக் கடைக்கு வெளியிலேயே வீசி விட்டு உள்ளே வருவார்களோ என்னவோ தெரியவில்லை.

நாம் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், பணி நேரத்திலும் சந்தோஷமாக இருப்பதைத்தான்.

வேலை முடிந்ததும் கம்ப்யூடர் பில்லைக் கொடுத்தார். மாப்பிள்ளை கூப்பன் இருப்பதாகக் கூறி கைபேசியில் அதனைக் காட்ட, அதனை ஏற்றுக் கொண்டு மீதிக் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டார்.

கட்டணம் எவ்வளவு என்கிறீர்களா? $16 மட்டும்தான்.

புதன் கிழமைகளில் மட்டும் $14.99 - முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும்.

மற்ற தினங்களில் $18

மற்றையோருக்கு $ 20

எங்களிடம் $2 க்குக் கூப்பன் இருந்ததால் $16 செலுத்தினோம். அதாவது நமது இந்திய ரூபாயில் 1198/- அல்லது 1200/-

நம்மூரில் என்றால், இப்பொழுது நான் முடி வெட்டிக் கொள்ளும் சலூனில் 12 முறை இந்தத் தொகையில் முடி வெட்டிக் கொள்ளலாம்.

இந்திய ‘மைன்ட் செட்’ வேறென்ன செய்யும்? இப்படித்தான் கணக்குப் போடும்.

-ரெ.ஆத்மநாதன்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/