Published:Updated:

சிறுவயதில் நான் வியந்த அந்த உருவம்..! - புரட்சியாளரின் புகைப்படக் கதை #MyVikatan

இளைஞர்கள் அணியும் டீ சர்டுகளில், ஆட்டோக்களின் முன் இருக்கும் கண்ணாடிகளில், முடி திருத்தம் செய்யும் சலூன்கடைகளில் என எல்லாவற்றிலும் அந்தப் புகைப்படத்தைக் காணலாம்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, தன் கூரிய கண்களால் தீர்க்கமாகப் பார்க்கும் அந்த இளைஞர், சிறுவயதில் அடிக்கடி என் பார்வைக்குத் தென்படுவார்.

நண்பர்கள் கொண்டு வரும் லஞ்ச் பாக்ஸ்களில், இளைஞர்கள் அணியும் டீ சர்டுகளில், ஆட்டோக்களின் முன் இருக்கும் கண்ணாடிகளில், முடி திருத்தம் செய்யும் சலூன்கடைகளில் என எல்லாவற்றிலும் அந்தப் புகைப்படத்தைக் காணலாம்.

'யார் இவர். எப்போது எடுத்த புகைப்படம் இது?' எனக் குழம்பி நிற்பேன்.

நாள் - 1960 ஆம் ஆண்டு, மார்ச் 4.

இடம் - ஹவானா சிட்டி, க்யூபா.

Representational Image
Representational Image
Pixabay

சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளையும், போருக்குத் தேவைப்படும் சில ஆயுதங்களையும் தாங்கிக்கொண்டு, ஹவானா கப்பல் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது La Coubre என்ற பிரெஞ்சுக் கப்பல் ஒன்று.

யாரும் எதிர்பார்த்திடாத நேரத்தில் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறிய அந்தக் கப்பல், குறைந்தது நூறு பேரின் உயிரையாவது காவு வாங்கியிருக்கும். பலர் காயமுற்றனர். சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஃபிடல் கேஸ்ட்ரோ, 'அமெரிக்காவின் சதி இது' எனச் சீறினார். விபத்தில் இறந்தவர்களுக்கு அடுத்த நாள் கேஸ்ட்ரோவின் தலைமையில், துக்கம் அனுசரிக்கப்பட்டது.

கோபம் கொப்பளிக்க கேஸ்ட்ரோ பேசிக்கொண்டிருக்க, புகைப்படக்காரர் ஆல்பர்ட்டோ கோர்டா ( Alberto Korda ) எல்லா கோணங்களிலும் புகைப்படங்களை க்ளிக் செய்து கொண்டிருந்தார்.

அதில் ஒரு புகைப்படம், கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1967 ல் உலகப்புகழ் அடையப்போகிறது என்பதை அப்போது அவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அந்தப் புகைப்படத்தைப் பற்றித்தான் மேலே நான் குறிப்பிட்டது.

இன்று உலகம் முழுவதிலும் 'புரட்சி' என்ற வார்த்தைக்கு அடையாளமாக விளங்கும் சேகுவேராவின் அந்தப் புகைப்படம், ஆல்பர்ட்டோ கோர்டாவை உலகறியச் செய்தது.

``அன்று ஒரு சிறிய மேடையில் ஃபிடல் கேஸ்ட்ரோ அமெரிக்காவுக்கு எதிராக முழங்கிக் கொண்டிருந்தார். அவரது ஒவ்வொரு சொல்லிலும் கோபமும் வலியும் ஒருசேர இருந்தது. கேஸ்ட்ரோவைப் படம் எடுக்க அன்று, நான்தான் சென்றிருந்தேன். அப்போது பின்புறம் நின்றிருந்த சேகுவேரா மெதுவாக முன்னோக்கி வர ஆயத்தமானார். அந்த நொடிப்பொழுதில் என் கேமராவில் பதிவான புகைப்படம்தான் இது''.

சேகுவேராவின் அந்தப் புகைப்படம் பிரபலம் ஆன பிறகு ஆல்பர்ட்டோ உதிர்த்த வார்த்தைகள் இவை.

Representational Image
Representational Image
pixabay

உண்மையில் எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல்தான் இந்தப் புகைப்படத்தை ஆல்பர்ட்டோ க்ளிக் செய்திருக்கிறார். கேஸ்ட்ரோவைப் புகைப்படம் எடுக்கப்போய், எதேச்சையாக பதிவான புகைப்படம் தான் சேகுவேராவினுடைய இந்தப் புகைப்படம்.

தான் எடுத்த புகைப்படங்களை அன்று இரவு ஆராய்ந்த ஆல்பர்ட்டோ, சேவின் குறிப்பிட்ட அந்தப் புகைப்படம் தன்னை அப்போதே பாதித்தது என ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். தனக்குச் சொந்தமான ஸ்டூடியோவில் அந்தப் புகைப்படத்தைத் தனியாக எடுத்து வைத்து அழகும் பார்த்திருக்கிறார் .

1967 ல் ஒரு இத்தாலியப் பத்திரிகையாளர் சேவின் அந்தப் புகைப்படத்தைக் கேட்க, இலவசமாகவே அதை அன்புடன் வழங்கினார் ஆல்பர்ட்டோ. அதன் பிறகே இந்தப் புகைப்படம் பிரபலமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`என் தந்தை எடுத்த இந்தப் புகைப்படம், அவரின் இறுதிக் காலம் வரை அவருக்கு நல்ல ஓர் அடையாளமாகவே இருந்தது. இன்று உலகத்தின் மூலை முடுக்கிலும் பரவியிருக்கும் இந்தப் புகைப்படத்திற்காக ஒருநாளும் அவர் உரிமை கொண்டாடியதில்லை.'

ஆல்பர்ட்டோ இறந்த பிறகு, அவருடைய மகள் ஒரு பேட்டியில் சொன்ன வார்த்தைகள் இவை.

1967 ல் சேகுவேரா பொலிவியாவில் சுட்டுக் கொல்லப்பட்டபோது, க்யூபா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் போராட்டத்தில் கிளர்ந்தெழுந்தன. அப்போது சேவின் அந்தப் புகைப்படத்தை உயர்த்திப் பிடிக்காத இளைஞர்களே இல்லை எனச் சொல்லலாம். க்யூபாவின் ஒவ்வொரு தெருவும், சேகுவேராவின் கூர்மையான பார்வை கொண்டு மின்னியது. (இப்போதும் மின்னிக் கொண்டிருக்கின்றது )

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படமாக கருதப்படும் இது, புரட்சியின் அடையாளமாக மாறிப்போனது.

Representational Image
Representational Image
elCarito / Unsplash

இந்தப் புகைப்படத்தைச் சற்று நேரம் உற்று நோக்கினால், சேகுவேராவின் பார்வை நம் கண்களையும் கூசிடச் செய்யும். பலரின் நாடித்துடிப்பைப் பதம் பார்த்த புகைப்படம் இது. சிலரின் வாழ்க்கையே கூட மாற்றி அமைத்த புகைப்படம் இது. புரட்சியை விரும்பும் ஒவ்வொரு இளைஞரும் இன்று 'சே' வை தங்கள் டீ - சர்டுகளில் மட்டுமல்ல; தங்களின் நெஞ்சத்திலும் பொதிந்து அழகு பார்க்கிறார்கள்.

-மருத்துவர். சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு