Published:Updated:

டென்சிங் என்னும் இமயத்துப்புலி..! - குட்டி கதை #Inspiration #MyVikatan

Mount Everest
News
Mount Everest

இதைத் தவற விட்டால் மீண்டும் அடுத்த வருடம் தான். அல்லது, எப்போதுமே இல்லை. பின்வாங்கினால் இத்தனை வருடக் கனவு என்னாவது?

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சுற்றிலும் பனி. காதைப் பிளக்கும் காற்று. முதுகெலும்பில் பாயும் குளிர். உறைந்த கைகள். மறுத்துப் போன கால்கள்.

டென்சிங்கால் (Tenzing Norgay) அடுத்த அடியை எடுத்து வைக்க முடியவில்லை.

ஆனால்...

இதைத் தவற விட்டால் மீண்டும் அடுத்த வருடம் தான். அல்லது, எப்போதுமே இல்லை.

பின்வாங்கினால் இத்தனை வருடக் கனவு என்னாவது?

இல்லை...கண்டிப்பாக இல்லை.

இந்த வாய்ப்பை விடப்போவதில்லை. இன்னும் சிறிது தூரம் தான்.

சிறுது தூரம் என்றால்?

இருநூறு அடிகள். வெறும் இருநூறு அடிகளே!

'முப்பதாயிரம் அடிகள் ஏறி வந்த எனக்கு, இருநூறுகள் அடிகள் எம்மாத்திரம்?'

மனதினுள் உறுதியாக சொல்லிக் கொண்டே அடுத்த அடியை அழுத்தமாக எடுத்து வைத்தார், டென்சிங் நார்கே.

உலகத்தின் உச்சியில் வரலாறு எழுதப்பட்டது.

ஆம்...டென்சிங் நார்கேயும், எட்மண்ட் ஹிலாரியும் இமயமலைத் தொடரின் தந்தையான 'எவரெஸ்ட்' சிகரத்தின் உச்சியை அடைந்தனர்.

1953 ஆம் ஆண்டு, மே 29. நேரம் காலை 11.30 மணி.

கிட்டத்தட்ட ஆறு முறை முயற்சி செய்து தோற்றுப் போய், ஏழாவது முறையாக எவரெஸ்ட்டின் உச்சியில் ஏறி வெற்றி கண்டார் டென்சிங்.


வெற்றிக்களிப்பில் அவர்கள் சிரித்த போது எடுத்த புகைப்படம் இது. ( வலது பக்கத்தில் இருப்பவர் டென்சிங் )

டென்சிங் நார்கே, ஷெர்ப்பா இனத்தை சேர்ந்தவர். நேபாளத்தில் உள்ள சோலோ கும்பு என்னும் சிற்றூரில் பிறந்தவர். ஆனால், வளர்ந்தது எல்லாம் இந்தியாவின் டார்ஜிலிங்கில் தான்.

ஷெர்ப்பா என்றால்?

ஷெர்ப்பா என்பது மங்கோலிய வகுப்பினரின் ஒரு பிரிவு. 'கிழக்கில் இருந்து வந்தவர்கள்...' என்று பொருள்.

அவர்களது உயரம், உடல் அமைப்பு, இயற்கையோடு ஒன்றி வாழும் வாழ்வியல் என இயற்கையாகவே மலை ஏறும் திறன் அவர்களுக்கு இருந்தது.

டென்சிங்
டென்சிங்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டென்சிங் முதன் முதலாக எவரஸ்ட்டின் மீது ஏறியபோது, மலை ஏற வேண்டும் என்ற ஆசையெல்லாம் பெரிதாக இல்லை. ஆங்கிலேயர்களுக்கு அவர் உதவியாளராக மட்டுமே இருந்தார்.

ஆனால்...டென்சிங்கின் மலையேறும் திறனைக் கண்டு அவர்கள் வியந்தனர். மலையேறும் எல்லா விதிமுறைகளும் அவருக்குத் தெரிந்தது. எவரெஸ்ட் சிகரம் ஏற வரும் பலரும் டென்சிங்கை நாடினர்.

'இவன் மலை ஏறப் பிறந்தவன்...' என டென்சிங்கின் பெருமை ஊர் முழுக்கப் பரவியது.

ஆரம்பத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே மலை ஏறிய டென்சிங், மெல்ல எவரெஸ்ட் சிகரத்தின் மீது காதல் கொண்டார்.

அதன் உச்சியை அடைவதை, பெருங் கனவாக வளர்த்தார். ஒவ்வொரு நாளும் எவரெஸ்ட் சிகரத்தை கீழிருந்து பார்த்து, கண் சிமிட்டிக் கொள்வார்.

'ஒரு நாள் அந்த உச்சியை நான் அடைவேன்...' என உறுதி கொண்ட போது டென்சிங்கின் வயது முப்பது.

சுதந்திர இந்தியா, மலை ஏறுவதன் விதிமுறைகள் பலவற்றை மாற்றி அமைத்தது. சில விதிமுறைகள் பாதகமாக இருந்தாலும், பலது டென்சிங்க்கு நன்மையே தந்தன.

1953 ம் ஆண்டின் ஆரம்பத்தில் டென்சிங்க்கு ஒரு கடிதம் வந்தது.

அதில் பிரிட்டிஷ் மலை ஏறும் குழுவைச் சேர்ந்த சிலர் எவரெஸ்ட் சிகரம் ஏற வருவதாகவும், அதற்கு டென்சிங் உதவி வேண்டுமெனவும் இருந்தது. அந்தக் குழுவில் ஹிலாரியும் ஒருவர்.

டென்சிங்கிற்கு அப்போது உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.

ஆனால், அன்று இரவே டென்சிங்க்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு வெள்ளைக் குதிரையை அவர்கண்டார். வெள்ளைக் குதிரையை கனவில் கண்டால், நல்லது நடக்கும் என்பது ஷெர்ப்பாக்களின் நம்பிக்கை.

இதை, டென்சிங்கே அவரது சுயசரிதையான,'Man Of Everest' ல் பதிவு செய்திருக்கிறார்.

'எவரெஸ்ட்டின் உச்சியில் மனிதக் கால் பதிந்துவிட்டது' என்ற செய்தி, ஜூன் 1 ல் உலகம் முழுக்க பரவியது.

அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு, பிரதமர் மாளிகையில் டென்சிங்க்கு சிறப்பான வரவேற்பினை கொடுத்து கௌரவித்தார்.இந்தியா முழுக்க டென்சிங்கின் பெயர் ஒலித்தது.

அதே நாளில், இங்கிலாந்தின் புதிய ராணியாக பதவி ஏற்கத் தயாராக இருந்தார் எலிசபெத். டென்சிங்குடன் ஹிலாரி செய்த இந்த சாதனை எலிசபெத்தின் காதில் விழ, 'இது ஒரு இனிப்பான ஆரம்பம்' என்று சொல்லி அகமழிந்தார்.

'உச்சியில் என்ன கண்டீர்கள்?' என நிருபர் ஒருவர் டென்சிங்கிடம் கேட்க, 'அமைதியைக் கண்டேன். அமைதியை மட்டுமே கண்டேன். என் அருமை மகள் கொடுத்தனுப்பிய பேனாவை உலகின் உச்சியில் வைத்துவிட்டு வந்தேன்...' என்றார்.

1986 ல் மரணம் அடைந்த டென்சிங்கின் நினைவாக அவரது உருவச் சிலையை, டார்ஜிலிங்கில் உள்ள மலையேறும் பயிற்சிப் பள்ளியில் வைத்துள்ளனர்.

இன்றும் எவரெஸ்ட் ஏறும் கனவோடு வருபவர்களுக்கு டென்சிங் ஒரு முன்னோடியாக இருக்கிறார்.

எவரெஸ்ட்டில் படிந்துள்ள ஒவ்வொரு காலடியிலும் டென்சிங் நார்கே பெயர் பதிந்துள்ளது.

- சரத்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/