Published:Updated:

சொந்த நிலம் இல்ல, பல ரக பாரம்பரிய மரங்கள் இருக்கு! - அடர்வனம் உருவாக்கும் ஆட்டோக்காரர்

கமால் பாட்ஷா

பாரம்பரிய மரங்களின் ஏக்கமும், அவற்றை எல்லாம் வளர்க்க அவர் படும்பாடும், சொந்தமாய் நிலம் இல்லாமல் அவர் கொள்ளும் தவிப்புமே என்னை இங்கு அவரைப் பற்றி எழுத வைத்துள்ளது.

சொந்த நிலம் இல்ல, பல ரக பாரம்பரிய மரங்கள் இருக்கு! - அடர்வனம் உருவாக்கும் ஆட்டோக்காரர்

பாரம்பரிய மரங்களின் ஏக்கமும், அவற்றை எல்லாம் வளர்க்க அவர் படும்பாடும், சொந்தமாய் நிலம் இல்லாமல் அவர் கொள்ளும் தவிப்புமே என்னை இங்கு அவரைப் பற்றி எழுத வைத்துள்ளது.

Published:Updated:
கமால் பாட்ஷா

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

என்னுடைய 4,456 முகநூல் நண்பர்களில் கமால் பாட்ஷா அப்துல் கரீம் என்பவரும் ஒருவர். ஆனால் அவருடைய முகநூல் பதிவு மட்டும் ஒரு புதுரகம். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மரத்தின் விதை முளைத்த படங்கள் பதிவில் இருக்கும். அத்துடன் அந்த மரத்தின் விதைகள் எங்கிருந்து கிடைத்தது..? யார் கொடுத்தது? அந்த மரத்தின் தன்மை என்ன..? சிறப்புகள் என்ன..என்பது பற்றி சில வரித் தகவலும் இருக்கும்.

இப்படி அவருடைய பதிவுகள் முழுவதுமே விதைகளும், பழங்களும், தானியங்களும் அவற்றில் இருந்து இந்த பூமியை எட்டிப் பார்க்க முளைவிடும் துளிர்களும், சிறுசிறு மரக் கன்றுகளுமாகத்தான் இரைந்து கிடக்கும்..!

கமால் பாட்ஷா
கமால் பாட்ஷா

பதிவைப் பார்க்க பார்க்க எனக்கு ஆச்சரியம்..! அவருடன் பேசித்தான் பார்ப்போமே என்று மெஸஞ்சர் வழியே அணுகி தொடர்பு எண் கேட்டுப் பேசினேன். அவருடைய பாரம்பரிய மரங்களின் ஏக்கமும், அவற்றை எல்லாம் வளர்க்க அவர் படும்பாடும், சொந்தமாய் நிலம் இல்லாமல் அவர் கொள்ளும் தவிப்புமே என்னை இங்கு அவரைப் பற்றி எழுத வைத்துள்ளது.

தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் 7 ஆவது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டியூர்தான் கமால் பாட்ஷாவுக்கு சொந்த ஊர். 37 வயதான இவர் துபாயிலும், சவுதியிலும் 7 ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு தாயகம் திரும்பியவர். தற்போது ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். அவருக்குத்தான் இப்படி பாரம்பரிய மரங்களின்மீது அளவில்லா அடர் காதல்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இனி அவர் சொன்னதை இங்கே பதிவு செய்கிறேன்..

” எனக்கு மரங்கள்.. அதுவும் பாரம்பரிய மரங்களை நிறைய வளர்க்கனும்னு பள்ளிக்கூடத்துலே படிக்கும்போதே ரொம்ப ஆசை. ஆனா, அதை அப்போ செய்ய சூழ்நிலை ஒத்துவரலை. அப்புறம் வேலைக்காக சவுதி,துபாய்னு போயிட்டேன். அப்படி போயிட்டு வந்த பின்னாடியும் இந்த மரங்களோட நான் வைச்சிருக்க பிரியம் மட்டும் குறையவே இல்லை.

எனக்கு நாவல் பழ மரம் ரொம்ப பிடிக்கும். அதுக்கு ஒரு முக்கிய காரணம் இன்னைக்கு கிட்டத்தட்ட எல்லோருக்கும் சுகர். அதனாலே யாரு வேண்டுமானாலும் பயமில்லாமல் சாப்பிடுற பழம்னா அது நாவல் பழம் மட்டும்தான். அதுக்காக நம்ம நாட்டிலே உள்ள அத்தனை வகை நாவல் மர ரகத்தையும் வளர்க்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனால் நான் குடியிருக்கிற வீட்டைத் தவிர எனக்கு ஒரு குழி நிலம்கூட சொந்தம் இல்லை. அந்த வீட்டுக்குப் பக்கத்திலே ஒரே ஒரு சின்னச் சந்து மட்டும்தான் இருக்கு, அதுலே பெரிய மரங்கள் எல்லாம் வளக்க முடியாது. தனியா நிலம் வாங்குற அளவுக்கு வசதியும் இல்லை. ஆனால் என்னோட பாரம்பரிய மரக் கனவு மட்டும் குறையவே இல்லை.

கமால் பாட்ஷா
கமால் பாட்ஷா

அப்போதான் என்னோட தம்பி வீடு கட்டுறதுக்காக இங்கே இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துலே உள்ள நடுக்கடை அப்படிங்கிற ஊர்லே 7 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கினான். அதுவும் சரியான பள்ளம். அதுலே மரம் வளர்க்கலாம்னு அவன்கிட்டே கெஞ்சிக் கேட்டேன். அதுலே வீடு கட்டணும்..அதெல்லாம் சரிப்படாதுனு மொதல்லெ மறுத்தான். நான் விடலை. அப்புறம். கொஞ்ச நாள் கழிச்சு. வேனும்னா அந்த இடத்தை சுத்தி மரம் வளர்த்துக்கோனு சம்மதம் சொன்னான். அப்புறம் அதுலே நான் மண்ணைக் கொட்டி சுத்தி வேலி அடைச்சு அந்த நிலம் முழுவதுமா பாரம்பரிய மரக் கன்றுகளை நட ஆரம்பிச்சேன்.

நான் எங்கேயும் மரக்கன்றுகளை வாங்கி வந்து நடமாட்டேன். பாரம்பரிய மரங்கள் இருக்கிறதுனு தெரிஞ்சா இந்தியா முழுக்க எங்கே இருந்தாலும் அவங்களை தொடர்பு கொண்டு பேஸ்புக், வாட்ஸப் மூலமா விதை கேட்பேன். அந்த மரங்களோட சிறப்புகளைக் கேட்பேன். எல்லோரும் கேட்ட உடனே கொடுக்க மாட்டாங்க.

என்னோட பிள்ளைகளுக்கு தினமும் திண்பண்டம் வாங்குறேனோ இல்லையோ இந்த விதைகளை முளைக்க வைக்கிறதுக்கு தேவையான மண், பை, பழைய இலை தழைகளை வீட்டுக்கு அள்ளிக்கிட்டு வராமல் இருக்கமாட்டேன்
கமால் பாட்ஷா

பல நாள், பல தடவை பேசிப் பேசித்தான் விதைகளை வாங்க முடியும். அப்படி பார்சல் மூலமா என் கைக்கு கிடைக்கிற விதைகளை உசுரு மாதிரி பாதுகாத்து அவைகளை முளைக்கப் போடுவேன். அதுக்குத் தேவையான பை, மண், இயற்கை உரம் எல்லாம் என் செலவிலேயே வாங்கி வந்து ,என்னோட வீட்டிலேயே விதைகளை முளைக்கப் போடுவேன். அப்படி அந்த விதைகள் முளைச்சு வரும்போது அதைப் பார்க்கிற சந்தோசமே தனி. காலையிலேயும், சாயங்காலமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கனும். திடீர்னு ஆட்டோ சவாரி வந்துடும். அதுக்கும் ஓடணும். நைட்டு வந்ததும் அதை எல்லாம் பார்த்து தண்ணீர் ஊத்துனாத்தான் எனக்கு நிம்மதி.

கமால் பாட்ஷா
கமால் பாட்ஷா

‘நம்ம வீட்டுப் பிள்ளைகளை கவனிக்கச் சொன்னா அதைப் பார்க்க மாட்டீங்க.. மரத்தோட விதை முளைக்க வைக்கிறதை மட்டும் பார்த்துக்கிட்டே இருங்கனு..’- என் மனைவி கூட திட்டுவாங்க, நான் எதையும் கண்டுக்க மாட்டேன். ஆட்டோ சவ்வாரி போயிட்டு வரும்போது விதை முளைப்புக்கு ஏற்ற மண், இயற்கை உரம், மக்குன குப்பை இதை எங்கே பார்த்தாலும் வீட்டுக்கு அள்ளிக்கிட்டு வந்திடுவேன். என்னை எல்லோரும் ஒருமாதிரி கேலியா பார்ப்பாங்க.. அதைப் பத்தி எல்லாம் துளிகூட கவலைப்பட மாட்டேன். என்னோட பிள்ளைகளுக்கு தினமும் திண்பண்டம் வாங்குறேனோ இல்லையோ இந்த விதைகளை முளைக்க வைக்கிறதுக்கு தேவையான மண், பை, பழைய இலை தழைகளை வீட்டுக்கு அள்ளிக்கிட்டு வராமல் இருக்கமாட்டேன்..!

எனக்கு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலே இருந்து தனித்துவமிக்க நாவல் பழ விதைகளை ஒரு மேடம் அனுப்பி வைச்சிருந்தாங்க.. இப்போ அது முளைச்சு நாலு வருஷம் ஆச்சு. அதே மாதிரி பீகார், ஆந்திரா, கேரளா இப்படி இந்தியா முழுக்க நான் விதைகளை சேகரிச்சு அதை முளைக்க வைச்சு நடவு செஞ்சிட்டு வர்றேன். நான் வாங்குற விதைகளுக்கு யாரும் பணம் கேட்டதில்லே. கூரியர் செலவு மட்டும்தான் நான் கொடுப்பேன்.

அந்த தாய் மரத்தோட தன்மை, காய்ப்பு, ருசி, பராமரிப்பு முறை, அவைகளோட போட்டோ இப்படி எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். அப்படி பார்சலில் வர்ற ஏழெட்டு பத்து விதைகளிலே எத்தனை முளைக்கும்னு தெரியாது. சில சமயம் போடுற பத்தும்கூட முளைச்சிடும். சில சமயம் ஒத்தைவிதை கூட முளைக்காமப் போன கதையும் உண்டு. அப்போ கொஞ்சம் வருத்தமா இருக்கும். ஆனாலும் முயற்சியை கைவிட விடமாட்டேன்.

கமால் பாட்ஷா
கமால் பாட்ஷா

அப்படி இதுவரை நாவல் பழ மரத்துலே மட்டும் 15 ரகத்துக்கிட்டே எனக்கிட்டே இருக்கு. கொய்யாவிலே 35 ரகம் இருக்கு. கொய்யா சிறுவனமாவே மாறிடுச்சு. சில ரகம் காய்ப்புக்கும் வந்துடுச்சு. அதே மாதிரி நாட்டு எலுமிச்சை, நாட்டு இலந்தை, பதிமுகம், மா, இனிப்பு கொடுக்காப்புளி, சீதா, நாட்டு முந்திரி, நாட்டு பப்பாளி, சப்போட்டா, ஜாதிக்காய், மூலிகை மரங்கள், தான்றி இப்படி பலவித மரக்கன்றுகளை விதை போட்டு முளைக்க வைச்சு நடவு செஞ்சு இருக்கேன்.

பாரம்பரிய மரங்களை நிறைய நடனும். பெரிய அடர் வனம் ஆக்கனும் அப்படிங்கிறதுதான் ஆசை. அதுதான் என்னோட பெரிய கனவு.. ஆனா சொந்த நிலம் இல்லையே.. என்ன செய்யுறது. ? தம்பியும் அந்த இடத்துலே வீடு கட்டும்போது அங்கே இருக்கிற எல்லா மரங்களையும் வெட்டிடுவானோனு பயமா இருக்கு. அதேமாதிரி கஜா மாதிரி பெரும் புயல் காத்து வந்து எல்லாத்தையும் வேரோட சாய்ச்சுப்போட்டிடுமோனு மனசு திக்திக்குனு அடிச்சுக்கும்.

ஒவ்வொரு மரக் கன்றும் எனக்கு உசுரு. அதை ஒரு நாள்கூட பார்க்காம இருந்ததில்லை. என்னோட வீட்டிலே இருந்து அந்த மரங்கள் வைச்சிருக்க இடம் ஒரு கிலோ மீட்டர். ஆனால் அதைப் போய் பார்க்கமா மட்டும் நான் இருந்தது இல்லை. எங்க வீட்டு ஆளுக என்னை அங்கே மட்டும் போகவே கூடாதுனு சொல்லுவாங்க..! நான் அதை எல்லாம் கண்டுக்கவே மாட்டேன். அதைப் போய் நேரிலே பார்க்காமல் இருக்கவே முடியாது.

பெரும் காத்துலே கீழே ஒடிஞ்சு விழுந்திடக்கூடாதுனு எல்லா மரக்கன்றுகளையும் கயிறு வைச்சு இப்பவே இழுத்து கட்டி வைச்சிருகேன். அங்கே உள்ள மண்ணும் ஸ்ட்ராங்கா இல்லை. இவ்வளவு சிரமம் இருந்தும் எனக்கு ஆசைப்பட்ட பாரம்பரிய மரங்களை வளர்க்கிற ஆர்வம் மட்டும் ஒரு துளி கூட குறையலை. அதேமாதிரி நான் விதைபோட்டு முளைக்க வைக்கிற மரக் கன்றுகளையும் உண்மையா..ஆர்வமா வளர்க்க கேட்கிறவங்களுக்கு இலவசமாவே கொடுக்கிறேன்.

கமால் பாட்ஷா
கமால் பாட்ஷா

பொது இடத்துலேயும் இந்தக் கன்றுகளை வைச்சுப் பார்த்தேன். யாராவது பறிச்சிட்டுப் போயிடுவாங்க.. இல்லை ஆடு மாடு தின்னுடும். அதனாலே அந்த முயற்சியைக் கை விட்டுட்டேன். அரசாங்கம் மட்டும் அடர் வனத்துக்கு ஒரு நிலத்தை அடையாளம் காட்டினா போதும். என்னோட சொந்த உழைப்பு, என்னோட சொந்த செலவிலே ஒரு பெரிய பாரம்பரிய மரங்களோட அடர்வனத்தையே உருவாக்கி இந்த நாட்டுக்கு கொடுத்திடுவேன். இதுலே என்னோட நிம்மதியையும், சந்தோஷத்தையும் தவிர எனக்கு வேற எந்த ஆதாயமும் வேணாம்.

அதேமாதிரி என்னைப்போல எந்தவித சுய ஆதாயமும் இல்லாமல் பாரம்பரிய மரங்களை வளர்க்கனும்னு ஆசைப்படுறவங்களோட சேர்ந்து செயல்படவும் தயாரா இருக்கேன். அப்படி நல்ல உள்ளங்கள் கெடைச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன். பாரம்பரிய மரங்களை என்னோட ரத்த சொந்த உறவுகளாத்தான் பார்க்கிறேன். அதை பெரிய எண்ணிக்கையிலே வளர்த்து பெரிய அடர் வனமாக்கி அதை கண் குளிர பார்க்கனும்.. அதுதான் என் ஆசை,கனவு.. இப்படி ஒட்டுமொத்த என்னோட வாழ்க்கை எல்லாமுமே..அதுதான்.! “

கமால் பாட்ஷாவின் அடர்வனக் கனவும், ஆசையும் பலிக்கட்டும்..!

-பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/