ஆண்-பெண் காதல் திருமணத்தையே முழுமனதோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம் சமூகத்தில் ஏற்படாத நிலையில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்தான விழிப்புணர்வை பற்றி சொல்லவே தேவையில்லை. என்னதான் 377 என்ற சட்டம் இயற்றப்பட்டாலும் இன்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த முழுமையான புரிதல் நம் சமூகத்தில் ஏற்படவில்லை. தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும் நிலைதான் நம் நாட்டில் நிலவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன்னெடுப்பாகத் திகழ்கிறது விக்னேஷ் என்பவரின் Dads of meenakshi இன்ஸ்டகிராம் பக்கம்.

ஒரு குழந்தைக்கு எப்படி இரண்டு தந்தைகள் என்ற கேள்வி நம் அனைவருக்கும் எழலாம். இருக்க முடியும் என்பதே நிதர்சனம். சிட்னியில் வசிக்கும் விக்னேஷ் மற்றும் ஆந்த்ரேயா தன்பாலின இணையர்களின் குழந்தைதான் மீனாட்சி. அதை குறிப்பிடும் விதமாகவே வண்ணமே இன்ஸ்டகிராம் பக்கத்திற்கு Dads of meenakshi என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; மதுரைக்காரர். 12 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்த இவர் நியூசிலாந்தில் தன் இணையான ஆந்த்ரேயாவை சந்தித்து காதல் வயப்பட்டார். ஆந்த்ரேயா இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இருவரும் ஆன்லைன் டேட்டிங் சைட் மூலம் பழக்கமாகினர். மதுரையைச் சேர்ந்த ஒருவர் சுமார் 10 வருடங்களுக்கு முன்பே இந்த முடிவை எடுத்திருப்பது ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது. இம்முடிவு குறித்து அவர் கூறியிருப்பதாவது “ நான் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு தன்பாலின ஈர்ப்பு ஏற்பட்டது. முதலில் எனக்கு குழப்பமாகவே இருந்தது. இன்டர்நெட் கூட இல்லாத அந்த காலத்தில் Gay என்ற வார்த்தையைக் கண்டுபிடிக்கவே மிகவும் சிரமப்பட்டேன். எனது பொருளாதார மேம்பாட்டுக்காகவும், என் உணர்வுகளை வெளிப்படுத்தத் தேவையான மனஉறுதி பெறுவதற்காகவும் வெளிநாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தேன்” என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபத்து வருடங்களாக நியூஸிலாந்தில் வாழ்ந்த இத்தம்பதியினர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக சிட்னியில் குடிபெயர்ந்துள்ளனர். திருமண உறவின் அடுத்த கட்டம் குழந்தைப்பேறு. தன்பாலின ஈர்ப்பாளர்கள் நாம் நல்ல தம்பதிகளாக வாழும் போது நல்ல பெற்றோர்களாக முடியாதா என்ற கேள்வி விக்னேஷ் ஆந்த்ரேயாவின் இருவரின் மனதிலும் எழுந்துள்ளது. இதன் விளைவாக அவர்களுக்கு கிடைத்த வரம்தான் மீனாட்சி. Surrogacy எனப்படும் வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் முறையால் மீனாட்சி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். ஒரு குழந்தை தன் பெற்றோர் ஆணா? பெண்ணா? என்று பார்க்காது. அதற்கு வேண்டியதெல்லாம் அன்பு காட்டும் பெற்றோர்கள் மட்டுமே! என்று கூறுகிறார் விக்னேஷ்.

“தாய்ப்பாலூட்டுவதைத் தவிர குழந்தைக்கு ஒரு தாயால் கொடுக்க முடிந்த உணர்வு ரீதியலான விஷயங்களையும், பராமரிப்பையும் தந்தைகளாலும் கொடுக்க முடியும். எங்களின் இந்த முடிவுக்கு முதலில் எங்கள் பெற்றோர் தயக்கம் தெரிவித்தார்கள். ஆனால் நாங்கள் நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்தோம். இன்று எங்கள் வாழ்க்கை மிகவும் அழகாக மாறியுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றி பொது வெளியில் பேசவே தயங்குகிறது நம் சமூகம். எங்கள் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாகவும், தைரியத்தைக் கொடுக்கும் வகையிலும் இருக்கிறது என நம்புகிறேன். அதற்கு சிறந்த வழியாக சமூக ஊடகத்தை தேர்ந்தெடுத்து, எங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை பதிவிட்டு வருகிறேன். இதன் மூலம் ஒடுக்கப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஒரு நம்பிக்கையும் அரவணைப்பும் கிடைக்கும் என நம்புகிறோம்” என்கிறார் விக்னேஷ்.