Published:Updated:

`இன்னும் 10 வருஷம் என் வண்டி ஓடும்! -மெய்சிலிர்க்க வைத்த நம்பிக்கை மனிதர் #MyVikatan

மழைநாள்ல வியாபாரத்துக்குப் போக முடியாமப் போய்டும். அப்போதான் சாப்பாட்டுக்குக் கொஞ்சம் கஷ்டமாகிடும்.

அருணாச்சலம்
அருணாச்சலம்

அரிசி, பருப்பு தொடங்கி காய்கறி, பழங்கள் வரை அனைத்து உணவுப் பொருள்களும் பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கின்றன. நகரங்கள் மட்டுமின்றி சின்னச் சின்ன டவுன்களில்கூட சூப்பர் மார்க்கெட்டுகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. உணவுப் பொருள்களை பாக்கெட் போட்டு ஏ.சி அறையில் அடுக்கிவைத்து விற்கும் கலாசாரம் பெருகிவரும் நிலையில், கைவண்டியில் உப்பு விற்று வருகிறார் நெல்லை முதியவர் ஒருவர். 

சில கிராமங்களில் இன்றளவும் பெரும்பாலான வீடுகளில் மாட்டு வண்டியில் உப்பு விற்கும் வியாபாரியிடம் உப்பு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், பலர் உப்பு விற்கும் தொழிலை கைவிட்டுவிட்டனர். குறிப்பாக கைவண்டி இழுத்து உப்பு விற்கும் வியாபாரிகள் மிக மிகக் குறைவு. அப்படி ஒருவரை அடையாளம் கண்டு அவரின் புகைப்படங்களை #MyVikatan-க்கு அனுப்பிவைத்தார் திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வள்ளிநாயகம்.  

அருணாச்சலம்
அருணாச்சலம்

பல ஆண்டுகளாக கைவண்டியில் உப்பு வியாபாரம் செய்யும் அருணாச்சலம் குறித்து சில தகவல்களையும் பகிர்ந்திருந்தார். 17 வயதில் உப்பு வியாபாரம் செய்ய ஆரம்பித்த அருணாச்சலம்தான் திருநெல்வேலி மாவட்டத்தில் கைவண்டி இழுத்து உப்பு விற்கும் ஒரே வியாபாரி. முதியவர் அருணாச்சலத்தை தொடர்புகொண்டு பேசினோம்..

``நான் 17 வயசில் இருந்து உப்பு விற்கிறேன். இப்போ எனக்கு 60 வயசு ஆகுது. 45 வருஷமா இந்தத் தொழிலை செஞ்சிட்டிருக்கேன். கைவண்டி இழுத்துதான் விற்கிறேன். இந்த கைவண்டி வாங்கி வாங்கி 45 வருஷம் ஆச்சு. 2,000 ரூபாய்க்கு வாங்கினேன். இன்னமும் என்கூட பயணிச்சிட்டு இருக்கு. பேட்டையிலிருந்து பாளையங்கோட்டை வரை வண்டியை இழுத்துட்டுப் போவேன். ஒரு நாளைக்கு 15-ல் இருந்து 20 மைல் வரை பயணிப்பேன். பக்கா, படி அளவு வெச்சுதான் விற்கிறேன். ஒரு பக்கா உப்பு 20 ரூபாய். முன்னெல்லாம் 15 ரூபாய்க்கு போகும். ஒருநாள் முழுக்க சுத்தினா அதிகபட்சமா 500 ரூபாய் கிடைக்கும். சாப்பாட்டுச் செலவு போக மிச்சத்தை வியாபாரத்துல போடுவேன். என் வீட்டம்மா இறந்து ஒரு வருஷம் ஆச்சு. பிள்ளைகள் இல்ல. நான் தனி ஆள்தான். வாடகை வீட்லதான் இருக்கேன். வாடகை, சாப்பாட்டுச் செலவு இதுதவிர வேறு எனக்கு பெருசா செலவு இல்ல. எனக்கான தேவைகளை நானே பூர்த்தி செஞ்சிக்கிறேன். வண்டி இழுக்குறதுல எனக்கு பெரிய சிரமம் இல்ல. இன்னும் 10 வருஷம் கூட என் வண்டி ஓடும்.

அருணாச்சலம்
அருணாச்சலம்

உப்பு உப்பு-ன்னு ரொம்ப கூவி கூவி விற்க மாட்டேன். பல வருஷமா என்கிட்ட உப்பு வாங்குறவங்க நான் லேசா குரல் கொடுத்தாலே வந்து வாங்கிப்பாங்க. என் மேல அன்பா இருப்பாங்க. எல்லாப் பொருளும் கடையில் வாங்கினாலும், உப்பு மட்டும் என்கிட்டதான் வாங்குவாங்க. ஆனால், முன்ன மாதிரி இப்போ உப்பு விற்கமாட்டேங்குது. ஒரு நாளைக்கு அரை மூட்டைதான் விற்குது. பாக்கெட் உப்பு வந்ததால என் வியாபாரம் ரொம்ப கொறஞ்சிடுச்சு. ரெகுலரா வாங்குற சில பேரை நம்பிதான் என் வண்டி ஓடுது. நெல்லையில கைவண்டி இழுத்து உப்பு விற்கிற ஒரே ஆள் நான்தான். மத்தவங்களாம் டிவிஎஸ் வண்டி, மூணு சக்கர வண்டின்னு ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு அதில் ஆர்வம் இல்ல. கண் பார்வை வேற கொறஞ்சிடுச்சு, அதனால டிவிஎஸ் ஓட்டுறது கஷ்டம். ஒருவேளை ரிக்‌ஷா வண்டி கெடச்சா அதில் விற்பேன்.

கடவுள் எனக்கு எந்தக் குறையும் வைக்கல. உழைக்கிறேன். சாப்பிடறேன். நோய் நொடி இல்ல. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்ல. புகைப்பழக்கம் கூட கிடையாது. கடை சாப்பாடுதான் சாப்பிடறேன். மழை நாள்ல வியாபாரத்துக்குப் போக முடியாமப் போய்டும். அப்போதான் கொஞ்சம் சாப்பாட்டுக்கு கஷ்டமாகிடும். அதனால இப்போலாம் கொஞ்சம் காசு சேர்த்து வைக்க ஆரம்பிச்சுட்டேன். மழை நாள் வந்தா ஒரு வேளையாவது சாப்பிடணும்ல. என் உடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் வண்டியிழுப்பேன். அதற்கு அப்புறம் கடவுள் விட்ட வழி’’ என்று சாதரணமாக கூறியபடி தன் வேலையைத் தொடரச் சென்றார்.

அருணாச்சலம்
அருணாச்சலம்

நாள் முழுவதும் ஏசி அறையில் உட்கார்ந்து வேலை செய்யும் நம்மில் பலர் வேலைப்பளு, மன அழுத்தம் என்கிறோம். தனக்கென்று யாருமே இல்லை என்றாலும் இந்த வயதிலும் தன்னம்பிக்கையுடன் வெயில் மழையில் வண்டியிழுத்து உழைத்துச் சாப்பிடும் இவர் உண்மையில் நம்பிக்கை மனிதர்தான்.

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/