Published:Updated:

ஜோ பைடன்..! - அமெரிக்க அதிபர் வேட்பாளரின் சுவாரஸ்யப் பக்கங்கள் #MyVikatan

அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளையும், பெரும் தாக்கத்தையும் ஜோ பைடன் ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை. அவர் குறித்து நாம் அறிந்திராத சில சுவாரஸ்யமான தகவல்கள்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஜோ பைடன். இன்று உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற மனிதர். இவர் அமெரிக்காவின் பழுத்த, பழம்பெரும் அரசியல்வாதிகளுள் ஒருவர். வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடென் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிடுவது, தற்போதைய அமெரிக்க அதிபரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப்!

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது எட்டு ஆண்டுகள் துணை அதிபராகவும், கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் அமெரிக்க செனட்டராகவும் பணியாற்றிய ஜோ பைடன், அமெரிக்காவுக்குச் செய்த சேவைகள் ஏராளம். அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளையும், பெரும் தாக்கத்தையும் ஜோ பிடென் ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை!

ஜொ பிடென் குறித்து நாம் அறிந்திராத சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே...

ஜோ பைடன்
ஜோ பைடன்

# சிராகஸ் பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் படித்தபோது, பிடெனும் அவருடைய முதல் மனைவியும் ஒரு நாய்க்குட்டியை வளர்த்தனர். அதற்கு அவர்கள் வைத்த பெயர் `செனட்டர்!’ அதன் பிறகு அமெரிக்க காங்கிரஸிலுள்ள செனட் சபையில் செனட்டராக 36 ஆண்டுகள் பணியாற்றினார் பிடென். கோ-இன்சிடன்ட்!

# `பூ-பூ’ என்பது ஜோ பைடனை அவருடைய சகோதரர்கள் அன்பாக அழைத்த புனைப்பெயர். - பூ-பூ குறிஞ்சிப்பூ!

# ஜோ பைடன் தனது சிறுவயதில் திக்குவாய் உடையவராக இருந்தார். அதை அவர் ஒரு குறைபாடாகக் கருதவில்லை. தனக்கு சிந்திக்கக் கிடைத்த நேரமாகவே அந்தத் தருணங்களைக் கருதினார். பிடென் சட்டக்கல்லூரியில் பயிலும்போது தனது நண்பரின் உதவியுடன் தனது பேச்சுக் குறைபாட்டுப் பிரச்னையை பெருமளவு சரிசெய்துகொண்டார். இன்று இந்தப் பிரச்னை இருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு இவர் ஒரு தூண்டுகோலாக விளங்குகிறார். பாசிட்டிவ் கார்னர்!

# ``ஜோ பைடனின் தன்னம்பிக்கை, எனது முழு வாழ்க்கையையும் தொந்தரவு செய்த ஒரு விஷயத்தைப் பற்றி எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது;; என பேச்சுக் குறைபாடுள்ள அமெரிக்காவின் 13 வயது சிறுவன் பிரெய்டன் ஹாரிங்டன் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரசார நிகழ்வில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறான். நம்பிக்கை நாயகன்!

# ஜோ பைடன் இரு முறை திருமணம் செய்துகொண்டவர். அவர் 1966-ல் நீலியா பிடெனை மணந்தார். அவர்களுக்கு நவோமி, ராபர்ட், மூன்றாம் ஜோசப் ஆகிய மூன்று குழந்தைகள். நீலியாவின் இறப்புக்குப் பிறகு ஜோ பைடன் 1977-ல் ஜில் பிடெனுடன் மறுமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியரின் ஒரே பெண் குழந்தை ஆஷ்லே.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Carolyn Kaster

# இவர் முதன்முதலில் நீலியாவின் தாயைச் சந்தித்தபோது ``எதிர்காலத்தில் என்னவாக ஆகப்போகிறாய்?’’ என்று அவர் கேட்டார். அதற்கு பைடனின் பதில் ``அமெரிக்க அதிபராகப்போகிறேன்’’ என்பது. - கனவு நாயகன்!

# ஜோ பைடன் இளமையில் வறுமையில் வாடியவர். காதலியுடனான சந்திப்புகளில், உணவகத்தில் பில் செலுத்துவதற்கு போதுமான பணம் ஜோவிடம் இருக்காது. அப்போது நீலியா மேசையின் கீழ் சில டாலர்களை நழுவ விடுவாராம். அவற்றை லாகவமாக எடுத்து பில் தொகையைச் செலுத்துவாராம் பைடன். வறுமையிலே இனிமை காண முடியுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

# அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினராக, குறைந்தபட்ச வயது 30. ஆனால 29 வயதாக இருந்தபோதே பைடன் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் சட்ட விதிமீறல் எதுவும் இல்லை. இவர் செனட்டராகப் பதிவியேற்றபோது வயது 30. - மைனர் டு மேஜர்!

#1972-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்யும்போது, பைடனின் முதல் மனைவி நீலியா, மகள் நவோமி ஆகியோர் கார் விபத்தில் இறந்தனர். இரு மகன்களும் படுகாயமடைந்தனர். இதே ஆண்டு பைடன் செனட்டராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்
Andrew Harnik

படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தன் மகன்களைக் கவனிப்பதற்காக பைடன், தன் செனட்டர் பதவியைத் துறக்க முடிவு செய்தார்.

ஆனால், பைடனின் அசாத்திய திறமை காரணமாக அப்போதைய செனட்டின் பெரும்பான்மைத் தலைவர் இதை ஏற்கவில்லை. எனவே, பைடன் மருத்துவமனையில் தனது மகனின் படுக்கையில் இருந்தவாறே செனட்டராகப் பதவியேற்றார். - படுத்தபடியே வெற்றி!

# ஓர் ஆச்சர்யமான செய்தி, ஜோ பைடனிடம் புகைப் பழக்கமோ, குடிப்பழக்கமோ சுத்தமாக இல்லை. இந்த நடத்தைகளை மனிதனின் `ஓர் ஊன்றுகோல்’ என்று பிடென் குறிப்பிடுகிறார். `இவற்றுக்கு பதிலாக கால்பந்து, மோட்டார் சைக்கிள், ஜம்ப்பிங் மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டுகளே தனது ஊன்றுகோல்கள்’ என்கிறார் பைடென். - டீ டோட்டலர்!


# 2014-ம் ஆண்டில் வெளிவந்த சொத்து விவரக் கணக்கெடுப்பில் அமெரிக்காவின் அரசு அதிகாரிகளில் குறைவான சொத்துகள் கொண்டவர்களில் ஒருவராக பைடன் பட்டியலிடப்பட்டார். மொத்தமிருந்த 581 பேரில் பைடனுக்கு 577-வது இடம். - அரசியலில் எளிமை!

ஜோ பைடன்
ஜோ பைடன்
Andrew Harnik

# ஜோ பைடனின் வயது மற்றும் உடல்நலம் குறித்த கேள்விகளை எழுப்பி, `உங்கள் மருத்துவக் குறிப்புகளை வெளியிட முடியுமா?’ என்று கேட்டார் ஒரு நிருபர். `என்னுடன் நீங்கள் மல்யுத்தம் செய்ய விரும்புகிறீர்களா?’ என்று அவரது கேள்விக்கு வேடிக்கையாக பதிலளித்திருக்கிறார் இந்த 77 வயது இளைஞர். - பேட்டிக்குப் போட்டி!

# 1988-ம் ஆண்டில் பைடனின் மூளையில் அனீரிசிம் (Aneurysm) கசிவு இருந்ததால் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பிடெனின் மன ஆரோக்கியம் தெளிவாக இருப்பதாகச் சான்றளித்த பிறகே அவர் பிந்தைய தேர்தல்களில் போட்டியிட முடிந்தது. - யார் என்று தெரிகிறதா?

# ஜோ பைடன் தனது குடும்ப வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் சமப்படுத்த செய்த ரயில் பயணம் ஆச்சர்யமானது. வில்மிங்டன் புறநகரிலுள்ள தனது வீட்டிலிருந்து வாஷிங்டன் டி.சி-க்கு கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் தினமும் 90 நிமிடங்கள் ஆம்ட்ராக் ரயிலில் அவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். செனட்டராக இருந்த காரணத்தால் செனட் சபை மூலம் ஆம்ட்ராக் ரயில் சேவைக்குப் பல சலுகைகளைப் பெற்றுத் தந்தார். எனவே, `ஆம்ட்ராக் ஜோ’ என்ற புனைப்பெயரில் இப்போதும் இவர் அழைக்கப்படுகிறார். -ரயில் மனிதன்!

ஜோ பைடன்
ஜோ பைடன்
Carolyn Kaster

#ஜோ பைடன் ஒரு காலத்தில் LGBT (Lesbian, Gay, Bisexual and Transgender) உரிமைகளுக்கு எதிராக இருந்தார். ஆனால், பைடனின் கருத்து பின்னாள்களில் மாறியது. 2012-ம் ஆண்டில் அவர் LGBT திருமணம் மற்றும் உரிமைகளை ஆதரிப்பதாக பகிரங்கமாகக் கூறினார். மேலும், திருநங்கைகளை ராணுவத்திலிருந்து தடைசெய்ததற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கண்டித்தார்.

தற்போது 2020 பிரசாரத்தின் ஒரு பகுதியாக LGBT நபர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டங்களை அறிமுகம் செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். - காவலன்!

# உள்நாட்டு வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் டேட்டிங் வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சட்டம் (Violence Against Women Act-VAWA) 1994-ம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டுவரப்பட பைடனின் பங்களிப்பு முக்கியமானது. - பெண்கள் நாட்டின் கண்கள்!

# வன்முறைக் குற்றக் கட்டுப்பாடு, சட்ட அமலாக்கச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான சட்டங்களை அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்கு பிடென் தலைமை தாங்கினார். - சட்டத்தின் காவலன்!

ஜோ பைடன்
ஜோ பைடன்
Andrew Harnik

# இது அதிபர் பதவிக்கு ஜோ பைடன் போட்டியிடும் முதல் தேர்தல் அல்ல. முன்னதாக 1988 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் பிடென் இரண்டு முறை அதிபர் தேர்தலுக்கான, கட்சி அளவிலான பூர்வாங்கத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார்! - வெற்றிகரமான தோல்விகள்!

# `என் பெயர் ஜோ பைடன். நான் ஐஸ்க்ரீமை விரும்புகிறேன்’’ என்று கூறி பைடன் தனது ஓர் உரையைத் தொடங்கியிருக்கிறார். அந்த அளவுக்கு பைடன் ஐஸ்க்ரீமின் மிகப்பெரிய ரசிகர்! - உருகும் ஐஸ்!

# ஜோ பைடன் ஒரு வாகன ஆர்வலர் (Gearhead) தனது ஐபோனில் கார் மற்றும் டிரைவர் (Car and Driver Magazine) பத்திரிகையின் இணையத்திலிருந்து நோட்டிஃபிகேஷன்களை இப்போதும் பெறுகிறார்! - மோட்டார் ஹெட்!


`உங்கள் வாழ்க்கையின் ஏதேனும் ஒருகட்டத்தில், தோல்வி தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். ஆனால், அதற்காக நாம் விட்டுக்கொடுப்பது ஒருபோதும் மன்னிக்க முடியாதது!’ என்று கூறும் 77 வயது இளைஞரான ஜோ பைடனுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் கிடைக்கப்போவது வெற்றியா... தோல்வியா? பொறுத்திருந்து பார்ப்போம்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு