Published:Updated:

'இந்தத் திருட்டு எல்லாம் இங்க சர்வசாதாரணம்!' 😂😂😂 ரக மோசடிகள்

வினோத திருட்டு
வினோத திருட்டு

எதையெல்லாம் நீங்கள் காமெடி என நினைக்கிறீர்களோ அது அனைத்தையும் உலகில் ஒருவர் சீரியஸாக செய்து கொண்டிருக்கிறார். படிப்பதற்கு காமெடியாக இருக்கலாம், அவையனைத்தும் பல நாட்களாக திட்டமிட்டு சீரியஸாக செயல்படுத்தப்பட்டவை.

இன்டர்நெட் உலகில் புத்திசாலித்தனமான, முட்டாள்தனமான எந்த யோசனையையும் உடனடியாக செயல்படுத்தலாம். அதற்கு பதிலளிக்க ஆயிரம்பேர் இருக்கிறார்கள். எதையெல்லாம் நீங்கள் காமெடி என நினைக்கிறீர்களோ, அது அனைத்தையும் உலகில் ஒருவர் சீரியஸாக செய்துகொண்டிருக்கிறார். படிப்பதற்கு காமெடியாக இருக்கலாம், அவை அனைத்தும் பல நாட்களாக திட்டமிட்டு சீரியஸாக செயல்படுத்தப்பட்டவை. நம் ஊரில் நடந்த சில சீரியஸ் காமெடி சம்பவங்கள்.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்தவர் தணிகை. இவர், கடந்த மாதம் நெற்குன்றத்தைச் சேர்ந்த கணேசன், சத்தியா, ரிச்சர்ட், பாரதி ஆகியோரிடம் இன்னோவோ கார் ஒன்றை 6 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். கடந்த 10-ம் தேதி கானாத்தூர் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியபோது, அங்கு காரை நிறுத்தியுள்ளார். மறுநாள் காலையில் கார் காணாமல் போனதை அறிந்த தணிகை, போலீசில் புகார் அளித்தார். கார் திருட்டு குறித்து விசாரித்த போலீசார் உண்மை தெரிய வந்ததும் ‘என்னய்யா புதுசு புதுசா கிளம்புறீங்க” என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கார் திருட்டு
கார் திருட்டு

கணேசன் சத்தியா, ரிச்சர்ட், பாரதி ஆகியோர் நெல்லையைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து இன்னோவா காரை வாங்கியுள்ளனர். பின்னர், கார் விற்பனைக்கு உள்ளது என சமூகவலைதளங்கள், கார் விற்பனை தளங்கள் மூலம் விளம்பரம் செய்துள்ளனர். கார் விளம்பரத்தை இணையத்தில் பார்த்த நெய்வேலியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் இவர்களிடமிருந்து 6 லட்ச ரூபாய்க்கு காரை வாங்கியிருக்கிறார். சில நாட்கள் நவநீத கிருஷ்ணன் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை கவனித்த கும்பல் சில நாட்கள் கழித்து அவரிடமிருந்து விற்ற காரை திருடிக்கொண்டு சென்னை வந்துவிட்டார்கள்.

திருடிய காரை மீண்டும் கார் விற்பனைக்கு உள்ளது என இணையத்தில் விளம்பரம் செய்துள்ளனர். யாருக்கோ விரித்த வலையில் அப்போது சிக்கியவர்தான் தணிகை. இவரிடம் காரை விற்றுவிட்டு அவர் எங்கெல்லாம் போகிறார் என்பதை சில நாட்கள் கும்பல் கவனித்து வந்திருக்கிறது. தணிகை கானத்தூர் தங்கும் விடுதியில் காரை நிறுத்திவிட்டு தங்கியிருந்தபோது, இரவோடு இரவாக காரை மூவரும் சேர்ந்து திருடியிருக்கிறார்கள்.

வினோத திருட்டு
வினோத திருட்டு

இவர்களது திட்டம் என்னவென்றால் முதலில் காரை வாங்கிய நவநீதன் காரை காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்தால், போலீஸ் இப்போது காரை வைத்திருக்கும் தணிகையைத்தான் கைது செய்வார்கள் நாம் தப்பி விடலாம் என நினைத்திருக்கிறார்கள். விதி வேறு ரூபத்தில் விளையாடிவிட்டது. நவநீதன் கார் காணவில்லை என புகார் கொடுப்பதற்கு முன்பாக தணிகை புகார் கொடுத்துவிட்டார். கார் திருட்டு புகாரை விசாரித்த போலீசார் அது தொடர்பான சில சிசிடிவி காட்சிகளை தணிகையிடம் காண்பித்தனர். அதில், தன்னிடம் காரை விற்றவர்களே, காரை திருடியதை கண்டறிந்து போலீசிடம் கூறியிருக்கிறார். அதற்குள் கும்பல் அதே காரை மூன்றாவதாக வேறொருவருக்கு விற்க இணையத்தில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். சரியாக ஸ்கெட்ச் போட்டு மூன்று பேரையும் இப்போது தூக்கி உள்ளே தள்ளியிருக்கிறது போலீஸ்.

சென்னை ஃபிளிப்கார்ட் கிளையில் பணியாற்றி வரும் இரண்டு ஊழியர்கள் செய்த திருட்டு இன்டர்நெட் உலகில் வரலாற்றுத் திருட்டு. ஜெய்கணேஷ் மற்றும் ஷாம் திவாகர் என்கிற இருவரும் உலகத்திற்கு புது திருட்டு ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். அதாவது இருவரும் டெலிவரி கொடுக்க கொண்டு செல்கிற முகவரிகள் பலவும் தவறாக இருந்திருக்கின்றன. தவறான முகவரியில் இருப்பதால் அந்த பார்சலை மீண்டும் ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார்கள். கதையில் ட்விஸ்ட் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. திருப்பி அனுப்பிய பார்சல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்து பார்த்து அதிர்ச்சியானார்கள், காரணம் பார்சல்களில் கல்லும், உப்பும் இருந்திருக்கின்றன. விஷயம் மேலிடத்திற்கு செல்ல விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். விஷயம் ரொம்ப சிம்பிள்! ஜெய்கணேஷ் மற்றும் ஷாம் திவாகர் சென்னையில் போலியான பெயர் மற்றும் முகவரியை கொடுத்து ஃபிளிப்கார்ட் விற்பனை தளத்தில் செல்போன்களை ஆர்டர் செய்வார்கள். முக்கியமான விஷயம் எல்லாமே விலை உயர்ந்த செல்போன்கள். குறிப்பிட்ட முகவரி இவர்களது எல்லைக்குள் வருவதால் டெலிவரி செய்கிற பொறுப்பு இருவரிடமும் ஒப்படைக்கப்படும். அந்த செல்போன்கள் கைக்கு வந்ததும் அதனைப் பிரித்து செல்போன்களை எடுத்துவிட்டு அதில் கல் உப்பு மற்றும் செங்கல் ஆகியவற்றை வைத்து பேக் செய்துவிடுவார்கள்.

ஃபிளிப்கார்ட்
ஃபிளிப்கார்ட்

முகவரியில் ஆட்கள் இல்லை, போலியான முகவரியாக உள்ளது என்று கூறி பார்சலை மீண்டும் ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பிவிடுவார்கள். இவ்வாறு திருடும் செல்போன்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்திருக்கிறார்கள். இதையடுத்து இருவர் மீதும் அந்நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்ததால் விஷயம் வெளியே தெரிய வந்திருக்கிறது. ஆத்தி என்னங்கய்யா இது தினுசா இருக்கு!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே சின்னக்கல்லந்தல் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் ஐ.ஏ.எஸ். ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகனாக இருந்து ஐ.ஏ.எஸ். ஆன யுவராஜை ஊரே கொண்டாடியது. வாட்சப், பேஸ்புக் என இவரது புகழ் பரவ ஆரம்பித்தது. திருவண்ணாமலை பகுதியில் உள்ள பள்ளிக் கல்லூரிகளும் யுவராஜை தங்களது நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பேச அழைத்தனர். சிறப்பு அழைப்பாளராக செல்லும் இடமேல்லாம் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவது எப்படிஎன்று தன்னுடைய அனுபவத்தில் இருந்து அறிவுரைகள் வழங்கினார். காவல்துறை, அரசு அதிகாரிகள் என பல தரப்பிலிருந்தும் அவருக்கு பலருடைய அறிமுகம் கிடைத்தது.

வினோத மோசடி
வினோத மோசடி
விகடன்

இந்த நிலையில் மதுரை திருமங்கலத்தில் நடந்த ஒரு கிடாவிருந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றார் யுவராஜ். அங்கு அவரை சந்தித்த பல காவல்துறை அதிகாரிகள் அவருடைய திறமையை மதித்து மதுரை காவல் ஆணையரை சந்திக்குமாறு சொல்லியிருக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்தை பூங்கொத்துடன் சென்று சந்தித்தார் யுவராஜ். பல விஷயங்களை பேசி முடித்த ஆணையர் “எப்போது ஐ.ஏ.எஸ் முடித்தீர்கள் என கேட்கிறார். எந்த விதப் பதட்டமும் இல்லாமல் குறிப்பிட்ட ஆண்டை கூறியுள்ளார். ஆணையர் தனது கணினியில் அவர் கூறிய ஆண்டை ஒப்பிட்டு பார்த்த போதுதான் தெரிந்தது, அவர் போலி ஐ.ஏ.எஸ் என்று. விசாரிக்க வேண்டிய விதத்தில் ஆணையர் விசாரிக்க உண்மை வெளியே வந்தது. சிங்கத்தின் உடை அணிந்து சிங்கத்தின் குகைக்கே செல்ல தனி தைரியம் வேண்டும். அந்த தைரியம்தான் இப்போது அவரை உள்ளே தள்ளியிருக்கிறது.

இது இன்டர்நெட் கதையல்ல, இன்டர்நேஷனல் கதை. இன்டர்நெட்டிற்கும் இந்த கதைக்கும் தொடர்பில்லை. மூளையை எப்படியெல்லாம் போட்டு யோசித்திருந்தால் இப்படி செய்திருப்பார்கள் என நினைத்தால் பயமாக இருக்கிறது. கினி நாட்டை சேர்ந்தவர் காமாரா. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கிறேன் எனப் பல இடங்களிலும் விளம்பரம் செய்து, தன்னைத்தேடி வந்த பெண்களுக்கு சில மூலிகைகளையும் சில இலைகளையும் கொடுத்திருக்கிறார். மூலிகை, மற்றும் இலைகளைச் சாப்பிட்ட பெண்களின் வயிறு ஒரு சில வாரங்களில் கர்ப்பமாக இருப்பது போல இருந்திருக்கிறது.

வினோத திருட்டு
வினோத திருட்டு

சிலர் வாந்தி எடுத்திருக்கிறார்கள். ''இதுகுறித்து சந்தோஷப்படுங்கள். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்" எனவும், மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் எனவும் சொல்லி அனுப்பியிருக்கிறார் அந்த ஹீலர். இதற்காக கட்டணமாக 33 டாலர்கள் வசூலித்திருக்கிறார். பல பெண்களும் மூலிகையை வாங்கி சாப்பிட்டார்கள். வயிறு வீங்குவதை உணர்ந்த பெண்கள் பரிசோதித்து பார்த்ததில் கர்ப்பமாக இல்லை என்பது உறுதியானது. பெரிதாக யோசிக்கவில்லை காமாரா, ரொம்ப சிம்பிள், எல்லா பெண்களுக்கும் வயிறு வீங்குகிற, வாந்தி வருகிற மூலிகைகளை கொடுத்து ஏமாற்றியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க காமாராவை அள்ளிக் கொண்டு போனது போலீஸ். கைதுக்கு பிறகு காமாரா இப்படி சொன்னார். ‘நான் குழந்தை இல்லாதவர்களின் கனவை நனைவாக்க உதவி செய்தேன். மற்றவை இறைவன் கையில்தான் உள்ளது.”

அடுத்த கட்டுரைக்கு