Published:Updated:

Zoom-ல் நடைபெறும் உங்கள் அலுவலகக் கூட்டத்துக்கு ஆடு ஒன்று வந்தால்?!

மெக்கார்த்தி
மெக்கார்த்தி ( @DotMcCarthy )

நகைச்சுவையாகத் தொடங்கிய ஒரு யோசனை, தற்போது விரிந்து பெரும் லாபம் ஈட்டும் ஒரு தொழிலாக மாறியிருக்கிறது.

இது என்ன `மொக்கை நகைச்சுவைய...’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், இது உண்மை. இதில் அடுத்த அதிர்ச்சி என்னவென்றால், இதை ஒரு தொழிலாகச் செய்து ஒரு பெண் லாபம் பார்த்துவருகிறார் என்பதுதான்.

நம்ப முடியவில்லையா... ஆனால், நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம்.

இங்கிலாந்தின் லங்காஷைர் (Lancashire) என்ற பகுதியைச் சேர்ந்தவர் டாட் மெக்கார்த்தி. இவர் பண்ணையில் ஆடுகளை வளர்த்துவந்தார். இவரின் இந்தப் பண்ணையில் திருமணங்களும், கல்விச் சுற்றுலாக்களும் நடந்துகொண்டிருந்தன. ஆனால், கொரோனா பொதுமுடக்கம் அதை இல்லாமல் செய்துவிட்டது. எனவே, வருமானத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உதயமான ஒரு யோசனைதான் இது.

``முதலில் இதை ஒரு நகைச்சுவையாகத்தான் நாங்கள் யோசித்தோம்” என்கிறார் பண்ணையின் உரிமையாளரும் விவசாயியுமான மெக்கார்த்தி.

இப்படி நகைச்சுவையாகத் தொடங்கிய ஒரு யோசனை, தற்போது விரிந்து பெரும் லாபம் ஈட்டும் ஒரு தொழிலாக மாறியிருக்கிறது. ஆம், தற்போது நாள் ஒன்றுக்கு 100 ஜூம் கால்கள் வரை மெக்கார்த்தியால் வழங்க முடியும்.

10 நிமிடச் சந்திப்புக்கு 6 பவுண்ட் கட்டணம்!

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு என்ன செய்வது என்று தெரியாமல், தனது வலைதளத்தில் இந்த ஐடியாவுடன், `உங்களுக்கு பிடித்தமானவர்களுக்குச் சிரிப்பைப் பரிசளியுங்கள்` என எழுதிவிட்டு தூங்கச் சென்றிருக்கிறார். மறுநாள் காலையில் அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்... ஆடுகளை ஜூம் கால்களுக்கு அழைக்கும் அந்தச் சேவையைக் கோரி 200 மின்னஞ்சல்கள் அவருக்கு வந்திருந்தன. `இது சற்று வித்தியாசமானதுதான். ஆனால், மகிழ்ச்சியாக இருந்தது’ என்கிறார் மெக்கர்த்தி.

சீனா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆன்லைன் சந்திப்பில் மெக்கர்த்தியின் ஆடுகள் கலந்துகொண்டிருக்கின்றன.

மெக்கார்த்தியின் வலைதளத்துக்குச் சென்று அவரின் எந்த ஆடு நமது மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் நாம் தேர்வு செய்துகொள்ளலாம். அதில் அந்த ஆட்டின் பெயர், அதன் குணாதிசயம், அதனிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

மெக்கார்த்தி
மெக்கார்த்தி
@DotMcCarthy

இந்த வலைதளத்தில் நீங்கள் அலுவலகச் சந்திப்புகளை மட்டுமல்ல, உங்கள் நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தில் ஒருவருக்கோ ஏதோ ஒரு நற்செய்தியை நீங்கள் பகிர வேண்டுமென்றால், அதற்கும் ஒரு ஆட்டை நீங்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அதன் கழுத்தில் உண்பதற்கு ஏற்ற மையால் நீங்கள் சொல்ல வேண்டிய செய்தியை எழுதி செய்திக்குரிய நபர்களிடம், வீடியோ கால்கள் மூலம் காண்பிக்கப்படும்.

சரி, இம்மாதிரியாக ஆடுகளை ஏன் அலுவலகச் சந்திப்புகளில் காண்பிக்க வேண்டும் என நீங்கள் யோசிக்கலாம். யோசித்துப் பாருங்கள்... இந்தப் பொதுமுடக்க காலத்தில் எங்கேயும் வெளியே செல்லாமல், வீட்டுக்குள்ளேயே அலுவலகப் பணியைப் பார்த்துக்கொண்டு, அதில் ஜூம் மீட்டிங் என்ற ஒன்றிலும் பங்கெடுத்துக்கொண்டு... எனப் பேசும்போதே சுவாரஸ்யமற்று தோன்றுகிறது அல்லவா? ஆம், அலுவலகச் சந்திப்புகளை சுவாரஸ்யமாக்கத்தான் இந்த ஆடுகள் வாடைக்கு எடுக்கப்படுகின்றன.

மெக்கார்த்தி மட்டுமல்ல, தற்போது பல்வேறு பகுதிகளில் இம்மாதிரியாக ஆடுகளையும், பிற விலங்குகளை ஜூம் அழைப்புகளில் பங்கெடுக்கவைக்கும் வர்த்தகம் வளர்ந்துவருகிறது. கொரோனா காலத்தில் முடங்கிக்கிடக்காமல் வாய்ப்புகளையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஒரு புத்திசாலித்தனமான யோசனைதான் இது.

அடுத்த கட்டுரைக்கு